பூங்காவில் இளைஞர்கள் இருவர்
அமர்ந்திருந்தனர். திரையணிந்த பெண் ஒருத்தி ஒரு சிறுவன் உடன்வர அவ்வழியாகச் சாலையில்
கடந்து போனாள். அவளைப் பார்த்ததும் அந்த இருவருள் ஒருவன் மிகவும் படபடப்பானான். அவன்
பேச்சு தடைப்பட்டது. கைகளைப் பிசைந்தபடி இப்படியும் அப்படியும் அசைந்தான். தன்னை யாராவது
கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான். அவள் கடந்து போன பிறகு சில கணங்களில்
மீண்டும் இயல்பாகிவிட்டான். அவனுடன் அமர்ந்திருந்த மற்றோர் இளைஞனிடம் எந்தச் சலனமும்
இல்லை. அவன் இவனிடம் “என்ன? என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவன் குருடனாக
இருந்தான்.
தர்வேஷ் இதைக் கவனித்துவிட்டார். தன்னுடன் மாலை நடைக்கு வந்திருந்த
சாதகர்களிடம் இதைச் சுட்டிக் காட்டினார். ”அவள் ஓர் இளம் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.
மேலும், அவள் மிகவும் அழகியாக இருக்க வேண்டும். இவன் அவளைக் காதலிக்கிறான்,” என்று
சொன்னார்.
”எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று தர்வேஷிடம் ஓர் இளைஞன் கேட்டான்.
”இல்லை என்றால் அவனிடம் ஏன் இத்தனைப் படபடப்பு உண்டாகிறது? அவளின்
முகத்தை அவன் ஏற்கனவே பார்த்திருக்கிறான். அது அவள்தான் என்பதை அவளுடன் செல்லும் சிறுவனை
வைத்து அவன் ஊகித்துவிட்டான். அந்தச் சிறுவன் அவளின் தம்பியாக இருக்க வேண்டும். அவள்
இப்போது திரையிட்டுத் தன் முகத்தை மறைத்திருக்கிறாள் என்றாலும் அவனுக்கு அவளின் முகம்
நினைவில் வந்துவிட்டது. இப்போது அவளின் முகத்தை அவனின் அகப்பார்வை தரிசித்தது. அதனால்தான்
அவனுக்கு அவ்வளவு பதற்றம் உண்டானது. அவளின் முகத்திரையே அவனுக்கு அவளின் அடையாளம் ஆகிவிட்டது!
இதை ஓர் உதாரணமாக வைத்து அகப்பார்வை கொண்ட ஞானிகளின் நிலையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.”
”அப்படியா? இதை வைத்தா?” என்று இன்னொருவன் கேட்டான்.
”ஆம். பலரும் அவளைப் பார்க்கவே செய்தார்கள். ஆனால், அவர்கள்
அவளைப் பார்க்கவே இல்லை என்பதும் உண்மைதான். யாரோ ஒரு பெண் போகிறாள் என்று மட்டும்
பார்த்தார்கள். ஆனால், அவர்களின் பார்வை அவளை மறைக்கும் திரையின் மீதுதான் பட்டது,
அவளின் மீது அல்ல. அதுபோல், படைப்புக்கள் என்னும் திரையைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்.
அவை இறைவனால் படைக்கப்பட்டது என்னும் கருத்தும் நம்பிக்கையும் மட்டுமே அவர்களிடம் உண்டு.
உணர்வெழுச்சி (கைஃபிய்யத்) உண்டாக அது மட்டும் போதுமானதாக இல்லை. அந்த இளைஞனின் வெளிப்பார்வையும்
அவர்களின் பார்வை பட்ட அதே திரையில்தான் விழுந்தது. ஆனால், அவனின் அகப்பார்வையில் அவளின்
முகம் நினைவுக்கு வந்துவிட்டது. அவன் ஒருவகையில் அவளையே தரிசித்துவிட்டான். அதனால்தான்
அவனுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பு உண்டானது. அவன் அவளை ஏற்கனவே பார்த்திருக்கிறான் என்பதால்தான்
அது சாத்தியமானது. அதுபோல், இறைஞானிகளின் வெளிப்பார்வை படைப்புக்கள் மீது விழுந்தாலும்
அவர்களின் அகப்பார்வை இறைவனையே காண்கிறது. ஏற்கனவே இறைவனை தரிசித்திருப்பதால்தான் அவர்களுக்கு
இப்போது நினைவில் அவனின் தரிசனம் உண்டாகிறது. அதனால் உண்ர்வெழுச்சியும் அடைகின்றனர்.
ஏனையோருக்கு வானமும் பூமியும் இரவும் பகலும் திரைகள் என்றால் இறைஞானியருக்கு அவை அனைத்தும்
இறைவனின் அடையாளங்கள்” என்று விளக்கினார் தர்வேஷ்.
”சரி, பிறராவது அவளின் திரையைப் பார்த்தார்கள். ஆனால், அந்தக்
குருட்டு இளைஞன் அதையும்கூட பார்க்கவில்லையே?” என்று ஒருவன் கேட்டான். தர்வேஷ் புன்னகைத்துத்
தலையாட்டினார். அவர்கள் சில கணங்கள் மௌனமாக நடையைத் தொடர்ந்தார்கள்.
”குருடனுக்குத் திரைகள் இல்லை; முக தரிசனமும் இல்லை” என்றார்
தர்வேஷ்.
No comments:
Post a Comment