Friday, July 22, 2022

அலமாரிப் பூக்கள்

 (இந்தக் கட்டுரை பேராசிரியர் சேமுமு அவர்கள் நடத்திவரும் “இனிய திசைகள்” என்னும் மாதிகையில் ஜூலை 2022 இதழில் வெளியாகியுள்ளது.)


“ஒரு தோட்டமும்

ஒரு நூலகமும்

உன்னிடம் இருந்தால்

தேவையானதெல்லாம்

அடைந்துவிட்டாய்”

என்கிறார் ரோமானிய தத்துவ அறிஞர் மார்க்கஸ் சிசரோ.

            நான் அடைந்த நல்லூழ், சிறுவனாக இருந்த காலம் தொட்டே எங்கள் வீட்டில் தோட்டம் இருந்தது. பதின் பருவத்தில் எனக்கான சிறு நூலகம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன்.

            சொந்தமாக வீடு கட்டியபோதும் முற்றத்தில் தோட்டம் வைக்க போதிய இடம் விட்டே கட்டினேன். அதில் இப்போது தோட்டம் இருக்கிறது. வாசிக்கும் கூடம் வைத்து வீட்டு நூலகமும் வளர்ந்துள்ளது.



            சிசரோ சொன்னதைச் சிந்தித்துப் பார்க்கையில் இரண்டும் ஒன்றுதான் என்று படுகிறது. நூலகம் என்பது வீட்டின் அகத் தோட்டம். தோட்டம் என்பது வீட்டின் புற நூலகம்.

            நூலகம் என்பது தாள்களால் ஆன பூந்தோட்டம்; தோட்டம் என்பது செடி கொடிகளால் ஆன நூலகம்.

            எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டேதான் என் நூலகத்தை உருவாக்கி வந்திருக்கிறேன். வீட்டுத் தோட்டமும் அப்படியே.

            ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன தாவரங்கள் இருக்கும் என்பது அவரவரின் ரசனையைக் காட்டும். வீட்டு நூலகமும் அப்படியே.

            ஆரம்பத்தில் என்னிடம் இருந்த நூற்களின் சேகரத்தில் பலவற்றை நானே பிற்பாடு நீக்கியிருக்கிறேன், பூச்செடி என்று நினைத்து வளர விட்டதை நாமே பிறகு களை என்று கண்டு நீக்கிவிடுவதைப் போல்.

            என் நூலகத்தில் கவிதைப் பூக்கள் இருக்கின்றன, ஞானக் கனிகள் இருக்கின்றன. என் தோட்டத்தில் பூக்களே கவிதைகளாகவும் கனிகளே ஞானங்களாகவும் இருக்கின்றன.

            சிலர் துளசிச் செடி புனிதமானது என்று அதற்குத் தனியாக பீடம் அமைத்து அதில் உயர்த்தி வைப்பார்கள். அதேபோல், என் நூலகத்திலும் இறை வேதத்திற்கும் நபிமொழித் தொகுப்புக்களுக்கும் தனியாக அலமாரி இருக்கிறது. 



            சில வீடுகளில் வேறு செடியே இல்லாமல் துளசி மட்டும் ஒரு தொட்டியில் நின்று கொண்டிருக்கும். அதுபோல், பல வீடுகளில் நூல் என்று திருமறை ஒன்று மட்டுமே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.



             பயன்படும் செடிகளை வைக்க வேண்டும். வெறும் அழகுக்கென்று பூச்செடிகளை வைப்பதால் என்ன பயன்? தோட்டத்தில் காய்கள் கனிகள் தரும் தருக்கள் இருக்க வேண்டும் என்பது ஒருவரின் கோட்பாடாக இருக்கலாம். அது போல் ஒருவரின் நூலகத்தில் புனைவுகளுக்கே இடமில்லாமல், அகராதி, அட்லஸ், சமையல் நூற்கள் என்பன போல் அன்றாட வாழ்க்கைக்குப் ’பயன்’படும் நூல்கள் மட்டுமே இருக்கக்கூடும்.

            தோட்டங்களில் சில வகைகள் இருக்கின்றன. ஜென் தோட்டம், முகலாயத் தோட்டம் (பாரசீகத் தோட்டம்), ஆங்கிலேயத் தோட்டம் ஆகியவை போல். நூலகங்களும் அப்படி ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த நூற்கள் அதிகமாக இருக்கும்படி அமையக்கூடும். ஒரே தோட்டத்தில் இந்த வகைகளுக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கலாம். என் நூலகம் அப்படித்தான் இருக்கிறது. அதில் சூஃபி, ஜென், மேலை மற்றும் கீழை ஞான மரபுகள் என்று அனைத்துக்கும் இடம் இருக்கிறது.

            சிறு சிறு தொட்டிகளில் கை மருந்துக்கான மூலிகைகளும் வீட்டுத் தோட்டங்களில் இருக்கும். ஓமவள்ளி, துளசி, வெற்றிலை, பச்சிலை ஆகியவை போல. அதுபோல் சில நூற்கள் மனதுக்கு மருந்தாக அமையும். சில வீடுகளில் மருந்துக்கும் செடி இருக்காது; சில வீடுகளில் மருந்துக்கும் நூல் இருக்காது.



            என் நூலகத்தில் செய்தித்தாள்களுக்கு இடம் இல்லை; என் தோட்டத்தில் பிளாஸ்டிக் தாவரங்கள் இல்லை.

            நூற்களும் விற்கப்படும் நவீன காஃபி அங்காடி ஒன்றில் ஒருமுறை அன்பளிப்பாக ஒரு சிறு செடியைக் கொடுத்தார்கள். அதுபோல், தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடியின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கக் கூடும். என் நூலகத்தில் உள்ள சில நூல்களின் பின்னணியில் சுவையான நிகழ்வுகள் உள்ளன.

            நூல்களிலும் விஷச் செடிகளும் நச்சு மரங்களும் உண்டு. பொதுவாக அவை கேளாமலே முளைப்பவை, இலவசமாக வந்து சேர்பவை. ஆரம்பத்திலேயே அவற்றை அகற்றிவிட வேண்டும். சில காலம் சென்ற பிறகே எனக்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

            தோட்டத்தில் உள்ள பெரிய மரம் சில நேரங்களில் வீட்டுச் சுவரில் விரிசல் ஏற்படுத்திவிடலாம். அப்போது மரத்தை வெட்டிவிடுவார்கள். ஓஷோவின் சுவாங்சூ அரங்கத்தை அவர் காடு போல் உருவாக்கிப் பேணிய தோட்டத்தின் மரம் ஒன்று சாய்ந்து விரிசல் ஏற்படுத்தியது. அந்த மரத்தை வெட்டிவிட அனுமதி கேட்ட சீடர்களிடம், “வேண்டுமானால் அரங்கத்தை இடித்துவிடலாம்; மரத்தை வெட்டக் கூடாது,” என்று அவர் சொன்னாராம்.



            என் நூல் சேகரம் வீட்டின் சகல இடங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. அவற்றுக்கென்று கூடத்தில் உள்ள மூன்று அலமாரிகள் போக மகனின் அறை அலமாரியில் ஓர் அடுக்கை எடுத்துக் கொண்டது, பரணில் ஒரு பகுதியை நிரப்பிவிட்டது, தொலைக்காட்சிக்கான அலமாரிக்குள்ளும் நூற்கள் புகுந்துள்ளன. ஆனாலும், புதிய நூற்களின் வருகை தொடர்கிறது. அது நிற்காது.

            செழித்து மலர்ந்திருக்கும் செடியை மாடோ ஆடோ புகுந்து அழித்துவிடுவது உண்டல்லவா? அல்லது, அசந்த நேரத்தில் மனிதர்களே கூட பறித்துக் கொண்டு போய்விடுவதும் நடப்பதுதானே?             அப்படி என் நூலகத்தில் இருந்தும் பல நூற்களை இழந்திருக்கிறேன். வாசிக்கக் கொடுத்துத் திரும்பி வராதவை.

          தோட்டம் என்றால் தாவரங்கள் மட்டும்தானா? வசதி இருந்தால் சிறு குளம் வைத்து அதில் மீன்களை விடுகிறார்கள். அதுபோல், என் நூலகத்தில் ஒரு பகுதியாக இசைக்கு இடம் இருக்கிறது.

            மண் உலகம் வேறு, நீர் உலகம் வேறு. இரண்டுமே தோட்டத்தில் இடம் பெறுகின்றன. அதுபோல், மொழி உலகம் வேறு, இசை உலகம் வேறு. அவை இரண்டும் என் நூலகத்தில் ஒன்றாக இருக்கின்றன.

            செடியில் மலர்ந்து மணம் வீசும் மலர்கள் எப்படித் தோன்றுகின்றன. அவை வேரின் சாரம் வெளிப்படுவதுதான் அல்லவா? அப்படித்தான், நூற்கள் எனக்கு என் வேர்களைக் காட்டுகின்றன. அதன் சாரமே என் சிந்தையில் ஆயிரம் பூக்களை மலர வைக்கிறது.

            இப்போதெல்லாம், உன் நூலகம் எங்கே என்று யாரையேனும் கேட்டால் மடிக்கணினியை அல்லது கைப்பேசியைக் காட்டுகிறார்கள். அதற்குள் நூறு நூல்கள் வைத்திருக்கிறேன், ஆயிரம் நூல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். நூலகம் டிஜிட்டல் ஆகிவிட்டது. (என்னிடமும் அப்படி ஒரு டிஜிட்டல் சேகரம் இருக்கிறது.) இனி, டிஜிட்டல் சுவர்கள் அமைத்து அதில் தோட்டம் வளர்க்கப்படலாம்.

            “நூற்கள் இல்லாத அறை உயிரற்ற உடலைப் போன்றது” என்றும் சிசரோ சொல்கிறார். முற்றத்தில் தோட்டம் இல்லாத வீடு, அந்தகனின் முகம் போல் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.


1 comment:

  1. காதலனின்
    காதலியின்
    காதலை*
    காண்பித்த
    காதலனை
    காதலிக்கிறேன்.
    🙏

    *காதல் - அலமாரி

    ReplyDelete