(07-09-2022 அன்று ஜமால் முகமது கல்லூரியில்
அதன் ’தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்’ நடத்திய தொடக்க விழாவில் நிகழ்த்திய உரை.
சூழ்நிலை கருதி அவ்விழாவில் பேசாமல் விட்ட செய்திகளை இப்பிரதியில் இணைத்திருக்கிறேன்;
செம்மை கருதி, அங்கு பேசிய சில செய்திகளை இதில் நீக்கியிருக்கிறேன்.)
பேராசிரியர்களே!
மாணவ மக்களே!
இந்த
நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோதே பேராசிரியர் த.செல்வராஜ் அவர்கள் ”வையத் தலைமை கொள்” என்னும் இந்தத் தலைப்பை எனக்கு
வழங்கினார். இந்தத் தலைப்பு பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வையத்
தலைமை கொள் என்று அவர் ஏன் சொன்னார்? வையத் தலைமை என்றால் என்ன? வையத்துக்கு ஒற்றைத்
தலைமை சாத்தியமா? வையத் தலைமை கொள்வதற்கான பண்புகள் எவை? என்ற வினாக்களை எழுப்பிக்
கொண்டு என் சிந்தனையைச் செலுத்துகிறேன்.
வீட்டுத்
தலைமையே எத்தனை சிரமமானது என்பதை இங்கே இருக்கும் பேராசிரியர்கள் நன்றாக அறிவோம். இதில்
வையத் தலைமை என்று பாரதி குறிப்பிடுவது அதிகம் அல்லவா? என்று எண்ணலாம். வீதித் தலைமை,
ஊர்த் தலைமை, மாவட்டத் தலைமை, மாநிலத் தலைமை என்று மேலே செல்லச் செல்ல அதை அடைபவர்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். இப்படி இருக்க, வையத் தலைமை என்று சொன்னால் எல்லோரும்
அதற்கு ஆசைப்பட முடியுமா? என்று கேட்கலாம். புதிய ஆத்திசூடியிலேயே பாரதி தயங்காமல்
சொல்கிறார்: ”பெரிதினும் பெரிது கேள்” (71)
உலகப்
பார்வை என்பது தமிழ் மரபு, தமிழர் இயல்பு. உலகைக் குறிக்கத்தான் தமிழில் எத்தனை சொற்கள்:
வையம், உலகம், ஞாலம், அவனி, புவி, பூமி, குவலயம். வடமொழிச் சொல்லாக இருந்தாலும் ‘ஜகம்’
என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகத்தைச்
சுட்டி அல்லது வாழ்த்தித் தொடங்கும் பேரிலக்கியங்கள் தமிழில் உள்ளன. “அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்குகிறது திருக்குறள். “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
/ பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு” என்று தொடங்குகிறது திருமுருகாற்றுப்படை. “உலகம்
யாவையும் தாமுள வாக்கலும்” என்று தொடங்குகிறது கம்பராமாயணம். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு
அரியவன்” என்று தொடங்குகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.
ஐ.நா
சபையின் வரவேற்பு வாசலில் உலகப் பார்வை கொண்ட
உன்னதக் கவிதை வரிகளை உலக மொழிகள் பலவற்றின் இலக்கியங்களில் இருந்தும் எடுத்துப் பொறித்து
வைத்திருக்கிறார்கள். பாரசீக மொழியிலிருந்து கூட சூஃபி ஞானி இமாம் சாஅதி எழுதிய கவிதை
அதில் இடம்பெற்றுள்ளது. “பனீ ஆதம் அஃழாயே யக் பைகரந்த்” – ’மனிதர்கள் அனைவரும் ஓருடலின்
அங்கங்கள் ஆவர்’ என்று அந்தக் கவிதை தொடங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்து கணியன்
பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து
அங்கே பொறித்துள்ளார்கள்.
இந்தத்
தமிழ் மரபில் நின்று உலகப் பார்வை பெற்ற பாரதியார் “வையத் தலைமை கொள்” என்று சொல்வதில்
வியப்பில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், ‘பாரதியின் ஆன்மிகப் பார்வை’ என்னும் தலைப்பில் ஜெயகாந்தன் ஓர் அற்புத உரை நிகழ்த்தியிருக்கிறார். வேதம் என்னும் சொல் பாரதியின் கவிதைகளில் எப்படியெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். அதுபோல், “வையத் தலைமை கொள்” என்னும் தலைப்பை ஓர்ந்தபோது வையம் என்பது பாரதியாரின் கவிதைகளில் எப்படியெல்லாம் சுட்டப்பட்டிருக்கிறது என்று நான் சிந்தித்துச் சிலிர்த்துப் போனேன்.
உலகப்
பார்வை என்பது இன்றைக்கு மேலாண்மைத் துறையில் வலியுறுத்தப்படுகிறது. அது வணிகர்களுக்கு
இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இதழியலாளர் சம்ஸ் எழுதிய ஒரு செய்தியை இன்று
வாசித்தேன். அதில் glocalian (குலோக்கலியன்) என்னும் ஆங்கிலச் சொல் பற்றி அவர் விளக்கியிருந்தார்.
லோக்கல் என்பது உள்ளூர், வட்டாரம் என்னும் அர்த்தங்களில் அமைகிறது. குளோபல் என்பது
உலகளாவியது என்று பொருட்படும். இவ்விரண்டையும் இணைக்கும் சொல்தான் குலோக்கலியன் என்பது.
’சோனி’ நிறுவனத்தை ஆரம்பித்த அகியோ மரீட்டா உருவாக்கிய glocal (குலோக்கல்) என்னும்
சொல்லில் இருந்து இந்த வார்த்தை வருகிறது. இதை வைத்து அமெரிக்காவில் ஒரு வணிகக் கோட்பாடு
ஒன்று உருவாகியிருக்கிறது: “Think globally, act locally.” இந்தக் கோட்பாட்டைத் தனது
இதழியல் பணிக்குத் தகுந்தபடி “உள்ளூர்ப் பார்வையில் இருந்து உலகைப் பார்; உலகப் பார்வையில்
இருந்து உள்ளூரைப் பார்” என்று தான் வரித்துக் கொண்டிருப்பதாக சம்ஸ் சொல்கிறார். இதை
உங்களின் வாழ்க்கைப் பாதைக்குத் தகுந்தவாறு நீங்களும் வரித்துக் கொள்ளலாம்.
”வையத்
தலைமை” கொள்வதற்கு நாம் என்னென்ன பண்புகளை நம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று
கேட்டால் “புதிய ஆத்திசூடியில்” பாரதி சொல்லியிருக்கும் பண்புகளே அதற்கான விடை என்று
கருதலாம். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கிப் பேச இங்கே அவகாசம் இல்லை என்பதால் ஒரு சிலவற்றை
மட்டும் தொட்டுக்காட்டி என் உரையை முடிக்க நாடுகிறேன்.
பாரதியின்
ஆத்திசூடி “அச்சம் தவிர்” என்று ஆரம்பிக்கிறது. “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
/ அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே” என்று பாடியவர் அவர். “பயம் எனும் பேய்தனை
அடித்தோம்” என்று ஜெய பேரிகை கொட்டியவர். அங்கேயும் ஓர் உலகப் பார்வை: “வியனுல கனைத்தையும்
அமுதென நுகரும் வேத வாழ்வைக் கைப்பிடித்தோம்.”
உங்களுக்கு
ஒரு திருக்குறளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்: “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
/ இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” சொல் வன்மை, சோர்வு இன்மை, அஞ்சாமை ஆகிய இந்த மூன்றும்
எவனிடம் இருக்குமோ அவனை அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. திருவள்ளுவர் குறிப்பிடும்
இந்த மூன்று பண்புகளையும் பாரதி பல இடங்களில் பாடியிருக்கிறார். ’அஞ்சாமை’ பற்றி நான்
இப்போது சொன்னேன்.
அடக்குமுறை
செய்கின்ற அரசனுக்கு முன்னால் நின்று அப்பர் பாடுகிறார்: “நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்.” அவர் கையில் ஆயுதம் ஏதுமில்லை; அவருக்குத் துணையாகப் பெரும்படை இல்லை.
ஆனால் அவரின் உள்ளத்தில் அச்சம் இல்லை. அத்தகைய வீரத்தை பாரதி தன் மகள் சகுந்தலாவுக்கு
உபதேசித்தார்: “பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ / பயம் கொள்ளல் ஆகாது பாப்பா / மோதி
மிதித்துவிடு பாப்பா – அவர் / முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.” இந்த உபதேசம், “கீழோர்க்கு
அஞ்சேல்” (16) என்றும், “தீயோர்க்கு அஞ்சேல்” (45) என்றும், ”சீறுவோர்ச் சீறு”
(28) என்றும் புதிய ஆத்திசூடியில் ரத்தினச் சுருக்கமாக இடம்பெறுகிறது. “நமனை அஞ்சோம்”
என்னும் அப்பரின் வாக்கு, “சாவதற்கு அஞ்சேல்” (26) என்று பாரதியின் நாவில் வெளிப்படுகிறது.
பாரதி
வாழ்ந்த காலத்தில் மக்களை அச்சம் பீடித்திருந்தது, ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது.
“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த / நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் / அஞ்சி அஞ்சி
சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே” என்று அன்று நாடு இருந்த நிலையைப் பாடிக்
காட்டுகிறார். தங்கள் கோழைத்தனத்தை அவர்கள் பண்பாடு என்னும் பெயரால் பூசி மெழுகியதைப்
பார்த்து நெஞ்சு பொறுக்காமல் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று பொங்கினார். இருக்கும் பொருள்களுக்கு அஞ்சுவதோடு கற்பனை செய்தும்
அஞ்சிக் கிடந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்: “வஞ்சனைப் பேய்கள் என்பார்
– இந்த / மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் / துஞ்சுது முகட்டில் என்பார்
– மிகத் / துயர் படுவார் எண்ணிப் பயப்படுவார்.” எனவே, “பேய்களுக்கு அஞ்சேல்” (72) என்று
புதிய ஆத்திசூடியில் தனியாகச் சொல்ல வேண்டியதாயிற்று.
உள்ளத்தில்
இருந்து அச்சத்தை நீக்கிவிட்டால் அதில் ஊக்கமும் வீரமும் ஊறி வரும். எனவே, ”ரௌத்திரம்
பழகு” (96) என்று சொல்கிறார். எப்படிப் பழகுவது? வரலாற்றில் வீரத்தின் அடையாளமாக இருந்த
மேன்மக்களை கவனித்துப் பார். “சூரரைப் போற்று” (30). அப்போது உனக்கும் அந்த வீரம் விளையும்.
”சொலல்வல்லன்
சோர்விலன் அஞ்சான்” என்பதை இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், சொலல் வல்லன்
என்பது கல்வி கற்றலைக் குறிப்பதாகவும், சோர்விலன் என்பது அதைச் செயற்படுத்தும் தொழில்
வாழ்க்கையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். கல்வி கற்று அதைச் செயல்படுத்தும் போது – அதற்குத்
தக நிற்கும்போது – நீங்கள் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது அஞ்சாமல்
போராட வேண்டும் என்பதையே அஞ்சான் என்பது குறிப்பதாகக் கருதலாம்.
சொலல்வல்லன்
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்தப் பண்பையே பாரதியார் “சொல்வது தெளிந்து சொல்”
(34) என்றும் “நேர்ப்படப் பேசு” (61) என்றும் ஆத்திசூடியில் ஆணை இடுகிறார்.
”சோர்விலன்”
என்பது வெற்றியாளனுக்கு உரிய இன்னொரு பண்பு. சோர்வு ஏன் வருகிறது? ஊக்கம் குன்றுவதால்
சோர்வு ஏற்படுகிறது. “ஊக்கமது கைவிடேல்” என்பது பழைய ஆத்திசூடியில் ஔவை சொன்ன அறிவுரை.
சோர்வு வாழ்க்கையை அழித்துவிடும் என்று பாரதியார் எச்சரிக்கிறார்: “கெடுப்பது சோர்வு”
(19). எனவே, “சிதையா நெஞ்சு கொள்” (27) என்பது அவர் தரும் அறிவுரை. பொருள்களில் மிக
உறுதியானது வைரம். நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் கரிதான் வைரம் ஆகிறது. நிலத்தின்
அழுத்தமே கரியை வைரம் ஆக்குகிறது. கரி எளிதில் உடைந்து விடும். அது வைரம் ஆகிவிட்டால்
அது எளிதில் உடையாத உறுதியை அடைந்துவிடும். உன் மனம் கரியைப் போல் இருக்கக் கூடாது,
வைரம் போல் இருக்க வேண்டும். எனவே, “சுமையினுக்கு இளைத்திடேல்” (29). வாழ்க்கைச் சுமைகள்
உன்னை வைரம் ஆக்குகின்றன என்று உணர்ந்து கொள். சிதையாத நெஞ்சு என்பது வைர நெஞ்சு. ஆதலால்,
“வைரமுடைய நெஞ்சு வேணும் – இது / வாழும் முறைமையடி பாப்பா” என்று பாடுகிறார்.
சோர்வைப் போக்கி ஊக்கத்தைப் பெருக்கும் பயிற்சிகளைச்
செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை ”ராஜஸம் பயில்” (90) என்று சொல்லி உணர்த்துகிறார்.
சோர்வு நீங்கி, ஊக்கம் நிரம்பி இருப்பது எற்றுக்கு? “நாளெல்லாம் வினை செய்” (55) என்பதற்கு.
வினை என்றால் தொழில், பணி. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று வாழ்வதற்கு. இதற்குக்
”கர்ம யோகம்” என்று பெயர்.
“நமக்குத்
தொழில் கவிதை / நாட்டுக்கு உழைத்தல் / இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்பது பாரதியார்
தனக்குத் தானே வரித்துக் கொண்ட வாழ்க்கை நெறி. இமைப் பொழுதும், அதாவது ஒரு நொடி நேரம்கூட
சோர்ந்து விடாமல் தன் தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். அதற்காகத்தான்,
“விசையுறு பந்தினைப் போல் – மனம் / விரும்பிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்று வேண்டினார்.
தொழில்
எதற்கு? பணம் சம்பாதிப்பதற்கு, சொத்துக்களைப் பெருக்குவதற்கு என்று நாம் நினைப்போம்.
பாரதியார் சொல்கிறார்: நாட்டுக்கு உழைப்பதற்கு. அவர் தனக்கு ஈடு இணையற்ற கவித்திறன்
வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கெஞ்சும் போதெல்லாம் உலக நோக்கு அங்கே இருப்பதைப் பார்க்கிறோம்.
வல்லமை
வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு வேண்டும் என்னும் தெளிவான கோரிக்கை: ”வல்லமை
தாராயோ? – இந்த / மாநிலம் பயனுற வாழ்வதற்கே.”
பாட்டுத்
திறன் வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு என்னும் தெளிவான நோக்கம்: “என்றன்
பாட்டுத் திறத்தாலே / இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.”
சோர்வு
இல்லாமல் நாளெல்லாம் வினை ஆற்றினால், செய்யும் தொழிலே தெய்வத்திடம் சேர்க்கும் கர்ம
யோகமாக, ஒரு தவமாக மாறிவிடும். இந்த அர்த்தத்தில் ஆத்திசூடியில் இன்னொரு அடி: “தவத்தினை
நிதம் புரி” (53).
தவம்
என்பதற்கு வேறொரு இடத்தில் பாரதியார் ஒரு வரையறை தருகிறார்: “தவம் செய்தால் எய்த விரும்பியதை
எய்தலாம் / வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை.”
அச்சம்
அழித்து, பயம் எனும் பேயை அடித்து, ஜெய பேரிகை கொட்டிய பாரதியார், “அன்பென்று கொட்டு
முரசே – மக்கள் / அத்தனைப் பேரும் நிகராம்!” என்றும் பாடுகிறார். “என் குலம் என்றுனைத்
தன்னிடம் ஒட்டிய / மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் / அறிவை விரிவு செய்,
அகண்டமாக்கு / விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை / அணைந்து கொள் உனைச் சங்கமம் ஆக்கு
/ மானிடச் சமுத்திரம் நானென்று கூவு” என்பது அவரது சீடர் பாரதிதாசன் தரும் சிந்தனை.
இந்த உலகப் பார்வை, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மரபின் விளைச்சல் என்பதை மீண்டும்
உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
பன்னீராயிரம்
மாணவர்கள் பயிலும் இந்தக் கல்லூரியில் இப்போது நாலாயிரத்து ஐந்நூறு மாணவிகளும் பயில்கிறார்கள்.
“தையலை உயர்வு செய்” (50) என்கிறது பாரதியின் ஆத்திசூடி. பெண்களுக்கான கல்வி என்பது
அதில் ஒரு வழிமுறை. அது எதற்காக? பாரதியார் சொல்கிறார்: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
/ அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.”
உயர்ந்த
சிந்தனைகளை நான் பசுமரத்து ஆணி போல் உங்கள் மனங்களில் பதிக்க வந்திருக்கிறேன் என்று
என்னை அறிமுகப் படுத்திய மாணவர் சொன்னார். பாரதியாரின் ஆத்திசூடி தரும் சிந்தனைகளை
உங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்ளுங்கள். அது போல் நீங்களும் சிந்திக்கப் பழகுங்கள்.
கீழான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்.
”உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல்” என்று திருவள்ளுவர் சொல்கிறார். அதை “எண்ணுவது உயர்வு” (7) என்று பாரதியார்
வழிமொழிகிறார். அதாவது, உயர்வான சிந்தனைகள் வேண்டும். அது எப்படி இருக்கும்? “யாதும்
ஊரே யாவரும் கேளிர்” என்று சிந்திக்கும். தான் பசித்துக் கிடக்கும் வேளையிலும், “வயிற்றுக்குச்
சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று சிந்திக்கும். அங்கேயும்,
“பயிற்றிப் பல கல்வி தந்து / இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்” என்னும் உலகளாவிய பார்வை.
அதே பார்வை ரௌத்திரம் கொள்ளும்போது, “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்” என்று முழங்குகிறது.
பாரதியாரின்
புதிய ஆத்திசூடி 110 அடிகளைக் கொண்டது. அதில் 109-ஆவது அடி, “வையத் தலைமை கொள்” என்பது.
இறுதியாக, 110-ஆவது அடியாக அவர் சொல்கிறார்: “வௌவுதல் நீக்கு.” உங்களுக்குத் தெரியும்,
பதவி ஆட்சி அதிகாரம் என்றெல்லாம் அடைந்துவிட்டால் அடுத்த நொடியில் இருந்தே வௌவுதல்
அதாவது சுரண்டல் ஆரம்பம் ஆகிவிடுகிறது. எனவே, ”வையத் தலைமை கொள்” என்று வாழ்த்துவதுடன்
”வௌவுதல் நீக்கு” என்றும் பாரதியார் எச்சரிக்கிறார். ஏனெனில் பதவியில் அமர்ந்தோர் தவறுகள்
செய்தால் “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.”
வையம்
வளமுடன் வாழ வேண்டும் என்று விழைகின்ற இந்த மனமும், உலகப் பார்வை கொண்ட சிந்தனையும்தான்
உண்மையான வையத் தலைமை. அது உங்களுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment