Saturday, September 17, 2022

காலமும் தாளமும்

 


            மனித மனம் பறவைகளைப் பெரிதும் இசையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. விதிவிலக்குகள் சில உண்டு. கிளி என்றால் பேச்சு. மயில் என்றால் நடனம். ஆனால், புள்ளினங்கள் யாவும் இசையுடன்தான் இயைகின்றன. உலகம் முழுவதும் இதுதான் மரபு.

            பாரதி எழுதிய குயில் பாட்டும் அப்படியே. குயில் ஆன்மாவின் குறியீடு என்பது அப்பாட்டிற்கான வியாக்கியானம். அந்தக் குயிலை வைத்து இசை என்னும் கலையை ஆழமாக அளந்து பேசுகிறார் பாரதி. குயில் தன் காதல் நிலையை உரைக்கும் பாடலில் இசை பற்றியே அதிகம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு பகுதி:

                        தாளம் தாளம் தாளம்;

                        தாளத்திற்கோர் தடை உண்டாயின்

                        கூளம் கூளம் கூளம்

            இந்த வரிகளை முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் இப்படி ஆங்கில ஆக்கம் செய்து அளித்துள்ளார்:

                        Time, Time, Time, Time;

                        If Time at all be not kept

                        Is it not dirt ill-left?

            பாரதியார் ஷெல்லியின் கவிதைகளில் மூழ்கித் திளைத்தவர் என்பதறிவோம். அவர் ஷேக்ஸ்பியரைப் படித்திருக்கிறாரா? தி.ந.ரா அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் மேற்கண்ட பகுதிக்குப் பின்வரும் அடிக்குறிப்பு வரைகிறார்:

                        “Ha, ha, keep time: how sour sweet music is

                         When time is broke and no proportion kept”

-        King Richard II. 1,1,42

            காலப் பிரமாணம் என்பது இசைக்கு அடிப்படை. ராகம் என்பது காலத்தின் மூச்சு; தாளம் என்பது காலத்தின் இதயத் துடிப்பு. ராகம் என்பது காலப் பறவையின் வானச் சிறகடிப்பு; தாளம் என்பது காலப் புரவியின் நிலமளக்கும் காலடியோட்டம்.



            பழந் தமிழிசை என்னும் கர்நாடக இசையில் துருவ, மட்டிய, ரூபக, ஜம்பை, திரிபுடை, அட, ஏக என்னும் ஏழு தாளங்களும் கால அளவை வைத்தே வகுக்கப்பட்டுள்ளன.

            தாளம் பற்றிப் பேசும்போது பாரதியின் இன்னோர் அற்புத வரியை நினைவுகூராமல் இருக்க முடியாது. சக்தி குறித்த வசனக் கவிதையில் அவர் சொல்கிறார்: “சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.”

            பிரபஞ்சமெங்கும் நீக்கமறப் பரவி இயங்குவதும் இயக்குவதுமான சக்தியைப் பற்றிப் பேசுகிறார் பாரதி. பிரபஞ்ச இயக்கத்தை நடனம் என்று உருவகிக்கிறது சைவ மெய்யியல். தாளம் இல்லாமல் நடனம் இல்லை. எதன் தாளம்? சக்தியின் தாளம். (சக்தி – Energy). சக்தி இல்லாத இடமே இல்லை என்பதாலும், அது தாளமிடுகிறது என்பதாலும் ‘சர்வம் தாள மயம்’ ஆகிறது. அந்தத் தாளத்தின் வெளிப்பாடு எது? ஒளி!

            ”சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்” என்னும் வரியில் உள்ள ’ஒரு’ என்னும் ஒரு சிறு சொல் உறுத்திக் கொண்டே இருந்தது. சக்திக் கூத்தில் ஒளியே தாளம் என்று சொல்லியிருக்கலாமே? அது ஏன் ஒளி ஒரு தாளம் என்று சொன்னார்? இந்தக் கேள்வி வெகு காலம் என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்தது. ஒரு தாளம் என்பது one beat என்பதைக் குறிக்கிறது என்று கொண்டால், ஒளி ஒரு தாளம் என்பதன் பொருள் என்ன? தாளத்தை beat (அடி / தட்டு / கொட்டு) என்று அளப்பது போல் ஒளிக்கு அளவு உண்டா? உண்டு என்கிறது இயற்பியல் விஞ்ஞானம்.



            ஒரு தாளம் என்பது தாளத்தின் ஓர் அலகு. எனில், ஒளியின் ஓர் அலகு எது? ஐன்ஸ்டீன் அதனை ’குவாண்டா’ (quanta) என்று அழைத்தார். பின்னர் அது ஃபோட்டான் (photon) என்றும் பெயர் பெற்றது. ஒளி அலை வடிவில் பாய்கிறது. எடையிலிகள் ஆன ஃபோட்டான்கள் வெளியில் அதி வேகத்தில் பயணிக்கின்றன என்று முன்பு சொல்லி வந்தனர். உண்மையில் ஃபோட்டான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே அதிர்ந்து மேலும் கீழுமாய் அசைகின்றனவே அன்றி அவை நகர்வதில்லை என்றும், தொடர்ந்து நிற்கும் ஃபோட்டான்கள் ஒவ்வொன்றும் தாம் இருக்குமிடத்திலேயே மேலும் கீழுமாய் அசைந்து அலை ஒன்று நகர்ந்து செல்வது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றன என்றும் குவாண்டம் இயற்பியல் கண்டறிந்தது.

அதாவது , வெளியெங்கும் சக்தியின் சலனம் மட்டுமே நகர்கிறது, துகளன்று. இதுவே சக்திக் கூத்து என்றும் சிவ தாண்டவம் என்றும் சுட்டப்படுகிறது. இது ஒரு கணம்கூட, கன்ணிமை நொடியின் கோடியில் ஒரு பங்கு நேரம் கூட ஓய்வதில்லை. ஆம், சக்தியின் அலைகள் ஓய்வதில்லை.

ஓய்வு நிலையை தூக்கம் என்னும் சொல் குறிக்கும். இறைவனுக்கு சோர்வும் ஓய்வும் கிடையாது. “அவனை சிறுதுயிலோ பெருந்துயிலோ பீடிக்காது” (குர்ஆன் 2:255) ஏனெனில், இறைவன் எல்லையற்ற சக்தி உடையோன். “சக்தி அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” (குர்ஆன் 2:165) ஆதலால், இறையாற்றல் எப்போதும் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “ஓவ்வொரு கணமும் அவன் புதிய மாட்சியில் இருக்கிறான்” (குர்ஆன் 55:29)

இறை சக்தியே இயங்குகிறது; அது பருப்பொருள் மீது வெளிப்படுவதால் அப்பொருளே இயங்குவது போல் தெரிகிறது. அணுத் துகள் அசையவில்லை. அதை சக்தி அசைக்கிறது. ”அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”.

இறை சக்தியே படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது. இம்மூன்று காரியங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன. எனவே, பொருள்கள் நிலையாக இருப்பன போல் தோன்றுகிறது.  அணுத்துகள்கள் உடைபடும் போது உடைந்த துகள்கள் சிறியவையாக இல்லாமல் தம் மூலப் பொருளின் அளவையே கொண்டுள்ளன என்றும் சக்தி அவற்றை அப்படி ஆக்கிவிடுகிறது என்றும் நவீன இயற்பியல் கண்டறிந்தத விந்தைச் செய்தியைச் சொல்லும் இயற்பியலாளர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா, “இதனால், உப அணுத் துகள்கள் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தவையாகவும் அழிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன” என்று சொல்கிறார் (”Tao of Physics” / 4.’The New Physics’, p.89)



நாம் வாழும் பிரபஞ்ச வெளி முப்பரிமாணம் கொண்டது. இத்துடன் காலம் என்பது நான்காம் பரிமாணம் என்று சொன்னார் ஐன்ஸ்டீன். இடமும் காலமும் தனித்தனியாக இல்லை, அவை இரண்டும் பிரிக்க முடியாத ஒன்று என்று சொல்லி, இட-காலம் (‘space-time’) என்னுமொரு கோட்பாட்டை 1908-இல் முன்வைத்தார் இயற்பியலாளர் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி. “இனிமேல், தனியே இடமும், தனியே காலமும் வெற்று நிழல்களாய்க் கரைந்து போகும். அவ்விரண்டும் சங்கமித்த ஒன்றே தனித்த உண்மையாய் நிற்கும்” என்று அவர் சொன்னார் (”Tao of Physics” / 12.’Space-time’, p.185)

நவீன இயற்பியலின் தொடர் ஆய்வுகள் இடம் மற்றும் காலம் குறித்துப் புதுப் பார்வைகளைத் திறந்தன. பிரபஞ்ச வெளி வளைந்திருக்கிறது (Space is curved) என்றார் ஐன்ஸ்டீன். ’காலம் எல்லா இடங்களிலும் ஒரே கதியில் ஓடவில்லை’ என்றார்கள். மேலும், “பிரபஞ்சத்தின் வெவ்வேறு இடங்களில் இடம் வேறு வேறு கோணங்களில் வளைந்திருக்கிறது, காலம் வேறு வேறு கதிகளில் ஓடுகிறது” என்றும் சொன்னார்கள் (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)



அதாவது, சக்திக் கூத்தில் பல்வேறு தாள கதிகள் இருக்கின்றன. சப்த தாளங்களும் ஒரே நடனத்தில் ஏக காலத்தில் நிகழ்வது போல்!

சக்தியின் இயக்கமே ஒளி. அது பிரபஞ்சமெங்கும் நிறைதிருக்கிறது. “அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்” (குர்ஆன் 24:35) எனினும், கட்புலன் ஆகும் இந்த அளக்க முடிந்த ஒளி அல்ல அது. அவன் இந்த ஒளிக்கு ஒளியாக இருக்கிறான்.

ஒளியின் கதியே காலம். ”நானே காலமாக இருக்கிறேன்” என்பது இறைவாக்கு (புகாரி:4549 & முஸ்லிம்: 2246.) எனினும், அளக்க முடிந்த இந்தக் காலம் அல்ல அது. அவன் இந்தக் காலத்திற்குக் காலமாக இருக்கிறான்.

சக்தியே ஒளியாகவும் காலமாகவும் இருக்கிறது எனில், வெளியாக (இடமாக) இருப்பது எது? சக்தியேதான்!

நவீன இயற்பியல் இன்னொன்றையும் கண்டது: “சக்தியே வெளியாக இருக்கிறது. பருப்பொருட்கள் யாவும் வெளியின் குறிப்பிடம் சார் உறைவே; சக்தியின் தோன்றி மறையும் திரட்சியே” (Particles are merely local condensations of the field; concentrations of energy which come and go.”) (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)

எனவே, ”நானே காலமாக இருக்கிறேன்” என்னும் வாக்கிலேயே ‘நானே இடமாக இருக்கிறேன்’ என்பதும் பொதிந்திருக்கிறது. பேருண்மை மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றின் தளத்தில் காலத்தைச் சொன்னாலே இடத்தையும் சொன்னதாகிறது.

இறைமையே இடத்தையும் காலத்தையும் வெளிப்படுத்துகிறது. அது, இடம் கருதின் பொருளாய்க் காட்டும், காலம் கருதின் வினையாய்க் காட்டும்.

No comments:

Post a Comment