’குணா’ என்றொரு திரைப்படம்
(1991). அதன் கதை ஆன்மிகக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒன்று.
குணா சிறுவனாக இருக்கும்போதே அவனின் அப்பா அவனையும் அவனின் தாயையும்
நிர்க்கதியாக விட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறார். சூழ்நிலை அவனின் தாய் மனோன்மணியை
வேசை ஆக்கிவிடுகிறது. அப்படி வளரும் அவனுக்குத் தன் பிறப்பு அழுக்கானது என்னும் சிந்தனை
மனப்பிறழ்வை ஏற்படுத்துகிறது. குணசீலம் கோயிலில் சங்கிலியால் கட்டிப் போடப்படுகிறான்.
எனவே “குணா” என்பதே அவன் பெயராகிவிடுகிறது. குணாவுக்கு அவனின் சிற்றப்பன் கள்ளச் சாவியால்
பூட்டுகளைத் திறக்கும் வித்தையைக் கற்றுத் தருகிறான்.
கோயில் கருவூலத்தைத் திருடுவதற்காகச் சிற்றப்பனும் அவனின் நண்பர்களும்
துறவி போல் வேடமிட்டுக்கொண்டு குணாவை அங்கே அழைத்துச் செல்கின்றனர். அபிராமி அங்கே
வருவாள் என்று சிற்றப்பன் அவனிடம் சொல்கிறான். அப்போது, அண்மையில் தன் தந்தையை இழந்தவளும்
அறுபது கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசுமான யுவதி ஒருத்தி அன்னதானம் இடுவதற்காகக்
கோயிலுக்கு வருகிறாள். தற்செயலான சமிக்ஞைகள் தனக்கு அடையாளம் காட்டுவதாகப் புரிந்துகொள்ளும்
குணா அந்த இளம் பெண்ணையே அபிராமி என்று மனதிற்குள் வரித்துக் கொள்கிறான். கோயிலில்
நடக்கும் திருட்டுக் கலவரத்தில் நகையையும் அவளையும் தூக்கிக் கொண்டு காரில் தப்பிவிடுகிறான்.
’மதிகெட்டான் சோலை’ என்னும் மலையில் உள்ள பாழடைந்த தேவாலயம்
ஒன்றில் சில காலம் அவளைத் தங்க வைக்கிறான். தானும் அவளும் சிவனும் சக்தியும் என்று
அவளிடம் சொல்கிறான். அவனின் பிதற்றல்களால் அவள் எரிச்சல் அடைகிறாள். அவனிடம் இருந்து
தப்பித்துப் போவது எப்படி என்று சிந்திக்கிறாள். ஒருகட்டத்தில், தன் தந்தையின் காரியதரிசி
தன்னைக் கொன்றுவிட்டு சொத்து முழுவதையும் சுருட்டிக்கொள்ள நினைக்கிறான் என்பது அவளுக்குத்
தெரிகிறது. மனிதர்கள் அனைவரும் பதவி, பணம், காமம் ஆகிய பித்துப் பிடித்து வாழ்கிறார்கள்
என்பதையும் குணாவின் மனப் பிறழ்வுக்குள் தூய காதல் இருப்பதையும் உணர்கிறாள்.
தன்னை ஒரு திருடன் என்று கருதி விரட்டி வரும் காவலர்களிடம் இருந்தும்
பணத்துக்காகக் கொலை செய்யத் துடிக்கும் பகைவரிடம் இருந்தும் தப்பிக்க குணா தன் நாயகியுடன்
மலையுச்சியில் இருக்கும் குகைக்குப் போய்விடுகிறான். அங்கும் அவனைத் தேடி வரும் காவலரும்
பகைவரும் செய்யும் தாக்குதலில் தப்பிதமாக நாயகி இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை அவனால்
நம்ப முடியவில்லை. இந்த உலகத்தை விட்டே போனால்தான் அவளுடன் வாழ முடியும் என்று முடிவு
செய்தவனாக அவளின் உடலைத் தூக்கிக்கொண்டு மலையுச்சியில் இருந்து பள்ளத்தில் பாய்கிறான்.
அப்போது வானில் பௌர்ணமி இலங்குவதைக் காட்டியபடி திரைப்படம் முடிகிறது.
உருவம் உள்ளத்தில் பதிந்துவிட்டால் அதை அழிப்பதுதான் எவ்வளவு
கடினமாக இருக்கிறது! அதிலும் அந்த உருவத்தை தெய்விகத்தின் குறியீடாக வரித்துவிடும்போது
அதை அழிப்பது சாத்தியமே இல்லாமல் போய்விடும். குணாவின் கதை இதையும் உணர்த்துகிறது.
”ஸ்தூலம் கடப்பதே பாலம் கடப்பது” என்கிறார் சூஃபி மகான் ஷாஹ்
மதார் ஆலிம். ஆனால் காரியத்தில் அதைச் சாதிப்பது எப்படி? ’சொல்லுதல் யார்க்கும் எளிய,
அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பதை யாம் அறிவோம்.
இன்னொரு அழகான நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது.
ஹரிவன்ஷ் லால் பூஞ்சா ஓர் அத்வைத ஞானி. ‘பாப்பாஜி’ என்று அழைக்கப்படுகிறார்.
ரமண மகரிஷியின் தொடர்பே அவரை ஞான நிலைக்கு இட்டுச் சென்றது. ரமணரிடம் தான் பெற்ற வழிகாட்டல்கள்
பற்றி அவர் பேசும்போது ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். அப்போது பாப்பாஜிக்கு இளம் வயது.
அவர் கிருஷ்ண பக்தியில் மூழ்கியிருந்தார். அவரின் கண் முன்னே ஸ்தூல வடிவமாகவே கிருஷ்ணன்
தோன்றும் தரிசனங்களை அவர் அடைந்திருந்தார். திருவண்ணாமலைக்கு அவர் வந்தபோது ஒருமுறை
அவர் மலையின் அப்பக்கம் போய் வெகு நேரம் கழித்து வந்தார். அவர் எங்கே போயிருந்தார்
என்று ரமணர் விசாரித்தார். கிருஷ்ணன் தோன்றியதாகவும் அவனுடன் விளையாடிவிட்டு வருவதாகவும்
பாப்பாஜி சொன்னார். ‘இப்போ கிருஷ்ணன் எங்கே?’ என்று ரமணர் கேட்டார். ‘அவன் மறைந்துவிட்டான்’
என்றார் பாப்பாஜி. அப்போது ரமணர் செய்த உபதேசம்தான் பாப்பாஜியை அப்படியே புரட்டிப்
போட்டுவிட்டது: “எது தோன்றவும் மறையவும் செய்கிறதோ அது சத்தியம் அல்ல, இறைவன் அல்ல.
அது உன் மனக் கற்பனையின் நீட்சிதான். பார்த்தவன் இங்கே இருக்கிறாய். பார்க்கப்பட்டவன்
எங்கே? அவன் இப்போது இங்கே இல்லை. பார்த்த நீ இப்போது இங்கே இருக்கிறாய். பார்த்தவன்
யார் என்று அறி!”
உருவங்கள் தோன்றி மறைகின்றன. அவை எதுவும் இறைவன் இல்லை. அவை
இறைவனை வெளிப்படுத்தும் வாயில்கள் ஆகலாம். ஆனால், அவையே இறைவன் ஆகிவிடாது.
இறைவனுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவனுக்கு உருவம் இல்லை.
அவன் எப்போதும் மாற்றமின்றி நிலையாக இருக்கிறான்.
எல்லாம் சரி. என்றாலும் உருவத்தை விட்டுவிடுவது அவ்வளவு எளிதாக
இல்லையே? எத்தனை எத்தனை உருவங்கள் உள்ளத்தைக் கவர்கின்றன, வனத்தில் தோன்றும் வைகறை
நேரத்துப் பூக்களைப் போல், அந்தப் பூக்களின் இதழ்களில் மின்னும் பனித்துளிகளைப் போல்.
பூக்கள் தோன்றி மலர்ந்து உதிர்ந்து மறையலாம். ஆனால் பூ என்னும்
தொல் படிமம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு பூவிலும் அதையேதான் தரிசிக்கிறோம். உண்மையில்
நம் மனத்தைக் கவர்வது பல பூக்கள் அல்ல; அந்தத் தொல் படிமமான ஒற்றைப் பூவே இந்த அனைத்துப்
பூக்களின் வழியாகவும் நம்மை ஈர்க்கிறது.
உன்னதமான ஓர் ஒற்றைப் படிமத்தைத் தேடித்தான் உருவங்கள் அனைத்தையும்
உள்ளம் சலிக்கிறது போலும்.
உருவம் அற்ற இறைவனை நீ எப்படி தரிசிப்பாய்? ஓர் உருவத்தில்தான்
அவன் வெளிப்பட்டாக வேண்டும். “மதுவே போதை தருகிறது, கோப்பை அல்ல; எனினும், கோப்பை இன்றி
மதுவை அருந்த முடியாது,” என்கிறார் மகாகவி இக்பால்.
’கோப்பையே வேண்டாம்’ என்று உதறித் தள்ளுபவனும்கூட கூஜா என்னும்
ஒரு பெரிய கோப்பையில் இருந்துதான் பானத்தைப் பருகுகிறான்.
படைப்புக்கள் என்னும்
சிறு கிண்ணங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பின்னரும், இறைத்தூதர் என்னும் கூஜா தனக்கு
வேண்டும் என்று கோருகிறார் இக்பால்:
”தேடப்படும் சத்தியமே!
எப்போதேனும் வா,
உருவமெனும் ஆடையை
உடுத்திக்கொண்டு!
பக்திப் பரவசத்தில்
பலநூறு சிரவணக்கம்
துடித்தபடி உள்ளன
அர்ப்பணமாகும்
என் நெற்றியில்!”
ஆனால், அதே அல்லாமா இக்பால் அவர்கள் வேறு விதமாகவும் நமக்கு
அறிவுரை சொல்கிறார்.
கூஜாவில் இருந்தே குடிப்பவரும்கூட அடையாத போதையை லைலா என்னும்
எளிய கிண்ணத்தில் பருகி அடைந்தவன் மஜ்னூன். எனவேதான், பேரின்பக் காதலுக்குக் குறியீடாக
அவனின் காதலை ஞானிகள் கையாள்கின்றனர். அவனும் இலக்கை அடைந்தவன் அல்லன்; லைலாவே அவனுக்குத்
தடையாக நிற்கிறாள் என்கிறார் இக்பால். அவர் நமக்குச் சொல்கிறார்:
”ஊரைத் துறந்துவிட்டான்
மஜ்னூன்,
நீ பாலைவனத்தையும் துறந்துவிடு!
சத்தியத்தின் தரிசனம் வேண்டுமெனில்
லைலாவையும் துறந்துவிடு!
பிரசங்கியே!
துறவின் முழுமைதான்
இலக்கை அடைகிறது.
இவ்வுலகைத் துறந்துவிட்டாய்,
எனில் இப்போது
மறுவுலகையும் துறந்துவிடு!”
இதற்கு மஜ்னூன் என்ன சொல்வான்? ”ஈருலகையும் நான் எப்போதோ விட்டுவிட்டேன்.
ஆனால், லைலா ஈருலகையும் சேர்ந்தவள் இல்லையே?” என்றுதான் கேட்பான்.
No comments:
Post a Comment