அறிவியல் உலகில் ஐன்ஸ்டீனும், கலை உலகில் தாகூரும் மாபெரும் மேதைகள். 1930-இல் ஜெர்மனியில் உள்ள காபுத் என்னும் மலைக்குன்றின் மேல் இருக்கும் மரவீடு ஒன்றில் ஐன்ஸ்டீனை தாகூர் சந்தித்து உரையாடினார்.
இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டது போன்ற நிகழ்வு அது.
ஐன்ஸ்டீனின் மருமான் திமித்ரி மரியனாஃப்
மற்றும் தாகூரின் செயலாளர் அமியா சக்ரவர்த்தி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். இரண்டு
மேதைகளின் உரையாடல்களை அவர்கள் குறிப்பெடுத்து அறிக்கை தயாரித்தனர். அது 10,ஆகஸ்டு
1930 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது.
”அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது
மிக சுவாரஸ்யமானது – தாகூர், ஒரு சிந்தனையாளனின் தலை கொண்ட கவிஞர், மற்றும் ஐன்ஸ்டீன்,
ஒரு கவிஞனின் தலை கொண்ட சிந்தனையாளர்,” என்று அந்த அறிக்கை மிக அழகாகக் குறிப்பிடுகிறது. இருவரின் உரையாடல், “இரண்டு கிரகங்கள் பேசிக் கொள்வதைப்
போல் இருந்தது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மெய்ப்பொருள் காண்பது பற்றி அவரவரின் துறை
சார்ந்த உன்னத அறிவுடன் இருவரும் நிகழ்த்திய உரையாடல் இன்று அறிவுலக வரலாற்று ஆவணம்
என்று போற்றப்படுகிறது. அதை இங்கே தருகிறேன்.
l
தாகூர்: நீங்கள் தொன்மையான இரண்டு பொருண்மைகளைக்
கணிதத்தால் வேட்டையாடுவதில் முனைந்துள்ளீர்கள் – காலம் மற்றும் இடம். நானோ, மனிதனின்
முடிவற்ற உலகம் மற்றும் சத்தியத்தின் பிரபஞ்சம் ஆகியவை பற்றி இந்த நாட்டில் உரையாற்றி
வருகிறேன்.
ஐன்ஸ்டீன்: இறைவன் இந்த உலகத்தை விட்டும்
பிரிந்த நிலையில் இருக்கிறான் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா?
தா: பிரிந்ததாக இல்லை. மனிதனின் முடிவற்ற
ஆளுமை பிரபஞ்சத்தை கிரகிக்கிறது. மனித ஆளுமையால் உள்வாங்கப்படாத எது ஒன்றும் இருக்க
முடியாது. பிரபஞ்சத்தின் உண்மை என்பது மனித உண்மையே என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
ஒரு விஞ்ஞானத் தகவலைக் கொண்டு இதை நான்
விளக்குகிறேன். பருப்பொருள் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகியவற்றால் உருவாகியுள்ளது.
அவற்றுக்கு இடையே வெளிகள் உள்ளன. ஆனால் பருப்பொருள் திடமானதகாகத் தெரிகிறது. அதேபோல்
மானுடம் தனிநபர்களால் ஆனதாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இடையில் மனித உறவுகளின்
இணைப்புகள் இருக்கின்றன. அது மனித உலகிற்கு ஓர் உயிர்ப்புள்ள ஒற்றுமையைத் தருகிறது.
இதே விதத்தில் பிரபஞ்சம் முழுவதுமே நம்முடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனித பிரபஞ்சம்
ஆகும். இந்தச் சிந்தனையை நான் கலை இலக்கியம் மற்றும் மனிதனின் சமய உணர்வு ஆகியவற்றில்
தொடர்ந்து ஓர்ந்திருக்கிறேன்.
தா: நம் பிரபஞ்சம் நித்தியனான மனிதனுடன்
ஒத்திசையும்போது அதை நாம் சத்தியம் என்பதாக அறிகிறோம், அழகு என்பதாக உணர்கிறோம்.
ஐ: இது முற்றிலும் மனித நோக்கிலான பிரபஞ்சக்
கோட்பாடாகும்.
தா: வேறு விதக் கோட்பாடு இருக்க முடியாது.
இவ்வுலகம் ஒரு மனித உலகம் – அதைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையும் விஞ்ஞானி என்னும் ஒரு
மனிதனின் பார்வையே. அதற்கு சத்தியத்தை நல்குகின்ற அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின்
அளவை ஒன்று இருக்கிறது. அது, நமது அனுபவங்களின் வழி தன் அனுபவங்களைக் காணும் நித்திய
மனிதன் என்னும் அளவுகோல்.
ஐ: இது மனிதன் என்னும் சுயத்தின் மெய்யுணர்வாகும்.
தா: ஆம். ஒற்றை நித்திய வஸ்து. அதை நாம்
நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றில் உணர்ந்தறிய வேண்டும். நமது தனிப்பட்ட
எல்லைகளால் தனக்கொரு எல்லைகள் உண்டாகிவிடாத அதி மனிதனை நாம் உணர்ந்தறிந்தோம். அறிவியல்
என்பது தனிநபர்களுக்கு உட்படாத ஒன்றைக் குறித்ததே கருதுகின்றது. அது தனிநபர் சார்பற்ற
உண்மைகளின் மனித உலகமாக இருக்கிறது. சமயம் இந்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நமது ஆழ்ந்த
தேவைகளுடன் இணைக்கிறது; சத்தியம் பற்றிய நமது தனிநபர் உணர்வு பிரபஞ்ச அளவில் முக்கியத்துவம்
அடைகின்றது. சமயம் சத்தியத்திற்கு மதிப்பீடுகளை இடுகின்றது. சத்தியத்துடனான நமது ஒத்திசைவைக்
கொண்டே அது நல்லது என்று நாம் அறிந்திருக்கிறோம்.
ஐ:
அப்படியானால், சத்தியம் அல்லது அழகு என்பது மனிதனை விட்டுப் பிரிந்தது இல்லை அல்லவா?
தா: இல்லை.
ஐ: இனி மனிதர்களே இல்லை என்றாகிவிட்டால்,
அப்புறம் ’பெல்வதீரின் அப்பல்லோ’ (என்னும் தொல் கிரேக்க சலவைச் சிற்பம்) அழகாய் இருக்காது
அல்லவா?
தா: இல்லை.
ஐ: அழகைப் பொறுத்தவரை இந்தக் கோட்பாட்டை
நான் ஒப்புகிறேன், ஆனால் உண்மையின் விசயத்தில் இதை நான் ஏற்கவில்லை.
தா: ஏன் இல்லை, சத்தியமும் மனிதனின் வழியாகவே
உணரப்படுகிறது.
ஐ: என் கோட்பாடு உண்மை என்று என்னால் நிரூபிக்க
முடியாது. ஆனால் அது என் மதம் ஆகும்.
தா: அழகு என்பது பிரபஞ்ச சுயத்தில் இருக்கும்
பூரண ஒத்திசைவில் உள்ளது. சத்தியம் என்பது பிரபஞ்ச மனத்தின் பூரண அறிவில் உள்ளது. தனி
நபர்கள் ஆகிய நாம் அதனை நமது சொந்த தவறுகளாலும் பிழைகளாலும், நமது அனுபவச் சேகரங்களாலும்,
நமது ஒளியூட்டப்பட்ட உணர்வாலும் அணுகுகிறோம். அப்படி அல்ல எனில், வேறு எப்படி நாம்
சத்தியத்தை அறிவோம்?
ஐ: மானுடத்துக்கு அப்பால் ஆன தனித்த ஒன்றாகப்
பார்க்கப்படும் சத்தியமே மெய்யாகும் என்பதை நான் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது.
ஆனால் அதை நான் உறுதியாக நம்புகிறேன். உதாரணமாக, ஜியோமிதியில் பைத்தாகோரஸின் தேற்றம்
ஒரு தோராயமான உண்மையைச் சொல்கிறது என்றும் அது மனிதனின் இருப்பைச் சார்ந்தது அல்ல என்றும்
நான் நம்புகிறேன். எப்படியோ, மனிதனுக்கு அப்பாலான ஒரு எதார்த்தம் இருக்கும் எனில் அந்த
எதார்த்தத்தைப் போன்றே சத்தியம் ஒன்றும் இருக்க முடியும். அதே ஏரணப்படி, முன்னதன் இன்மை
பின்னதன் இன்மையையும் கோருகிறது.
தா: பிரபஞ்ச சுயத்துடன் ஒருமித்துள்ள சத்தியம்
என்பது மனிதத் தன்மைக்குப் படுவதாகத்தான் இருக்க வேண்டும். இல்லை எனில், தனி நபர்களாகிய
நாம் உண்மை என்று உணரும் எதனையும் உண்மை என்றே உரைக்க முடியாது – குறைந்தபட்சம், மனிதனின்
சிந்தனைப் புலம் கொண்டு தர்க்க முறையில் அறிவியல் ரீதியாக மட்டுமே எட்ட முடிகின்ற உண்மையும்
கூட. இந்தியத் தத்துவத்தின்படி, தூய உன்னத சத்தியமான பிரம்மன் இருக்கிறான். பிரிந்து
நிற்கும் தனி மனித மனத்தினால் அல்லது வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதால் அதனை அறிய
முடியாது. தனி மனம் என்பது முடிவிலியில் முற்றிலும் மூழ்கிவிடும்போதே அது அறியப்படுகிறது.
ஆனால், அத்தகைய உண்மை அறிவியலுக்கு உரியதாக முடியாது. நாம் ஆலோசிக்கும் சத்தியத்தின்
இயல்பு யாதெனில், தோற்றம் ஆகும். அதாவது, மனித மனத்திற்கு உண்மை என்று தோன்றுவதாகும்.
அதனால், அது மனித உண்மை ஆகும். அதனை மாயை (illusion
/ தோற்றப் பிழை) என்று அழைக்கிறோம்.
ஐ: அப்படி எனில், இந்தியக் கோட்பாடாக இருக்கக்கூடிய
உங்கள் கோட்பாட்டின்படி, அது ஒரு தனி மனிதனின் மாயை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின்
மாயை.
தா: தனி உயிரும் ஒருமைக்கு, மானுடத்துக்கு
உரியதுதான். எனவே, அனைத்து மனித மனமும் சத்தியத்தை உணர்ந்தறிகிறது; இந்திய மனமும் ஐரோப்பிய
மனமும் பொதுவான உணர்ந்தறிதலில் சந்திக்கின்றன.
ஐ:
ஜெர்மன் மொழியில் உயிரினம் என்னும் சொல் அனைத்து மனிதர்களையும் குறிக்கிறது. மேலும்,
குரங்குகளும் தவளைகளும்கூட அதில் அடங்கும்.
தா: அறிவியலில் நாம் தனி மனித மனத்தின்
தனிப்பட்ட எல்லைகளை எல்லாம் களைந்து கொண்டே போய் பிரபஞ்ச மனிதனின் மனத்தில் இருக்கும்
சத்திய தரிசனத்தை அடைகிறோம்.
ஐ: சத்தியம் என்பது நமது உணர்வை விட்டும்
தனித்த பிரிந்த ஒன்றா? என்பதில்தான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது.
தா: நாம் உண்மை என்று குறிப்பிடுவது எதார்த்தத்தின்
பொருண்மை / அகநிலை (subjective) மற்றும் புறநிலை (objective) ஆகியவற்றின் அறிவார்ந்த
ஒத்திசைவில் இருக்கிறது. அவ்விரண்டும் அதி மனிதனுக்கு உரியவை ஆகும்.
ஐ: நம்முடைய அன்றாட வாழ்வில், நாம் பயன்படுத்தும்
பொருட்களுக்கு மனிதனை விட்டும் தனிப்பட்டதான எதார்த்தத்தை நாம் சார்த்தும் நிர்ப்பந்தம்
இருக்கிறது. நமது புலன அனுபவங்களை அறிவார்ந்த முறையில் ஒன்றிணைக்க அப்படி நாம் செய்கிறோம்.
உதாரணமாக, இந்த வீட்டில் யாருமே இல்லை என்றாலும் அந்த மேஜை அது இருக்கும் இடத்தில்
இருக்கவே செய்கிறது.
தா: ஆம், அது தனிநபர் மனத்திற்கு வெளியே
இருக்கிறது. ஆனால், பிரபஞ்ச மனத்திற்கு உள்ளேதான் இருக்கிறது. நான் கிரகிக்கும் மேஜை
என்பது நான் வைத்திருக்கும் உணர்வுக்கு ஏற்பத்தான் கிரகிக்கப்படுகிறது.
ஐ: வீட்டில் யாருமே இல்லை என்றாலும் மேஜை
அதுவாகவேதான் இருக்கும் – ஆனால் உங்கள் கண்ணோட்டத்தில் இது பிழைபடுகிறது – ஏனெனில்,
அங்கே மேஜை நம்மை சாராமல் தனித்திருக்கிறது என்பதன் பொருள் என்ன என்பதை நாம் விளக்க
முடியாது. மனிதகுலத்துக்கு அப்பால் ஆன சத்தியத்தின் இருப்பு என்ற நமது இயல்பான கண்ணோட்டத்தை
விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது. ஆனால் இது எவரிடமும் தொக்காத ஒரு நம்பிக்கை ஆகும்
– ஆதிவாசிகள் கூட. சத்தியத்துக்கு நாம் ஒரு அதிமனிதப் புறநிலையைக் கற்பனிக்கிறோம்;
அது என்ன என்பதை நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், நமது இருத்தல், நமது அனுபவம் மற்றும்
நமது மனம் ஆகியவற்றுக்கு அப்பாலான தனித்த இந்த சத்திய எதார்த்தத்தை நாம் அப்படி உருவகிக்காமல்
இருக்க முடியாது.
தா: மேஜை என்னும் பருப்பொருள் ஒரு தோற்றமே;
மனிதன் மனம் இல்லை என்றால் அது மேஜை என்று கிரகிக்கின்ற ஒன்றும் இருக்காது என்பதை அறிவியல்
நிரூபித்திருக்கிறது. அதே சமயம், பருப்பொருள் எதார்த்தம் (physical reality, மாம்ச
எதார்த்தம்) என்பது மின்னாற்றலின் சுழல்களால் ஆன ஒரு பெருந்திரளே ஆகும் என்ற தகவலும்
மனித மனத்திற்கு உரியதே என்பதையும் நாம் ஏற்க வேண்டும்.
மெய்யறிதலில் பிரபஞ்ச மனத்திற்கும் தனி
நபரில் அதுவே கட்டுப்பட்டுள்ள மனநிலைக்கும் இடையில் ஒரு நிரந்தர பிணக்கு இருக்கிறது.
நமது அறிவியல், தத்துவம், அறவியல் ஆகியவற்றில் இதனைச் சமாதானம் பண்ணும் செயற்பாடுகள்
தொடர்ந்து நடக்கின்றன. இப்படியோ அப்படியோ, மனிதத்துக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத
சத்தியம் ஏதேனும் இருக்கும் எனில் நமக்கு அது முற்றிலும் ‘இன்மை’யே (non-existing)
ஆகும்.
இடத்தில் (in space; வெளியில்) அல்லாது
காலத்தில் மாத்திரமே நிகழும் தொடர்ச்சி கொண்ட மனம் ஒன்றைக் கற்பனை செய்வது கடினமன்று.
உதாரணமாக, இசைக் குறிப்புகளின் வரிசை. அத்தகைய ஒரு மனத்திற்கு அப்படிப்பட்ட சத்தியக்
கோட்பாடு என்பது இசையின் எதார்த்தத்தை ஒத்ததாகும். அதில் பைத்தோகாரஸின் ஜியோமிதிக்கு
எந்த அர்த்தமும் கிடையாது. இது தாளின் எதார்த்தம்; இலக்கியத்தின் எதார்த்தத்தில் இருந்து
முற்றிலும் வேறுபட்டது. அந்தக் காகிதத்தைத் தின்னும் பூச்சியின் மனத்திற்கு இலக்கியம்
என்பது ஓர் இன்மை, இல்-பொருள். ஆனால், மனித மனத்திற்கு இலக்கியம் என்பது அந்தக் காகிதத்தை விடவும் மேலானது, உண்மையான மதிப்புடையது.
அதேபோல், மனித மனத்திற்கு புலன் வழியிலோ பகுத்தறிவு ரீதியாகவோ தொடர்புறாத ஓர் உண்மை
இருக்கும் எனில், நாம் மனிதர்களாக இருக்கும் வரை அது இன்மையாகவே இருக்கும்.
ஐ: அப்படி எனில், நான் உங்களை விட சமயத்தன்மை
மிக்கவன்!
தா: என் தனிமனித சுயத்தில் அதி மனிதனையும்
பிரபஞ்சத்தன்மை கொண்ட மனித உயிரையும் ஒன்றிணைப்பதே எனது சமயம்.
l
இந்த நிகழ்வு இரண்டு கடல்கள் சந்தித்துக்
கொண்டதைப் போன்றது என்று ஆரம்பத்தில் சொன்னேன். உண்மையில், இது கடல் பற்றி இரண்டு துளிகளின்
உரையாடல் என்று சொல்லலாம்.
அறிவியல் ஆன்மிகம் ஆகிய இரண்டு மெய்யறிதலுக்கும்
மனிதனே அளவுகோலாக இருக்கிறான் என்பதை இந்த உரையாடல் காட்டுகின்றது.
மனிதன் ஒரு பிரபஞ்சமாக இருக்கிறான் என்றும்
பிரபஞ்சமே ஒரு மனிதனாக இருக்கிறது என்றும் இந்த உரையாடல் உணர்த்துகிறது.
இதில் பேசப்பட்ட செய்திகள் புதியவை அல்ல.
மிகவும் தொன்மையான சிந்தனைகளே.
அதி-மனிதன் என்று தாகூர் குறிப்பிடுவதையே
சூஃபிகள் “அல்-இன்சானுல் காமில்” (பூரண மனிதன் / முழு மனிதன்) என்று குறிப்பிடுகின்றனர்.
”பிரபஞ்ச மனம்” என்று அவர் சொல்வதை சூஃபிகள் “நஃப்சுன் காமிலா” (பூரண மனம் / முழு மனம்)
என்று சொல்கின்றனர்.
அறிவியலும் ஆன்மிகமும் இங்கே ஒன்றை ஒன்று
ஆசையுடன் சந்தித்து உரையாடிக் கொள்கின்றன. ஒன்றை ஒன்று உண்மைப் படுத்துகின்றன. இந்தப்
புரிதல் மேதைகளுக்கே ஏற்படும்.
No comments:
Post a Comment