1986-இல் வெளிவந்த திரைப்படம்
’விக்ரம்’. அப்பெயரில் சுஜாதா எழுதிய நாவலைத் திரைக்கதையாக மாற்றி கமலஹாசன் தயாரித்து
நடித்தது. கதைக்களம் “சலாமியா தேசம்” (Kingdom of Salamia என்பது Kingdom of Saudi
Arabia என்பதன் பகடி. சலாமியா என்பதே அரேபியா என்பது போல் ஒலிக்கும் பெயர்தான். மட்டுமல்ல,
இஸ்லாம் என்னும் சொல்லின் இன்னொரு வடிவம் சலாமியா என்னும் சொல்.) தமிழகத்திலிருந்து
சலாமியா தேசத்திற்கு ஒரு குழு செல்கிறது. அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று ஊருக்குள்
அழைத்துச் செல்லும் விகடகவியான மொழிபெயர்ப்பாளன் (ஜனகராஜ்) சொல்வான்: “பொண்ணுங்களப்
பாக்காதீங்க, உங்க கண்ணுங்கள நோண்டீருவாங்க”.
ஹிஜாப் என்னும் முழுமையான திரையுடை அவ்வப்போது விவாதங்களையும் உரையாடல்களையும்
கிளப்பி வருகிறது. உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துக்கள் அது குறித்து முன்வைக்கப்படுகின்றன.
குர்ஆன் குறிப்பிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திய பர்தா முறை என்பது
என்ன என்பது முதல் வயதான பெண்களுக்கு பர்தா கட்டாயமா? என்பது வரை கருத்து வேறுபாடுகள்
நிலவுகின்றன.
”மணல் பூத்த காடு” நாவலின் கதாநாயகன் அனீஸ் தூத்துக்குடியிலிருந்து
சவூதிக்குச் செல்லும் போது ‘பொண்ணுகளப் பாத்தா கண்ணுகள நோண்டீருவாங்க’ என்னும் மனநிலையோடுதான்
செல்கிறான். ஆனால், சவூதியின் சுற்றுலாத் தளங்களில் ஐரோப்பிய அமெரிக்கச் சுற்றுலாப்
பயணிகளில் பெண்கள் திரையின்றி உலவுவதைப் பார்க்கிறான். “உலகின் ஓரம்” என்று சொல்லப்படும்
ஜபல் துவைஃக் என்னுமிடத்தில் கண்டத்தட்டு இயக்கவியலின் அடையாளமாக இருக்கும் பாறைகளைப்
பார்வையாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கும் பெண் “காக்கி நிற அரை டவுசரும் கருப்பு
டீ ஷர்ட்டும் ரேபான் கண்ணாடியுமாக”த் தோற்றம் தருவதைப் பார்க்கிறான். “அங்கு வந்திருந்த
யாருமே புர்கா (ஹிஜாப்) அணிந்திருக்கவில்லை. புர்கா அணியாமல் சவூதியில் எங்குமே செல்ல
முடியாதுன்னு எங்கேயோ ஒரு பன்னாட சொன்னிச்சே யாரு அது என்று யோசித்தபடி மலை நோக்கி
நடந்தான்” (ப.80).
அறபிகள் அவர்களின் பாரம்பரியமான உடையை மட்டுமே அணிவதில் மிகப் பேணுதலாக
இருப்பதை அவதானிக்கிறான் அனீஸ். சிறு பிள்ளைகள் முதற்கொண்டு யாருமே பேண்ட் சர்ட் அணிவதில்லை
என்றும் வெள்ளை நிறக் கந்தூரா அல்லது தவ்ப் என்பதுதான் அறபி ஆண்களுக்கான தேசிய உடையாக
இருக்கிறது என்றும் காண்கிறான். தொப்பியும் அதன் மீது குத்ரா என்னும் துணியும் அதன்
மீது அகல் என்னும் வட்டும் வைத்து ஆண்களுமே எப்போதும் தலையை மூடி மறைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாட்டுக்கும் குத்ரா துணியின் அடையாள நிறம் இருக்கிறது என்னும் குறிப்பையும்
யூசுஃப் வழங்குகிறார்.
”பெண்கள் கருப்பு நிற அபயா (புர்கா) அணிகிறார்கள் முகம் முழுக்க மறைத்து”
(ப.47) என்னும் ஒற்றை வரியில் பெண்களின் ஆடை பற்றிய விவரணை முடிந்தது.
”இந்திய இஸ்லாமிய ஆண்கள் இங்கிருந்து பெண்களின் உடையான புர்காவை எடுத்து
தன்னுடைய பெண்களைப் போட வற்புறுத்தி விட்டு அவர்கள் மட்டும் ஜீன்ஸ் பேண்ட், பேகி பேண்ட்,
காட்டன் பேண்ட், விதவிதமான ஷர்ட்ஸ் என சுகவாசியாகத் திரிவதாகத் தோன்றியது. பின்பற்றுவதாக
இருந்தால் ஆண்களின் உடையாகிய கந்தூராவையும் ஆண்கள் பின்பற்றுவதுதானே?” (ப.47) என்னும்
நியாயமான விமர்சனத்தையும் வைக்கிறார் யூசுஃப். பெண்ணுக்கு மட்டும் கற்பொழுக்கத்தை வலியுறுத்துகின்ற
ஆணாதிக்கப் போக்கின் வெளிப்பாடுதான் இது. ‘நீங்கள் ஏன் கந்தூரா அணியவில்லை?’ என்று
புர்கா அணிந்த எந்தப் பெண்ணாவது தனது கணவனைப் பார்த்துக் கேள்வியெழுப்பியது நிகழ்ந்திருக்கிறதா
என்று தெரியவில்லை. அல்லது அதை ஒரு நிபந்தனையாக எந்த மணப்பெண்ணாவது கோரியதுண்டா?
உடலின் ’அலங்காரங்களை’ப் பெண்கள் மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளை.
அது அடிப்படையான நியதி. அதை இன்ன நிறம் கொண்ட ஆடையால்தான் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான
விதிமுறைகள் இருப்பதாகத் தெரியவில்லை. பாலைவனத்தில் அவ்வப்போது காற்றினால் எற்றி வீசப்படும்
மண் துகள்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கவே ஆண்களுக்குக் கந்தூராவும் பெண்களுக்கு புர்காவும்
வடிவமைக்கப் பட்டுள்ளன என்று யூசுஃப் சொல்கிறார். அது தமிழகத்திற்குள் எப்படி வந்தது
என்பதைக் கேள்வி எழுப்புகிறார்: “ஊரில் இந்தக் கருப்பு புர்கா அணியும் முறை யார் கொண்டு
வந்தது? அம்மா வெள்ளை துப்பட்டியைத்தான் அணிந்திருந்தாள். காலப் போக்கில் இந்தக் கருப்பு
அங்கிக்குள் சமூகம் மூழ்கி விட்டது. அதிலும் வஹாபிகள் ஒரு படி மேலே போய் வீட்டில் இருந்தாலும்
புர்கா அணிய வேண்டும் அண்ணன் தம்பி என்றாலும் பார்க்கக் கூடாது என்ற கொடுமை எல்லாம்
நிகழ்த்த ஆரம்பித்து விட்டார்கள்” (ப.270).
தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் வெளியே செல்லும்போது வெண்ணிற துப்பட்டி
அணியும் சூழல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்ததை நானும் நினைவு கூர்கிறேன்.
இப்போது அது அருகிவிட்டது. கருப்பு புர்கா அபயா போன்றவைகள் பிடித்துக் கொண்டன. சென்ற
வாரம் கடலூருக்கு ஒரு நிச்சியதார்த்த நிகழ்வுக்குப் போயிருந்தேன் (ஹலாலான நிச்சயதார்த்தம்தான்.
ஏக இறைவனின் திருப்பெயரால்தான் நடந்தது). அங்கே ஒரு வாகனத்தில் வந்திறங்கிய பெண்கள்
வெண்ணிற துப்பட்டி அணிந்திருந்தார்கள். (புர்காவோ துப்பட்டியோ, வந்திறங்குவது பெண்கள்
என்று காட்டிக் கொடுத்துவிடுகிறதே. ’ஆகா, பெண்கள் இறங்குகிறார்கள்’ என்று அன்னிய ஆடவர்கள்
தெரிந்துகொள்ள வாய்ப்பாகிறதே? இது ஹராமான சூழல் அல்லவா?) இப்போதும் எனது மூத்த சகோதரிகள்
துப்பட்டிதான் அணிகிறார்கள். ஆனால அவர்களின் பெண் பிள்ளைகள் கருப்பு புர்கா அணிகிறார்கள்.
நான்கு தினங்களுக்கு முன் இலங்கையில் நிகழ்ந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளின்
விளைவாக புர்கா விவாதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தீவிரவாதிகளே புர்கா அணிந்து
கொண்டு தப்பிவிடும் உத்தியைக் கையாள்கிறார்கள் என்று சொல்லப்பட புர்காவையே தடை செய்வது
பற்றி அந்நாட்டரசு எண்ணி வருகிறது என்கிறார்கள். ’முஸ்லிம் பெண்கள் தற்காலிகமாக முகத்தை
மூட வேண்டாம்’ என்று ஒருவர் வேண்டுகோள் விடுக்கிறார். ‘(முகமூடி) புர்கா அணிந்த யாரும்
கடைக்குள் நுழைய வேண்டாம்’ என்று ஒரு கடையின் முன் எழுதி வைக்கப்படுகிறது. இப்படியாகப்
போய்க் கொண்டிருக்கிறது புர்கா எதிர்வினைகள்.
இலங்கையின் கவிஞர் அப்துல் ஹக் லறீனா எழுதிய “நிச்சயமாக இது கவிதையில்லை”
என்னுமொரு கவிதை இரண்டு தினங்களுக்கு முன் முகநூலில் வந்தது. குண்டுவெடிப்புக்குப்
பின் முஸ்லிம் பெண்கள் படும் சோதனைகள் பற்றி அது பேசுகிறது:
“முஸ்லிமாக
வாழ்தல் கடினமானது
முஸ்லிம்
பெண்ணாக வாழ்தல் நரகத்துக்குச்
சற்றுக் குறைவானதுதான்.
ஆடையின்
அங்குலங்களில் தொங்கிக்
கொண்டிருக்கிறது
எங்களின் கற்பும் ஒழுக்கமும்.
ப்ரஃபைல்
பிக்ஸரில் முகம் இருக்கிறதா
ஃபோட்டோக்கள்
போடுகிறோமா
எங்கள்
‘பேணுத’லின் அளவீடுகள்
அங்கிருந்துதான் தொடங்கி வைக்கப்படுகின்றன.
இரவில்
ஒன்லைனில் இருந்ததாலேயே
பலான
கதையாடலில் திளைப்பதாக
கற்பித
சேறு பூசுதல்களும்
அநாகரிக உள்பெட்டி இடையீடுகளும்.
சமூக
விமர்சனம் செய்தால்
சுயபரிசோதனைக்காகக்
குரல் கொடுத்தால்
மேலைத்தேய
சலவைக்கு
மூளையைக்
கழுவக் கொடுத்த
பெண்ணியவாதிப் பட்டம்.
நீயெல்லாம்
இஸ்லாம் பேசாதேடி
பொண்டாட்டியை
அதட்டுவது போல
கூசாமல்
அதட்டும் மானமற்ற பதர்களின்
எகத்தாளம்…
பொதுத்தளத்தில்
இணைந்து பணியாற்றினால்
அவனோடு
தொடர்பாம், இவனோடு உறவாம்
என்று
மனசாட்சியே
அற்ற ஈனக் கழிசடைகளின்
மலக்
கருத்துகளின்
மூக்கைத் துளைக்கும் நாற்றம்.
இன்னொரு
புறத்தில்
என்னுடைய
ஃபர்தாவுக்கும்
பயங்கரவாதத்துக்கும்
எந்தத்
தொடர்புமில்லை என்பதை
மும்மொழியிலும்
அடிக்கடி
வழிமொழிந்தாக வேண்டும்.
எவனோ
இடைநடுவில் திணித்த
ஒரு
நிகாபுக்காக
என்
தலை முந்தானையைப் பறிகொடுக்க
நேர்ந்திருக்கும் அவமான அவலம்.
இவ்வளவுக்குப்
பின்னும்
முஸ்லிம்
பெண் என்ற அதே அடையாளத்தை
சுமந்துதான் திரிகிறேன்.”
இக்கவிதையில் வரும் “எவனோ இடைநடுவில் திணித்த ஒரு நிகாபுக்காக…” என்னும்
வரி விரிவான வரலாற்று ஆய்வைக் கோரி நிற்கிறது.
*****************
”மணல் பூத்த காடு” நாவலின் மிக அழுத்தமான முக்கியமான பதிவு என்று அது
முன்வைக்கும் சவூதி அரேபிய வரலாறு மற்றும் சமய அரசியல்களைச் சொல்வேன். வஹ்ஹாபியம்
/ வஹ்ஹாபிஸம் என்று சொல்லப்படும் கடுங்கோட்பாடு எப்படியெல்லாம் அமைதிக்கு எதிரான செயற்பாடுகளையும்
தீய விளைவுகளையும் உண்டாக்கி வருகிறது என்பதை நாவலின் பல இடங்களில் தோழப்பா என்னும்
நபர் அனீஸுக்கு விளக்கிச் செல்லும் விதத்தில் முஹம்மது யூசுஃப் எழுதிச் செல்கிறார்.
அனீஸ் ரியாதுக்கு வந்திறங்கும்போதே விமான நிலையத்தில் அவன் கொண்டு
வந்திருக்கும் நூற்களைப் பார்த்துவிட்டு காவலர்கள் கேட்கும் கேள்விகளிலேயே வஹ்ஹாபிசம்
இந்நாவலில் அறிமுகமாகி விடுகிறது. அனீஸ் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கிய சில நாட்களில்
ஒருமுறை ஓட்டுநர் சுலைமானுடன் சென்று கொண்டிருக்கும்போது ’உயைனா’ என்னும் ஊரில் தங்குகிறார்கள்.
சவூதி தலைநகரான ரியாதுக்கு வடமேற்கில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிற்றூர்
அது. அவ்விடத்தில் அனீஸுக்கும் சுலைமானுக்கும் நடக்கும் உரையாடல் இது:
“சரி, எங்க போறது?”
“என்ன பாய் நீங்க, இப்ப நிக்கிற ஊரே ஹிஸ்டாரிக்கல்
ப்ளேஸ்தான். அல்லாமா முஹம்மது இப்னு அப்துல் வஹாப் பிறந்த ஊரு பாய் இந்த உயைனா”
“ஓ வஹ்ஹாபியிசத்தின் தந்தை அப்துல் வஹாப் நஜதி
பிறந்த ஊரா இது. வெளங்கும் வாங்க வேகமா ஊர காலிப் பண்ணுவோம்.” (ப.78).
சுலைமானும்
அனீஸும் அப்துல் வஹ்ஹாப் என்னும் நபரின் பெயரை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைக் கவனிக்க
வேண்டும். ”அல்லாமா” (மாபெரும் மார்க்க அறிஞர்) என்று அடைமொழி கொடுக்கிறான் சுலைமான்.
அதே சமயம் நஜ்தி என்னும் ஊர்ப்பெயர்க் குறிப்பை அவர் சொல்லவில்லை, அதை அனீஸ் குறிப்பிடுகிறான்.
அவருடைய முழுப்பெயர் முகம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் என்பது. வட அரேபியா நஜ்து என்று
வழங்கப்படும். மேட்டுப்பகுதி என்று பொருள். “நஜ்தில்தான் சாத்தானின் கொம்பு உதயமாகும்”
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த ஹதீஸ் உண்டு. அது வஹ்ஹாபிஸம் என்பது
தெளிவு. ஆனால், அது ஈராக் நாட்டினரைக் குறித்துச் சொல்லப்பட்டது என்று வஹ்ஹாபிகள் குழப்பவாதம்
செய்து ஹதீஸின் கருத்தைத் திரித்துப் பித்தலாட்டமாடி வருகிறார்கள். அவர்கள் சொல்வது
பிழை என்பது அந்த ஹதீஸை முழுமையாகப் படித்தால் விளங்கிவிடும். ஒரு முறை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பல ஊர்களிலிருந்தும் தம்மைக் காண வந்த கூட்டத்தினரிடையே ஷாம் தேசத்திற்கும்,
யமன் தேசத்திற்கும் அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். அப்போது
அங்கே இருந்த நஜ்து (இன்றைய ரியாத், உயைனா ஆகிய பகுதிகள் இருக்கும் மாகாணம்) பகுதியினர்
“எங்கள் நஜ்துக்கும் பிரார்த்தனை” செய்யுங்கள் என்று மூன்று முறை கேட்டபோதும் மும்முறையும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்துக்காகப் பிரார்த்திக்க மறுத்துவிட்டார்கள் என்பதோடு,
“அங்கேதான் ஷைத்தானின் கொம்பு உதிக்கும்” என்று சொன்னார்கள் என்பதே அந்த முன்னறிவிப்பு
நிகழ்ந்த நிகழ்வின் விவரம். (சஹீஹுல் புகாரி 7094; ஜாமிஉத் திர்மிதி: 3953) இதிலே ஈராக்வாசிகளுக்கு
ஒரு சம்பந்தமும் இல்லை.
முகம்மதிப்னு
அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (சாத்தானின் கொம்பாகிய அவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!)
மற்றும் அவனது கூட்டத்தினர் பற்றிய இன்னொரு முன்னறிவுப்பும் உண்டு. ஹதீஸெ துல் குவைஸிரா
என்று அதற்குப் பெயர். துல்குவைஸிரா அத்-தமீமி என்பவர் நபிகள் நாயகத்தை எதிர்த்துப்
பேசி நிராகரிப்பாளர் ஆனவர். எனவே அவரைச் சிரச்சேதம் செய்ய தம்மை அனுமதிக்குமாறு உமர்
(றலி) அவர்கள் கோரினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டு,
துல் குவைஸிராவின் சந்ததியில் வழிகெட்ட கூட்டம் பின்னாளில் உருவாகி வரும் என்று முன்னறிவிப்புச்
செய்தார்கள். (சஹீஹுல் புகாரி: 3610; சஹீஹுல் முஸ்லிம்: 1064). அந்த துல்குவைஸிரா அத்தமீமி
என்னும் வழிகேடனின் சந்ததியில் வந்தவன்தான் முகம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி என்பதும்
எண்ணத்தகும்.
உயைனாவிலிருந்து
மீண்டும் ரியாத் திரும்பிய அனீஸ் தான் அங்கே சென்று வந்தது பற்றி மீராசா என்னும் தோழப்பாவிடம்
சொல்கிறான். அப்போது அவருக்கும் அனீஸுக்கும் நடக்கும் உரையாடல் இது:
“அந்தச் சண்டாளன் பிறந்த ஊருக்கா போனீங்க?”
“ஓ! அப்துல் வஹாப் நஜதி பிறந்த ஊருன்னுத் தெரியுமா
உங்களுக்கு. அப்போ நீங்க சுன்னத் வல் ஜமாஅத் (இஸ்லாமிய கொள்கை) ஆளா”
“காயல்பட்டிணத்தில் வஹாபிகள் கொறவுதான். சங்கையான
ஊரு அது” (ப.83)
இவ்வுரையாடலைத்
தொடர்ந்துதான் தோழப்பாவிடமிருந்து வஹ்ஹாபிஸம் குறித்த வரலாற்றுச் செய்திகளை நாவல் நெடுகிலும்
அனீஸ் அறிந்து கொண்டே வருகிறான். நாவலை வாசிக்கும் நாமும் அறிந்து கொள்கிறோம்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும்
யூதர்களின் சதித்திட்டமாக வஹ்ஹாபிஸ்ம் உருவானதையும் (“உலகத்தோட ஒட்டுமொத்த தீவிரவாதத்தோட
ஆணிவேர் வளர்ந்த இடம் உசைனாதான்” (ப.239) என்று தொடங்கி வஹ்ஹாபிசம் உருவான வரலாற்றை
அனீஸுக்குத் தோழப்பா சொல்லும் விதத்தில் ஐந்து பக்கங்களில் (ப.240-244) சொல்கிறார்
யூசுஃப்), இங்கிலாந்தின் உதவியுடன் இப்னு சவூது கூட்டம் வன்முறையால் மக்கா நகரைக் கைப்பற்றியதையும்
(பக்.332-333), இப்னு சவூது குடும்பம் அரேபியாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவுக்கும்
ஐரோப்பிய நாடுகளுக்கும் சுரண்டக் கொடுத்துவிட்டு அவர்களின் உதவியுடன் மன்னராட்சியை
ஏற்படுத்திக் கொண்டதையும் (ப.365-366), இப்னு சவூதின் குடும்பத்திற்குள்ளேயே தேவை ஏற்படும்போதெல்லாம்
அமெரிக்கா குழப்பங்கள் விளைவிப்பதையும் (1975 மார்ச் 25ஆம் தேதி சவூதி மன்னர் ஃகாலிதை,
அவரின் மருமகன் ஃபைசல் பின் முசையத் சுட்டுக் கொன்றான். அவன், அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில்
படித்தவன் என்பதையும் கவனிக்க வேண்டும்), வஹ்ஹாபிய சித்தாந்தத்தையே இஸ்லாத்தின் தூய
வடிவம் என்று சொல்லி நடைமுறைப்படுத்தும் சவூதி மன்னராட்சி அங்கே இருந்த வரலாற்றுச்
சின்னங்களை அழித்து வருவதையும் (ப.203), வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்கும் திரிப்பதற்கும்
சவூதி அரசு அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்வதையும் (பக்.282-283), தெளிவான
நடைமுறையாக இருந்த பிறைக்கணக்கில் குழப்பதை ஏற்படுத்தி உலகெங்கும் பெருநாள் சண்டைகள்
ஏற்பட சவூதி வஹ்ஹாபிஸம் அமெரிக்கச் சதிக்குக் கருவியானதையும் (ப.207), தமிழகத்தில்
வஹ்ஹாபிச வழிகேடு மெல்ல மெல்ல தலையெடுத்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து சமூகத்தைக்
கூறு போட்டதையும் (பக்.366-367), சவூதியின் எல்லைப் பகுதி ராணுவ முகாம்களில் எல்லாம்
பாதுகாப்புப் பணி என்னும் போர்வையில் அமெரிக்கத் துருப்புக்கள் உலா வருவதையும் (ப.301) நாவல் நெடுகிலும், நாம் மேற்கொண்டு
விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஆதாரச் சுட்டல்களுடன், பரக்கச் சொல்லிச்
செல்கிறார் முஹம்மது யூசுஃப். இவ்வொரு பொறுப்புமிக்க அறிவுழைப்புக்காகவே இந்நாவல் படிக்கப்பட
வேண்டும் என்று சொல்லலாம்.
முஸ்லிம்களின் புனிதத்தலங்களான மக்கா மதீனா ஆகிவற்றுக்கு யாத்திரை
சென்று கண்ணாறக் காண வேண்டும் என்பது உலகெங்கிலும் வாழுகின்ற முஸ்லிம்களின் உயிரில்
பூக்கும் ஆசை. எனவே, அங்கேயே அறபிகளாகப் பிறந்து வாழ்வோரெல்லாம் பெரும் பாக்கியம் பெற்றவர்கள்
என்றும், அப்படியான் நல்லூழ் நமக்கில்லையே என்றும் அவர்கள் நெஞ்சம் ஏங்கக்கூடும். ஆனால்,
யூசுஃப் நமக்கு வேறு விதமான சித்திரத்தைத் தருகிறார்.
”… நான் இங்க அறபியா பிறக்கிறதை விட இந்தியாவுல
முஸ்லிமா இருக்கிறதைதான் பெருமையா நினைக்கிறேன். உங்களை விட நாங்கதான் இஸ்லாம் மார்க்கத்தை
கண்ணியமா பேணுகிறோம். உங்களுக்கு தக்வாவும் (இறைபயம்) கிடையாது, இக்லாஸும் (இறை தூய்மை
[அகத் தூய்மை என்றிருக்க வேண்டும்]) கிடையாது அதபும் (இறை ஒழுங்கு) கிடையாது” (ப.133)
என்று அனீஸ் தனது சக அலுவலனான அறபி நாட்டான் காலிதிடம் சொல்கிறான்.
வஹ்ஹாபிஸக் கொள்கையர்களான சவூதி அறபிகள் எப்படித்
தொழுகையை வெற்றுச் சடங்காக நிறைவேற்றுவார்கள் என்பது ஸுப்ரசித்தம். இதோ, அதன் சில அம்சங்களைத்
தோழப்பா அனீஸிடம் கூறுகிறார்: “என்ன மார்க்கம் இருந்தது இவங்ககிட்ட, வஸிலா கூடாது,
வக்கிமுஸ்ஸலாத்த தொழு இறைவனிடம் துவா கேளு (பிரார்த்தனை)ன்னு சொல்லுறான். அந்தத் தொழுகையாவது
ஒழுங்கா செய்றாங்களா. சுன்னத் தொழுகையே கிடையாது. பள்ளிவாசலுக்கு உள்ள போனா அந்தப்
பள்ளிவாசலைக் கட்டினவருக்காக ரெண்டு ரகஅத் தொழனும் அப்புறம் பர்ளு (முக்கியத் தொழுகை).
அதையும் தக்பீர் கட்டின அப்புறமும் வடக்கத் தெக்க கிழக்க மேற்கன்னு நகர்ந்து எங்க வேணாலும்
போவான். ஆயிரத்தெட்டு தடவ போட்டிருக்கிற டிரஸ்ஸ சரி செய்வான். தொழும்போது அல்குர்ஆனை
திறந்து வச்சு பார்த்துக்கிட்டே ஓதலாம்னு சொல்லியாச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல மொபைல்ல
குர்ஆனை பார்த்துக்கிட்டே ஓதலாம்னு சொல்லிருவாங்க. தக்வாவே (பயபக்தி) இருக்காது. அவன்தான்
மெச்சனும் அவன் தொழுகைய” என்றவர் “பச்.. அவன் என்ன செய்வான் பாவம், பிரிட்டீஷ்காரன்
அப்படித்தான செய்யச் சொன்னான்.”
இந்தக் கடைசி வரி அனீஸுக்கே கொஞ்சம் மிகையாகத்
தெரிகிறது. “தொழவுமா பிரிட்டீஷ்காரன் சொல்லிக் கொடுத்தான். ஆ வூன்னா உடனே பிரிட்டீஷ்காரன்னு
ஆரம்பிச்சிடுறீங்க” என்று தோழப்பாவிடம் கேட்கிறான். (இஸ்லாத்தில் தூய வடிவில் பேணுகிறோம்;
குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ் படிக்கு நூல் பிடித்தாற்போல் ஆதார்ப்பூர்வமாக மார்க்கத்தைக்
கடைப்பிடிக்கிறோம் என்பதுதானே வஹ்ஹாபிகளின் வாதம்? அப்படியிருக்க தோழப்பா இப்படி சொல்வது
எப்படி என்று நாமும் கேட்போமல்லவா?)
தோழப்பா அவனுக்கு விடை சொல்கிறார்: “இஸ்லாத்தை
இம்மண்ணில் இருந்து எவ்வாறு அழிக்க வேண்டும்”ங்கிற தலைப்பில் 14 விஷயங்கள் அடங்கிய
பெரிய ஒப்பந்தம் (ஆதாரம்:- Confessions of a British Spy and British enmity
against Islam – Memoirs of Mr.Hempher) பதெனேழாம் நூற்றண்டிலே தயார் செஞ்சி கொடுத்திட்டான்.
இன்னைக்கு வரைக்கும் இருக்கிற கேள்விகளுக்கு அதில் பதில் இருக்கு. நீங்க வாசிக்கிறதில்ல,
சொன்னாலும் விருப்பபடுறதில்ல.”
*************************
”மணல் பூத்த காடு” நாவல் ஒரு தகவல்
களஞ்சியம். அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமுள்ள வாசகர்களுக்கு இந்நாவல் ஒரு பெருவிருந்தாக
அமையும் என்பதில் ஐயமில்லை. அவ்வளவு தகவல்களைக் கதைக் கட்டமைப்போடு ஊடுபாவாகப் பின்னித்
தந்திருக்கிறார் முஹம்மது யூசுஃப். ஒரு சில அரிய மற்றும் சுவையான தகவல்களை இங்கே சுட்டிக்காட்ட
விழைகிறேன்.
ஜபல் துவைஃ என்பது Edge of the World என்று அழைக்கப்படுகிறது. அங்கே
வரும் மேற்குலகச் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கற்களைப் பொறுக்கிச் செல்கிறார்கள்.
மாக்ஸ் ஸ்டெய்னெக், மைக்கேல் பெட்ராக்ளியா என்னும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தில்
எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிந்தார்கள். பேலியோ டெஸர்ட் புராஜெக்ட் என்னும் திட்டம்.
1967 ஜூன் 11ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய “சிக்ஸ் டே வார்” என்னும் போரினைத்
தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் “முஸ்லிம் வேர்ல்ட் லீக்” தொடங்கியது.
அமெரிக்கப் படையினரால் தூக்கிலிடப்படுவதற்கு முன் தனிமைச் சிறையில்
இருந்தபோது சதாம் ஹுசைன் அறபி மொழியில் ஒரு கவிதை எழுதினார். அது வாஷிங்டன் டிசியில்
உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பாதுகாக்கப் பட்டுள்ளது. அக்கவிதையின் சில வரிகளை இந்நாவலில்
முஹம்மது யூசுஃப் தமிழில் தந்துள்ளார். சதாம் ஹுசைன் சூஃபித்துவத்தில் ”மாபெரும் குரு”
என்று அழைக்கப்படும் முஹையுதீன் இப்னுல் அரபி அவர்களின் வழியைக் கைப்பிடித்தவர் என்பது
எனக்கு இன்ப அதிர்ச்சி நல்கிய செய்தியாக இருந்தது.
சவூதியின் எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அண்டை நாட்டுக் கலாச்சார சாயல்
அறபுக் கலாச்சாரத்துடன் கலந்துள்ள நிலையில் தென்படுகின்றனர். அரார் என்னும் ஊரில் துருக்கியில்
காணப்படுபவை போன்ற நீல நிறப் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அவ்வூர் மக்களில் சிலர் ஈராக்கின்
பூர்வகுடிகளாகவும் துருக்கித் தொப்பி அணிந்தவர்களாகவும் உள்ளனர்.
1164-இல் மன்னர் மஹ்மூது ஜன்கி நூருத்தீன் காலத்தில் மொரோக்கோவைச்
சேர்ந்த இருவர் சுரங்கம் தோண்டி மதினா நோக்கி வந்தார்கள்.
1503-இல் லுடோவிசோ டி வர்தேமா என்னுமொரு ஐரோப்பியர் முதல் முதலாக மக்கா
மதீனா ஆகிய நகரங்களுக்குள் மாறுவேடத்தில் நுழைந்தவர். (இவர் தமிழ்நாட்டுக்கும் வந்திருக்கிறார்).
1853-இல் மிர்ஸா அப்துல்லாஹ் அல்புஷ்ரி என்னும் பெயரில் மாறு வேடத்தில் மக்கா மற்றும் மதீனாவுக்குள் நுழைந்ததோடு தனது அனுபவங்களை “பெர்சனல் நரேட்டிவ் ஆஃப் எ பில்க்ரிமேஜ் டொ அல்-மதீன அண்ட் மெக்கா” என்று எழுதியவர் இந்தியாவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியின் மிலிட்டரி கேப்டனாக இருந்த ரிச்சர்ட் ஃபிரான்சிஸ் பர்ட்டன். ஆயிரத்து ஓர் இரவு கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் இவரே. (பன்மொழிகள் அறிந்தவர் அவர். வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரத்தை ஆங்கிலத்தில் பெயர்த்ததோடு, ஷைகு நஃப்ஸாவி என்பவர் எழுதிய நூலாகச் சொல்லப்படும் அறபி மொழியின் காமசூத்திர நூலை “தி பெர்ஃப்யூம்டு கார்டன்” என்னும் பெயரில் ஆங்கிலத்தில் ஆக்கினார். இதுவுமே ரிச்சர்ட் பர்ட்டனின் மாறுவேடமிட்ட சதி நூலாக இருக்கலாமோ என்று நான் ஐயுறுகிறேன். இந்நூல் அண்மையில் பெரு.முருகன் என்பாரால் தமிழாக்கம் செய்யப்பட்டு ’கடற்குதிரை பதிப்பகம்’ வெளியீடாக வந்துள்ளது)
நபிமார்களில் (இறைத்தூதர்களில்) பதினொருவரின் தர்காக்கள் பலஸ்தீனிலும்,
இருவரின் தர்காக்கள் ஈராக்கிலும், மூவரின் தர்காக்கள் சிரியாவிலும் இருக்கின்றன என்று
புள்ளி விவரம் தந்து அவற்றை அழித்துத் தரைமட்டமாக்கி வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கும்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சதியையும் இந்நாவலில் விளக்கிச் சொல்கிறார் யூசுஃப்.
1947-இல் கும்ரான் குகைகள் என்னுமிடத்தில் ஆட்டிடையன் ஒருவர் கண்டெடுத்த
தாழிகளின் உள்ளே இருந்த பழங்காலச் சுருள்கள் (scrolls) பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
இந்நாவலில் உள்ளன. அவை “The Dead Sea Scrolls” என்று அழைக்கப்படுவன. அவற்றில்தான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களை ஏசுநாதர் முன்னறிவிப்புச் செய்த வசனங்கள் இடம்பெறும் ”பர்னபாஸ்
எழுதிய சுவிசேஷம்” இருந்தது. மட்டுமல்ல, அவற்றில்தான் ஏசுநாதருக்குத் திருமணம் நடந்தது
என்றும் மேரி மக்தலேனாவே அவரின் மனைவி என்றும் கருத்துக்கள் எழக் காரணமாக இருந்த மக்தலேனா
எழுதிய சுவிசேஷமும் இருந்தது! அதுவே பின்னாளில் “Holy Blood Holy Grail” என்னும் நூலுக்கு
வித்திட்டது. அந்நூலை அடிப்படையாக வைத்தே பின்னாளில் டான் பிரவ்ன் தனது “டாவின்சி கோட்”
என்னும் அதிரடி நாவலை எழுதினார்).
உதுமானிய ஆட்சியைத் திட்டமிட்டு அழிப்பதற்கென்று உருவாக்கப்பட்ட “மெக்கா
ஷ்ரைனர்ஸ்” என்னும் அமைப்பைப் பற்றித் தெரியுமா? இந்நாவல் நமக்கு அந்த வரலாற்றை அறிமுகம்
செய்கிறது.
“மங்கோலிய மன்னன் ஹுகுலா ஈராக்ல இருந்த ‘பைத்துல் ஹிக்மா’ (ஞான இல்லம்)ங்கிற
லைப்ரரிய எரிச்சான்” என்னும் தகவலை அனீஸிடம் சொல்லும் தோழப்பா அந்நூலகத்தில் இருந்த
ஆறு அரிய மருத்துவ நூற்களின் பெயர்களையும் அவற்றின் எழுதிய அறிஞர்களின் பெயர்களையும்
தருகிறார்.
சாலி அல் கபீர் என்னும் ஊருக்கு முன்பு மத்ஹூன் என்னும் பள்ளிவாசல்
இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நிகழ்த்திய பள்ளிகளில் அதுவும் ஒன்று.
அங்கிருந்து சற்றுத் தொலைவில் உத்பா மற்றும் ஷைபா ஆகியோருக்கு உரிமையாய் இருந்த ஐந்தாம்
நூற்றாண்டின் திராட்சைத் தோட்டம் இப்போதும் விளைந்தபடி உள்ளது. அங்கு நபிகள் நாயகம்
(ஸல்) வந்திருக்கிறார்கள். அங்கே பணியாற்றிய அத்தாஸ் என்பவர் நபிகளாருக்கு திராட்சைகள்
வழங்க அவர்கள் அதனைப் புசித்திருக்கிறார்கள்.
லைலா மஜ்னூன் கதைகளில் வரும் லைலாவின் ஊர் ”லைலா அஃப்லாஜ்” என்பதாகும்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியை ஃபூல்ஸ் டே – முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம்.
அம்மாதத்தில்தான் கணக்கு வழக்குகள் சரிபார்க்கப் படுகின்றன. வங்கிகளுக்கு முக்கியமான
மாதமாகிறது. இதெல்லாம் செப்டம்பர் 1752-இல் ஏற்பட்ட ஒரு காலக் கணக்கீட்டு மாற்றத்தால்
உண்டானது என்னும் வரலாற்றுச் செய்தியை இந்நாவல் தருகிறது.
தெற்கு சிரியாவில் தொடங்கி, அன்று இல்லாதிருந்ததும் இன்றைய இஸ்ரேல்
நாட்டினதுமான பல ஊர்களின் வழியாகக் கடந்து ஜோர்டானுள் நுழைந்து கடந்து இறுதியில் மதீனா
நகருக்கு வந்து முடிந்த “ஹிஜாஸ் ரயில்வே” பற்றித் தெரியுமா? 1908-இல் தொடங்கப்பட்ட
அப்போக்குவரத்து 1920-இல் நின்று போனது ஏன் என்று தெரியுமா? அந்த வரலாற்றை இந்நாவல்
சொல்கிறது. (”லாரன்ஸ் ஆஃப் அரேபியா” என்னும் திரைப்படம் இக்கதையைச் சித்தரிக்கிறது).
ஐரோப்பாவில் ஜபலெதாரிக் (தாரிக் மலைக்குன்று) - ஜிப்ரால்டர் என்று
ஆங்கிலத்தில் சொல்லப்படும் – இடத்தில் சவூதி மன்னர் ஃபைசல் இரண்டே ஆண்டுகளில் ஐந்து
மில்லியன் யூரோ செலவில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். அது ஏன் என்னும் வரலாற்றை இந்நாவல்
இயம்புகிறது.
சகாகா
என்னும் ஊருக்கு வெளியே அல்-ரஜாஜில் கற்கள் என்னும் இடம் ஒன்றுள்ளது. அது ”அரேபியாவின்
ஸ்டோன்ஹென்ஜ்” எனப்படுகிறது. வணிகக்குழுவுடன்
சிரியாவுக்குச் சென்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அந்த இடத்தைக் கடந்துதான் சென்றிருப்பார்கள்
என்று யூசுஃப் அவதானிக்கிறார். அக்கற்கள் காலக் கணக்கீடு செய்வதற்கான அமைப்புக்கள்
ஆகும்.
தமிழகத்தில் தும்பட்டிக் கோட்டை என்று ஓர் ஊர் உள்ளது. அங்கே வண்ணக்
களஞ்சியப் புலவரின் தர்கா இருக்கிறது. ஏர்வாடி தர்காவில் அடங்கியிருக்கும் இறைநேசர்
சையத் இபுறாஹீம் பாதுஷா அவர்களின் வரலாற்றை அவர் ஒரு காவியமாகப் பாடியிருக்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான குறிப்பு இவரைப் பற்றியது. அதை அறிய நீங்கள்
நாவலை வாசிக்க வேண்டும்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறைத்தூதுத்துவ வாழ்வில் முதன் முதலில்
சந்தித்த போர் “பத்ரு யுத்தம்”. அஃது, அன்றைய உலக வல்லரசுகளாக இருந்த சாஸ்ஸானியப் பேரரசும்
பைஸாந்தியப் பேரரசும் வீழ்வதற்கு வித்திட்டது. அது எவ்வாறு என்று அறிய வேண்டுமா? இந்நாவலை
நீங்கள் வாசிக்க வேண்டும்.
(அடுத்த பாகத்தில் முடிவுறும்...)
No comments:
Post a Comment