Thursday, May 9, 2019

அல்லாஹ் யார்?



     






   அமெரிக்காவில் இருக்கும் எனது தம்பி தனது மகனுக்காக இஸ்லாமிய சிறுவர் நூற்கள் (ஆங்கிலத்தில்) ஏதேனும் வாங்கி அனுப்பும்படிக் கேட்டிருந்தார். ”Goodword” பதிப்பக நூற்கள்தான் சட்டென்று நினைவுக்கு வந்தன. மூன்று நூற்கள் வாங்கி அனுப்பி வைத்தேன். அவற்றுள் மிகச் சிறிய நூல் “Who is Allah?” என்பது. பாட்டி ஒருவர் தனது பேரன் மற்றும் பேத்தி இருவருக்கும் இறைவனை அறிமுகப் படுத்துவதுதான் நூலின் உள்ளடக்கம். மிக எளிதான ஆங்கிலத்தில் சல்மா உம்மு ஜைனப் என்பார் எழுதியிருக்கிறார். குர்மீத் என்பவர் அழகிய சித்திரங்கள் தீட்டியுள்ளார். மூன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான நூல் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதிலுள்ள சில செய்திகள் கிரகித்துக் கொள்வதற்கு ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. மெய்ஞ்ஞானத்திற்கு அடிப்படியாக அமையும் சில புரிதல்களை வெளிப்படுத்துவன. நூலின் இறுதியில் “அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்” தொன்னூற்று ஒன்பதின் ஆங்கில பொருள் பட்டியலிடப் பட்டுள்ளது. அவை நீங்கலாக நூலின் சாராம்சமான பகுதியை இங்கே தமிழில் தருகிறேன்:


அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறோம்
அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.




















உன்னைச் சுற்றிலும் பார்…
என்ன காண்கிறாய்?

நிறைய பொருட்கள் – சிறிதும் பெரிதும்
தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிறைய பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
கற்று அறிய வேண்டிய நிறைய பொருட்கள் உலகில் உள்ளன.

இவை எப்படி வேறுபட்டு உள்ளன என்பதை நீ பார்.
ஆனால் அவை எல்லாம் ஒன்றுதான்.
எப்படி என்று உனக்குத் தெரியுமா?

அவை எல்லாம் ஜடத்தால் உண்டானவை.
அவற்றுக்கு அளவும் இடவெளியும் எடையும் உள்ளன.
அவை எல்லாம் அளக்க முடிந்தவை.
அவை எல்லாவற்றுக்கும் ஆரம்பமும் முடிவும் உள்ளன.

அவை ஒவ்வொன்றும் இருப்பதற்கு மற்ற பொருள்கள் தேவைப் படுகின்றன.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்ண உணவும், குடிக்க நீரும், மூச்சுவிடக் காற்றும் தேவை.
செடிகளுக்கு மண்ணும் நீரும் சூரியனும் தேவை.

எதுவும் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள முடியாது.
எதுவும் தன் தானே இருக்க முடியாது.
எனில், எல்லாம் எப்படி ஆரம்பம் ஆயின?
இல்லாமையில் இருந்து ஏதாவது தானே வெளிவர முடியுமா?
அவை எல்லாம் எங்கிருந்து வந்தன?

கூறுங்கள்: அல்லாஹ்.
அவன் மகத்தானவன், உயர்வானவன்.

அனைத்தையும் ஆரம்பிக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.
அனைத்தையும் முடிக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.
அனைத்தையும் கட்டுப்படுத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு.

அல்லாஹ்வை மட்டுமே அளக்க முடியாது.
அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆரம்பமும் முடிவும் இல்லை.
அல்லாஹ்வுக்கு மட்டுமே வேறு எதன் தேவையும் இல்லை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் எல்லைகளும் தேவைகளும் உள்ளன.
எனவே, ஆரம்பமும் முடிவும் எல்லைகளும் தேவைகளும் இல்லாத, பிரபஞ்சத்திற்கு அப்பாலான ஒரு மூலத்தில் இருந்தே பிரபஞ்சம் வந்துள்ளது என்று நாம் அறிகிறோம்.

அந்த மூலத்தை நாம் அறபியில் ”அல்லாஹ்” என்றும் ஆங்கிலத்தில் “காட்”(“GOD”) என்றும் அழைக்கிறோம்.

அல்லாஹ் மகத்தானவன் மேலானவன். அவனுக்கு நாம் உருவப் படங்களை வரைய முடியாது.

அல்லாஹ் மகத்தானவன் மேலானவன். அவனுக்கு நாம் சிலைகள் வடிக்க முடியாது.

நாம் பார்க்கும் எதை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
நாம் அறிய முடிந்த எதனை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
நாம் கற்பனை செய்ய முடிந்த எதனை விடவும் அல்லாஹ் மகத்தானவன்.
எனவே நாம் சொல்கிறோம்: அல்லாஹு அக்பர்.
அல்லாஹ் மகத்தானவன்!

நாம் நமது உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
அதை ஆராயவும் கற்றுக் கொள்ளவும் நமது புலன்களைப் பயன்படுத்தலாம்.
ஆனால், நமது புலன்களும் நமது உலகமும் மகத்தானவனும் மேலானவனுமான அல்லாஹ்வைப் பற்றி நமக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் அல்லாஹ் இருக்கிறான், அல்லாஹ் மகத்தானவன் என்பது மட்டுமே.

அதனால்தான் மகத்தான மேலான அல்லாஹ்வைப் பற்றி நமக்குச் சொல்ல அவன் நம்மிடம் தூதர்களை அனுப்பினான் (அவர்கள் மீது அமைதி இருப்பதாக). 




















மகத்தான மேலான அல்லாஹ் அளித்த இறுதியான செய்தி நமக்குச் சொல்கிறது: அல்லாஹ் ஒரு பொருளைப் படைக்க நாடினால் அவனது கட்டளை “ஆகு” என்பதே. அது ஆகிவிடுகிறது! குர்ஆன் அப்படித்தான் சொல்கிறது.




















இறுதித் தூதர் (அருளும் அமைதியும் அவர்மீது இருப்பதாக) நமக்குச் சொல்கிறார்கள்: அல்லாஹ்வுக்குத் தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன.
அவன் அல்லாஹ்.
வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை அன்றி வேறு எதுவும் / எவரும் இல்லை.


சில கருத்துக்கள்:

இந்நூலின் உள்ள பல சொற்களுக்கு இணையான தெளிவான சுருக்கமான தமிழ் அல்லது வடமொழிப் பதங்கள் கொடுத்து மொழிபெயர்க்க முடியும். ஆனால் அப்படி உருவாகும் பிரதியைத் தமிழக முஸ்லிம்கள் உடன்பாடாக அணுகுவாரகளா என்று சொல்ல முடியாது. தமிழ் அல்லது வடமொழிப் பதங்கள் இந்து சமயம் சார்ந்தன என்பதான பொதுப்புத்தி இங்கே அமைந்திருப்பதே அதற்குக் காரணம். (சவ்ம் என்பதை நோன்பு என்றும் மஸ்ஜித் என்பதைப் பள்ளி என்றும் ஸலாத் என்பதைத் தொழுகை என்றும் சமணர்கள் புழங்கிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு தமிழக முஸ்லிம்கள் எந்தச் சிக்கலும் இல்லாது இலகுவாகப் புழங்கி வருகின்றனர். அதே போல் இன்னும் பல சமயச் சொல்லாடல்கள் புழக்கத்திற்கு வருவது நலம்)

//அவை ஒவ்வொன்றும் இருப்பதற்கு மற்ற பொருள்கள் தேவைப் படுகின்றன.// இது எதார்த்தம், நிதர்சனம், வெளிப்படை. இதனை யாரும் மறுக்க முடியாது. நாம் இறைவனிடமே தேவையாக இருக்கிறோம் என்பது மெய்ம்மை (ஹகீக்கத்). நாம் பொருட்களின் தேவையில் இருக்கிறோம் என்பதும் இறைவனின் தேவையில் இருக்கிறோம் என்பதும் ஒன்றுக்கு ஒன்று முரண்படாது ஒருங்கிணையும் பார்வையே ஏகத்துவ ஞானம்.

//அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆரம்பமும் முடிவும் இல்லை.// - அதாவது அவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. (அனைத்துக்கும் அவனே ஆதி ஆனவன் அவனே அந்தம் ஆனவன். ஆனால் அவனுக்கு ஓர் ஆதி இல்லை அவனுக்கு ஓர் அந்தம் இல்லை). அதாவது அவன் அனாதி அவன் அனந்தன்.

//அந்த மூலத்தை நாம் அறபியில் ”அல்லாஹ்” என்றும் ஆங்கிலத்தில் “காட்”(“GOD”) என்றும் அழைக்கிறோம்.// - அந்த மூலமே முதலானது. அதாவது ஆதி மூலம். அல்லாஹ்வே ஆதிமூலம்! ஆங்கிலத்தில் ”காட்” என்று அழைத்தாலும் அவன் அவனே. வேறொன்றை அழைத்ததாக ஆகாது. அவனையே அழைத்ததாகும். தமிழில் அவனை இறைவன் என்றும் பரம்பொருள் என்று இன்னும் பல பெயர்களாலும் அழைக்கிறோம். மலையாள முஸ்லிம்கள் தம்புரானே! என்றழைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். சம்ஸ்க்ருதத்தில் அந்த மூலத்தை பிரம்மம் என்று அழைக்கின்றனர். அதுவும் அவனையே குறிக்கிறது.

      //எனவே நாம் சொல்கிறோம்: அல்லாஹு அக்பர். அல்லாஹ் மகத்தானவன்!// - ஆங்கிலத்தில் “Allah is great!” என்று எழுதப்பட்டுள்ளது. கபீர் என்னும் அறபிச் சொல் பெரியது, மகத்தானது (Big, Great) என்று இரண்டு பொருளையுமே தரும். ஆனால் ஆங்கிலத்தில் Big / Bigger என்று சொல்லாமல் Great என்னும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சரியானது. அல்லாஹு அக்பர் என்பதைத் தமிழில் பொதுவாக ‘அல்லாஹ் பெரியவன்’ என்று மொழிபெயர்க்கப் படுகிறது. அதனினும் ‘அல்லாஹ் மகத்தானவன்’ என்று மொழிபெயர்ப்பதே சரியெனப் படுகிறது. இறைவனே நன்கு அறிந்தவன்.



No comments:

Post a Comment