Wednesday, May 1, 2019

மணலகத்து நினைவுகள்... - 5




















இதுவரை சொல்லி வந்த செய்திகளெல்லாம் என்னைக் கவர்ந்தவை என்றாலும் இப்போது சொல்லப்போகும் நாவலினொரு தன்மை இருந்ததால்தான் இத்தனை நீண்ட நெடிய மதிப்புரையை, அணிந்துரையை, வாழ்த்துரையை, ஆய்வுரையை, அல்லது இவை எல்லாம் கலந்ததொரு உரையை, 448 பக்க நாவலுக்கு ஏறத்தாழ ஐம்பது பக்கத்தில், எழுதியிருக்கிறேன். இவ்வளவு எழுத நேரும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. புகழனைத்தும் இறைவனுக்கே. அந்த அம்சம், சூஃபித்துவம் என்னும் இஸ்லாமிய ஆன்மிகம்.

      சவூதியில் சூஃபித்துவ திக்ரு மஜ்லிஸ்கள் (சவூதியின் வஹ்ஹாபிய அறபிகளால் அல்ல, உலகின் பிற நாடுகளிலிருந்து வந்திருக்கின்ற முஸ்லிம்களால்) நடத்தப்படுவதை முஹம்மது யூசுஃப் பதிவு செய்துள்ளார். (ப.192-193). இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல் வெளிப்படுமாறு அந்த சபையில் உருது மொழியில் ”நஅத் ஷரீஃப்” என்னும் நபிப்புகழ்ப் பாக்கள் பாடப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து தியான சபையின் தலைவர் உரையாற்றுகிறார். அவர் சொல்லுமொரு முக்கியமான கருத்து இது:

      ”இங்கு பொதுவாக மக்கள் மூன்று வகையாக உள்ளார்கள். அறிபவர்கள், ஆற்றுபவர்கள், ஆகுபவர்கள்.

      ”பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். சிலர் செயலாற்றும் நிலைக்கு முன்னேறுகிறார்கள். அதில் வெகு சிலரே அதுவாக இருத்தல் எனும் நிலையை அடைகிறார்கள்.

      ”சூஃபியாக்கள் என்பவர்கள் சாமான்யர்களையும் அதுவாக இருத்தல் நிலைக்கு ஒவ்வொருவனையும் அழைத்துச் செல்கிறார்கள்.” (ப.192).

      திருக்கலிமா என்னும் மூல மந்திரத்தைச் சொல், அறி, பார், ஆகு (”கலிமா கூ தான் பீன் ஷூ” (ஃபார்சி மொழி வாசகம்)) என்று அடியேன் சார்ந்திருக்கு சூஃபி நெறியில் சொல்லப்படுவதுண்டு. அக்கருத்தை இங்கே நினைவு கூர்ந்தேன்.

      அறிபவர்கள், ஆற்றுபவர்கள், ஆகுபவர்கள் என்று மக்களை மூன்று வகையினராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காம் வகையினருண்டு. ஆக்குபவர்கள்! ஆம், ஆகிவிட்டவர்களில் சிலர்தான் ஆக்குபவர்களாகவும் பணியாற்றுகிறார்கள். அவர்களே சூஃபி குருமார்கள். அவர்களைப் பீர், ஷைஃகு, முர்ஷித், சர்க்கார், ஃக்வாஜா என்று பற்பல பெயர்களில் சூஃபித்துவம் அழைக்கிறது.

      மூல மந்திர தத்துவ வாசகத்தை (கலிமாவை) வெறுமனே சொல்பவர் அல்ல, அதனை அறிபவர் அல்ல, அதனைப் பார்ப்பவர் அல்ல, அதுவாகவே ஆகியவர் எவரோ அவரால் மட்டுமே பிறரை அப்படி ஆக்கவும் இயலும். அதாவது, ஆன்மிகம் என்பது ஒரு மடைமாற்றம் (Transformation), அதுவெறும் தகவல் பரிமாற்றம் (information) அல்ல. எனவேதான், மார்க்கத்தை நூற்களில் கற்றறிந்த ஆலிம் என்னும் அறிஞரை விடவும், ஆன்மிக மடைமாற்ற அனுபவத்தை அடைந்து இறைவனை அறிந்தவரான ஆரிஃப் (மெய்ஞ்ஞானி) உயர்ந்தவர் என்பது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் ஏகோபித்த முடிவு (இஜ்மாஃ).


   












   திக்ரு மஜ்லில் முடிந்த மறுநாள் காலை அனீஸ் ”உம்ரா” செய்கிறான். (உம்ரா என்பது ஹஜ் கிரியைகளை அதற்குரிய துல்ஹஜ் மாதத்து நாட்கள் அல்லாத அம்மாதத்தின் பிற நாட்களில் அல்லது பிற மாதங்களில் செய்வது). கஃபத்துல்லாஹ் என்னும் ஆதி இறையாலயத்தை, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தமது தொழுகையில் முன்னோக்கும் இறையில்லத்தை முறையாக நேரில் காண்கிறான். “காணக்கண் கோடி வேண்டும் கஃபாவை / ஹஜ் காட்சிக்கிணையாக உலகில் எதுவுமே இல்லை” என்று நாகூர் ஹனீஃபா பீரங்கிக் குரலில் முழங்கிப் பாடிய பாடலின் உணர்வில் திளைக்கிறான். கஃபாவைக் காணும்போது செய்யப்படும் பிரார்த்தனை பலிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அதனைக் கண்ட பரவசத்தில் அனீஸுக்கு பிரார்த்தனை ஏதும் செய்யத் தோன்றவில்லை. ”அனீஸ் கையில் ஒன்றுமில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஸலவாத் என்னும் நபிகள் நாயகத்தின் மீதான புகழ் மாலை” (ப.196) என்று அவ்விடத்தில் யூசுஃப் எழுதுகிறார். கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு இதே போலொரு அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. அவர் ஹஜ் சென்றபோது கஃபாவை ஏழு முறை சுற்றி வரும் ’தவாஃப்’ நிகழ்வில், அவர் சார்ந்திருந்த ஹஜ் குழுவினர் அனைவரும் ’வழிகாட்டி ஹஜ்ரத்’ ஓதுகின்ற அறபிப் பிரார்த்தனைக்கு வழிமொழிந்து “ஆமீன்” கூறியபடி பின்னால் செல்ல, கவிக்கோ தானெழுதிக் கொண்டிருந்த உலகமகா காவியத்தின் இறைவாழ்த்துக் கவிதையை ஓதிக்கொண்டே சுற்றினாராம். 

      அனீஸ் ஒரு நபிக்காதலனாகவே சித்தரிக்கப்படுகிறான். சூஃபிகள் பெரிதும் வலியுறுத்தும் இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல் அவனிடம் இருக்கிறது. “நினைவுகள் முற்றிப் போன ஒரு பைத்தியக்காரனைப் போல நபிகள் நாயகத்தின் நினைவுடன் காபாவை சுற்றிக் கொண்டிருந்தான் அனீஸ்” (ப.197). மட்டுமல்ல, உம்ராவின் கிரியைகளை எல்லாம் நிறைவு செய்தபின் இறைவனிடம் பிரார்த்திக்கையில், “என் இறப்பின் கடைசி நாள் வரை எனக்கு தினமும் பெருமானார் மீது ஸலவாத் (நபிகள் நாயகத்தின் மீதான புகழ் மாலை) ஓதும் சக்தியைக் கொடு” (ப.198) என்று வேண்டுகிறான்.

      இறையில்லம் கஃபா என்பது புறவுடலுக்கான முன்னோக்கும் பொருளாக இருக்கிறது. ஆனால், கல்பு என்னும் இதயம் முன்னோக்கும் கஃபா என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான். கஃபாவுக்கே முன்னோக்கும் பொருள் அவர்கள்தான் என்னும் அர்த்தத்தில் ”கஃபே கா கஃபா” என்று நபிகளாரைப் புகழ்வதுண்டு. எனவே, ”இறை இல்லம் கஃபதுல்லாஹ். ஒவ்வொரு முஸ்லிமும் காண விரும்பும் இடம். // ஹுப்- நேசம், உன்ஸ்-நெருக்கம், இஷ்க்- தீவிரமான காதல், ஹகீக்கத்- உண்மை, இபாதத்- அடிமைத்தனம், ஜுனூன்- பித்து, மௌத்- இறப்பு என எல்லா நிலைக்குமான ஆதாரம் எதிரே இருக்க, கண்ணில் நீர் முட்ட அதையே பார்த்துக் கொண்டிருந்தான் அனீஸ்” (ப.152) என்று முஹம்மது யூசுஃப் எழுதும்போது அதை என்னால் ஏற்க முடியவில்லை. ராபிய்யத்துல் பஸரியா போன்ற மாபெரும் ஞானியர் அவ்விடத்திற்கு யாத்திரை சென்றால் அவர்களை வரவேற்க கஃபாவே செல்கிறது! “அல்லாஹ்விடம் சில இறைநம்பிக்கையாளரின் இதயங்கள் கஃபாவை விட கண்ணியம் வாய்ந்தவை” என்று ஹதீஸ் ஒன்று இருக்கிறது.


     





 கஃபாவின் விஷயத்தில் மேலே யூசுஃப் குறிப்பிட்டிருக்கும் ஏழுநிலைகள் சூஃபித்துவத்தில் ஆன்மிகப் பயணத்தின் நிலைகள் (மகாமாத்) என்று சொல்லப்படுபவை. இவை ஏழினையும் ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்கள் இயற்றிய “மன்திக்குத் தைர்” (பறவைகளின் பரிபாஷை) என்னும் ஆன்மிகக் காவியம் குறிப்பிட்டு விளக்குகிறது. இவ்வேழு நிலைகள் பற்றி நவீன சொல்லாடலில் ஓஷோ விளக்கியிருக்கிறார். இறுதி நிலையாக மௌத் – இறப்பு என்று யூசுஃப் குறிப்பிட்டிருப்பது உண்மையில் ஃபனா – அழிவு (annihilation) என்றே சூஃபிகளால் குறிப்பிடப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சூஃபி இசை ஆல்பம் செய்யும் திட்டத்தில் இருந்தார். சூஃபித்துவக் கருத்துக்களை அழகான உருதுப் பாடல்வரிகளாக எழுதக் கவிஞர் குல்ஸார் நியமிக்கப்பட்டார். அதில் ஃபரீதுத்தீன் அத்தார் சொல்லும் ஏழு நிலைகளை வைத்தும் ஒரு பாடல் எழுதப்பட்டது. “சத் ரங்கி ரே” (ஏழு நிறத்தாளே!...) என்பது அப்பாடலின் கருத்து. ஆண் பெண் மனிதக் காதலைக் குறியீடாகக் கொண்டு இறைக்காதலைச் சொல்வதாக அப்பாடல் உருவாக்கப்பட்டது. அதில் இறுதியான ஏழாம் நிலையாக ஃபனா என்பதை ’மௌத்’ (மரணம்) என்று குல்ஸார் குறிப்பிட்டிருப்பார். “முஜே மௌத் கீ கோத் மே(ன்) சோனே தே” (என்னை மரணத்தின் மடியில் உறங்க விடு) என்று அவ்வரி வருகிறது. (பின்னாளில் அப்பாடல்கள் ஒரு சூஃபி இசை ஆல்பமாக வெளிவரவில்லை. அவற்றை அப்படியே மணிரத்னம் தனது படத்திற்கென்று தேர்ந்து கொள்ள “தில் சே” (தமிழில்: “உயிரே”) என்னும் திரைப்பட இசைப் பேழையாக 1998-இல் வெளிவந்தது.)

      அனீஸ் தனது மனைவிக்கு எழுதும் இரண்டாவது கடிதத்தில், தான் கலந்து கொண்ட ”நஅத்” நிகழ்ச்சி ஒன்றைப் பற்றித் குறிப்பிடுகிறான். “நெக்குருகித் திரிகிறார்கள் நாத் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும். அவர்கள் கண்களில் ஒருவித பித்து நிலை.” (ப.391) என்று தனது அவதானத்தைப் பதிகிறான். சூஃபித்துவம் என்பது அமல் (செயல்) மற்றும் இல்மு (அறிவு) ஆகியவற்றுடன் ஹால் (உணர்ச்சி நிலை) என்பதையும் இணைத்துச் செயற்படுவது என்பதை இங்கே நினைவுகூர்தல் நலம்.

      ”அவர்கள் நடத்திய திக்ரும் (தியானம்) ஜலாலியத்தாக (உயிரோட்டமாக) இருந்தது. திகிர், தாக்கிர், மத்கூர், தியானம் தியானிப்பவன் தியானிக்கப்படுவோன் எல்லாமே ஒன்றாகி விடுதல் என்பதைத் தேடிய பயணமாக இருந்தது. திக்ரே திக்ரு செய்யப்படும் பொருளாக மாறிவிட வேண்டும் என்னும் மகாத் தேட்டம் கொண்ட நிலை அது” (ப.391-392) என்று மிகவும் ஆழமான சூஃபித்துவ விளக்கத்தை அக்கடிதத்தில் எழுதுகிறான் அனீஸ். நபி(ஸல்) அவர்களே அனைத்துப் படைப்புக்களுக்கும் மூல ஒளி எனப்தையும், அவர்கள் இன்றும் முன்பைப் போலவே திருத்தூதராக “இருக்கிறார்கள்” என்பதையும் வலியுறுத்திக் குறிப்பிடுகிறான். நபித்தோழர்கள் எனப்படுவோரான சஹாபாப் பெருமக்கள் எந்த அளவு நபிக்காதல் கொண்டிருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறான். இச்செய்திகள் எல்லாமே வஹ்ஹாபிஸத்தால் மறுக்கப்படுபவை, வழிகேடு இணைவைப்பு என்றெல்லாம் ’ஃபத்வா’க்கள் வழங்கி மூர்க்கமாகத் தாக்கப்படுபவை என்பதைக் கவனிக்க வேண்டும்.


    









  பத்ரு போர்க்களம் நடந்த இடத்திற்குச் செல்லும் அனீஸ் அங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் உலவிய காலத்தை மனதால் தொட்டுவிடத் துடித்தபடிச் சுற்றி வருகிறான். அங்கே நின்றபடி தாஜுஸ் ஸலவாத் ஓதுகிறான். அது ஒரு நெடிய ஸலவாத் (நபி வாழ்த்து). இஷ்கே ரசூல் என்னும் நபிக்காதலின் நறுமணம் கமழ்கின்றதொரு அற்புதமான வருணிப்பு வாசகங்கள் கொண்ட கோர்வை. அதனை அப்படியே “ஹஸ்பி றப்பி ஜல்லல்லாஹ்” என்னும் நாகூர் ஹனீஃபா பாடலின் மெட்டில் மொழிபெயர்ப்பாக யூசுஃப் வழங்கியிருக்கிறார். அடியேன் ஒரு முறை இந்நாவலை இங்கே திருச்சியில் நடைபெறும் திக்ரு மஜ்லிசில் அறிமுகப்படுத்தினேன். நாவலில் வரும் சில இடங்களை வாசித்துத் தஃலீம் செய்தேன். தாஜுஸ் ஸலவாத் பாடலை திக்ரு மஜ்லிசின் தலைவர் பேராசிரியர் இம்தாதுல்லாஹ் பிலாலி பாடினார்.


     










 நாவலில் இடம்பெறும் இன்னொரு அழகான நிகழ்வு ஜபலே நூர் என்னும் ஒளிமலை மீதுள்ள ஹிரா குகைக்கு ஏறிச்செல்லும் அனுபவம் (பக்.325 – 334). பௌர்ணமி இரவொன்றில் அந்த மலையின் மீது ஏறிச் சென்று அதன் உச்சியில் இருக்கும் ஹிரா என்னும் குகைக்குள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தியானம் செய்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து, திருக்குர் ஆன் முதன் முதலில் அருளப்பட்ட அந்த சிறு குகையிலிருக்கும் ஒரு பாறைப் பிளவின் வழியே கீழே தெரிகின்ற கஃபாவைப் பார்த்து ரசித்துவிட்டு, பிறர் உள்ளே வர வழிவிட்டு, தான் வெளியே வந்து அமர்கிறான் அனீஸ். அப்போது, கண்கள் மற்றும் முதுகுப் பக்கம் கருப்பு நிறம் கொண்டதொரு வெண்ணிற ஆடு அங்கே நிற்கிறது. இரும்புக் கிராதிகளைத் தாண்டி அது எப்படி அங்கே வந்தது என்று அனீஸ் வியப்படைகிறான். அது கஃபாவைப் பார்த்தபடி நின்றிருந்தது. அனீஸ் அதனையே பார்க்க, சட்டென்று திரும்பி அது அவனைக் கண்களோடு கண்கள் நேரிட்டுப் பார்த்தது! “அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதற்குப் பால்நிலா சாட்சியாக இருந்தது” (ப.334). என்னவொரு அற்புதமான காட்சி! (இச்சம்பவத்தை நான் மஜ்லிசில் சொன்னபோது ‘இவன் எப்படி இங்கே ஏறி வந்தான் என்று அந்த ஆடு வியந்து பார்த்திருக்கும்’ என்றார் பேராசிரியர் அஸ்லம் பிலாலி).

      இந்நாவலிலுள்ள சூஃபித்துவப் பதிவுகளில் என் உள்ளத்தைக் கவர்ந்த மாந்தர் அனீஸின் அம்மாதான் (பக்:250-254). வெள்ளைத் துப்பட்டி அணிந்தார்கள் என்று முன்பு ஓரிடத்தில் அவர்களைப் பற்றிய குறிப்பைத் தந்தோம். அவர் ஆன்மிகத்தின் படித்தரங்களில் மேலேறிச் சென்ற ஆத்ம ஞானியாக இருந்திருக்கிறார். உள்ளத் தூய்மையே ஆன்மிகத்தின் ஆதாரம் என்பதற்குச் சான்றாக வாழ்ந்திருக்கிறார். சையிது ஆசியா உம்மாள், கச்சிப்பிள்ளை உம்மாள் என்றெல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த பெண் இறைநேசர்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அனீஸின் அம்மாவைப் போல் வரலாற்றில் பதிவாகாமல் மண்ணுக்குள் தம்மை மறைத்துக்கொண்ட இறைநேசப் பெண்கள் எத்தனைப் பேரோ? “படிப்பறிவு இல்லாத கிராமத்துக் கிழவியின் இறைநம்பிக்கை எனக்கு வாய்க்க வேண்டுமே” என்று மாபெரும் இறைஞானிகள் எல்லாம் ஏங்கியிருக்கிறார்கள். அவ்வகையில், அனீஸின் அம்மாவைப் பற்றிப் படிக்கும்போது அந்தச் சீதேவியின் அகத்தூய்மை அடியேனுக்கு வாய்க்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். இந்நாவலைப் பற்றி இவ்வளவு எழுதியமைக்கு அதையே நற்கூலியாக ஆதரவு வைக்கிறேன்.

மெய்ப்புத் திருத்தம் – சில ஆலோசனைகள்

      நானூறு பக்கங்களைத் தாண்டியதொரு பெருநாவல் பிரதியைப் பிழையின்றி வெளிக்கொணர்தல் எளிதில் அமைவதில்லை. சிரமம்தான். எனினும், பிரதியில் எழுத்து, சொல் மற்றும் பொருள் பிழைகள் இல்லாதவாறு கவனமெடுத்தல் வேண்டும். வாசகரிடம் ஒரு பிரதி வெற்றி பெற அஃது மிகவும் இன்றியமையாத ஒன்று.

      ”மணல் பூத்த காடு” நாவலின் தொடக்கப் பகுதிகளில் ஒற்றெழுத்துப் பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. நாவல் செல்லச் செல்ல அவை குறைந்துவிடுகின்றன என்றாலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. (வந்து, கண்டு, கொண்டு, இன்று முதலிய) “மென் தொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லெழுத்து மிகாது” என்னுமொரு இலக்கணத்தைக் கடைப்பிடித்தாலே இந்நூற் பிரதியிலுள்ள எண்பது விழுக்காடு ஒற்றுப்பிழைகள் சரியாகிவிடும். (கண்டு கொண்டேன் என்பதே சரி. கண்டுக் கொண்டேன் அல்ல; சென்று பார்த்தான் என்பதே சரி, சென்றுப் பார்த்தான் அல்ல). அதே போல் என்ற, சென்ற, போன்ற என்பது மாதிரியான சொற்களுக்குப் பின் வல்லொற்று மிகாது.

      பொருள் மயக்கம் தருகின்றபடியாக அமைந்த சொற்றொடர்கள் சிலவும் கண்ணில் பட்டன. அவற்றின் சொல் அமைப்புக்களைச் சற்றே மாற்றினால் இன்னும் துலக்கமாக வரும். எடுத்துக்காட்டுக்கள் சில சொல்கிறேன்:

      ”ஓர் எகிப்து நாட்டைச் சேர்ந்த வாத்தியார் வண்டி ஓட்டக் கற்றுத் தந்தார்” (ப.95) என்றுள்ளது. “ஓர் எகிப்து நாடு” என்று பொருட்பட்டுவிடும். எகிப்து நாடு ஒன்றுதானே இருக்கிறது? இத்தொடரை, “எகிப்து நாட்டைச் சேர்ந்த வாத்தியார் ஒருவர் வண்டி ஓட்டக் கற்றுத் தந்தார்” என்று மாற்றினால் குழப்பம் நீங்கும்.

“மதியம் இரண்டு மணி அளவில் ஹபீப் வந்து அனீஸை அழைத்துச் சென்றான் அறைக்கு.” (ப.149) என்பது தொலைக்காட்சியில் ஹிந்தித் தொடரை தமிழாக்கம் செய்தது போல் தொனிக்கிறது. “மதியம் இரண்டு மணி அளவில் ஹபீப் வந்து அனீஸை அறைக்கு அழைத்துச் சென்றான்” என்றிருக்க வேண்டும்.

”… … பிரிக்கப்படாமலே இன்னும் சிலவைகள் உள்ளன.” (ப.216). மார்க்க அறிஞர்கள் தமக்கென்று ஒரு ’தனித்தமிழ்’ வைத்திருக்கிறார்கள். ”இருக்குகின்றது” என்னும் சொல் அதில் அடிக்கடி இடம்பெறுவது. “இருந்து கொண்டு இருக்குகின்றது” என்னும் வன்கொடுமைகூட அதில் உண்டு. அதிலிருந்து எடுத்தாளப்பட்ட சொல் போல் இருக்கிறது இந்தச் ‘சிலவைகள்’ என்பது. ’சில’ என்றாலே பன்மைதான். ”கூட்டாக நிற்கும் இவைகளை ஏன் பனஞ்சோலை என்று அழைப்பதில்லை’ என்று எண்ணியபடி” (ப.351) என்பதிலும் இவை என்பதே பன்மைதான், இவைகள் என்று வரக்கூடாது.

“வீட்டிலே மாத்திரை தின்று சேவல் போல இருட்டியதும் உறக்கத்தில் ஆழ்ந்தான் அனீஸ்” (ப.415) என்னும் வரியில் மயக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது. ’சேவல் போல இருட்டியதும்…’ என்றுதான் மனத்தினுள் அர்த்தப்பாடு ஓடும். சேவல் எப்படி இருட்டும்? “வீட்டிலே மாத்திரை தின்று, இருட்டியதும் சேவல் போல உறக்கத்தில் ஆழ்ந்தான் அனீஸ்” என்றிருக்க வேண்டும்.

இப்னு துஃபைல் எழுதிய முதல் அறபி நாவல் பற்றிச் சொல்லுமிடத்தில், “அதுவும் அந்த ‘ஹே’ங்கிற கேரக்டருக்கு தபுல ராசா (tabula raja)ன்னு 12 ஆம் நூற்றாண்டுல ஒரு அரபி இந்தியாவ சேர்த்து வச்சி..” (ப.378) என்று என்னவோ எழுதப்பட்டிருக்கிறது. புரியவில்லை. ஆனால், tabula raja என்று ஆங்கிலத்திலேயே தவறாக அடித்திருப்பதால் அதைத் தமிழில் ’தபுல ராசா’ என்று கொடுத்திருக்கிறார். அது ராசாவும் அல்ல மந்திரியும் அல்ல. ஆங்கிலத்தில் “tabula rasa” என்றிருக்க வேண்டும். ”டபுல ராஸ” என்னும் உச்சரிப்புக் கொண்ட லத்தீன் சொற்றொடர். Clean Slate (துடைத்த / வெற்றுப் பலகை) என்று பொருள். எவ்வித முன் எண்ணங்களும் அற்ற வெறுமையான மனத்தின் நிலையைக் குறிக்கிறது. இவ்விடத்தில் அதை வைத்து யூசுஃப் என்ன சொல்ல வந்தார் என்னும் செய்தி விடுபட்டுள்ளது.

“அன மின் நூரில்லா வ நூரி குல்லி செய்யின் அலிமா” (பக்.393-394) என்னும் அறபிச் சொற்றொடரும் ஏதோ தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். “அன மின் நூரில்லாஹ் அவ குல்லு ஷைஇன் மின் நூரீ” என்றுதானே இருக்க வேண்டும்?

இந்நாவல் மேலும் பல பதிப்புக்கள் காணவேண்டும், காணும் இன்ஷா அல்லாஹ். அந்த மறுபதிப்புக்களில் மெய்ப்புத் திருத்தங்கள் செய்து செம்மையாக வெளியிடப்படல் வேண்டும் என்பது எனது அவா.

முஹம்மது யூசுஃப் தனது அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று முகநூல் வழி அறிந்தேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். 

(முற்றும்)

No comments:

Post a Comment