Monday, April 29, 2019

மணலகத்து நினைவுகள்...-3






















”மணல் பூத்த காடு” விமர்சனக் கூட்டம்.
 

உலகில் தோன்றிய முதல் கதை எது? உலகத்திலேயே மிகப் பெரிய கதை எது? இவ்விரு கேள்விகளுக்கும் இந்தியாவில் சொல்லப்படும் விடைகள் ராமாயணமும் மஹாபாரதமும்தான். ஆதி கவி என்று போற்றப்படுபவர் வான்மீகி. வேத வியாசர் மகாகவி. இவ்விரு காப்பியங்களில் ராமாயணத்தை விடவும் மகாபாரதமே நவீன இலக்கியத்திற்கு நெருங்கி வருகிறது. காரணம் அதன் மாந்தர்களின் உளவியல் சிடுக்குகள். அதேபோல்தான், தமிழின் பெருமையாக விளங்கும் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும். இவ்விரு காப்பியங்களில் அதிக மறுவாசிப்புக்கு உள்ளாவது சிலம்புதான். காரணமும் அதேதான், உளவியல் நுட்பங்கள். லேவ் தொல்ஸ்தோயை விடவும் நவீன மற்றும் பின் நவீனத்துவ உலகு தஸ்தாயெவ்ஸ்கியைச் சிலாகித்தது. காரணம் அதேதான், உளவியற் கூறுகள்.

      ஒரு பெருங்கதையாடல் என்பது உளவியலின் உள்மடிப்புக்களைக் கையாளாமல் சிறப்புப் பெறாது. நவீன மனித வாழ்வு உளவியல் நுட்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொண்ட ஒன்றாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கறுப்பு வெள்ளையாக விடயங்களைப் பேசுவது போதுமானதாக இல்லை. மேம்போக்காக ஏற்பது போல் தோன்றினும் அத்தகைய உரையாடல்களை மனித ஆழ்மனம் நிராகரித்துவிடுகிறது. சாம்பல் பிரதேசங்களில் பயணித்து மெய் காண்பதே நவீன உரையாடலின் பணியாகவும் கடமையாகவும் இருக்கிறது.

      ’மணல் பூத்த காடு’ நாவலில் அப்படி உளவியல் சிக்கல்கள் கையாளப்படும் இடங்கள் போதுமான அளவு இருக்கின்றன. ஆனால் அவற்றையும் வேகம் குன்றாமல், ஆழ்ந்து செல்லாமல் சொல்லிச் சென்றுவிடுகிறார். இல்லை எனில் நாவல் இன்னும் இருநூறு பக்கங்கள் அதிகமாகியிருக்கும். அப்படி மேலும் கதைகளாகப் பின்னர் விரித்தெழுதிக் கொள்ளக்கூடிய இடங்கள் இக்கதைக்களத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

”சின்னதோ பெரிதோ அவரவர்கள் கவலை அவரவருக்கு” (ப.347), ”உடல் தொட்டு விசாரிப்பது என்பது எல்லோருக்கும் எல்லோராலும் செய்ய இயலாது” (ப.347) என்பது போன்ற வரிகளில் தத்துவச் சாயலிலும் எதார்த்தமாகவும் உளவியல் கூறுகள் ஒற்றை வரிகளில் சொல்லிச் செல்லப்படும் இடங்கள் அதிகம்.

ஒன்றரை வருடம் கழித்து ஊருக்குச் சென்று குடும்பத்துடன் ஒன்றரை மாத காலம் மட்டுமே இருந்துவிட்டு மீண்டும் ரியாதுக்கு வேலைக்கு வந்த அனீஸுக்கு மனம் சோர்ந்தே கிடக்கிறது. என்ன வாழ்முறை இது என்று சலிக்கிறது. ஊரின் நினைவாகவே இருக்கிறான். வாழ்வின் அர்த்தங்களைத் தேடுகிறது அவன் மனம். அப்போது இப்றாஹீம் பாய் அவனிடம் சொல்கிறார், “மொத மாச சம்பலம் வாங்குற வரைக்கும் அப்படித்தான் இருக்கும். காசை கண்ணுல பாத்தப்புறம் எல்லாம் சரியாகிரும்” (ப.363). பணம் என்பது நமது உளவியலை எப்படியெல்லாம் மாற்றி ஆட்டி வைக்கிறது என்பதை இந்நாவலில் பல இடங்களில் காண முடிகிறது.















ஒரு பிள்ளை எப்போதுமே தனது தந்தையைத் தனது எதிரியாகத்தான் பார்க்கிறது என்கிறது ஃபிராய்டின் உளவியல். ஆண் பிள்ளைகளுக்குத் தாய் மீது நெருக்கமும் பெண் பிள்ளைகளுக்குத் தந்தை மீது நெருக்கமும் அதிகமிருக்கும் என்று ஒரு பார்வையுண்டு. பொதுவாக, தந்தையை விடவும் தாயே பிள்ளைகளுக்கு நெருக்கம் என்பது உளவியலுண்மை. விலங்குகளிலும் அதுவே இயற்கை நிலை. ஏனெனில் தந்தை சுமப்பதில்லை, ஈனுவ்தில்லை, பாலூட்டுவதில்லை. ’சான்றோன் ஆக்குதல்’ என்பது, ‘இவண் தந்தை எந்நோற்றான் கொல்’ என்பதெல்லாம் அதற்கு அடுத்துதான். இப்படியிருக்கையில், இரண்டு மூன்று ஐந்து பத்துப் பதினைந்து என்று அவரவரை உறுத்தூட்டும் ஊழுக்கேற்ப பல ஆண்டுகள் அறபகத்தில் ’கேம்ப்’ அடித்துவிடும் தந்தைகள் மீது பிள்ளைகளுக்கு என்ன நெருக்கம் இருக்க முடியும்? அக்கவலை அனீஸை வாட்டுகிறது. எல்லோரும் உறங்கிவிட்ட இரவொன்றில், ’லெ க்ராண்ட் வாயேஜ்’ என்னும் திரைப்படம் செய்த தாக்கத்தில் தனது தந்தையை நினைத்தும் தான் ஒரு தந்தையாகத் தனது பிள்ளைகளைப் பிரிந்து ரியாதில் அமர்ந்திருக்கும் நிலையை நினைத்தும் உடைந்து அழுகிறான்.

உளவியல் சிக்கல்கள் பலவற்றுக்குமான ’வகுப்பான்’ (denominator) என்று உளவியல் காண்பது காமத்தையே. அது மனத்தில் ஏற்படுத்தும் உள்மடிப்புகள் போல் வேறெதுவும் நுட்பமாக்குவதில்லை. அனீஸ் தனது டிரைவர் சுலைமானுடன் நிகழ்த்தும் உரையாடல் ஒன்றில், போகும் போக்கில் லாவகமாகவும் நகைச்சுவைத் தொனியுடனும் இதனை யூசுஃப் பதிவு செய்கிறார்:

“முன்ன எல்லாம் நடிகை சினேகா பிடிக்கவே பிடிக்காது. இப்போ சினேகா ஹிட்ஸ் வீடியோ பார்க்கும் போது சினேகா ரொம்ப அழகா இருக்கிறதா தோணுது”
“ஊருல இருந்து வந்து எவ்வளவு நாள் ஆச்சு?”
“ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு”
“இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி சினேகா அம்மாவையே உங்களுக்குப் பிடிக்க ஆரம்பிக்கும்” (பக்.285-286)

திரைப்படம் பற்றிய குறிப்பும் இதில் வந்துவிட்டதால் இனி அதைப் பற்றியும் இந்நாவலை வைத்துக் கொஞ்சம் அலசுவோம்.

திரைப்படங்கள் ஹராமா? என்று கேள்வி எழுப்பினால் முஸ்லிம்களிடம் என்ன பதில் கிடைக்கும்? பெரும்பாலோர் ஹராம் என்றே சொல்வார்கள்? ஆனால் பலியாகத் திரைப்படம் பார்ப்பார்கள்! இதுவே ஒரு வகையில் அவர்களின் திரைப்பட ரசனையைக் கீழ்நிலையில் வைத்திருக்கிறது என்பதற்கான காரணமாகச் சொல்லலாம். எப்படி? ’அது ஹராம். என்ன இருந்தாலும் தூக்கி எறியப்போகும் பொருள்’ என்றால் அதை மேம்படுத்துவது பற்றிய பேச்சு எப்படி எழும்? அதனால்தான் முஸ்லிம்களிடம் திரைப்படக் கலை குறித்த உரையாடல்கள் மிகவும் சொற்பம், அரிது. ஆனால், ரியாதில் ஒவ்வொரு வாரமும் வியாழனன்று இரவு (மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நாள் அரசு வாராந்திர விடுமுறை நாள்) ஷேக் பாய் வீட்டில் நண்பர்கள் கூடித் திரைப்படங்கள் காண்பதாக யூசுஃப் சித்தரிக்கிறார். இது அவரின் அனுபவக் கதைதான். புனைவில் கலந்து சொல்லப்படும் ஒருவித ஆட்டொஃபிக்‌ஷன் பையோகிராஃபி – தற்புனைவுச் சரிதை. தப்லீக் ஜமாஅத்தின் மூளைச் சலவைக்கு ஆளாகி மனிதவுணர்வுகள் மழுங்கிப் போய் எந்திரம் போல் ஆகிவிட்டவரும், ஷேக் பாயின் சகலையுமான ‘அந்த ஆளு’ (ஃபுலான்) ஒரு முறை வியாழனிரவு அறைக்கு வரும்போது திருவருள் படப்பாடலையும் இராமநாராயணன் படத்தையும் ஒளிபரப்பி அவரது வாயைக் கிளறி விவாதம் செய்து வெளியே ஓட வைக்கிறான் அனீஸ் (நான் தப்லீக் ஜமாத்தினன் அல்லன். இருந்தாலும், இராமநாராயணன் படம் போட்டால் நானும் ஓடிவிடுவேன். அவர் படங்கள் வயது வந்தோருக்கு நிச்சயமாக ஹராம்தான்!)






















நாவல் நெடுகிலும் பல திரைப்படங்களை யூசுஃப் நகம்மு அறிமுகப்படுத்துகிறார். கிளேடியேட்டர், டிராய், த்ரோன் ஆஃப் பிளட், (ப.67); நஜ்தாத் அஞ்சூர் இயக்கிய “கிங் ஆஃப் தி சேண்ட்ஸ்” (சவூதி அரசால் தடை செய்யப்பட்ட ஒன்று (ப.179)); டேவிட் லீன் இயக்கத்தில் 1962-இல் வெளிவந்த ”லாரன்ஸ் ஆஃப் அரேபியா” (பக்.219-220); 2500 ஆண்டுகட்கு முன்பு மூசா நபியின் காலத்தில் மாட்டின் பொற்சிலையைக் கடவுளாகக் கொண்டாடிய சாமிரி என்பவனைப் பற்றிய கதையான “தி கோல்டன் காஃப்” திரைப்படம்; “லெ கிராண்ட் வாயேஜ்” (2004-இல் வெளிவந்த ஃபிரெஞ்சுத் திரைப்படம்); “தி கிங்டம்” (2007) (சவூதியில் இயங்கும் தீவிரவாத அமைப்பைப் பற்றிய திரைப்படம் (ப.365)); ”மிதாக் ஆல்லே” (நகுப் மஹ்பூஸ் எழுதிய, முதன் முதலாக நோபல் பரிசு வென்ற அரபி நாவல். அது ஒரு திரைப்படமாகவும் வந்திருக்கிறது); 2013-இல் வெளிவந்த ”ஜிராஃப்படா” என்று திரைப்படங்களின் பட்டியல் நீள்கிறது. எல்லாமே ஆங்கில ஃபிரென்ச் மற்றும் அரபித் திரைப்படங்கள். ஆமிர் ஃகான் தயாரித்து இயக்கிய “தாரே ஜமீன் பர்” (2007) என்னும் ஹிந்தித் திரைப்படம் ஒன்றையும் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

நாவலின் ஓரிடத்தில் ஒரே பத்தியில், பேர்ல் ஹார்பர், சேவிங் ப்ரைவேட் ரையான், ஹிடால்கோ, டே ஆஃப் தி ஃபேல்கான், தி ஹர்ட் லாக்கர், ஜார் ஹெட், ஜீரோ டார்க் தெர்ட்டி, நைன்த் கம்பெனி, ப்ளாட்டூன், பிளாக் ஹாக் டௌன் என்னும் பத்துத் திரைப்படங்கள் (அனைத்தும் போர் சார்ந்தவை) பற்றிக் குறிப்பிடுகிறார் (பக்.431-432). முஹம்மது யூசுஃப் நிறைய திரைப்படம் பார்ப்பார் போலிருக்கிறது, எல்லா சராசரி முஸ்லிம்களையும் போலவே.

முஹம்மது யூசுஃப் குறிப்பிடும் திரைப்படங்கள் அனைத்தும் ஓரோ வகையில் வளைகுடா நாடுகள் சம்பந்தப் பட்டவை. தீவிரவாத இயக்கங்கள் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்கள். அல்லது அறபு மக்களின் வாழ்வியல் குறித்து எடுக்கப்பட்டவை. அவற்றுள் பெரும்பான்மைப் படங்கள் ஹாலிவுட் தயாரிப்புக்கள். சேவிங் பிரைவேட் ரயான் போன்ற, அறபுலகு தொடர்பல்லாத திரைப்படங்களும் ராணுவம் தொடர்பான கதைகள் கொண்டனவாக இருக்கின்றன. இவற்றில் நான் பார்த்த திரைப்படம் எதுவுமே இல்லை!













”கேம்ப் எக்ஸ்ரே” (2014) என்றொரு திரைப்படம் பார்த்தேன். பீட்டர் சாட்லர் என்பவர் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் விழுந்ததில் இருந்து தொடங்குகிறது. தனது வீட்டில் தொழுதுகொண்டிருக்கும் அலீ அமீர் என்பவரை அமெரிக்க ராணுவம் கைது செய்து குவாண்டனாமோ சிறைச்சாலைக்குக் கொண்டு போகிறது. அங்கே வரும் ராணுவ வீரர்களுள் ஒருத்தியான அமி கோல் என்பவளுக்கும் அமீருக்கும் இடையில் ஏற்படும் ஒருவரை ஒருவர் (அமெரிக்கா மற்றும் இஸ்லாம் என்று கொள்ளவும்) பற்றிய புரிதலும் மெல்ல அரும்பு நட்பும்தான் படத்தின் கதை. கைதிகளுடன் நட்பு (அதாவது எதிர்த்தரப்பு நிலை பற்றிய புரிதல்) உருவாவது ஆபத்து என்று கருதும் மேலிடம் அமி கோலை பணியிடமாற்றம் செய்துவதோடு படம் முடிகிறது. (பைமான் மாதியும் கிர்ஸ்டன் ஸ்டீவர்ட்டும் இந்நபர்களாக நடித்திருந்தார்கள்).




















முஹம்மது யூசுஃபின் நாவலை வாசித்துக் கொண்டிருந்த தருணத்தில் படமொன்று பார்க்க நேர்ந்தது. ”ஸ்விஸ் ஆர்மி மேன்” (2016). கடற்கரையில் பாறைக் குகையொன்றின் வாசலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போகுமொருவனின் கண்ணில் கடலிலிருந்து கரையொதுங்குமொரு பிணம் கண்ணில் படுகிறது. அதனை எடுத்துக்கொண்டு அவன் ஒரு காட்டினுள்ளே செல்கிறான். பிணத்துடன் அவனுக்கு ஏற்படும் ஆத்மார்த்தமான பிணைப்பைச் சொல்கிறது கதை!

ஆன்மிகப் பொருண்மை சார்ந்த ஆங்கிலப் படங்கள் உண்டு. (அல்லேலூயா படங்களாக இருக்குமென்று எண்ணவேண்டாம். ஹாலிவுட்டில் சிலுவை அதிகமாகப் பயன்படுத்தப் படுவது பேயோட்டுவதற்குத்தான். அவற்றை ஆன்மிகப் படங்கள் என்று சொல்ல முடியுமா? தமிழிலும் அதே போல் பக்திப் படங்கள் என்னும் பெயரால் வருபவை எதற்கும் உண்மையான பக்தியுடன் சம்மந்தமே கிடையாது. ராகவா லாரன்ஸ் எடுத்த முனிப் படங்களிலும், அருந்ததியிலும் பேயோட்டுமிடமாக  தர்கா காட்டப்படுகிறது. அதை வைத்து இஸ்லாமிய ஆன்மிகக் கூறு அப்படங்களில் இடம்பெற்றுள்ளது என்று சொல்ல முடியுமா?).

’மேட்ரிக்ஸ்’ பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதொரு படம். அதை நீங்கள் ஆக்‌ஷன் படம் என்பீர்கள். அப்படியான போர்வையில் வந்த ஆன்மிகப் படம் அது. ”தி ஃபௌண்டெய்ன்’” என்றொரு படம். உயிர் காதல் நோய் மரணம் சாஸ்வதம் ஆகியவற்றுக்கிடையில் அல்லலுறும் மனித வாழ்க்கையைப் பற்றிய படம். இதைத்தான் ஆன்மிக விசாரணை என்று சொல்ல முடியும். படத்தின் இசையே ஆன்மிகத் தன்மை வாய்ந்தது.



























கிறிஸ்டோஃபர் நோலன் எழுதி இயக்கிய ”இன்செப்ஷன்” (2010) திரைப்படத்தை உலகமே கொண்டாடிற்று. மனதின் அடுக்குகளும் அவை உலகை உள்வாங்கும் விதமும் என்பது ஆன்மிகத்தில் ஒரு முக்கிய விவாதம் அல்லவா? அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஆன்மிகப் படம், ஆக்‌ஷன் த்ரில்லர் என்னும் போர்வையில். நோலனிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வால்லி ஃபிஸ்டர் எழுதி இயக்கிய திரைப்படம் “ட்ரான்செண்டன்ஸ்” (2014) என்பதும் அறிவியற் புனைவு என்னும் போர்வையில் வந்த ஆன்மிகப் படம்தான். ஆன்மிகம் என்பது பஜனை கோஷமும் சடங்குகளும்தான் என்று வரையறை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் ஆன்மிகமாகத் தெரியாது. அவர்களுக்கு இராமநாராயணன், ராகவா லாரன்ஸ் போன்றோர்தான் சரி. (மக்கள் ’பேக்’ அழகைக் கண்டு ஏமாறுகிறார்கள். ஆபாசத் தொடர்கள் இன்று வீடுகள் தோறும் காணொளியாகி விட்டன, குடும்பக் கதைத் தொடர்கள் என்னும் பெயரில்!)

சினிமாவைப் பற்றிப் பேசும்போது தமிழ்ச்சூழலில் இசை என்னும் முக்கியமான கூறு அதனுடன் சேர்த்தே பேசப்படும். இசை பாடல் என்பதெல்லாம் ஹராம் என்னும் மட்டையடி வாதங்களையும் தாண்டி பெரும்பான்மை முஸ்லிம்கள் சினிமாப் பாடல்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். முஹம்மது யூசுஃபும் கேட்கிறார் என்பதற்கான பதிவுகள் “மணல் பூத்த காடு” நாவலில் அங்கங்கே தெளிக்கப்பட்டுள்ளது. அவர் இளையராஜாவின் ரசிகர் என்று படுகிறது. நானும்தான். (அண்மையில் கீரனூர் ஜாகிர் ராஜாவை அடியேன் எமது கல்லூரியில் நடத்திய கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்திருந்தேன். அப்போது அவர் தனது பெயருக்கான காரணத்தை அவையோர் அறியக் குறிப்பிட்டார். ஜாகிர் ஹுஸைன் என்பதுதான் அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர். இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் தனது பெயரை ஜாகிர் ராஜா என்று மாற்றிக் கொண்டாராம்.)
      

  










ஓரிடத்தில், போகிற போக்கில் திரைப்பாடல் ஒன்றின் வரியை மேற்கோள் குறிகளிடாமல் ”மழை வருவது மயிலுக்குத் தெரியும் என்பார்கள்” (ப.350) என்று சொல்லிச் செல்வார் (நான் அதை மேற்கோள் காட்டுவதால் குறிகளிட்டுள்ளேன்). இது இளையராஜா இசையமைத்த அற்புதமான பாடலொன்றின் பல்லவி வரி. பத்தாண்டுகளுக்கு முன் கேட்டது. மடிக்கணினியின் மதர் போர்டு கரப்பட்டுப் போனதில் இளையராஜா கலெக்‌ஷனும் அப்படியே போய்விட்டது. அதில் அப்பாடலும் இருந்தது. இளையராஜா தனது பாடல்களின் பின்னணியில் மிருதங்கத்திற்கு முதன்மை தந்த பாடல்களில் முதலிடம் பெறும் பாடலென்று இதனைச் சொல்லலாம். அதற்குப் பின் எவ்வளவோ முயன்றும் பாடல்வரி நினைவுக்கு வராமல் மிருதங்கத் தாளம் மட்டும் மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தது. தாய் ஒருத்தி தனது மகனைப் பற்றிப் பாடும் பாடல் என்பது மட்டும் நினைவிலிருந்தது. நாவலில் இந்த வரியை வாசித்த மாத்திரத்தில் சட்டென்று மெட்டோடு ஒலிக்கத் தொடங்கிவிட்டது!

      அனீஸ் தமிழகம் வந்து குடும்பத்தாருடன் சுற்றுலா செல்லும் பகுதியில் சூரங்குடி தாண்டி விளாத்திக்குளம் செல்லும் நான்கு முக்கு ரோட்டோரக் கடையில் நடுநிசியில் நிற்கும்போது இப்படி எழுதுகிறார் யூசுஃப்: “அந்தக் கடையில் இப்பொழுதும் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்” பாட அனுமதித்திருக்கிறது அங்குள்ள உலகம்” (ப.351). அங்குமட்டுமல்ல, தமிழ் கூறு நல்லுலகம் முழுவதுமே இப்போதும் ஆத்மார்த்தமாக ஒலிப்பது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான். ஆட்டோக்களில், பேருந்துகளில், தேநீர்க்கடைகளில், திருமணங்களில், இதர விழாக்களில் ஒலிப்பது அவரின் பாடல்கள்தான். (முஸ்லிம்களின் திருமணங்களில் அவருக்கு இடம் கிடையாது. அது நாகூர் ஹனீஃபாவுக்கு உரியது! அவருக்கான இடமும்கூட இப்போதெல்லாம் குறைந்து வருகிறது). தமிழ் மரபின் வேர்கள் இளையராஜாவின் இசையில்தான் இருக்கிறது. அதைத்தான் தமிழர்கள் தமது வாழ்வியலுக்கு நெருக்கமானதாக உணர முடியும். ”தமிழ்த் தொல்லிசையின் சாளரம்” அவரின் சுயம் என்று நான் முன்பொருமுறை எழுதினேன்.

      நாவலின் இலக்கியத் தன்மைகளாக குறியீடு உவமை மொழிநடை ஆகியவற்றைப் பேசிய இடத்தில் ஒன்றை விட்டுவிட்டேன். அஃதொரு இலக்கிய உத்தி. லத்தீன் அமெரிக்க நவீன இலக்கியங்களில் பெரிதும் இடம் பெறுவது. அந்த உத்தி அல்லது வெளிப்பாட்டு முறை ‘மேஜிக்கல் ரியலிசம்’ என்னும் மாய எதார்த்தம். அவர்களுக்கு மூல முன்னோடி எழுத்தாளர் செர்வாண்டிஸ். அவரெழுதிய ”தொன் குய்ஷே”தான் அவர்களின் ஆதி காவியக் கதை.  ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுத் தாக்கம் லத்தீன் அமெரிக்காவில் உண்டு. அக்காவியத்தில் அதைக் காணலாம். ஸ்பெயின் நாட்டில் எண்ணூறு ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி நடந்துள்ளது. அதன் பண்பாட்டினை வடிவமைத்ததில் அறபிப் பண்பாட்டின் தாக்கம் முதன்மையானது. “அலிஃப் லைலா வ லைலா” என்னும் ஆயிரத்தோர் அறபுக் கதைகளில் மாய எதார்த்தக் கூறுகளைக் காணலாம்.

      ”மணல் பூத்த காடு” நாவலில் 405-410 ஆகிய பக்கங்களில் விவரிக்கப்படும் நிகழ்வு மாய எதார்த்தத் தன்மை கொண்டதாக இருக்கிறது. நினைவுலகிற்கும் கனவுலகிற்கும் இடையிலான திரை சில கணங்கள் விலகிவிடும் நிகழ்வு அது. குர்ஆனில் சுட்டப்பட்டுள்ள சில உயிரினங்களை அனீஸும் அவனது நண்பர் முஜீபின் மகளான சுபைதாவும் காணுமாறு ஒட்டக மேய்ப்பாளனான ஓர் அறபி அவர்களுடைய மனத்திரைகளை நீக்குகிறான். அதை அவன் “அத்தர்” (வாசனை திரவியம்) கொண்டு நிகழ்த்திக் காட்டுகிறான். (நறுமண திரவியங்களுக்கு நம் மனத்தின் மீது எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதை 2006-இல் வெளிவந்த பெர்ஃப்யூம்: தி ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்” என்னும் திரைப்படத்தில் காணலாம்).

அறபி தரும் திரவியத்தை ஒவ்வொரு முறை முகரும்போதும் அவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்குச் சென்று வேறு வேறு உயிரினங்களைக் காண்கிறார்கள். ஒவ்வொரு முறை முகரும்போதும் அந்த திரவியம் வேறு வேறு நறுமணமாக இருக்கிறது. அறபியர்கள் பயன்படுத்தும் அத்தர்களான சாம்பிராணி (ஊத்), ரோஜா, யாஸ்மின் என்னும் மல்லிகை போன்ற நறுமணங்களைச் சொல்லாமல் மனோரஞ்சிதம், பிரம்மக் கமலம் மற்றும் நீலமணியின் நறுமணங்கள் என்று முஹம்மது யூசுஃப் இந்தியப் பூக்களின் பெயர்களாக எழுதியிருப்பதும் ஒரு மாய எதார்த்தமோ?

 (தொடரும்...)

No comments:

Post a Comment