”தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா...”
அனிச்சையாக மனதிற்குள் ஒலித்த மெல்லிசையை அனுபவித்தபடி, இசைஞானியின்
தேனினிய மெட்டும் வாலி எழுதிய வார்த்தைகளும் சிற்றின்பத்தில் பேரின்பத்தின் சாயை வரும்படிச்
செய்திருக்கும் வித்தையை வியந்தபடி, முற்றத்தில் வந்து விழுந்திருந்த நாளிதழைக் கையிலெடுத்தேன்.
வியாழன்
மார்ச் 21, 2019 திகதியிட்ட ‘இந்து தமிழ் திசை’. அன்றைய நாளுக்கான இணைப்பிதழ் ”ஆன்மிக
ஜோதி”. அதில் அடியேன் விரும்பிப் படிக்கும் கட்டுரைத் தொடர் ஒன்றுண்டு. “உயிர் வளர்க்கும்
திருமந்திரம்”. எழுதுபவர் திருமூலர் பற்றிய ஆய்வு நூலின் மூலம் என் மனதிற்கினிய எழுத்தாளருள்
ஒருவராய் ஆன திரு.கரு.ஆறுமுகத்தமிழன். செம்மொழி என்று தமிழைச் சொல்கிறோமே, அதற்குத்
தகுதி எல்லோருடைய எழுத்து அல்லது பேச்சு நடையும் பெற்று விடாது. அதற்கென்று அறிவுழைப்பு
செய்து மொழியருள் பெற்றவர்கள் உண்டு. இவர் அத்தகையர்.
அன்றைய
நாளின் கட்டுரைத் தலைப்பு “சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்” என்றிருந்தது. வாசித்த
போது வழக்கம் போல வியப்புச் சுடர்கள் தெரித்துக் கொண்டே போக, கட்டுரையின் இறுதிப் பகுதியை
நெருங்கிய இடத்தில் ”தேனிப்பு” என்னும் அருஞ்சொல் தரும் அர்த்தங்களை அவர் எழுதியிருந்ததைப்
படித்தபோது கண்கள் பனித்தன. தமிழின் விரிவை இன்னும் கொஞ்சம் தரிசித்தேன். (கரு.ஆறுமுகத்தமிழன்
எழுதிய பத்தியை அப்துல் ரகுமானின் உரைநடை நூற்களில் காணலாகும் பாணியில் இடைவெளியிட்ட
சொற்றொடர்களாக மேற்கோள் தருகிறேன். படியுங்கள்):
“ஒருவர்
தன்னைத் தொகுத்துக் கொள்வதற்குத் ’தேனிப்பு’ என்று பெயர். வடமொழியில் தியானம் என்பார்கள்.
தேன்
என்பது இனிப்பு, மகிழ்வு; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான்.
தேன்
என்பது தேறல், தெளிவு; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான்.
தேன்
என்பது துளித்துளியாகச் சேகரிக்கப்படுவது; தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான்.
’தேனிக்கும்
முத்திரை சித்தாந்த முத்திரை’ (திருமந்திரம் 1900) என்று ஓரிடத்தில் திருமூலர் தேனிப்பைக்
குறிக்க, இறைவன் திருப்பெயரைச் சொல்லிச் ’சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்’ (திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம், 9) என்று மாணிக்கவாசகரும், ‘உங்கள் பிள்ளைகளுக்குக் கேசவன்
பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ’ என்று பெரியாழ்வாரும் (திவ்வியப் பிரபந்தம்,
381) தேனிப்பை நம் மனதில் பதிக்கிறார்கள்.”
இந்தப்
பத்தியின் வரிகள் ஒவ்வொன்றும் என் மனத்தில் சிந்தனைகளை மலர்த்தியபடி இருந்தன.
தியானம்
என்று தமிழராற் சொல்லப்படுவது ’த்யான்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ்த் தகவமைப்பு
என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன். அப்பிழை இப்போது நீங்கிற்று. தேன் என்னும் சொல்லினடியாகவே
இனிய மனநிலையைத் தமிழன் தேனிப்பு என்று வழங்கியிருக்கிறான். தமிழின் தேனிப்பே வடமொழியில்
த்யான் என்றாகியிருத்தல் வேண்டும்.
பௌத்தம்
சீனாவிற்கு போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டபோது த்யான் என்னும் சமற்கிருதச் சொல்லே
சீனமொழியில் ’ச்சான்’ (Chan) என்று ஆகி, அஃது மேலும் ஜப்பானுக்குச் சென்றபோது அந்நாட்டு
மொழியில் ஜென் (Zen) என்று ஆகிவிட்டது. இது, “புல் தானாக வளர்கிறது” என்னும் நூலில்
ஓஷோ கூறியிருக்கும் செய்தி. இப்போது, ஜென் என்னும் சொல்லின் மூலச் சொல் தேன் என்னும்
தமிழ்ச் சொல் என்று அறியும்போது உள்ளம் பூரிக்கின்றது.
இப்படி
நினைத்தபோது, ஜென் தன்மை கொண்ட பாடல் என்று எப்போதுமே நான் உணர்ந்து வரும் அதி அற்புதப்
பாடலில், இளையராஜாவின் குரலில் வாலியின் ஞான வரிகள் இதயத்தில் இழையோடின:
”எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும்
இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது”
சூஃபி
ஞான மரபின் வழியாகவும் தேனிப்பு என்னும் சொல் முக்கியமான சில அவதானங்களை நல்குகிறது.
தேன்
என்பது புறத்தே இனிப்பது. அதாவது உடலின் ஒரு பகுதியான நாவில் இனிப்பது. தியானம் என்பது
மனதில் பொங்கும் தித்திப்பு. அது தியானத்தின் பயனான ஆனந்தத்தைக் குறிக்கிறது.
இஸ்லாத்தில்
தியானத்திற்குரிய வேதம் குர்ஆன். சூஃபிகள் அதனை அக இருள் என்னும் பிணி நீக்கும் மாமருந்தாகப்
பேணி வருகின்றனர். ”குர்ஆனில் நாம் விசுவாசிகளுக்கு மருந்தாகவும் அருளாகவும் உள்ளதையே
இறக்கிவைத்தோம்” (17:82).
”அதன்
(தேனீ) வயிற்றிலிருந்து பல நிற பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்க்கு நிவாரணம்
உண்டு” (16:69) என்றும் குர்ஆன் சொல்கிறது.
நபிகள்
நாயகம் அருளினார்கள், “இரு மருந்துகளைப் பயன் கொள்வீர்: தேனும் குர்ஆனும்” (நூற்கள்:
திர்மிதி, இப்னு மாஜா, பைஹகீ).
தேன்
புற-மருந்து; குர்ஆன் அக-மருந்து.
”ஒருவர்
தன்னைத் தொகுத்துக் கொள்வதற்குத் ’தேனிப்பு’ என்று பெயர்” என்று விளக்கம் தருகிறார்
கரு.ஆறுமுகத்தமிழன்.
முன்பொரு காலத்தில் ”தொகுத்தறிவு” என்றொரு கட்டுரை
எழுதினேன். (’இஸ்மி’ மாத இதழில் ‘பட்டாம்பூச்சிக் காலம்’ என்னும் தொடரில் வெளிவந்தது).
அது ஆன்மிகம் பற்றிய கட்டுரை.
அறிவியல்
சொல்வது பகுத்தறிவு; ஆன்மிகம் சொல்வது தொகுத்தறிவு.
அறிவியல்
பாகத்தைக் காண்கிறது; ஆன்மிகம் ஏகத்தைக் காண்கிறது.
பகுத்துப்
பார்ப்பது விஞ்ஞானம்; தொகுத்துப் பார்ப்பது மெய்ஞ்ஞானம்.
“தேன் என்பது இனிப்பு, மகிழ்வு; தேனித்திருக்கும்போது
நிகழ்வது அதுதான்”
மனிதனில்
தேனிப்பு நிகழ்வது, அதாவது தியானம் நிகழ்வது அவனது இதயத்தில்தான். இதயம் என்பது இறைநம்பிக்கை
(ஈமான்) உறையும் இடம். அது ஓர் ஒளி. அதன் சுவை இனிமை. நபிகள் நாயகம் அதன் சுவையை “ஹலாவத்துல்
ஈமான்” (இறை நம்பிக்கையின் தித்திப்பு) என்றே பகர்ந்துள்ளார்கள். அந்தச் சுவையை அனுபவிப்பதே
தேனிப்பு என்னும் அகநிலை.
”தேன் என்பது தேறல், தெளிவு; தேனித்திருக்கும்போது
நிகழ்வது அதுதான்”
தியானத்தில்
இறைநம்பிக்கை துலங்கி உறுதிப்படுகிறது. ”தெளிவு என்பது முழுவதும் இறைநம்பிக்கை” (வல்
யகீனு அல்-ஈமானு குல்லுஹு) என்று நபிகள் நாயகம் அருளினார்கள் (நூல்:ஷுஃபல் ஈமான்:3083).
”தேன் என்பது துளித்துளியாகச் சேகரிக்கப்படுவது;
தேனித்திருக்கும்போது நிகழ்வது அதுதான்.”
மெய்ஞ்ஞானமும்
தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருபவர்களுக்கே கிட்டுகிறது. படிப்படியாகப் பயிற்சியில்
முன்னேறிச் சென்றே அடையப்படுகிறது. அப்போது சிறிய சிறிய ஆன்மிக அனுபவங்கள் நிகழ்ந்து
கொண்டே இருக்கின்றன. பின்புதான் பேரானந்த நிலை அருளப்படுகிறது.
ஜென்
நெறியில் சிறிய பரவச அனுபவங்கள் ’சடோரி’ (Satori) என்று சொல்லப்படுகின்றன. அதன் பின்னரே
புத்த நிலை என்னும் முழுமையான ஞானம் கிடைக்கிறது.
சூஃபி
நெறியில் தற்காலிகமான ஆன்மிக மனநிலைகள் “ஹால்” (பன்மை: அஹ்வால்) என்று சொல்லப்படுகின்றன.
நிலையான ஞானப் படித்தரங்கள் ”மகாம்” என்று சொல்லப்படுகின்றன.
தமிழையே
தேனித்த பாவேந்தர் பாரதிதாசன் தமிழென்னும் பூக்காட்டில் தேன் சுவைத்துப் பறந்திருந்த
தும்பி. “தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்” என்று அவர் பாடினார்.
”தேன்”
என்னும் தமிழ்ச் சொல் வழியாகவே நமக்கு இத்தனை ஞானச் சுடர்கள் வெளிப்பட்டுவிட்டன.
No comments:
Post a Comment