Sunday, February 17, 2019

நிறமெனத் தெரிவதெல்லாம்



     











நாள்தோறும் முகநூலில் வாட்ஸப்பில் இதர சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிப் பதிவுகள் வந்து சேர்கின்றன. அவற்றில் பத்து விழுக்காடாவது பார்க்கிறேனா என்பதே ஐயம்தான். சொல்லிடுகைகளின் நிலையும் அஃதே.

      பெருவணிக அலுவலங்களில் பிரதி மாதமும் ‘விழுத்தொண்டு ஆற்றினார்’ ஒருவரைத் தேர்ந்து ”இம்மாதத்தின் சிறந்த பணியாளர்” எனப் பாராட்டுகிறார்கள் அல்லவா? அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள்? சிலிகான் உலகின் சித்த புருஷரே! என்னை மன்னியும். தங்கள் துய்யச் சேவடிகள் படத்தகும் இடம் இதுவன்று.

      13-ஜனவரி-2019-ல் நான் கண்டு முகநூலில் பகிர்ந்த காணொளி ஒன்று இன்னமும் நினைக்குந் தோறும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தனது அறுபத்தாறாவது பிறந்த நாளில் தன் மகளிடமிருந்து தந்தை ஒருவர் கிஃப்ட் பெறுகிறார். எங்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான். ஆனால், இங்கே அந்தத் தந்தையும் வித்தியாசமானவர். அவர் பெற்ற அன்பளிப்பும் வித்தியாசமானது.


     









 பிறந்தபோதே நிறக்குருடு (Color Blindness / deuteranomaly / protanomaly) என்னும் குறைபாட்டுடன் இவ்வுலகுக்கு வந்தவர் அவர். எல்லாக் குழந்தைகளுமே முதல் சில வாரங்களுக்கு நிறங்கள் எதையும் பார்ப்பதில்லை. கண்களிலிருந்து பன்னிரண்டு இன்ச்சுகள் தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே காண்கின்றன. அவற்றையும் கறுப்பு வெள்ளையாகவும் சாம்பல் நிற அடர்த்திகளாகவும் மட்டுமே காண்கின்றன. பொருட்களின் வடிவங்களை மட்டுமே அவை கிரகித்துக் கொள்கின்றன. நான்கு மாதங்களைத் தாண்டும் போது அவற்றின் கண்களில் நரம்பமைப்புகள் வலுப்படும்போதுதான் முதன் முதலாக நிறத்தைக் காண்கின்றன. ஒரு குழந்தை காணும் முதல் நிறம் சிவப்பு. பிற நிறங்களை ஐந்தாம் மாதத்திலிருந்து காணத் தொடங்குகிறது என்று கண்ணறிவியல் கூறுகிறது.

      ஆனால், அரிதின் அரிதாகச் சில குழந்தைகளுக்குக் கண்ணின் உள்ளே நரம்புகளின் வளர்ச்சி குறைபட்டு அப்படியே அமைந்துவிடுகிறது. எனவே அவர்களால் வாழ்நாள் முழுதும் வண்ண வண்ண நிறங்களைக் காண இயலாதாகிறது. அவர்களின் உலகம் வெறும் கறுப்பு வெள்ளை மட்டுமே. பிறர் வண்ணங்களைக் கண்டு பரவசமுற்று அவற்றின் பெயர்களைச் சொல்லிக் கூவும்போதெல்லாம் இவர்கள் கறுப்பு வெள்ளையின் பிரிகைகளையே அப்படிப் பெயரிட்டு ‘நாம்’ அழைப்பதாக எண்ணி அவர்களும் கூவி மகிழக்கூடும். நாம் பார்க்கும் நிறங்களை அவர்கள் பார்ப்பதில்லை என்பதை நாம் அவர்களுக்கோ அல்லது அவர்கள் நமக்கோ நிரூபித்துக் காட்ட எவ்வழியுமில்லை. அவர்கள் நிறங்களைப் பார்க்கும் ஆற்றலைப் பெறுவது ஒன்றுதான் வழி.

அவ்வழியை நெடுங்கால ஆராய்ச்சியின், பரிசோதனைகளின் விளைவாக மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. நிறக்குருடு அல்லது நிறக்குறைபாடு உள்ளோர்க்கு நிறங்களை ஈடுகட்டிக் காண நல்கும் கண்ணாடிகள். அவற்றை அணிந்து கொண்டால் எல்லோரும் இப்பருவுலகை வண்ணமயமாகக் காண்பது போலவே அவர்களும் காணலாம்.

      அந்த தந்தைக்கு அது அறுபத்தாறாவது பிறந்த நாள். அன்று அதிகாலை அவர் வீட்டின் வாசலில் அவரது மகளும் நண்பர்களும் நிற்கிறார்கள். அவர் அழைக்கப்படுகிறார். காஷுவலாக டி-ஷர்ட்டும் ட்ரவுசரும் அணிந்தவராக அவர் வெளியே வருகிறார். ஹேப்பி பர்த்டே என்று எல்லோரும் கூச்சலிட்டு வாழ்த்துகிறார்கள். மகிழ்ச்சிப் புன்னகை அவர் முகத்தில் மலர்கிறது. கிஃப்ட் பை அவரிடம் வழங்கப்படுகிறது. பிறந்த நாள் பரிசை எடுத்துப் பார்க்கும்படி அவரைத் தூண்டுகிறார்கள். அதிகாலையின் பொன் இள வெயில் கீற்றுகள் முகத்தில் விழும்படியாக வீட்டின் முற்றத்தில் நின்றபடி பைக்குள்ளிருந்து ஒரு காகித டப்பாவை எடுக்கிறார். பரிசு என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முயல்கிறார். சற்றே குழம்புகிறார். தன் மகளின் மற்றும் நண்பர்களின் கண்களில் என்றுமில்லாத ஒரு புதுவித ஆர்வம் ததும்பதை அவரின் உள்மனம் உய்த்துணர்ந்திருக்க வேண்டும். இது வழமையான பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல என்பதை அவர் பிரக்ஞை கண்டுபிடித்துவிட்டது. அதன் புதிரவிழ்தல் அந்த அட்டை டப்பாவினுள் உள்ளது. அதனைத் திறந்து பரிசை வெளியே எடுக்கிறார்.



       


















வெயிற் கண்ணாடி? (சன் –க்ளாஸஸ்? கூளிங் கிளாஸ்?) இதற்கு முன்பும் அவர் எத்தனையோ வடிவங்களில் கூளிங் கிளாஸ் அணிந்திருக்கிறார். பலவித பிரபலமான பிராண்டுகள். (பல்வேறு வண்ணங்களில் அந்தக் கூளிங் கிளாஸ்கள் இருந்திருக்கலாம், பச்சை நீலம் ஆரஞ்சு என. எனினும், அந்த நிறங்களை அவரால் இதுவரை பார்க்க முடிந்ததில்லையே! தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறம்கூட அவருக்குத் தெரியாது!) இன்னொரு கூளிங் கண்ணாடிதான் பரிசா? அதற்கா இவ்வளவு ஆரவாரம்? என்றெண்ணி அவர் மனம் குழம்புகிறது.

      ”அணிந்து பார் குழந்தாய்!” என்கிறார்கள் சூழ்ந்து நிற்பவர்கள், “இவை சாதாரண கண்ணாடி அல்ல”

       அவர் மெல்ல அந்தக் கண்ணாடியை அணிகிறார். ஓடிக்கொண்டிருக்கும் கால நதி ஒரு கணம் அப்படியே நின்று விட்டதாக உணர்கிறார். ஒருவேளை, அவரின் இதயமும் ஒரு துடிப்பைத் தவற விட்டிருக்கலாம். தாயின் கருவறையுலகம் வெளிச்சம் மற்றும் இருள்களால் ஆனது. இமைகளை மூடியே வைத்திருப்பினும் கருக் குழவியால் வெளிச்சத்தையும் இருளையும் வேறுபடுத்தி அறிய முடியும். அங்கே வடிவங்கள் உருவங்கள் ஏதுமில்லை. அத்தகைய ஓர் உலகிலிருந்து வெளியேறி இப்பருவுலகில் வந்து விழுந்து கண் விழித்ததும் குழந்தை வடிவங்களைக் காண்கிறது. பிறப்பு அதனை ஒரு புதிய உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.

        அதுபோல், அறுபத்தாறு ஆண்டு காலம் வண்ணங்களையே பார்க்காமல் வளர்ந்து வாழ்ந்து வந்திருக்கும் அவர் முதன் முதலாக வண்ணங்களைக் காணும் அத்தருணம் அவரைப் புதியதொரு உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிறப்புதான் அல்லவா? வண்ணமற்ற உலகைப் பொருந்த வரை அவருக்கு அது அறுபத்தாறாவது பிறந்தநாள். ஆனால், நிறங்கள் நிறைந்த உலகைப் பொருத்த வரை அவருக்கு அதுவே பிறக்கும் நாள் அல்லவா?


     














 அதிர்ச்சியில் அவர் அழ ஆரம்பிக்கிறார். ஆம், உணர்ச்சிக் கொந்தளிப்பில் விம்மிக்கொண்டு அவர் அழுகிறார். முகத்தில் கண்ணீர் வழிகிறது. வண்ணங்களை இன்னும் துல்லியமாகப் பார்ப்பதற்காக அவரின் கண்கள் தம்மைத் தாமே கழுவித் தூய்மை அடைகின்றனவா? அந்தக் கண்ணீர், வண்ணங்களின் திருக்காட்சிக்காக விழிகள் நிகழ்த்தும் ஞான ஸ்நானமா? 

      ”என்ன தெரிகிறது பேபி? அதோ பலூன்களைப் பார்” என்கிறார் ஒருவர். அவர் திரும்பிக்கொண்டு பலூன்களைப் பார்க்கிறார், ஒன்றரை வயதுக் குழந்தையைப் போல! மேலும் கீழும் பல பொருட்களைப் பார்க்கிறார். பொருட்களையா? அல்ல அவை முதன் முதலாக இன்றுதான் காட்டும் வண்ணங்களை. ’இதை நீலம் என்பார்களே? நானும் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்தேனே? இதுதான் நீலமா? அதை சிவப்பு என்பார்களே? நானும்கூட அப்பெயரைப் பலமுறை சொன்னதுண்டே? இதுதான் சிவப்பா? இப்பொது அறிவேன், இப்போதுதான் அறிவேன், இதுதான் பச்சை, இதுதான் ஊதா, இதுதான் மஞ்சள்…” அவருக்குள் இப்படித்தான் எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று ஊகம் செய்துதானே நம்மால் எழுதிப் பார்க்க முடியும்?

      அவர் தன் கைகளை அசைத்து ஒன்றுடன் ஒன்று குத்துகிறார். கைகளை வீசுகிறார். தடுமாறுகிறார். இப்போது அவர் பிம்பம் பெரிதாக்கப்பட்ட ஓர் இரண்டு வயதுக் குழந்தைதான். தன் மகளை அழைக்கிறார். அழுதபடி அணைத்துக் கொள்கிறார். அவரது வாழ்நாளின் சிறந்த அன்பளிப்பை அவர் பெற்றுவிட்டார். இத்துடன் அக்காணொளி முடிகிறது. சில நிமிடங்களே ஓடும் அக்காணொளியை இதுகாறும் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அது என் உள்ளத்தை உருக்கத் தவறவில்லை.

      சிறு வயதிலிருந்தே வண்ணங்களின் மீது எனக்கு ஒரு தனித்த ஆர்வம் உள்ளது. பொதுவாகவே குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். அதனால்தான் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்ட பாட நூற்களிலிருந்து அவர்களின் கல்வியைத் தொடங்குகிறோம். கோட்டோவியங்கள் கொடுத்து அதில் வண்ணம் தீட்டச் சொல்கிறோம். பிள்ளைகள் மிக உற்சாகமாக அவற்றிற்கு வண்ணங்கள் தீட்டுகிறார்கள். அது அவர்களுக்கு ஓர் அலகிலா விளையாட்டு.


    












  எழுத்தல்லாத கலை வடிவங்களில் ஓவியத்தின் மீதுதான் என் மனம் ஈடுபாடு கொள்கிறது. உருவமற்ற வண்ணங்களின் கலந்துறவாடலான சூக்கும ஓவியங்கள் (Abstract Paintings) ஒரு கனவுலகமாக என் நினைவுகளில் விரிகின்றன. ஓவியத்திலிருந்துதான் நான் எழுத்துக்கு வந்து சேர்ந்தேன்.

      ”தென்றல் வந்து தீண்டும்போது
      என்ன வண்ணமோ மனசுல?...
      திங்கள் வந்து காயும்போது
      என்ன எண்ணமோ நெனப்புல?...
      வந்து வந்து போகுதம்மா
      எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
      எண்ணங்களுக்கேத்தபடி
      வண்ணமெல்லாம் மாறுமம்மா...
      உண்மையில உள்ளது என்ன? என்ன?
      வண்ணங்கள் என்ன? என்ன?”
     
      கவிஞர் வாலி எழுதிய வரிகள், அக எழுச்சி நல்கும் அற்புத இசையுடன் அடிக்கடி நான் நினைவில் ஒலிக்கவிட்டு அனுபவிக்கும் பாடல். “உண்மையில் வண்ணங்கள் உள்ளனவா?” என்னுமோர் மெய்யியல் தேடலின் வாசலை இந்த வரிகள் திறக்கின்றன.

பேசுவோம்...

No comments:

Post a Comment