Friday, February 8, 2019

ஆன்மிகப் பயிற்சி: ஏழு வழிகள்











 கபீர் ஹெல்மின்ஸ்கி
      பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியுமான மௌலானா ரூமி அவர்களின் வழியே தொடரும் சூஃபி மரபு “மௌலவியா தரீக்கா” எனப்படுகிறது. அதன் ஒரு கிளை அமெரிக்காவில் நீண்டுள்ளது. அமெரிக்காவின் முதல் மௌலவியா ஷைஃகு (ஆன்மிகப் பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட குரு) என்னும் நற்சான்றுக்குரியவர் கபீர் எட்மண்ட் ஹெல்மின்ஸ்கி. “த்ரெஷோல்டு சொசைட்டி” என்னும் ஆன்மிக ஆய்வகம் மற்றும் பதிப்பகத்தின் நிறுவனர். பல சூஃபி நூற்களின் ஆசிரியர். அவர் எழுதியதொரு சிறு ஆன்மிகக் குறிப்பு இது. அமெரிக்காவில் அவர் கற்பிக்கும் மௌலவியா தரீக்காவின் தியானப் பயிற்சிகள் பற்றியதொரு அறிமுகத்தை நல்குகிறது.












1.இறை பிரசன்னத்திற்கு வருதல்
      வழி: சுதாரிப்புடன் சுவாசித்தல்
      பயன்: காலக் கட்டுப்பாடு, “தரிசனம் / காட்சி”
      அடையப்பெறும் தன்மை: உள்ளமை
      மதிப்புகள்: ஹுளூர் (பிரசன்னம்), உடனடித்தன்மை, இப்னுல் வக்த் (”இக்கணத்தின் மகன்” – son of the moment), தக்வா (பயபக்தி), சுயாதீனம்.

பிரசன்னம் (Presence) என்பது உள்ளார்ந்த சுதாரிப்பு நிலையை விழிப்படையச் செய்வதாகும். அது ஒரே சமயத்தில் எல்லா தளங்களிலும், எல்லா திசைகளிலும் வரவேற்புடன் இருப்பதாகும். காலத்தால் தளைப்படாமல் அதனை சாட்சி பாவனையுடன் கண்டிருப்பதாகும். அது, ஆன்மா அதிகாரம் பெற்றிருப்பதாகும். வாழ்வின் பின்னணியை அறிந்திருக்கும் நிலையே பிரசன்னம். ஒரே நேரத்தில் உங்களின் எண்ணம், உணர்வு, புலன்களின் பதிவு, நடத்தை ஆகியவற்றை உங்களால் கவனிக்க முடிந்தால் நீங்கள் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். “தரிசித்தல்” – ”பார்த்தல்” என்பதற்கான அசாதரணமான ஆற்றலில் பிரச்ன்னம் முழுமை அடைகிறது. பொதுவாக மனிதர்கள் சமகால வாழ்வில் எப்படி ரோபோக்களாக இயங்குகிறார்கள், எப்படி மனிதர்கள் எந்திரங்களாகச் செயற்படுகிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் தீங்கும் இழைக்கிறார்கள். அவர்களால் “பார்க்க” முடிந்தால் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

      பயிற்சி: உன் மூச்சு, உன் பருவுடல், இக்கணத்தில உதிக்கும் உன் எண்ணங்கள், உன் உணர்ச்சி நிலை ஆகிவற்றின் மீது விழிப்புடன் இரு. இந்நிலையில் “ஹூ” என்னும் இறை நாமத்தை இணை.  













2.முனைப்பை விழிப்பூட்டுதல்
       வழி: சிந்தனை
      பயன்: கவனச்சிதறலை வெல்லுதல், முனைப்பையும் நோக்கத்தையும் பாதுகாத்தல்.
      அடையப்பெறும் தன்மை: ஈடுபாடு
      மதிப்புகள்: நிய்யத் (முனைப்பு / திட்டம்), நேர்மை, ஹிம்மத் (உறுதிப்பாடு)

      சிலர் மட்டுமே முனைப்புடன் வாழ்கின்றனர். மேலும் சிலரே முனைப்புடன் கூடிய தன்னலமற்ற பணிபுரியும் வாழ்க்கையை வாழ்கின்றனர். பலருடைய வாழ்க்கை ஈர்ப்பையும் தவிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமது முனைப்பு இறை ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே முனைப்புள்ள வாழ்க்கை சத்தியம் மற்றும் ஈடேற்றத்தின் பாதையில் விசையுறுத்தும். அதாவது, நிதர்சனமான, புறநிலை ஆன்மிக விதிகளை (objective spiritual laws) அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மனதின் இயக்கங்களைப் போதிய அளவு கண்காணித்த பிறகு, அனுபவத்தில் கற்ற பிறகு, இதயத்தில் விழிப்படையும் அறிவு சில முடிவுகளை எடுக்கிறது, சில கோட்பாடுகளை வகுக்கிறது, செயல்முறையை முடிவு செய்கிறது. அறிவாற்றல் இதயத்தின் வழிகாட்டுதலில் தன்னை மொழியின் வழியாக வெளிப்படுத்தும்போது நன்கு தேர்ந்த சில சொற்களில், கச்சிதமான சொற்றொடர்களில் பேசுகிறது. எண்ணத்தை ஆற்றல் தொடர்கிறது. முனைப்பு, உயர் தளத்தில் உண்டாகி, எதார்த்தத்தை வடிவமைக்கிறது. ஒவ்வொரு மாதமும் த்ரெஷோல்டு உங்களுக்கொரு அடிக்கருத்தைத் தருகிறது. அதன் பயிற்சியால் உங்கள் முனைப்பையும் நியாபகத்தையும் நீங்கள் பேணலாம்.

      பயிற்சி: உனக்கொரு முனைப்பை உருவாக்கு. அதனை எழுதி வை. நி அடிக்கடி அதைப் பார்க்கும்படி ஓரிடத்தில் வை. ஒவ்வொரு காலையிலும், நீ எழுந்தவுடன், அதனை நினைவுகொள். அதேபோல், ஒவ்வோர் இரவும் நீ உறங்கச் செல்கையில் உனது முனைப்பை நியாபகம் செய்து, அன்று அதன் மீது நீ எவ்வளவு செயற்பட்டாய் என்பதைக் கணக்கெடு.


















3.விழிப்புணர்வைத் தக்கவைத்தல்
      வழி: ஒவ்வொரு கணமும் ஓர்மையான கவனம்
      பயன்: அகப் பேச்சு, பகற்கனவு முதலியன குறைதல்.
      அடையப்பெறும் தன்மை: தக்கவைக்கப்பட்ட, பொறுமையான கவனம்.
      மதிப்புகள்: ஸப்ரு (பொறுமை), தவக்குல் (ஒப்படைவு), ஒவ்வொரு கணத்திலும் சமனிலை மற்றும் திறந்த நிலை.

      விழிப்புணர்வு தக்கவைக்கப் படும்போது நம் வாழ்வின் தன்மை மாறுகிறது. ஒரு எண்ணத்திலிருந்து இன்னொரு எண்ணத்திற்கும், ஒரு உணர்வு நிலையிலிருந்து இன்னொரு உணர்வு நிலைக்கும், ஒரு பொருளின் மீதான கவனத்திலிருந்து இன்னொரு பொருளின் மீதான கவனத்திற்கும் தாவுவது நின்றுவிடுகிறது. அப்போது, விழிப்புற்ற ஆன்மா மேலோட்டாமான விஷயங்களுக்கு அப்பால் நகர்ந்து மெய்ம்மையின் ஆன்மிக இயல்பை அனுபவிக்கிறது. மனதின் பேச்சுக்களாலும் முரண்பட்ட ஆசைகளாலும் கற்பனையான அச்சங்களாலும் அது ஆளப்படுவதில்லை. ஒவ்வொரு செயலுக்குள்ளும் அர்த்தத்தையும் கருணையையும் உன் அவசியமான சுயம் அடைகிறது.

     










 பயிற்சி-1: தியான மணிமாலையை வைத்து ஓர் இறைநாமத்தைச் சொல். ஒவ்வொரு முறை அதனை உச்சரிக்கும்போதும் சுதாரிப்புடன் சொல். மறதிக்குள் நீ விழுந்துவிட்டதை உணர்ந்த கணத்திலேயே மீண்டும் முதலிலிருந்து தொடங்கு! உன்னால் முடிந்தவரை ஓர் அளவைத் தேர்ந்துகொள் (33 / 66 / 99...). அந்த அளவு முழுவதும் உனது சுதாரிப்பான விழிப்புணர்வைத் தக்கவைக்க முனைப்பு கொள்.    

      பயிற்சி-2: நடை போகும்போது பதினொரு முறை “ஹூ” என்னும் நாமத்தை மூச்சுவிடு. படிப்படியாக உன் அளவை 33-ஆக உயர்த்து. எப்போதும் கவனமிருக்கட்டும், இவை வெறும் ஓசைகள் அல்ல, ஆனால் இறைவனின் பெயர்களாகும்.













4.சுயநலத்தைத் தாண்டுதல்
      வழி: புலனுணர்வில் உறுதியடைதல்
      பயன்: பொய்யான சுயத்தின் ஏமாற்று மற்றும் தளைகளிலிருந்து விடுதலை
      அடையப்பெறும் தன்மை: பணிவு
      மதிப்புகள்: ஃபனா (பொய்யான சுயம் அழிதல்), தர்வேஷியத் (பற்றற்ற நிலை), அடக்கம்.

      சுயத்தின் நிறபேதங்களைக் கற்பனை செய்: ஒரு எல்லையில் சுய-மையம் உள்ளது, மறு எல்லையில் சுயமின்மை. அதன் ஒரு எல்லையில், மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே கவலைப்படுகிறான், எதையும் தன்னை வைத்தே தொடர்புப் படுத்திப் பார்க்கிறான். மறு எல்லையில், வருணிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு நிலை உள்ளது, திறந்த இலகுவான விழிப்பு நிலையாக அது இருந்தபோதும் பிரக்ஞையுடன் தேர்வு செய்து தீர்க்கமான முடிவெடுக்கின்றது. சுய-மைய நிலைக்கு அருகில், எப்போதும் நம்மைப் பற்றியும் நம் ஆசைகளைப் பற்றியுமே சிந்திப்பவர்களாக நம்மை நாம் இருக்கக் கண்டால், மூச்சில் கவனம் வைத்து நம் புலனுணர்வுகளில் உறுதிப்படுவதன் மூலம் நாம் நம்மை அந்தக் குழப்பமான ஆசைகள் நிரம்பிய நிலையை விட்டும் விடுவித்துக்கொள்ள முடியும். தெளிந்த உணர்ச்சியும் சுதாரிப்பான சுவாசமும் கொண்டு நாம் மேலும் மேலும் சமனம் அடைய முடியும். தெளிவுணர்வு என்பது மோசமான உணர்ச்சி மற்றும் மனத் தாறுமாறு நிலைக்கான நன்மருந்து. ஒளூ என்னும் அங்கசுத்தி (ablution) செய்வதன் மூலம் நாம் சமனிலையை மீட்கலாம், சுயத்தின் பழக்கக் குறைபாடுகளை அகற்றலாம். முடிவாக, ஆதாரமான ஆன்மிக வழிகாட்டுதலின் ஒளியில் நம்மை கவனிப்பதும் அறிவதும் மேலும் மேலும் நம்மைப் பணிவு, நேர்மை மற்றும் சுய-மையத்திலிருந்து விடுதலை ஆகியவற்றை நோக்கிச் செலுத்தும். 

      பயிற்சி: ”நான் இல்லா நான்” என்னும் உணர்வை உள்மூச்சு ஆக்கவும். உங்கள் உடலின் ஏதேனுமொரு பகுதியில் (உள்ளங்கை, பாதம், நெஞ்சு...) குறிப்பாக உணர்வை கவனித்தபடி மூச்சை வெளிவிடவும்.













5.தியானத்தில் மூழ்குதல்
      வழி: அசைவின்மையில் ஆழ்தல்
      பயன்: அசட்டை நிலையை மாற்றுதல்
      பெறப்படும் தன்மை: இறைக்காதல்
      மதிப்புகள்: இஷ்க் (ஆழ்ந்த காதல்), நெருக்கம், நம்பகம்.

      தியானம் என்பதே உச்சமான ஆன்மிகப் பயிற்சி. ஆழ்நிலை தியானத்தின் மூலம் நாம் நமக்குள் ஓர் அசைவற்ற புள்ளியைக் கண்டடைகிறோம். அந்நிலையில் இறைவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். மௌலானா ரூமி சொல்கிறார்கள்: “உன் வேரின் வேருக்கு வா”. அந்தச் சலனமற்ற புள்ளியின் கோணத்திலிருந்து நம்மையே நோக்கும்போது நாம் அசட்டையாக இருந்தபோது, உண்மையிலேயே அவசியமானதும் மதிப்புடையதும் எது என்பதை நாம் மறந்தவர்களாக என்ன நிலையில் இருந்தோம் என்பது தெரியவருகிறது. அந்த அசைவற்ற புள்ளியிலிருந்து பார்க்கும்போது தன்முனைப்பு எப்படி நம்மை ஆட்டி வைக்கிறது என்பதையும் மெய்மையை எப்படி அது திரித்துக் காட்டுகிறது என்பதையும் நாம் காண்கிறோம். இவற்றினும் மிக முக்கியமாக, நாம் அந்த நிலைத்த புள்ளியில் இருக்கும்போது ஓர் உள்ளார்ந்த அழகையும் அமைதியையும் அனுபவிக்கிறோம். அந்த அசைவற்ற நிலையில்தான் இறைவன் கிடைக்கிறான். அப்போதுதான், நாம் இறைவனைப் பிரிந்தவர்களாக இல்லை என்னும் சத்தியத்தையும், எதுவெல்லாம் இறைவனை விட்டும் நம்மைப் பிரிக்குமோ அல்லது தொலைவாக்குமோ (அதாவது, அப்படி எண்ணச் செய்யுமோ) அதுவெல்லாம் பொய்மை என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

      பயிற்சி: நம்முள் இருக்கும் ”திசைகளற்ற புள்ளி”யில் நம்மைப் பொருத்தும் நீண்ட தியானங்கள்.  










 6.நன்றியும் வியப்பும் தெரிவித்தல்
      வழி: புனித நாதம்
      பயன்: அச்சமும் சுயநலமும் அறுதல்
      பெறப்படும் தன்மை: படைப்பூக்கம், ஆன்ம விடுதலை
      மதிப்புகள்: பகா (இறைவனில் நிலைத்தல்), வியப்பு, புகழ்ச்சி, படைப்பூக்கம்.

      நன்றியறிதல் என்பது இறைதியானத்தில் கிடைத்த அருளைச் செயலில் வெளிப்படுத்துவதாகும். அதுவும் தியானத்தை வளர்ப்பதற்கு ஒரு வழி. ஆனால், நாம் மையப்புள்ளியை ருசித்திருந்தால் (”ஃதவ்க்”) மட்டுமே உண்மையில் நாம் இறைவனைப் புகழ்ந்தேத்த முடியும். புகழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சிப் பரவச நிலை அல்ல, சில நேரங்களில் அது மிகைப் பரவச களிப்பாகக் காட்சி தந்தாலும்கூட. புகழ்ச்சி எனப்து வெறுமையானதொரு மையத்திலிருந்து பொங்கிப் பாய்கிறது. சூஃபி மடமான தைக்காவில் ஒலிக்கப்படுவது போன்ற இசையானது புகழ்ச்சிக்கான படிவமாகிறது. தைக்காவின் கலாச்சாரம் வழியே நாம் நமக்கு முன்னே சென்றோரின் காலடித் தடங்களைப் பின்பற்றுகிறோம். போகப்போக, அந்தப் படைப்பூக்க வெளிப்பாடே நமது இயல்பான இருத்தலாகிறது. 

      பயிற்சி: இது மிக மிக எளிமையான ஒன்றுதான். எந்தவொரு இறை நாமத்தையும் நேர்மையாக, சுதாரிப்பாக மீண்டும் மீண்டும் உச்சரிக்கவும். உதாரணமாக “அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்”.
 









7.அருட்பரவல்
      வழி: நிபந்தனையற்ற அன்பு
      பயன்: காழ்ப்பு மற்றும் எதிர்மறையிலிருந்து விடுதலை
      பெறப்படும் தன்மை: தூய்மை
      மதிப்புகள்: ரஹ்மத் (அருள்), வள்ளன்மை, தூய்மை

      மேலே சொல்லப்பட்ட நிலைகளில் பயணித்த பின், உள்ளே நாம் எப்படிக் கலங்கலாக இருக்கிறோம் என்பதைக் கண்ட பின், சிலநேரங்களில் அன்பும் அமைதியும் அல்லது இறை நெருக்கத்தையும் அனுபவிப்பதும் வேறு சில நேரங்களில் ஐயம் மேலிட்டுத் தவறான முடிவுகள் எடுத்துப் பச்சாதாபப்படுவதும் என்றிருந்த நிலை மாறி, மிக இலகுவாக அருளை அதிர்வலைகள் போல் பரவவிடுதல் என்பதன் அழகையும் இன்பத்தையும் நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். நம் எண்ணத்தில்கூட எதிர்மறைத் தன்மை நுழையாது. ஒரு மனிதனுக்கு இதனினும் மேலான நிலை என்ன இருக்கிறது? இந்த வாய்ப்பு எப்போதும் நம் முன்னே இருக்கின்றது, நாம் சுதாரிப்பாக இருந்தால், நாம் விழிப்புடன் நினைவு கூர்ந்தால். அருளைப் பரவவிடும் ஒருவன் இறைவனில் வெறுமையாய் இருப்பவன். அவன் பொய்யான சுயம் மற்றும் அதன் கவலைப்பாடுகளை விட்டும் விடுதலை அடைந்தவன்.


     










 பயிற்சி:  மேலிருந்து ஒளி உனக்குள் நுழைவதாக கவனித்து மூச்சை உள்ளிழுக்கவும். உள்மூச்சை உன் இதயம் வரை நுழைய வைக்கவும். அந்த ஒளி உன் இதயத்திலிருந்து வெளியே பரவுவதாகக் காணவும்.

நினைவூட்டல்கள்:
பிரசன்னத்தின் கதவு வழியே செல்லவும்
முனைப்பின் ஆற்றலை விழிப்பூட்டவும்
கவனச்சிதறலை நீக்கி கவனத்தைப் பேணவும்
பொய்ச் சுயத்தின் சிறையிலிருந்து தப்பிவிடு
தியானத்தின் கடலுக்குள் நுழை
நன்றியையும் வியப்பையும் வெளிப்படுத்து
அருளைப் பரவவிடு.

வழிமுறைகள்:
சுதாரிப்பான சுவாசம்
முனைப்பான சிந்தனை
இடையறாத கவனம்
புலனுணர்வில் உறுதிப்பாடு
சலனமற்ற நிலைக்குள் ஆழ்தல்
புனித நாதம்
நிபந்தனையற்ற அன்பு.

No comments:

Post a Comment