Sunday, April 14, 2019

தூய காதல் முதல் செப்பிய காமம் வரை: மூவகை அறபிக் காதல் கவிதைகள்


முஹ்ஜா கஹஃப்

















தமிழில்: ரமீஸ் பிலாலி
            (”Chaste Love to Explicit Sex: Three Types of Arabic Love Poetry” என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். முனைவர். முஹ்ஜா கஹஃப் அர்கன்சாஸ் பல்கலைக் கழகத்தில் “மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமியல் துறையில் ‘மத்தியக் கிழக்கு இலக்கியத்தில் காதலும் காமமும்’ என்னும் பாடத்தைக் கற்பிக்கிறார்.) 

ஆரம்பக் கால அறபிக் காதல் கவிதை மூன்று மாதிரிகளில் உருவானது. ஹிஜாஸி, உத்ரி மற்றும் கூஃபி என்று அவற்றை அழைக்கலாம். ஹிஜாஸி காதல் கவிதையே அறபி இலக்கியத்தின் முதல் வலைப்பின்னல். அது எதார்த்தமான சந்திப்பையும் உரையாடலையும் பெரிதும் பேசிற்று. அந்த இடத்திலிருந்து உத்ரி காதல் கவிதையின் நெடும்பாதை புறப்படுகிரது. அது தூய இலட்சியவாதக் காதலைப் பாடிற்று. கூஃபி காதல் கவிதை சற்றே காமம் கலந்த மென் பாலியற் கவிதையாக இருந்தது.

ஹிஜாஸி காதல்: ஆலயத்தின் அருகில் சந்திப்பாய் அழகே!

      ஹிஜாஸி காதல் கவிதை இஸ்லாம் அறிமுகமான சில பத்தாண்டுகளில் மக்காவிலும் மதீனாவிலும் உருப்பெற்றது. அதன் பெயர் அரேபிய தீபகற்பத்தின் வடமேற்குப் பகுதியைக் குறிக்கிறது. அப்பகுதியில்தான் அவ்விரு பெருநகரங்களும் உள்ளன. மண்ணிலே கால் பாவிய சராசரியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான காதலைப் பற்றி அது பேசுகிறது. அதில் வரும் காதலர்களுக்கு சில நேரங்களில் ஒன்றில் ஒன்று மோதும் பார்வை, சிறு உரையாடல், ஒரு தொடுகை, ஒரு ரகசியச் சந்திப்பு ஆகியவற்றுக்கான வாய்ப்புக் கிடைக்கிறது (இன்றைய ‘டேட்’ போல என்று சொல்லலாமா? – முஹ்ஜா கஹஃப்).

  














    ஹிஜாரி காதல் கவிதையின் சிறந்த கவிஞர் உமர் இப்னு அபீ ரபீஆ (இறப்பு: ஹிஜ்ரி 93 / கி.பி.711). கலீஃபா உமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளில் பிறந்ததால் அவருக்கு உமர் என்று பெயர் சூட்டப்பட்டது. அவர் செல்வ வளமிக்க குடும்பத்தில் வளர்ந்தார். பின்னர் அவர் மதீனாவின் அரசியல் குழப்பச் சூழலை விட்டு விலகி மக்காவுக்குச் சென்றார். அவரது காதற் கவிதைகள் பலவும் அவ்வூரையே களமாகக் கொண்டுள்ளன.
      மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்லும் பெண்களை அவர் நேசித்தார். அவர் சொல்கிறார்:
      ”இரண்டு மர்வாக்களுக்கு
இடையில் நிற்பது
என்னைத் தூண்டுகிறது.
      ஆசை என்பது
      காதலனின் மனதில் உருவாக்கப்படும்
      ஓர் எண்ணமேயாகும்”
      (பிதர், ப.25).

      இரண்டு மர்வாக்கள் என்பது சஃபா மற்றும் மர்வா ஆகிய இரண்டு குன்றுகளைக் குறிக்கும். ஆதி இறையில்லமான கஃபாவுக்கு அருகில் boulders ஆக அவை இருக்கின்றன. அவற்றினிடையே யாத்திரீகர்கள் ஏழு முறை ஓடி இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜிரா அவர்கள் ஓடிய நிகழ்வைப் போலச் செய்கின்றனர். அப்பகுதியில் கவிஞர் உமர் அடிக்கடி நடந்து செல்வதுண்டு. முஸ்லிம்களுக்குப் புனித பூமியான மக்கா நகரம் உமரின் கவிதையில் உணர்ச்சி மிக்க காதலன் ஒருவனது சாகசங்களுக்கான பின்னணியாக மாறுகிறது. அந்தக் காதலன், தெய்வீகக் காதலிக்காக ஏங்குபவன் அல்லன், ஆனால் மனிதத் தன்மைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு பெணுக்காக நகர்ப் பகுதிகளை அலசித் திரிபவன். “தைமியின் மகள் ஆயிஷாவுக்கு…” என்னும் கவிதையில் அவன் சொல்கிறான்:

      ”என் இதயத்தில் ஒரு காய்ச்சல் உள்ளது
      அதன் உஷ்ணத்தை நான் அஞ்சவில்லை
      இளமான் ஒன்றைக் காண்கிறேன்
      தைமியின் மகளை நினைவூட்டுகின்றது”
      (பிதர், ப.25)


     

















 உமர் தனது கவிதைக் காதலியை வெவ்வேறு பெயர்களால் அழைக்கிறார். சில சமயம் ’ஹிந்த்’ என்றும் சில சமயம் ’உம்மு அம்ரு’ என்றும் சில சமயம் “ஆயிஷா பின்த் தைமி’ என்றும், முறையே அவளின் அழகு, குணம் மற்றும் வமிசத்தைக் குறிப்பது போல. அவளோ, “அரசனின் அந்தப்புறத்தில் பெண்களின் தலைவி, அவளது முன்னோர்கள் மரியாதையின் சிகரத்தில் இருப்பவர்கள்” (பிதர், ப.29). அவரது கவிதைகளில் வரும் ‘தலைவி’ பெண்கள் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்பவள் அல்லள். ஆனால், உமரிக் காலத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு துல்லியமான பெண்ணாக, ”குறைஷிக் குலத்தவளாக”, “நற்பண்புகளும் தூய ஆடைகளும்” (பிதர், ப.29) கொண்டவளாக இருக்கிறாள். அவள் தனது உறவினர்களுடன் ஹஜ் யாத்திரை செய்கிறாள், தனது காதலனுக்கான குறிப்புக்களைச் சேவகர்களிடம் கொடுத்தனுப்புகிறாள், அன்றைய நாளில் தன்னைச் சந்திக்க அவனுக்குச் சிறிது நேரம் தருகிறாள்.
       ”அவளின் பின்புறம் முழுவதும் மறைக்கும் கருங்கூந்தலைக் காட்டுகிறாள்” (பிதர், ப.25) என்று உமர் பாடுகிறார். அவள் ஆடை மாற்றுவதை அவன் உளவு பார்க்கிறான். அவளது கூடாரத்தின் துணியே அவளை மறைத்துள்ளது (பிதர், ப.27). இங்கே கவிஞரின் கண்ணோட்டம் என்னவென்றால், அவள் தானாகவே வெளியே வருவதற்காகக் காதலன் காத்திருக்கிறான் என்பதே. அவள் ஒருபோதும் தராத ஒன்றுக்காக அவன் புலம்புகிறான்:

      ”அழகியிடம் சொல்க:
      ஒவ்வொரு காலையும் உனக்காக என்
      நினைவு வீணாகி நைந்து போகிறது
      விரைந்து வா.
      உன் காதலைத் தன்னுள்
கொண்டுள்ள என் இதயம்
அதுவும் அதன் நினைப்பொன்றும்
இல்லாமல் இருந்திருக்க வேண்டுமே!
      நான் நம்பியதை, ஆவலுடன் எதிர்பார்த்ததை
      தராமல் ஹிந்த் கஞ்சத்தனம் செய்தபோது
      விம்மி அழுததே அது!”
      (பிதர், ப.27)

     இப்போதும், அவளை முத்தமிடவோ, அவளின் இடையை வளைக்கவோ, அவளுடன் பேசிச் சிரிக்கவோ அவன் எதிர்பார்க்கவில்லை. உமரின் கவிதை, தனது வடிவப் பிரக்ஞை மற்றும் குதூகலமான தொனிப்பு ஆகியவற்றுடன், உமைய்யா ஆட்சியின் புதியதும் பரந்து விரிந்ததும் பல்வேறு மக்கள் வாழ்வதுமான நகரின் சிக்கலான வாழ்க்கை முறைகளையே பிரதிபலிக்கிறது.

     சில நேரங்களில் ஹிஜாஸி கவிதை பாலைவனம் மற்றும் அரேபிய தொல்குடி வாழ்க்கை ஆகிய படிமங்களைப் பாடுவதுண்டு. அது மெல்ல மெல்ல மரபாகவே மாறிவிட்டது. ஏனெனில், உமைய்யா ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் கவிஞர் அறிந்த வாழ்க்கை என்பது நகரமயமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஹிஜாஸி காதல் கவிஞர்களுள் மேலும் குறிப்பிடத்தக்கவர்கள் அல்-அஹ்வாஸ் மற்றும் இப்னுல் கைஸ் அல்-ருகய்யா.

இஸ்லாத்திற்கு முற்பட்ட ஹிஜாஸி காதல் கவிதைகள்:

      அரபி இலக்கியத்தில் முதன் முதலில் காதல்/காமக் என்னும் பொருண்மையை நாம் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்துப் பாடல்களில் காண்கிறோம். நெடும்பாடலின் முதல் சில கண்ணிகளைக் காதல் பொருண்மைக்கு ஒதுக்குதல் மரபாக இருந்தது. அதன் பின் அப்பாடல் தான் தேர்ந்த பொருண்மைக்குச் செல்லும். வழக்கமாக அது கவிஞர் தனது குலத்தின் போர் வீரத்தைப் போற்றிப் பாடுவதாக அமைந்தது.


     











  இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தின் மாபெரும் கவிஞன் என்று இம்ரவுல் கைஸ் என்று சொல்வது மிகையன்று. அவரெழுதிய பிரபலமான “முஅல்லகா” என்னும் கவிதையில் தனது மனைவியான ஃபாத்திமா குழந்தைக்குப் பாலுட்டிக் கொண்டிருந்த நிலையில் அவளுடன் தான் ’காதல்’ புரிந்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். அவளின் மேற்பகுதி குழந்தையின் பக்கம் சாய்ந்திருந்தது, அவளின் கீழ்ப்பகுதி தன் பக்கம் சாய்ந்திருந்தது என்கிறார். (உண்மையில், இதைப் பற்றி அந்தப் பெண்தான் பெருமையடிக்க வேண்டும். அவள் செய்திருப்பது அத்தகையதொரு ஜிம்னாஸ்டிக் சாதனை என்று எனக்குத் தோன்றுகிறது! – முஹ்ஜா கஹஃப்). 


  











  


 இஸ்லாத்திற்கு முற்பட்ட அறபிப் பெண்களும் கவிதைகள் யாத்துள்ளனர். உம்முல் தஹ்ஹாக் அல்-முஹரிபியா “தான் பித்துப் பிடித்தது போல் காதலித்த தனது திபபி குலக் கணவருக்கு” இந்த வரிகளை எழுதுகிறாள்:
      ”காதலின் நிறைவு எது?
      அணைத்தல், முத்தமிடல்,
வயிறுகள் அணைதல்,
கேசங்கள் குலைதல்
தேகங்கள் அதிர்தல்
கண்கள் கசிதல் கசிதல்...”
(உத்ரி, ப.54)

இஸ்லாத்திற்கு முற்பட்ட ஆரம்பக் காலத்து இந்தப் பாலியற் கவிதைகளே ஹிஜாஸ் காதற் கவிதைகளின் முன்னோடிகள். அந்தத் தொல்காலத்து அறபிக் கவிதைகளில் நூலுக்கு முகவுரை போல, காதலைப் பாடுவது எனபது சில கண்ணிகளில் மட்டுமே என்னும் அளவில் கட்டுப்பட்டிருந்தது. எனினும், அது பாடுகின்ற காதல் என்பது மண்ணியல் வாழ்வின் மனித உணர்வுகள் மற்றும் சமுதாயச் சூழல் சார்ந்து எளிதில் புரிந்து கொள்ளத் தக்கதாக இருந்தது. அக்காதலே ஹிஜாஸ் கவிதையில், மேலே நாம் விவரித்தபடி, முழுமையான வகைமையாக வளர்ந்தது. 

உத்ரி காதல்: மரணம் வரை:

      இன்னொரு பக்கம், உத்ரி கவிதையில் காதலின் இலக்கு – அதாவது காதலி – இவ்வுலகைக் கடந்த ஓர் ஆளுமையாக உருப்பெறக் காண்கிறோம். ஹிஜாஸி கவிதையைப் போன்றே உத்ரி கவிதையும் அதே உமைய்யா ஆட்சியின் ஆரம்பக் காலத்தில், அதே வடமேற்கு அறபுப் பகுதியில்தான் உருவாயிற்று. ஆனால் அது தனது பெயரை ஜமீல் இப்னு ம’அமர் (இறப்பு: ஹிஜ்ரி 82 / கி.பி 701) என்னும் மதீனத்துக் கவிஞரின் குலமான பனீ உத்ரா என்னும் பெயரிலிருந்து வருகிறது.

       



















ஜமீல் தனது காதலால் புகழ் பெற்ற கவிஞர். தனது அண்டைக் குலத்தைச் சேர்ந்த புதைனா என்னும் பெண்ணை அவர் காதலித்தார். அவர்களது காதலின் கதை யாதெனில் புதைனாவின் மீதான தனது காதலை வெளிப்படுத்தி அவர் பாடிய பாடல்களால் தமது குலப்பெருமைக்கு இழுக்கு நேர்ந்துவிட்டதாகச் சொல்லி அவர்களின் காதலை ஏற்க புதைனாவின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். பண்டைய அறபு இனக்குழுச் சமூகத்தில், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டாள் என்று சொல்வதே அவள் மீது களங்கம் உண்டாகி விட்டது என்பதற்குப் போதுமானதாக இருந்தது (இன்றும் நவீன அறபுச் சமூகத்தில் சில இடங்களில் அப்படித்தான்). புதைனா இன்னொருவனுக்குக் கடிமணம் செய்து வைக்கப்படுகிறாள். ஆனால், அவளும் ஜமீலும் கொண்ட காதல் அதற்குப் பிறகும் தொடர்கிறது. எனினும், அவர்கள் ஒருபோதும் உடலால் இணையவில்லை. ஜமீல் தொடர்ந்து அவளை அவ்வப்போது சந்தித்துத் தனது ஏக்கத்தைப் பாடல்களாக வெளிப்படுத்தி வந்தான்:

      என்னுயிரே! என்னைப் போல்
      தன்னை வெட்டி வீழ்த்திய
      நபரின் மீதான காதலால்
      அழுகின்ற ஒருவனை
      எப்போதேனும் உன் வாழ்வில்
      பார்த்ததுண்டா நீ?”
      (ஃபர்ருக், பாகம்:1, ப.482)

      இக்கவிதையில், தன்னையே அவர் புதைனாவின் காதலால் ’வெட்டப்பட்ட’ ஒருவன் என்று கூறுகிறார். இது உத்ரி கவிதையின் மரபுகளில் ஒன்று.
  
      உண்மையில், ஜமீல் இப்னு ம’அமர் மக்களால் ‘புதைனாவின் ஜமீல்’  (அறபியில் சொல்வதெனில் ’ஜமீலுல் புதைனா’) என்றே அழைக்கப் படலானார். பின்னர் அறபு மொழியின் காதற் கவிதை மரபில் ஒரு கோட்பாடாகவே பரிணமித்துவிட்ட ‘காதலில் சாதல் வீரமரணம்’ என்னும் கருத்தினை முதன் முதலில் கொண்டு வந்தவர் ஜமீல்தான். இந்த வரிகளைக் கவனிக்க:
      ”அவர்கள் சொல்கிறார்கள்
      ஜமீலே! போர்க்களம் செல், போராடு என்று.
      பெண்ணினும் பெரும்போர்
      எனக்கு ஏது?
      பெண்ணுடன் ஒவ்வொரு உரையாடலும் இனிது
      அவளுடன் இருக்கையில் வெட்டப்படுவோன்
      உயிரைத் தந்த தியாகி ஆகிறான்”
      (ஃபர்ருக், பாகம்:1, ப.481)


[ஜமீல் எழுதிய இக்கவிதையை வாசிக்கையில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய “கஜல்” கவிதைத் துளி ஒன்று நினைவில் வருகிறது: “எப்போதும் காதலையே பாடுகிறாயே / ஏதாவது பிரச்சனைகளைப் பாடக் கூடாதா?/ என்கிறார்கள்.// காதலை விடவும் பெரிய பிரச்சனை ஏது?” – மொ.பெ]



     

















 ஜமீல் இங்கே ஓர் அறபிய மரபுடன் சிலேடையாடுகிறார். அதாவது, ஜிஹாத் என்னும் இறைவழி அறப்போர் ஓர் இறை நம்பிக்கையாளருக்கு வெற்றி-வெற்றி உத்தியாகவே இருக்கிறது (win-win strategy). அறப்போர் வெற்றி பெற்றால் முஜாஹித் (போராளி) ஆன அவனும் வெற்றி அடைகிறான். அல்லது, அவன் அதில் வெட்டப்பட்டால் அவன் சொர்க்கத்தை அடைகிறான். அது இதைவிடவும் பெரிய வெற்றி ஆகிறது. அதுபோல், ஜமீல் சொல்கிறார், பெண்ணுடன் காதலெனும் அறப்போர் புரிபவன் இரண்டில் எது ஒன்று நடந்தாலும் வெற்றி அடைகிறான். அவளுடன் இருப்பதே சொர்க்கமாகிறது. காதல் அவனைக் கொன்றுவிட்டால் அவன் தியாகி ஆகிறான் – அதாவது, அது ஓர் உயர்வான ஆன்மிக ரீதியான வெற்றி. (இது ஏதோ துன்பியல் நாடகக் கற்பனை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். பண்டைய அரேபியாவில் காதல் உங்களை உண்மையிலேயே கொன்றுவிடக் கூடும், பெண்ணின் குடும்பத்தினர் கரங்களால்! – முஹ்ஜா கஹஃப்).

      சமூகத் தடைகள் சட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டியும் வாழ்கின்ற காதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இரண்டு ஆன்மாக்களின் சங்கமத்தை உத்ரி கவிதை என்னும் தூய காதல் கவிதை கொண்டாடுகிறது. அக்காதல் மரணத்திற்குப் பின்னும் தொடர்ந்து வருகின்ற ஒன்று.

காதலியுடன் உடலிணைவு கிட்டாமையை உத்ரி கவிதை கற்பிற்கான ஓர் அரணாகவும், உயர்ந்த அர்ப்பணத்தின் அடையாளமாகவும், இறுதியில் தனது காதலுக்காக உயிரையே தியாகம் செய்து மரணிக்கின்ற காதலனின் வாழ்வில் நிகழும் படைமட வீரமாகவும் மாற்றி விடுகிறது. ஜமீலின் கவிதை, “அறபு காதல் கவிதைக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அவன் காதல் தூய்மையானது. ஆனால், திருமணத்தில் நிறைவடைய வேண்டும் என்னும் முயற்சியும் எதிர்பார்ப்பும் அவனிடம் இருப்பதால் அது முழுமையான ’ப்ளேட்டோனிக்’ காதல் அல்ல” (ஆர்.ஜேக்கோபி (ப.414).






















செவ்வியல் உத்ரி காதலர்கள் லைலாவும் மஜ்னூனும். ஊழ்வினை உறுத்தூட்டிய ஜோடி. உத்ரி காதற் கதைகள் அமைவது போலவே அவர்களின் கதையும் நகரச் சூழலில் அமையும் ஹிஜாஸி காதற் கவிதைக்கு மாறான முறையில் பாலைவனச் சூழலில் அமைகிறது. கவிஞர் கைஸ் இப்னுல் முலவ்வாஹ் என்பவர்தான் உண்மையான மஜ்னூன் என்று சொல்லப்படுகிறது. உண்மையான ’லைலா’வின் பெயர் லைலா பின்த் ச’அதல் அம்ரிய்யா (இறப்பு: கி.பி.688). அவளும் ஒரு கவிஞர்தான். அவள் எழுதினாள்:
“மஜ்னூன் கடந்ததை எல்லாம்
நானும் கடந்து வந்திருக்கிறேன்.
ஆனால்,
அவன் தனது காதலை
வெளிப்படுத்திவிட்டான்.
நான் எனது காதலை
உள்ளுக்குள் ஒளித்தேன்
என்னை அது முழுவதுமாய்
உருக்கித் தீர்க்கும் வரை”
(உத்ரி, ப.76)

உத்ரி கவிதை தனது காதல் கதையை வழக்கமாக அரபுத் தொல்குடி வாழ்முறையில் அமைக்கிறது. அப்போதே நடைமுறையில் அருகி வந்திருந்த ஒரு வாழ்முறை அது. கவிஞர்களும் வாசகர்களும் உமைய்யா அரசின் நகர்மயமான, சிக்கல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்தபடியே பண்டைய பாலைநில வாழ்க்கையைக் கற்பனை செய்து காதல் ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர், 1880-களில் துரிதமாகத் தொழில்மயமாகிவந்த அமெரிக்காவில் கவிஞர்கள் இடையர் (”கவ்பாய்”) வாழ்க்கையை இலக்கியமாக்கிக் கொண்டிருந்தது போல. உத்ரி கவியுலகில் மேலும் இரண்டு இலட்சியக் காதலர்களாக கைஸ்-லுப்னா மற்றும் குதய்யிர்-அஸ்ஸா இணையர்களைக் குறிப்பிடலாம்.

உத்ரி காதல் கவிதை மண்ணியல் வாழ்வில் நிகழும் திருமணத்தில் நிறைவடையும் எதிர்பார்ப்புடன் சராசரியான ஆண் பெண் இடையே முகிழ்க்கும் ஆசைகளை முன்வைத்தே தொடங்குகிறது. ஆனால், அவ்விடத்திலிருந்து சுழன்றெழுந்து தூய ஆன்மிக நிலையை எட்டுகிறது. காதலின் ஏக்கம் ஓர் வாழ்நாளின் இலட்சியமாகப் பெரிதுபடுத்திக் காட்டப்படுகிறது. காதலியின் பிரிவும் தொலைவும் அவளை ஓர் வானுலக நபராக உயர்த்திக் காட்டுகிறது. வியந்த மரியாதையுடன் அவளது அழகைக் காதலன் வருணிக்கிறான். அவளது உடலின் கீழ்ப்பகுதியான ஒசிந்த இடையுடன் அவன் இனி ‘கலவி’ கொள்ள மாட்டான், கஃபாவின் சுற்றுப்புறங்களில் அவளை இனி அவன் ரகசியமாகச் சந்திக்கவும் மாட்டான், தனது வானுலக பீட்ரிஸுடன் காமத்தின் கலவி செய்வதாக தாந்தேவால் சிந்திக்க முடியாது என்பது போல. உத்ரி காதலன் தனது காதலியுடனான இணைவுக்கு ஏங்குகிறான், அவள் இல்லாமல் நொந்து நைந்து போகிறான், அவளது வீட்டின் முன் இரக்கமெழும்படிப் புலம்பிப் பாடுகிறான் [சங்கத் தமிழ் மரபின் மடலேறுதல் போல – மொ.பெ], தனது ஏக்கத்தால் பித்தனாகி அலைகிறான், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் அன்னியனாக தனது காதற்றுயரில் அதனை விட்டு நீங்கித் திரிகிறான், எப்போதேனும் அவள் சட்டென்று அவன் முன் தோன்றினால் மூர்ச்சித்து மயங்கி வீழ்கிறான். ”மரணம் வரை காதல்” என்பதே உத்ரி கவிதையின் அடிக்கருத்தியல் அல்லது மையப் புள்ளி.

உத்ரி காதலும் சமயக் காதல் கவிதையின் தோற்றமும்:

      இது எங்கே கொண்டு போகிறது என்று இப்போது உங்களால் கூறமுடியும், சரிதானே? உத்ரி காதல் பின்னாளில் பரிணமித்து இறைக் காதலின் சூஃபி கவிதை ஆகிறது. சூஃபி கவிதையானது பெரிதும் மனிதக் காதலின் குறியீடுகளையே இலகுவாகப் பயன்படுத்துகிறது, விண்டுரைக்க இயலாத தெய்வீகக் காதல் அனுபவத்தை விளக்கவும், இலட்சியக் காதலான இறைவனை நோக்கிய (ஆன்மாவின்) பயணத்தில் வருகின்ற நிலைகள் மற்றும் படித்தரங்களைக் குறிக்கவும் மனிதக் காதலின் அம்சங்களான சந்திப்பு உரையாடல் முதலியவற்றைக் குறியீடாகக் கையாள்கிறது.

      சூஃபி காதலின் முதல் குரல் ராபியத்துல் அதவிய்யா. அறபி கவிதையில் அவரே முதன் முதலில் பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவைக் காதலின் சொற்களால் பேசியவர். இறைக்காதலுக்கான குறியீடுகளில் மிகைப்புக் கொண்டதாகப் பின்னர் பரிணமித்த சூஃபி கவிதைகள் சிலவற்றில் ‘கறுப்பி’ என்று பொருட்படும் ”லைலா” என்னும் பெண்ணின் பெயர் கூட ஹஜ் யாத்திரையில் பக்தன் நாடிச் செல்கின்ற, கறுப்பு நிற அங்கியுடுத்திய கஃபா என்னும் ஆதி இறையில்லத்தைக் குறிப்பதாக அமைகிறது.

கூஃபி கவிதை: மதிலைத் தாண்டி வருவாயா?:

      
















  


கலீஃபா உமர் அவர்களால் ஹிஜ்ரி 17-இல் (கி.பி. 638) இராக்கில் ஒரு காவற்படைக் கோட்டையாக உருவாக்கப்பட்ட கூஃபா நகரம் பின்னர் அலீ இப்னு அபிதாலிப் அவர்கள் தமது ஆட்சியின் தலைநகராக நான்கு ஆண்டுகள் வைத்திருந்த போது முக்கியத்துவம் பெற்ற நகரமாயிற்று. ஓர் எல்லை நகரமாக அதன் காட்சி புதிதாக வளர்ந்து வருகின்ற இஸ்லாமிய அரசாட்சிக்குள் நுழைகின்ற அறபிகளும் பாரசீகர்களும் பிற இனத்தாரும் கலந்துறவாடுவதாக அமைந்தது. எல்லொருக்கும் உவபாக இல்லை எனினும் இக்கலப்பால் உருவாகி வந்திருந்த பன்முகப் பண்பாட்டு அடையாளங்களின் தேடல்கள் பலுகிப் பெருகிய களமாகவும் இருந்தது. உமய்யாக்களின் காலத்தில் கூஃபா, ’மதுக் கவிதைகளுக்கும் ஒழுக்கத் தளைகளை அறுத்து மீறிய காதற் கவிதைகளுக்கும் பெயர் பெற்ற” (லெடர், ப.456) அல்-உகைஷீருல் அஸதி போன்றோர் எழுதிய மென்னுணர்வுகள் கொண்ட நகர்சார் கவிதையின் இருப்பிடம் ஆயிற்று. அப்பாஸிய ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் கூஃபா இன்னொரு பண்பாட்டு வெடிப்பைச் சந்தித்தது. அதன் ஒரு பகுதி பாரசீகத் தாக்கத்தால் விளைந்தது.
      
 கூஃபாவில் ஆரம்பக் காலத்தில் தோன்றிய கவிதை வகைமைகளுள் ஒன்று “முஜூன்”. அச்சொல் பகடி, அங்கதம், ஆபாசம் மற்றும் வெட்கமின்மை ஆகிய அர்த்தங்கள் கொண்டது. ஒழுக்கமறுத்த இவ்வகை இலக்கியத்தை ஒருவர் அதிர்ச்சி மற்றும் எள்ளலின் கவிதை என்று சொல்லலாம். மதுவைக் கொண்டாடும் ‘ஃகம்ரிய்யத்’ என்னும் கவிதையும் கூஃபாவின் ஆரம்பக் காலங்கலில் துளிர்த்துப் பின்னர் அப்பாசிய ஆட்சியில் செழித்தது. காதல் கவிதையும் கூஃபாவில் அன்று சுடச்சுட பறிமாறப்பட்ட இலக்கிய வகைமையாக இருந்தது. அஃது சில நேரங்களில் ஒழுக்கமறுத்த ஒன்றாகவும் முஜூன் கவிதையுடன் தொடர்பு கொண்டதாகவும் சில நேரங்களில் அத்தன்மையிற் குறைந்ததாகவும் இருந்தது.

      உத்ரி கவிதை சமயக் காதல் கவிதையை நோக்கிச் சாய்ந்தது என்றால் கூஃபி கவிதை அவ்வப்போது வேண்டுமென்றே சமயத்திற்கு எதிர்நிலை எடுத்ததாகவும், சில நேரங்களில் இஸ்லாத்தின் சமயச் சொல்லாடல்களைப் பகடியுடன் திரித்துச் சொல்லிக் காமக் குறிப்புக்கள் தொனிக்கச் செய்வதாகவும் அமைந்தது. (இறைவனுக்கு) அடிபணிதல், சரணடைதல் என்று பொருட்படும் “இஸ்லாம்” என்னும் சொல்லேகூட ஒரு கவிதையில் ஆண்களுக்கு இடையிலான பாலுறவின் ‘அமைந்த நிலை’யைக் குறிப்பதாகக் கையாளப்பட்டுள்ளது. இக்கவிதைகளை எல்லாம் அப்படியே நேர்ப்பட அர்த்தப் படுத்திக்கொள்ள வேண்டும் எனபதும் அல்ல. முஜூன் கவிதையில் அப்பாசிய கிலாஃபத்தால் ஆட்சி செய்யப்பட்ட மையப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்பிற்கு எதிரான, அப்பாசிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் அரசியல் விமர்சன, எதிர்ப்புக் கூறு இருக்கிறது. இவ்வகைக் கவிஞர்கள், “புனிதப் பனுவல்களிலும் சமய விரிவுரை நூற்களிலும் உள்ள குறியீடுகளை எடுத்து ஆபாசமாகத் திரித்து அரசியல் மற்றும் சமயத் தலைவர்களைப் பகடி செய்வதற்காகக் கையாண்டனர்” (ரைட், 2).

       















அறபி மற்றும் பாரசீகப் பங்களிப்புக்களால் உச்சத்திலிருந்த அப்பாசிய ஆட்சிக் காலத்தில் பிறந்த அபூ நுவாஸ் (இறப்பு ஹிஜ்ரி199 / கி.பி.813), பஸ்ரா மற்றும் கூஃபா நகரங்களில் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறபி மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டு மக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொண்டார். முஜூன் வகையில் அவர் அப்பட்டமாக எழுதினார், “இந்த பாங்காளரின் அழைப்பை விட்டும் மனதைத் திருப்ப எனக்கொரு மதுக்கோபை தாருங்கள் / பொதுவிடத்தில் குடிப்பதற்கு மது கொடுங்கள் / அல்வழியில் எனைப் புணர்ந்து போடுங்கள் இப்போது” (ரைட், 12). அவரது வாழ்வில் திளைப்பு மற்றும் பச்சாதாபத்தின் சுழற்சிகளில் போய்க் கொண்டிருந்தார் என்று தோன்றினாலும் மதுப்பழக்கம் மற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுடனான காமக் களியாட்டங்களைப் பாடுகின்ற கவிதைக்கே அவர் பிரபலமாக இருந்தார்:
      
 ”பையன்களைக் காதல் செய்/ அவர்களின் தாடி அரும்பும் பருவத்தில்./ முதுமை கனிந்த காலத்தே/ மதுவும் களிப்பும் வழங்கப்படும்/ விடுதிகள் தோறும் அமர்ந்திடுவாய்…/ என்ன, ஒவ்வாக் காமம் இக்காலத்தே/ இசையப் படுவதா எனக் கேட்கின்/ ‘ஆமாம் அன்பரே!’ எனச் சொல்க./ தம் காதலை விட்டும் இதயங்களைப்/ பிரித்தல் என்பது பெரும்பாவம்.../ எனவே, இவ்வழி புனிதப் போர் புரிக/ பாதீடும் சொர்க்கமும் உமதாகும்...” (ரைட், 12).

      அபூ நுவாஸ் ஆண்கள் மற்றும் சிறுவருடனான குதப்புணர்வு பற்றி   தெளிவின்மை இல்லா வகையில் விளக்கி எழுதியுள்ள பகுதிகளும் அவரது கவிதைகளில் காணப்படுகின்றன. அபூ நுவாஸ் காமச் சித்திரிப்பு மற்றும் ஆபாச மொழி கொண்ட கவிஞர் மட்டும் அல்லர். அத்தகு அதிர்ச்சியூட்டும் கவிதைகள் எல்லாம் அவரெழுதிய முஜூன் மற்றும் ஃகம்ரிய்யத் வகைமைக் கவிதைகளில்தான் உள்ளன, அவரின் காதற் கவிதைகளில் அல்ல. மேலும், முஜூன் மற்றும் அப்பட்டமான காமக் கவிதைகள் ஆகியன அவை துளிர்த்து வந்த காலத்தில் கூஃபாவின் பெயருடன் இனைக்கப்பட்டிருந்தாலும் அந்த நகருக்கு வெளியேதான் அவை காணப்பட்டன.

      அபூ நுவாஸ் இயற்றிய காதற் கவிதகளை முழுமையாகக் கணக்கிட்டால் அவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு “முஜக்கராத்” (ஆண்களை விளித்துப் பாடப்பட்டவை) ஆகவும் மூன்றில் ஒரு பங்கு “முஅன்னஸாத்” (பெண்களை விளித்துப் பாடப்பட்டவை) ஆகவும் இருக்கின்றன. எனினும், ஒரு பெண்ணின் மீதான காதலை மறைத்துப் பாடும் பொருட்டு ஆணைப் பாடுவது போல் ஆண்பால் விகுதி அமைத்துப் பாடுவது என்பது அறபிக் கவிதையியல் மரபில் உள்ளதுதான் என்பதால் அபூ நுவாஸின் எவ்வொரு கவிதையும் எந்த வகைமையிற் சேர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்வது எளிதன்று. அப்பாசிய சமூகத்தின் ஒரு ஆர்வமூட்டும் பகுதியாகத் திகழ்ந்த, ஆண்களாக வேடமிட்ட இளம்பெண்கள் மீது பாடப்பட்ட ‘குலாமிய்யத்’ என்னும் அவரது கவிதைகளை எந்த வகைமையில் வைப்பது?

   ஆண்கள், பெண்கள் மற்றும் ‘பிறர்’ மீதான அவரது காதற் கவிதைகளில் உண்மையில் ஆபாசங்கள் இல்லை. அவரது காதல் கவிதையில், “அபூ நுவாஸ் காதலன் அல்லது காதலியின் தோற்றத்தை வருணிக்கிறார், காதல் வயப்பட்டவரின் வலி, கண்ணீர், உடல் மெலிவு, தூக்கமின்மை, அடிபணிவு முதலியவற்றைப் பாடுகிறார். மீண்டும் இணைவதன் களிப்பையும் பாடுகிறார்.   மேலும், தூற்றுவோர், கண்காணிக்கும் பொறாமைக்காரர், காதலர்கள் மீது அவதூறு செய்வோர், சங்கதூதி, காதலின் அடையாளமான ஆப்பிள் மற்றும் பிற பொருட்கள் ஆகியவற்றை எல்லாம் பாடுகிறார் (ஸ்கோலர், 42). இத்தனைக்குப் பிறகும் அபூ நுவாஸ் உண்மையில் ஒரே ஒரு பெண்ணைத்தான் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பெயர் ஜானான்:

















“திரையிட்ட பெண் என் இதயம் கவர்ந்தாள்
அழகே அவளின் திரை.
=======
தன் முகத்தின் அரிதான அம்சங்களை மறைக்க
அதனை அவள் அணிந்து
அவ்வப்போது அவள் வெளிப்படுத்தி காட்டும்
துணுக்குகளின் மதிப்பை உயர்த்திவிடுகிறாள்.”
(பிதர், ப.37)

      அபூ நுவாஸ் எழுதிய முஜூன் கவிதைகளைப் புறந்தள்ளி அவரது மெய்யான காதல் கவிதைகளை மட்டுமே நோக்கினால் உமரிப்னு அபீ ரபீஆ போல அபூ நுவாஸும் ஒரு ஹிஜாஸி பாணி கவிஞராகத் தோன்றுவார்.

      ஒரு சில கவிதைகளை அவை ஹிஜாஸியா, கூஃபியா அல்லது முற்றிலும் வேறா என்று சொல்ல முடிவதில்லை.   தஹ்னா பின்த் மஸ்ஹல் முறையிடுகிறார்:

      கிழவன் என்னுடன் இருந்த விதத்தை
      நீ அறிய விரும்பினால் கேள்
      நடந்தது இதுதான்:
      இரவெல்லாம் என்னுடன் சாய்ந்து கிடந்தான்
      வைகறையின் ஒளி எழுந்தபோது
      அவனின் அந்தரங்கம்
      மழையின்றி இடித்தது
      அவனின் திறவுகோல்
      என் பூட்டினுள் தளர்ந்தது”
      (உத்ரி, ப.90)

      இந்தப் பெண் கவிஞர் கி.பி.708-இல் இறந்தார். எனவே, மூவகைக் காதற் கவிதைகளும் இருந்ததொரு காலத்தில் அவர் இருந்திருக்கிறார். அவரின் இக்கவிதையை, மற்றும் இது போன்ற பிற கவிதைகளை எவ்வகைப் படுத்துவது? வகைப்பாடுகள் தமது பயன்பாட்டில் தோற்கும்போது அவற்றைச் செயற்படுத்துவதில் இறுக்கம் காட்டாமல் இருப்பதே சிறப்பு.

காதலைச் சொல்ல மூன்று அரபி முறைகள்:

      ஹிஜாஸி கவிதையின் காதலன் நேர்த்தி, உணர்ச்சி மற்றும் மன எழுச்சி ஆகியவை உள்ளவன். எனவே அவன் வழகமாக தனது மண்ணியல் வாழ்வில் கால் பாவிய, சமூக உலகில் வாழ்கின்ற, எதாத்தமான பெண்ணின் மீதான காதலில் வெற்றி அடைந்து அவளைத் திருமணம் செய்துகொள்ளும் நம்பிக்கையுடன் குதூகலமாகப் பாடுகிறான்.

      உத்ரி காதலன் துன்பமயமானவன். அவன் தனது தூய காதலுடன் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் தான் ஆராதிக்கும் காதலியின் பாதங்களில் விழுகிறான். மரணத்தின் வரை கூட அவனது காதலின் ஆன்மிக ஆற்றல் இட்டுச் செல்கிறது. இந்தக் கொடூரமான உலகில் அவனது காதல் நிறைவேறுவதில்லை. தூய காதலின் உத்ரி கவிதை பின்னாளில் தூய சமய மற்றும் ஆன்மிகக் காதற் கவிதையாக வளர்ச்சி கண்டது.

      தூய காதலாவது ஆன்மிகக் காதலாவது என்று கேட்கிறான் முஜூன் எழுதும் கூஃபி கவிஞன், தற்பாலின லோலன். அவன் எல்லா வழிகளிலும் செல்கிறான். எல்லா அமைவுகளிலும் பொருந்துகிறான், அனைத்தையும் அப்பட்டமாகச் சொல்கிறான்.

காதல் அங்குடன் நிற்பதில்லை:

     















 இப்னு ஹஜ்ம் எழுதிய, “புறாவின் வளையம்” என்னும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் உந்துலூசியக் காதல் காவியத்தில் ஹிஜாஸி காதலின் நேர்த்தியான தெளிவான உதாரணங்கள் உள்ளன. அறபிச் சீமாட்டியான ’வல்லதா பின்த் அல்-முஸ்தகஃபி’யின் கவிதையிலும் அதனைக் காணலாம் (இம்மூவகைக் கவிதைகளிலும் பெண்களும் பங்காற்றினார்கள். அறபி நங்கையர் எழுதிய பாலியற் கவிதைகள் பற்றிய செய்திகளடங்கிய கட்டுரை விரைவில் வெளிவருகிறது). இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிறித்துவப் பின்னணி கொண்டவரும் புகழ் பெற்ற லெபனானிய அமெரிக்கருமான கலீல் ஜிப்ரானின் எழுத்துக்கள் தம்மில் இலட்சியவாத ஆன்மிக உத்ரி காதலின் முத்திரையைக் கொண்டுள்ளன. ”சுமை தூக்கியும் பக்தாதின் மூன்று பெண்களும்” போன்ற ஆயிரத்தோர் இரவுகளின் அசிங்கமான கதைகள் கூஃபி அல்லது முஜூன் வகைமைக்குள் வைக்கத் தக்கன என்று கருதலாம்.

      இம்மூன்று கவிதை வகைமைகளும் அறபி இலக்கிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தில் உருவானவையாக இருக்கலாம். ஆனால், பிற்கால அறபி இலக்கியத்தில் குறிப்பாகவும், உலக இலக்கியத்தில் பொதுவாகவும் காமம் என்னும் பொருண்மையை ஆராயுங்கால் அவை இன்னமும் பயன்பாடுள்ள வகைமைகளாகவே இருக்கின்றன.

நூற் பட்டியல்:

Bitar, Farid, Treasury of Arabic Love: Poems, Quotations, and Proverbs in Arabic and English. Hippocrene Books, 1996.

Farrukh, Umar. Tarikh al-Adab al-Arabi, Dar al-Ilm lil Malayin, 1984, Vols. 1 and 2.

Giffen, Lois A. Theory of Profane Love Among the Arabs: The Development of a Genre. New York University Press, 1971.

Jacobi, R. “Jamil ibn Ma’mar” in Julie Scott Meisami and Paul Starkey, ed., Encyclopedia of Arabic Literature, Routledge, 1998.

Leder, S. “Kufa” in Julie Scott Meisami and Paul Starkey, ed., Encyclopedia of Arabic Literature, Routledge, 1998.

Schoeler, G. “Abu Nuwas” in Julie Scott Meisami and Paul Starkey, ed., Encyclopedia of Arabic Literature, Routledge, 1998.

Udhari, Abdullah al-. Classical Poems by Arab Women: A Bilingual Anthology. Saqi, 1999.

Wright, J.W. “Masculine Allusion and the Structure of Satire in Early Abbasid Poetry,” in J.W. Wright Jr. & Everett K. Rowson, ed., Homoeroticism in Classical Arabic Literature, Columbia University Press, 1997.

No comments:

Post a Comment