Sunday, February 3, 2013

பாலை ரோஜா



ரோஜா, ரோஸ், ரோசா, வர்தா, குல்... ஒவ்வொரு மொழியிலும் அந்தப் பூவுக்கு ஒவ்வொரு பெயர். அதன் வாசமோ ஒன்றுதான்.

"A rose by any other name would smell as sweet" என்று ஜூலியட்டின் வாயின் வழியே வாய்மை உரைக்கிறார் ஷேக்ஸ்பியர்.

காயத்தில் கசியும் ரத்தமே ஒரு பூவானது போல் முள்ளின் அருகில் முறுவலிக்கும் ரோஜா ஒரு கவிதை. அதில் யார் யார் எதை எதைப் பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லும் கவிதைகள் பல.

”பெண் என்பவள் சதைப்பூ” என்பார் அப்துல் ரகுமான். ஆதாமின் விலா எலும்பு என்னும் கிளையில் பூத்த ரோஜா.

ஸ்காட்டிஷ் கவி ராபர்ட் பர்ன்ஸ் தன் காதலியை ஒரு சிகப்பு ரோஜா மலராய்க் கண்டிருக்கிறான்:
”ஜூன் மாதத்தில்
புதிதாய்ப் பூத்த
செக்கச் சிவந்த ரோஜா
என் காதலி”

”O my Luve's like a red, red rose
That’s newly sprung in June”
என்று அவன் பாடியிருப்பதில் red red rose என்று அழுத்திச் சொல்வதில் அவளின் அழகை அளப்பதில் உள்ள இயலாமையை உணர்த்திக் காட்டுகிறான். அவள் வெறும் ரோஜா அல்ல, அரும் ரோஜா என்று அப்படி அடிக்கோடு இடுகிறான்.

நினைவுகள் அடுக்கடுக்காய் படர்ந்து நிஜ ரோஜாவை மறைத்துவிட்ட போது குறியீடுகளின் அர்த்த கனத்திலிருந்து ரோஜாவை வெறும் ரோஜாவாகவே மீட்டெடுக்க விரும்பிய கெர்ட்ரூட் ஸ்டெய்ன் எழுதினார், ”Rose is a rose is a rose is a rose.”

ஆம், வார்த்தையில் பொருள் இருந்தாலும் வார்த்தையே பொருள் ஆகிவிடாது. தன் காவியத்தில் பல இடங்களில் ரோஜாவை மலரவிட்ட மவ்லானா ரூமி குறிப்பிடுகிறார்: “ரோ-விலிருந்தும் ஜா-விலிருந்தும் ரோஜாவைப் பறித்தெடுக்க முடியாது”.

சூஃபி உலகில் ரோஜா என்பது ஞானத்தின் குறியீடு. அது ஞானத்தின் தலைநகர் – ‘மதீனத்துல் இல்ம்’ ஆன நபிகள் நாயகத்தையும் குறிக்கும்.

’பாலை ரோஜா’ என்றாலே அரபுப் பாலையில் அறிவுப்பூவாய் மலர்ந்த அண்ணலெம் பெருமானாரின் நினைவுதான் முன்னிற்கும். நாகூர் ஹனீஃபாவின் குரலில் இஸ்லாமிய இல்லங்களில் இன்றும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்:
“பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது – இந்தப்
பாருலகெங்கும் தீன் மணம் வீசுது”

சில நாட்களுக்கு முன் ஆங்கிலப் பாடல் ஒன்றினைக் கேட்க நேர்ந்தது. ’ஸ்டிங்‘ என்னும் புனைபெயர் கொண்ட ஆங்கிலேயப் பாப் பாடகர் கோர்டான் மத்யூ தாமஸ் சம்னர் எழுதிப் பாடியிருக்கும் அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் அரபியில் அமைந்தவை. அந்த அரபி வரிகளை அல்ஜீரிய நாட்டின் ’ராஇ’ பாடகரான ஷெப் மாமி பாடியிருக்கிறார். பாடலின் பெயர் Desert Rose (பாலை ரோஜா)

ஸ்டிங்கின் இந்தப் பாடல் ஒரு சூஃபிக் குறியீட்டுப் பாடலாகவே என் செவியில் ஒலித்தது. ரோஜா என்னும் குறியீடு இறைவனை, ஞானத்தை, இறைத்தூதரை, பெண்ணை என்று பல கோணங்களில் அர்த்தப்படுத்திக் கொள்ள இப்பாடலின் வரிகள் இடம் தந்து நகர்ந்து செல்கின்றன. ஆனால் இப்பாடல் யாரைப் பற்றியது என்ற அடையாளம் பாடலின் இறுதியில் வரும் வரிகளில் வெளிப்படும்போது அதன் அர்த்தப் பரிமாணமே சட்டென்று மாறிவிடுகிறது.

இரவே! இரவே!
நேரம் மிகவும் கடந்துவிட்டது 
என் இனிய மானை இன்னமும் தேடி அலைகின்றேன்

மழையைக் கனவு காண்கிறேன்
இரவே! இரவே!
பாலை மணலில் சோலைகளைக்
கனவு காண்கிறேன்
வீணில் விழித்தெழுகின்றேன்...
காலம் என் கைநழுவி ஓடவும்
காதலைக் கனவு காண்கிறேன்

தீயைக் கனவு காண்கிறேன்
இரவே! இரவே!
அந்தக் கனவுகள்
என்றும் ஓயாத ஒரு குதிரையுடன்
கட்டப்பட்டுள்ளன
தீயின் தழல்களில்
அவளின் நிழல் அசைகின்றது
ஓர் ஆணின் ஆசையுருக் கொண்டு

இந்தப் பாலை ரோஜா...
இரவே! இரவே!
அவளின் ஒவ்வொரு திரையும்
ஒரு ரகசிய வாக்குறுதி!
இந்தப் பாலை ரோஜா...
எந்த நறுமணமும் இதற்குமேல்
அவஸ்த்தை செய்ததில்லை என்னை

அவள் திரும்புகிறாள்...
இரவே! இரவே!
என் கனவுகளின் தர்க்கங்களில் எல்லாம்
அவளே இவ்வாறு அசைகிறாள்
இந்த நெருப்பு எரிக்கின்றது
எதுவும் அது தோன்றுவது போல் இல்லை
என்பதை உணர்கிறேன் நான்

மழையைக் கனவு காண்கிறேன்
இரவே! இரவே!
பாலை மணலில் சோலைகளைக்
கனவு காண்கிறேன்
வீணில் விழித்தெழுகின்றேன்...
காலம் என் கைநழுவி ஓடவும்
காதலைக் கனவு காண்கிறேன்

மழையைக் கனவு காண்கிறேன்
மேலே வெற்று வானை நோக்கி
என் பார்வையை உயர்த்துகிறேன்...
என் கண்களை மூடிக்கொள்கிறேன்
இந்த அரிய நறுமணம்
அவள் காதலின் இனிய போதை

அடைக்கலம் அடைக்கலம் அடைக்கலம்
என் வாழ்க்கை உனது
உன்னை அன்றி வேறு யாருக்கும் அல்ல
உன்னை அன்றி வேறு யாருக்கும் அல்ல

மழையைக் கனவு காண்கிறேன்
இரவே! இரவே!
பாலை மணலில் சோலைகளைக்
கனவு காண்கிறேன்
வீணில் விழித்தெழுகின்றேன்...
காலம் என் கைநழுவி ஓடவும்
காதலைக் கனவு காண்கிறேன்

இனிய பாலை ரோஜா...
இரவே! இரவே!
அவளின் ஒவ்வொரு திரையும்
ஒரு ரகசிய வாக்குறுதி!
இந்தப் பாலை ரோஜா...
எந்த நறுமணமும் இதற்குமேல்
அவஸ்த்தை செய்ததில்லை என்னை

இனிய பாலை ரோஜா...
ஏதேன் தோட்டத்தின் இந்த நினைவு
நம் எல்லோரிலும் எழுகின்றது
இந்தப் பாலை ரோஜா
இந்த அரிய நறுமணம்
வீழ்ச்சியின் இனிய போதை.

இரவே! இரவே!...

(குறிப்பு: மூலப்பாடலில் அரபி மொழியில் அமைந்த வரிகளைச் சாய்வெழுத்துக்களில் தந்திருக்கிறேன். ‘வீழ்ச்சி’ (the fall) என்பது ஆதாமும் ஏவாளும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு வந்ததைக் குறிக்கும். ஏதேன் தோட்டம் என்பது அவர்கள் இருந்த சொர்க்கம்.)

No comments:

Post a Comment