Thursday, June 15, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 12

10. அமைதிக் கரம்
அன்புள்ள மீம்,
      இதை எழுத என் இதயம் கனக்கிறது. நம்மிடை ஏதோ என்பதால் அல்ல. காலம் செல்லச் செல்ல உம் மீதான எனது அன்பு ஆழப்பட்டு வருவதை உணர்கிறேன், மதீனாவில் உமது பள்ளியின் பச்சைநிற விதானம் தெளிவின் கலங்கரை விளக்காக என் இதயத்தின் கண் முன் ஆகிறது. இல்லை, எனது இதயம் கனப்பது ஐயத்தாலன்று. அது பயத்தால் கனத்துள்ளது. அடுத்தொரு தாக்குதல் நிகழும் எனில் குற்றவாளி என்று உச்சரிக்கப்படும் பெயர் முஸ்லிம் பெயரே.
Related image
       எனக்குத் தெரியும், அவர்கள் சொல்வார்கள் (எப்போதுமே அப்படித்தான் சொல்கிறார்கள்), இஸ்லாத்தில் உள்ளார்ந்து ஏதோவொரு வன்முறை அம்சம் இருக்கிறது என்று.  பிற மதங்களின் மீது போர் தொடுக்கும்படி முஸ்லிம்களை குர்ஆன் ஏவுகிறது என்பதாக. அரசியல் போராட்டத்திற்கு இறைவனின் பெயரைப் பயன்படுத்துகின்ற கவர்ச்சிமிகு ஆளுமையான நவீனத் தீவிரவாதிக்கு நீங்களே ஒரு முன்மாதிரி என்பதாகவும்.
      செல்பேசிகளில் பிடிக்கப்பட்ட படத்துணுக்குகளையும் அதிகாரிகளிடமிருந்து கொப்பளிக்கும் சூளுரைகளையும் செய்தித் தொகுப்புகள் காட்டும். ஆனால், பல நூற்றாண்டுகளாக நீண்ட, கிறித்துவத்தின் சொந்த ஜிஹாத் ஆன சிலுவைப்போர்கள் பற்றி ஒருவரும் மூச்சுவிட மாட்டார்கள். அல்லது, அரசியல் கொள்கைகளை முன்வைத்து நடத்தப்படுகின்ற நவீன காலத்தின் புனிதப் போர்கள் பற்றி. ஊடகம் அல்லது பிரபலங்களின் விமரிசனச் சிந்தனையிலிருந்து பெரிதாக எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை.
      எனினும், இந்தக் கலந்துரையாடல்களில் ஒரு பகுதி என்னை மிகவும் சங்கடப்படுத்துகிறது. அது, நீங்கள் ஓர் இறைத்தூதர் மற்றும் உலகத் தலைவர் என இரண்டாகவும் இருப்பதிலிருந்து ஆரம்பம் ஆகிறது என்று எண்ணுகிறேன். புனிதத்தையும் உலகியலையும் ஒரே வகைப்பாட்டில் கொண்டுவருவது என்பது என்னால் கிரகித்துக்கொள்ள மிகவும் கடினமாகவே இருக்கிறது. அவற்றின் நோக்கங்கள் வேறுபட்டவையாகத் தெரிகின்றன. ஆன்மிகம் என்பது உள்முகம் நோக்கியது, இதயம் மற்றும் ஆத்மாவுக்கானது, கால இடச் சூழலைக் கடந்த ஒன்று என்பதாகவே நான் எப்போதும் எண்ணி வந்திருக்கிறேன். ஆத்மாவின் முனைவுகள் பண்புகளில் மலர்வன என்பதால் அவற்றைச் செம்மையானவை என்று சொல்லலாம். ஈமான் – அதிலிருந்து இஹ்சான் – அதிலிருந்து இஸ்லாம் என்பதாக அது சத்தியத்திற்கான நேர்வழி.
      ஆனால், உலகியல் என்பது சமரசங்கள் மற்றும் சிக்கல்களால் ஆன புறவுலகச் சேற்றில் உழல்வதாகும். அதில் தேர்தல்கள் மோசடிகளாகும். அதில் மெலியோர் சுரண்டப்படுகின்றனர். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. தொடர்பற்ற தனித்தனி உலகங்கள் எனலாய் செல்வ தேசங்களும் ஏழை நாடுகளும் பிரிந்து கிடக்கின்றன. 
Image result for american racism
      அமெரிக்காவில் வளர்தல் என்னும் எனது அனுபவத்தில் அத்தகு அநீதிகள் ஏற்புடையனவாகப் பார்க்கப்பட்டன – “எதார்த்தம் என்பது அப்படித்தான்” என்று சொல்லித் தோள்களை அசைப்பார்கள் – அவை மறுமை வாழ்வில் நேராக்கப்படும் என்று சொல்லிவிடுவார்கள். சட்டத்தின்படி வாழ்ந்தொழுகிய நல்ல மக்கள் (அதாவது நடுத்தர வர்க்க வெள்ளையர் என்று வாசிக்கவும்) சன்மானம் ஒன்றை பெற்றுக்கொண்டு ஓய்வு பெற்று அமைதியான நகர்ப்புறமொன்றில் அமைவார்கள். ஆனால், தீய மக்கள் (கருப்பர் அல்லது வெளிநாட்டார் என்று வாசிக்கவும்) நிலத்தடிச் சிறைக்கு என்றைக்குமாக அனுப்பப்படுவர். சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டு வருதல் என்னும் கோட்பாடு கடற்கரைக் களியாட்ட விடுமுறைகள் அல்லது சாக்லேட் கேக்குகள் போன்ற தனிநபர் திளைப்புக்களாக ஒதுக்கப்பட்டன. மண்ணில் சொர்க்கம் என்பது லட்சிய சமுதாயத்தின் மாதிரியாக இல்லை.
      இந்த தருக்கத்தின்படி ஆன்மிகத் தலைவர்கள் எல்லாம் சாதாரண மானுடர்களின் போராட்டங்களை விட்டும் அப்பால் அல்லது மேலே நின்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உம்மை முதலில் அணுகியபோது நானும் அந்த அனுமானங்களை உம்மிடம் கொண்டு வந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் புரிந்த போர்கள் பற்றிய பகுதிக்கு வந்தபோது நான் முதன்முதலில் படித்துக்கொண்டிருந்த உமது சரிதையை மூடி வைத்துவிட்டேன். அந்தக் கோணத்தில் உம்மை ஏற்றுக்கொள்வது என்பது அப்போது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. செவ்வமைதியில் மேகங்களின் மீது மிதந்திருக்கும் கிழக்கத்திய குருவைப் போன்றே உம்மை நான் கற்பனை செய்ய ஆசைப்பட்டேன். அல்லது நீரும் ஆபிரகாமின் வழிவந்த இறைத்தூதர் எனில் ஈசா (அலைஹிஸ்சலாம்)-ஐப் போல் ஏன் மறு கன்னத்தைக் காட்டலாகாது என்று நினைத்தேன். நீங்களல்ல, உம் பெயரால் உமது காலத்து ஆதிக் காட்டரபிச் சமூகம்தான் வன்முறை செய்தது என்னும் செய்தியைக் கேட்க ஆசைப்பட்டேன். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவே இல்லை.
      உம் சரிதத்தின் அப்பிரதியில் எனக்கு என்ன பிரச்சனை? உணர்வுகள் யாவற்றிலும், கோபம் என்பது என்னில் ஒருபோதும் எழாத ஒன்றாய் இருந்தது. அது “தவறு” என்பதாகப் பட்டதால் நான் அதை அனுமதித்ததில்லை. அதனை நான் செல்லப் பிராணிகள் வழியே செலுத்தினேன்: குடும்ப உறுப்பினர்களின் சதைக்குள் கூர்நகம் பதிக்கும் பூனை அல்லது சுவர்களில் துளைபோடும் நாய், அல்லது போக்கிரிகளும் முன்கோபிகளுமான எனது ஆண் நண்பர்களின் வழியே அதை நீட்டித்தேன். என் புனைகதைகளின் மாந்தர் வழியேகூட எனது கோபத்தை வெளிப்படுத்தியதுண்டு, அவர்கள் மிகக் கொடுமையான வன்செயல்களில் ஈடுபடுவார்கள், எந்த அளவு எனில் அதையெல்லாம் படிப்பது கொதி நீரால் சூடு படுவதைப் போல் இருப்பதாக என் தோழியொருத்தி சொன்னாள்.
      இப்போது, உம்மில் எனது கோபத்தை நான் நீட்டிக்காமல் இருப்பேனாக.
      அதனை எனது கலாச்சாரம் செய்யினும். மேற்குலகு தனது சினவெறியை இஸ்லாத்தின் மீது நீட்டுவதாயினும். அதன் சொந்த கொலைவெறிகள், உள்நாட்டிலும் வெளியிலும் மக்களை அது பீதியுறுத்துதல், ஆஃப்ரிக்க-அமெரிக்க வாழ்விடங்களுக்கு காவல் வாகனங்களை அனுப்புவதாலும், உளவு விமானங்களை பாகிஸ்தான் மற்றும் இராக்கின் மீது அனுப்புவதாலும், அல்லது வெறுமனே அச்சமூட்டும் கடும் பிரச்சாரத்தாலும்.  
Related image
      நாம் தகவல்கள் கொண்டு அச்சத்தை நீக்க வேண்டும்.
      இதோ நான் அறிந்தவை.
      உம் சூழல்கள் மிகச் சிக்கலானவை என்பதறிவேன். அகதிகளாக ஓடும் அளவுக்கு நீங்களும் உமது தோழர்களும் வதைக்கப்பட்டீர்கள். அதன் அர்த்தம், ஆரம்பத்தில் நீங்கள் திருப்பித் தாக்கவில்லை என்பதே. சண்டையில் இறங்குவதை விடவும் நீங்கள் இல்லம் துறந்து சென்றீர்கள். மக்காவை விட்டு மதீனாவுக்கு நீங்கள் சென்ற பின்னரும் நிலைமை மோசமாகவே இருந்தது. சில சந்தர்ப்பங்களில், நினைத்தவாரெல்லாம் உமது சமுதாயத்தை எதிரிகள் தாக்கினர். நம்பிக்கையாளர்களுக்கு எதிராக அநீதமான போர் தொடுக்கப்படும்போது திருப்பித் தாக்கும் அனுமதியை அப்போது திருமறை உங்களுக்கு வழங்கிற்று.
      ஆனால் எப்போதேனும் நீங்கள் கோபம் கொண்டீர்களா?
      உம்மைப் பற்றிய எனது மனச்சித்திரத்திற்கு உங்கள் கோபம் முரணாகவே இருக்கிறது. அனைத்துக்கும் மேல், நீங்களொரு மென்மையான ஆத்மா. நீங்கள் லயமின்றி அசைவதுகூட இல்லை. உம்மைப் பற்றிய ஒவ்வொன்றும் அளந்ததாகவும் பரிவுமிக்கதாகவும் இருக்கிறது. எனக்கோ கோபம் என்பது கட்டுப்பாடின்மை.
      கோபத்தைப் பற்றிய என் பார்வை குறுகலானதாய் இருக்கக்கூடும். கோபம் எப்போதுமே காயப்பட்ட சுயத்தினதாய் இருக்கவேண்டியதில்லை. அது மேலான இடத்திலிருந்தும் வரக்கூடும். உதவியற்றோரும் அப்பாவிகளும் வன்கொடுமை செய்யப்படுவதைக் காணும்போது இது புரிகிறது, மக்காவில் ஆரம்பக்கால முஸ்லிம்கள் அல்லது சிரியாவின் குடிமக்கள் அல்லது அமெரிக்காவில் நிராயுதபாணிகளான கருப்பர் ஆகியோரின் நிலையைப் போல. உண்மையான மாற்றத்தைச் செய்வதற்கான சக்தியாகக்கூட கோபம் இருக்கலாம். ஆன்மிகத்தில் முன்னேறிய ஓர் ஆளுமையால் அந்த சக்தியைச் சுயநலமின்றிச் செலுத்த முடியும். ஒரு கைப்பிடி அளவு பொடிக்கற்களை எறிந்து ஒரு படையினரையே நீங்கள் சாய்த்தது பற்றிக் குர்ஆன் கூறும், “நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை, நிச்சயமாக அல்லாஹ்வே எறிந்தான்” (8:17) என்னும் திருவசனத்தை மௌலானா ரூமி மேற்கோள் காட்டும்போது இதனையே உணர்த்துகிறார் எனலாம்.
      ‘முஹம்மத்’ என்பதை விட்டும் நீங்கள் வெறுமையாக இருந்ததால் இறைவன் உங்கள் வழியே செயல்பட்டான். உமது சுயத்தால் நீங்கள் செயல்படுவதை விடவும் அவ்வழியில் எப்போதும் நீங்கள் ஆற்றலுடையவராய் இருக்கமுடியும்.
      ஜிஹாத் என்பதற்கு “போராட்டம்” மற்றும் ”கடின முயற்சி” என்னும் இருபொருள் இருப்பதை எனக்கு ஞாபகப் படுத்தவே இதை நான் நினைக்கிறேன். ஒரு ஹதீஸ் உண்டு, போரொன்றின் முடிவில் விசுவாசிகளை நோக்கி நீங்கள் சொல்கிறீர்கள், “நாம் சிறிய ஜிஹாதை முடித்துவிட்டோம், பெரிய ஜிஹாதிற்குத் திரும்புகிறோம்”, அதாவது நஃப்ஸை வீழ்த்தப் போராடுதல் மற்றும் இறைநெருக்கத்தை அடையக் கடினமாய் முயலுதல்.
      நான் புரிந்துகொள்வதாய்ச் சொல்கிறேன், எனினும் அது மேம்போக்கான நிலையிலிருக்கலாம். உண்மை என்னவெனில், நீங்கள் ஆயுதம் ஏந்துவதை நான் காண விரும்பவில்லை. நீங்கள் அடிபடுவதை நான் கற்பனை செய்யக்கூட விரும்பவில்லை, என் அன்பே, உஹதுப் போரில் உமது பல் உடைந்ததையும் உம் தலைக்கவசத்தின் சங்கிலிக்கண்ணி உமது கன்னத்தினுள் பதிந்ததையும். ஆண்களோ பெண்களோ விலங்குகளோ, வேறெவரும் காயப்படுவதை அல்லது கொலை செய்யப்படுவதைப் பார்க்க நான் விரும்பவே இல்லை.
      இதில்தான் ஆன்மிகம் எனது வாழ்வின் சிக்கலை விடுவிக்க வேண்டும் என்று நான் குற்றவுணர்வு கொள்கிறேன். யாம் அனைவரும் காயப்பட்டு, அப்படியே நாளடைவில் இறந்துவிடுகிறோம் என்பதே இவ்வுலகில் இக்காலத்தில் எமது கதையாக இருக்கிறது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலத்தில் முரணே எம்மை முன்னகர்த்தும் விசை. ஓர் எழுத்தாளராக எனக்குத் தெரியும், பகைமை இல்லையேல் கதை ஏதும் இல்லை, முற்றுப்புள்ளி மட்டுமே.
      படைப்புக்கள் அனைத்திலும் உள்ளார்ந்திருக்கும் எதிர்மறை ஆற்றல்களின் முரணியக்கத்தை குர்ஆன் அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறது. இரவு பகலாய் மாறுகிறது. மழை பஞ்சமாகிறது. எழும் அலை வீழலை ஆகிறது. உண்மையில், அனைத்தின் எதார்த்தம் அப்படியே.
      இருப்பினும், இதை நான் எழுதும்போது உணர்கிறேன், நீங்கள் போதித்த அமைதி என்பது போரினைத் தொடரும் அமைதியினும் வேறான ஒன்று. இஸ்லாத்தின் சலாம் என்பது அர்ப்பணத்தின் அமைதி. லாப நஷ்டமான உலகை விட்டும் மெய்யுலகிற்கு மீளும் இயக்கம் அது. அங்கே கர்த்தா கருவி என்னும், நான் மற்றும் பிற என்னும் பிரிவு இல்லை.
Image result for nizam kabbani
      ஒரே உண்மை அமைதி ஏகத்துவமே, தவ்ஹீதின் புனித ஒருமை. இதை என் தலையில் நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அதனை என் ஆன்மாவில் உண்மையில் உணர்ந்துகொள்ள உமது உதவி வேண்டும். குறிப்பாக, இது போன்ற இன்னொரு சம்பவம் நடந்து மொத்த உலகமும், பிறழ்வுகொண்ட புற ஜிஹாத் செய்வோரை மட்டுமன்றி அனைத்து முஸ்லிம்களையும் குற்றஞ்சொல்லும் போது. என் அன்பே, அத்தருணங்களில் தயவுடன் என் அருகில் இருங்கள். உம்மைப் பற்றி அவர்கள் அசிங்கமாய்ப் பேசும்போது உமது பேரழகின் ஒரு தரிசனத்தைத் தாருங்கள். வெறுப்பே உமது செய்தி என்பதாக அவர்கள் சொல்லும்போது உமது பேரன்பால் என்னைக் கிறங்கி மண்டியிடச் செய்து அழ வையுங்கள்.
      யாம் அனைவரும் நேர்வழி காட்டப்படுவோமாக.
      சினம் கொண்டு எரிவோர் தமது இதயம் சகீனாவின் (நிம்மதியின்) குளுமையால் விரிந்திடக் காண்பாராக.
      நாம் நமது ஒருமையை நினைவு கூர்வோமாக. அப்போது அங்கே நீங்கள் எமக்காகத் கரங்கள் விரியக் காத்திருப்பதைக் காண்போமாக.
       உமது, உமது மட்டுமே, எப்போதும்,

அன்னா.  

No comments:

Post a Comment