6. உடன்
வரும் இனிய துணை
அன்புள்ள மீம்,
ஒரு ஹதீஸ் சொல்கிறது: “ஒருவர் என்னைக் கனவில்
கண்டால் நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் எனது உருவத்தை எடுக்க
முடியாது”. இருந்தும், நான் கண்ட ஒரு குறிப்பிட்ட கனவைப் பற்றி உம்மிடம் கேட்க
விரும்புகிறேன், அதில் வந்தது நிச்சயமாக நீங்கள்தானா என்று.
மத்தியக்கிழக்கு
அல்லது ஆசிய நகர் ஒன்றில் இருக்கிறேன். வெப்பமும் மக்கட்திரளும் வெய்யிலால்
நிறமிழந்தும் ஈரப்பதத்தால் பாதிப்படைந்துமுள்ள கட்டடங்களும் அதை
உறுதிப்படுத்துகின்றன. அது ஒரு நண்பகல். நான் வெளியே இருக்கிறேன். சாலையைக் கடக்க
முயல்கிறேன். போக்குவரத்தின் நெரிசலாலும் அவ்விடத்தின் பரிச்சயமின்மையாலும்
என்னால் கடக்க முடியவில்லை.
சாலையின்
ஓரத்தில் நான் சில நிமிடங்கள் நகர முடியாமல் அஞ்சித் தத்தளிக்கிறேன். ஏதோ ஒன்று
என்னைத் திரும்பச் செய்கிறது. ஒரு சுடுகறி (கபாப்) வியாபாரியைப் பார்க்கிறேன்.
அவர் பெயர் முஸ்தஃபா என்று எப்படியோ அறிந்திருக்கிறேன். அவர் புன்னகைக்கிறார். அது
ஒரு வழமையான புன்சிரிப்பல்ல. எக்கணமும் பெருஞ்சிரிப்பாக வெடித்துவிடக்
குமிழியிட்டிருக்கும் ஒரு குறுஞ்சிரிப்பு அது. ஒரு பண்டத்தை என் முன்
நீட்டுகிறார்: ஒரு சிறு ஷவர்மா. ஓர் இடையீட்டு ரொட்டிக்குரிய அனைத்துப்
பதார்த்தங்களும் அதில் உள்ளன, ஆனால் மிகவும் சிறிய வடிவத்தில். சாலடின் ஒரு
துணுக்கு, கறி மற்றும் சாற்றின் ஒரு திவலை, ரொட்டியின் மூலையில் கச்சிதமாய்த்
திணித்துள்ளது. நினைவுலகில் நானொரு சைவி என்றபோதும் அதனை நான் அதனைப்
பெற்றுக்கொள்கிறேன், அதனை உண்பதுதான் சாலையைக் கடக்க என்னை அனுமதிக்கும் என்று
ஒருவாறு புரிந்துகொண்டு. அப்படி நான் செய்வது முஸ்தஃபாவை மேலும் மகிழ்வூட்டுவதாகத்
தெரிகிறது. அவரின் புன்னகை மேலும் ஒளிர்கிறது, திரி உயருமொரு விளக்கினைப் போல்.
இச்சொற்களை
நான் தட்டச்சிடும் தருணத்தில் எங்கிருந்தோ ஒரு விட்டிற்பூச்சி வந்து என் கணினித்
திரையில் மோதுகிறது. இது இரட்டை வினோதமாய்த் தெரிகிறது. ஏனெனில் இஃதொரு நண்பகல்,
எனவே எனது கணினித்திரை அத்தனைப் பிரகாசமாயில்லை. இருக்கலாம், ஏதோவொரு உணர்வின்
தளத்தில் அப்பூச்சி உமது ஒளியை, ”நூரெ முஹம்மதிய்யா”வை உணர்ந்துவிடுகிறது, கனவின்
விளக்கத்திலும்கூட. இத்தருணத்தில், எனது கேள்விக்கு நீங்கள் விடை சொல்லும்
வழிமுறையாகவும் இது இருக்கலாம். (மிக்க நன்றி, அன்பே!).
அக்கனவை
நான் பார்த்த காலத்தில் அதைப்பற்றி தாதாவிடம் கேட்டேன், ஏனெனில் எமது மரபில்
உங்களை அவ்வப்போது முஹம்மத் முஸ்தஃபா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்றே
அழைத்தனர். அக்கனவு மிகவும் தெளிவாக இருந்தது, குறிப்பாக அந்தப் புன்னகை! அது என்ன
சொல்கிறது என்பதைப் பற்றிய அவரின் கருத்தை நான் அறிய விரும்பினேன். கனவுகள்,
காட்சிகள், விளக்கவியலாத வினோத நிகழ்வுகள் என்று ஆன்மிகத்தின் ”சிறப்பு விளைவுகள்”
எதனை நான் கொண்டு வரினும் தாதா தனது சொற்களை நிதானத்துடன் அளந்து அளந்தே பேசுவார்.
ஒரு கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார், “நல்லது. இது நல்ல அறிகுறிதான்”.
sulaiman dede.
பிறகு
அவர் இன்னொரு ஹதீஸைச் சொன்னார். இவ்வுலகின் பொருள்கள் எல்லாம் மறுமையின்
முற்காட்சி அல்லது முன்சுவை என்று நீங்கள் அதில் சொல்லியிருந்தீர்கள். எனவே,
அந்தச் சிறிய ரொட்டி என்பது திருப்தி பற்றிய வாக்குறுதி அல்லது இனி வரவிருக்கும்
ஆன்மிகப் போஷாக்கு ஆகும்.
சாலைக்கடவு
என்பது இவ்வுலக வாழ்வின் சோதனைகளை நான் கடந்து போவதன் குறியீடு என்று கருதுகிறேன்.
சாலையின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது? இப்போது நான் இருக்குமிடத்தின் சாதகமான
நோக்கில் அதனை நான் பார்க்க முடியவில்லை என்றாலும் அங்குதான் நான் சென்றடைய
வேண்டும் என்பது எனக்குத் தெரிகிறது. அத்தகு இக்கட்டான சூழலில் அங்கே வந்தது
நீங்கள்தான் என்று நான் நினைக்கிறேன், குழப்பத்திற்குள் நான் முன்னகர்ந்து போக
முடியுமா என்று யோசிக்கும் வேளையில் சோதனைகளின் அடுத்த வரிசை.
சுவனத்தின்
சுவையைக் கொஞ்சம் தந்து ஊக்கப்படுத்துவது என்பது உமது தாராளத்தன்மையின் தனித்த
அடையாளமாகத் தெரிகிறது. உமது பிரகாசமான புன்னகையும்கூட. நீர் வழங்காமல்
இருக்கவியலாத அன்பளிப்பு ஒன்றின் முன்னோட்டம் போல் அது தெரிகின்றது.
இக்கனவு
நடந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகம் போன்றதொரு கனவு தோன்றிற்று.
இம்முறை
தாதாவே என்னை அந்நகரின் போக்குவரத்தில் வழிநடத்திச் செல்கிறார். ஆனால் அது
மத்தியக்கிழக்கில் அல்ல, ஏதோ வடக்குப்பகுதி, கனடா அல்லது ஐரோப்பா போன்று, சாம்பல்
நிறக் கற்கட்டடங்கள், அனைத்தும் துலக்கமாகவும் தூய்மையாகவும் உள்ளன. ஏற்கனவே நான்
கனவில் கண்ட, தன்னில் ஒரு தேவாலயம் உள்ள இடம் அது என்று நினைக்கிறேன்.
இக்காட்சியில், அனைத்துத் திக்கிலிருந்தும் வாகனங்கள் வருவதான போக்குவரத்தின்
நடுவில் நாங்கள் இருக்கிறோம். கார்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு வழக்கமாகச்
சாலையைக் கடக்கும் விஷயம் அல்ல அது. அதே நேரத்தில் பிற தளங்களிலும், சாலையின்
கீழேயும் ஊடாகவும் நகர்ந்து செல்லவேண்டுவதான ஒன்று என்று உணர்கிறேன். ஆனால் தாதா என்னருகில்
இருக்க நான் பாதுகாப்பில்தான் இருக்கிறேன்.
மிக
நீண்ட காலமாக நான் தேடுபவளாக இருந்துவிட்டதால், ஆன்மிகத்தில் இலக்கு என்றொன்று
உண்டு என்பதை எனக்கே நான் நினைவூட்டிக்கொள்ள வேண்டியுள்ளது: மூலத்திற்கு மீளுதல்.
அங்கே பாதை என்னவாகத் தெரியும்? அடர்ந்த காட்டினூடே செல்லுமொரு தனித்த பாதையாக,
அல்லது சிலநேரங்களில் ஒரு மலைச்சரிவில் வெட்டப்பட்ட குறுகிய தடமாக அதனை நான் என்
மனத்தில் காட்சிப்படுத்துவதுண்டு. ஆனால் பாதை என்பது ஒரு நகரின் நடுவில் அமைந்த
போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாகவும் இருக்கலாம் என்று இக்கனவுகள் எனக்குக்
காட்டுகின்றன போலும். வேறு வார்த்தைகளில்: அன்றாட வாழ்வை விட்டும் எங்கோ தொலைவில்
அல்ல, ஆனால் அதிலே அதன் உக்கிரத்தில்தான்.
இதில்
சுவாரஸ்யம் யாதெனில், முதற்கனவில் இஸ்லாம் என்பது நான் தொடர்புகள் வைத்திருந்த
மத்தியக்கிழக்கில் எங்கோ இருந்தது: நையும் கட்டடங்கள், நெரிசல்கள் மற்றும்
மாசுபாடுகள், ஆனாலும் ஈர நெஞ்சமும் விருந்தோம்பலும் கொண்ட மக்கள். இப்போது, இஸ்லாம
எனக்கு அன்னியமான ஒன்றல்ல. நான் வசிக்கின்ற, எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு
தெரிந்த இடங்களுக்கு அது அருகில் வந்துவிட்டது. இரண்டாம் கனவின் அமைவு, ஐரோப்பிய
மற்றும் அமெரிக்கக் கூறுகளை இணைத்த, சரளைக்கல் வீதிகளும் தனது தனித்த தேவாலயமும்
கொண்டதான மாண்ட்ரீல் போன்றதொரு நகரை எனக்கு நினைவூட்டுகிறது.
அவ்விடம்
அறியப்பட்டதாய் ஆன பின்னும், தடைகளும் அபாயங்களும் மேலும் நுட்பமாகியுள்ளன. எனக்கொரு
வழிகாட்டி தேவை, வெறுமனே திசைகளைக் காட்டுபவர் அல்லர், ஆனால என்னுடன் நடந்து
வருபவர்.
இரண்டாம்
கனவிலிருந்து எழுந்தபோது, “அல்-வலீ” என்னும் இறைநாமத்துடன் ஒரு புதிய உள்ளிசைவை
உணர்ந்தேன். ‘நண்பன்’ என்பதினும் அல்-வலீ என்பதன் பொருள் பாதுகாவலர் மற்றும்
நெறியாளர் என்பதாகப் புரிந்துகொண்டேன். என்னைப் பற்றி எப்போதும் சிந்திக்கும்
ஒருவர், என் நலவில் அக்கறை கொண்டவர், நான் அறியாத வழிகளில் புரிந்துகொள்ள முடியாத
வழிகளில் எனக்கு உதவுபவர்.
அவரே
தாதா. ஆம், அவர் எனக்கு எவ்வளவு செய்கிறார் என்பதையும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதன்
வழித்துணையாய் இருக்க சம்மதித்திருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் நன்றி மற்றும்
பணிவின் அலை என்னைக் கழுவிச் செல்வதாய் உணர்ந்தேன். ஆனால் அந்த “வலீ”
நீங்களும்தான், என் அன்பே!
நான்
எப்போதும் வேண்டியிருந்த அந்தரங்க நண்பன் நீரே. நான் எங்கிருந்து வருகிறேன்
எனப்தையும் நான் எங்கே செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்.
நான் மேலும் நன்றிபாராட்டுவது, ஓர் அன்பளிப்பென தொடர்ந்து வியப்பது, நீரே யாம்
அனைவருக்குமான வழியைத் திறந்து தந்தீர் என்பதைத்தான். ஒரு பெருநகரின்
நெடுஞ்சாலையாக அல்லது காட்டினூடே நீளும் தடமாக, வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு
வகையில் நான் பாதையை வரித்துக்கொண்டாலும் நீரே அதன் வழியாளர். வழித்தடமும்
இடச்சூழலும் அறிந்தவர் உமக்குத் தெரியும். குர்ஆன் என்பது வரைபடம் என்றால் நீரே
வழிகாட்டி, பயணத்தில் என் உடன்வர நான் ஆசிக்கும் சிறந்த தோழரும் நீரே.
உம்மைச்
சந்திக்கப் புறப்பட்டபடி, என் இதயம் துடிக்க...
அன்னா.
No comments:
Post a Comment