1.
அருளின் புதுமழை
பிரியமுள்ள மீம்,
உங்களைப் பற்றி நான்
கேட்ட, படித்த கதைகளில் எல்லாம் குறிப்பாக எனக்குப் பிடித்த ஒன்று உள்ளது. அதை
நான் என் மனதில் காணும் வண்ணம் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவா?
மழைக்காலத்தில் ஒரு
பிற்பகல்: மந்த வானத்தின் கீழ் ஒரு பாறை வெளி. மதீனாவில் நீங்கள் வீட்டில் இல்லை.
பரந்த வெளி ஒன்றை எதிர்நோக்கும் மலைச் சரிவில் தோழருடன் நீங்கள் இருக்கிறீர்கள்.
போருக்கு முன் தினத்திலான உஹது மலையா அது? தொலைவிலிருந்து, மலைகளின் வரண்ட அரக்கு
மடிப்புகளுக்கு இடையே உமது சிறுபடையின் கூடாரங்கள் வெறும் புள்ளிகளாய். அவற்றின்
மீது கொடிகள் பறக்கவில்லை எனில் பின்னப்பட்ட ஆட்டுரோமச் சதுரங்களை நிழல்கள் என்றே
நினைத்திருப்பேன்.
பாளையத்தின் நடுவே
உமது தளபதிகள் கூடியுள்ளனர். இக்காட்சி பற்றி உங்களுக்கொரு சங்கடமான உணர்வே
இருந்து வருகிறது. ஆனால், உம்மால் முடிந்த வரை தெளிவான ஆணைகள் இட்டபின் மீதித் திட்டமிடலை
அவர்களிடமே விட்டுச் செல்கிறீர்கள். பாளையத்தில் நீங்கள் நகர்ந்து செல்கையில் தமது
ஆயுதங்களைத் துடைப்பொருக்கும் போர்ப்பயிற்சி செய்வோருக்கும் வாழ்த்து
சொல்கிறீர்கள். நீரள்ளி வர அல்லது வெய்யிலுக்கு நிழலிட அவர்கள் கோருவதை
புன்னகையுடன் தவிர்க்கிறீர்கள்.
தனிமையின் தேவை
இருப்பினும் நீங்கள் தனியே விடப்படுவதே அரிது. நீங்கள் தனித்திருக்கும்போதும்
கண்காணிக்கப் படுகிறீர்கள். நீங்கள் நகர்வதை இப்போது பின் தொடர்வது ஆயிஷாவின்
கண்கள். போரின் அபாயத்தை எச்சரித்தும் உமது இளம் மனைவி உங்களுடன் வருவதற்குக்
கெஞ்சி ஒப்ப வைத்தார். பிறரிடமிருந்து சற்றே தொலைவில் நீங்கள் இட்ட
கூடாரத்திலிருந்து உம் நகர்வைப் பின் தொடர்கிறார் அவர்.
Magnetic Hills in Madinah.
பாளையத்தை நீங்கி
உயரச் சாரல்களின் திசையில், சரளைச் சிறுகற்களின் மீது உறுதியாக நடந்து
செல்கிறீர்கள். உமது நடை உயரத்திலிருந்து ஒருவர் கீழே இறங்குவதைப் போல்
இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். எனினும் இம்முறை, நீங்கள் மேலே ஏறுகிறீர்கள்,
பாறைகளினூடே காற்று ஓசையிட்டுச் செல்லுமிடத்திற்கு. அங்கே தொழுகின்றீர்கள்.
ஆயிஷா உம்மைப் பார்க்கிறார், ஜிப்ரீல் உமக்குச்
சொல்லித் தந்தபடி நீங்கள் நிற்பதையும் குனிவதையும். விசுவாசிகளில் ஆக
உத்வேகமானவரும்கூட போலிசெய்ய முடியாத பாந்தமுடன் அதன் நிலைகளினூடே அசைகிறீர்கள்.
சலனமின்றி நீங்கள் அசைகிறீர்கள், அமைதியில்.
உமக்கு மேல் வானத்தில் மேகங்கள் திரள்கின்றன.
ஆயிஷா நின்றிருக்கும் கூடாரத்தின் வாயிற்திரை காற்றில் படபடக்கிறது. ஏதேனும்
திறந்து அல்லது அவிழ்ந்துள்ளதா என்று அவர் விரைந்து சோதிக்கிறார். அவர்
திரும்புகையில் மித மழை ஒன்று ஆர்ம்பித்திருப்பதைப் பார்க்கிறார். அரபுத்
தொல்குடிகளான பதாயீன்கள் நகையணிகள் செய்யும் வெள்ளி இழைகளாய் அது தெரிகிறது.
அதுசமயம், தொழுது முடித்து நீங்கள் மலையிறங்கி
அவரை நோக்கி வருகிறீர்கள். பெருமழையின் எதிர்பார்ப்பில் அனைத்துப் பொருட்களையும்
சுருட்டி வைத்துவிட்டதால் நீங்கள் தலைதுவட்டத் தருவதற்கு அவரிடம் துப்பட்டா
மட்டுமே இருக்கிறது. காலணிகளைக் கழற்றிவிட்டு நீங்கள் கூடாரத்துக்குள்
நுழையும்போது அவர் தன் தலையிலிருந்து துப்பட்டாவை எடுக்கின்றார்.
உமது
தோள்களிலும் முதுகிலும் துணியை ஒற்றி எடுக்கிறார். உம் ஆடை உலர்ந்தே இருக்கிறது.
உம்மை ஒரு கணம் விழிக்கிறார்.
”எனக்குப் புரியவில்லை, வெளியே மழை பெய்கிறதே”
என்கிறார்.
உமக்குப் பின்னுள்ள மலைவெளியைத் திரும்பிப்
பார்க்கிறீர், பின்னர் அவரின் கையில் உள்ள துணியை. ஜிப்ரீல் உமக்கு முதல்
வெளிப்பாட்டைத் தந்த பின்னர் நீங்கள் தலையில் போர்த்திக்கொண்ட துணிதான் அது. உமது
தூதுத்துவத்தின் குழவி நாட்களில், உலகிற்கு வரும் புதிய உயிராய் அதிர்ந்து
நடுங்கிய போது அந்தக் கம்பளித் துணியே நும் போர்வையாய் இருந்தது.
நினைவு
கூர்ந்து, அயிஷாவை உம்மிடம் இழுத்து அவரின் தலையை உம் நெஞ்சில் சாய்க்கிறீர்.
”செவ்விளம் பெண்ணே! அது வெளியுலகின் மழையல்ல,
நீ பார்த்தது அருளின் மழை” என்று அவரிடம் கேசத்தினூடே மெதுவாகச் சொல்கிறீர்.
கண்களைத் தேய்த்துக்கொண்டு அவர் மீண்டும் வெளியே
பார்க்கிறார். பிறகு உம்மை நோக்கி, “அருளின் மழையா?” என்கிறார்.
சிரிப்பை அடக்க முடியவில்லை உமக்கு.
“பார்க்கவில்லையா நீ, அது எப்போதுமே பொழிந்து கொண்டிருப்பது”
இந்நிகழ்வை நான் முதன் முதலில் கேட்டபோது என்
அம்மாவிடம் அதை உடனே சொல்லத் துடித்தேன். அதாவது என் பால்யத்தின் இன்னொரு தாயிடம்.
தொலைபேசியில் சொன்னேன். முடித்தவுடன் சப்தமே இல்லை.
சில கணங்கள் கழித்து அவர் சொன்னார், “அக்கதை
உன்னை உண்மையாகவே கவர்ந்துவிட்டது, இல்லையா செல்லம்?”
அதன் மாயத்தன்மையில் உங்களின் எந்த
அனுபவத்தையும் முற்றிலும் மாற்றிவிடும் சக்தி ஒன்று இருக்கிறது என்று நான்
சொன்னேன். அவரை நான் வளரும்போது கண்டிருந்த உருவத்தை, பின்னணியில் தாமிரக் கப்பல்
கடிகாரம் ஒலிக்க இருக்கை ஒன்றில் அமர்ந்து ரிசீவரைக் காதருகில் வைத்தபடி உதடுகளில்
குறுநகை தவழ்பவராய், என் முன் நிறுத்தியபடி நான் சொன்னேன், ”இப்போதும், மன்ஹட்டன்
நகரின் நடுவில் இங்கே எனது நண்பனின் வீட்டில், கட்டடத்தின் இருபத்தேழாம் தளத்தில்
அமர்ந்து, இரண்டாம் சாலையின் வெண் விளக்கு வரிசயை ஜன்னல் வழியே பார்த்தபடி, அங்கே
மேரிலேண்டில் உங்கள் மீது அந்த அருள்மழை பொழிவதைப் பார்ப்பது எனக்குச்
சிரமாயில்லை.”
என் அன்பே! என் செல்லமே! என் இதயத்தின் இனிய
நண்பரே! என் பார்வையில் இக்கதையில் என்னை ஈடுபடுத்தியதற்கு நன்றி. இவ்வாறு இதை
உமக்குச் சொல்லியபடி, போருக்கு முந்திய மாலையில் மழை பொழிவதை நான் பார்க்கும்போது,
முன்பு நான் காணத் தவறிய ஒன்றை இப்போது காண்கிறேன்: அனைத்தும் கருணையே! துயரமும்கூட,
போரும்கூட. அல்லாஹ் நாம் தாங்கும்படித் தருகின்ற சுமைகளில் எல்லாம் அதே அளவு
அருளும் உள்ளது, அப்படியாக நாம் காண முடியாமல் போனாலும்கூட. “சிரமத்துடன் லேசு
இருக்கிறது” என்கிறது குர்ஆன். அப்படித்தான் அவன் நமது இதயத்தை விரிவாக்குகிறான்
என்பதை வேறு எவரை விடவும் நீங்களே நன்றாக அறிவீர்கள்.
அந்த அருள் மழை என்றென்றும் உம்மீது
பொழியட்டும், அன்பர்களில் எல்லாம் பேரன்பரே!, உம் உச்சி முதல் பாதம் வரை, நீங்கள்
சொர்க்கப் பூங்காக்களில் நடந்து செல்லும்
நிலையில்.
நும் நறுமணத்தின் ஓர் இழையாவது பிடித்துவிடும்
நாட்டத்தால், சுவாசத்தை ஆழ்ந்து இழுத்தபடி...
அன்னா.
சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை.அன்னா அவர்களின் காதலில் தமிழில் இவ்வளவு அழகாக தந்தமைக்கு ..அல்ஹம்துலில்லாஹ்..
ReplyDelete