9. ஒளிரும் முகங்கள்
அன்புள்ள மீம்,
நீங்கள்
சொன்ன ஒரு விஷயத்தை நான் நினைத்திருந்தேன், “இஸ்லாம் மிகவும் விசித்திரமான
ஒன்றாகத் தொடங்கிற்று. அது மிகவும் விசித்திரமான ஒன்றாகவே ஆகிவிடும். எனவே
விசித்திரமானோருக்கு நன்மாராயம் சொல்லுங்கள்!”
இதை நான் புரிந்துகொள்ள, நீங்கள் இறைத்தூதராக
வருவதற்கு முன்னிருந்த காலத்தைக் கற்பனை செய்கிறேன். மக்காவின் சாதாரணப் பிரஜையாக
இருந்தீர்கள். காபாவைச் சுற்றிலும் சிலைகள் இருந்தன. இந்தியாவில் நான் பார்த்த
கோயில்களை வைத்து இதைக் கற்பனை செய்துகொள்கிறேன். சில
சிலைகள் மனித உருவத்தில்
இருக்கும், நகைகள் அணிந்து நறும்புகை சூழ, பிறவெல்லாம் தோராயமான உருக்கள்,
வெண்ணெய் அல்லது பால் அல்லது குங்குமக் குழம்பு பூசப்பட்டவை.
புறச்சமயிகள்
அவற்றின் முன் மண்டியிடுவதையும், பொன்னும் வெள்ளியுமான அன்பளிப்புக்களை அவற்றின்
காலடியில் வைப்பதையும் நீங்கள் பார்த்திருந்தீர்கள். அவர்கள் ஏக்கப்
பெருமூச்செறிவதையும் பிரார்த்தனைகளை முணுமுணுப்பதையும் ஆலயத்தின் மணலில் கொஞ்சம்
எடுத்துத் தமது கழுத்துக்களில் தொங்கும் தாயத்துகளுக்குள் இட்டுக்கொள்வதையும்
கண்டீர்கள்.
அங்கிருந்த
ஏசுவையும் மேரியையும் வணங்க வரும் கிறித்துவ யாத்ரீகரையும் நீங்கள்
பார்த்திருந்தீர்கள்: சித்திரமான உருவங்களின் முன் மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து
பாதிரிகள் அவர்களின் நெற்றியில் தைலம் தடவினார்கள்.
தீர்ப்பளிக்கும்
பாவனையில் அல்லாது ஒருவித அறிதலின் ஆர்வத்துடன் இதனைக் கவனித்தீர்கள். ஏனெனில்,
நீங்கள் மிகவும் உணர்வுள்ளவர். மேலும், மக்கா போன்ற ஓரிடத்தில் வெளிப்படைக்கும்
மறைவுக்குமான திரை மிகவும் மெலிது என்பதால், ஆன்மாக்களில் பல படிநிலைகள்
இருப்பதையும் மனித மனங்கள் தொடர்பு கொள்ளும் பல்வகையான சக்திகள் இருப்பதையும்
நீங்கள் அறிந்திருந்தீர். இவ்வகையான தவறுகள் எப்படி ஏற்படும் என்பதை நீங்கள்
புரிந்துகொண்டீர். குறிப்பாக மனிதர்களுக்கு பலகீனங்கள் உண்டு என்பதால், அதில்
தலையானது சோம்பல் என்பதால். யாம் குறுக்கு வழிகளை நாடுகிறோம், எளிதில் செல்வம்
தரும் திட்டங்களை நாடுகிறோம், நமக்கென உழைக்கும் வேறொருவரை நாடுகிறோம்.
மக்காவின்
வணிகர் மற்றும் காசாளரின் நிலையும் அப்படியே இருந்திருக்க வேண்டும். நளினப்
பேசிகள், அதிரா வகையினர், தம் செல்வம் தம்மைப் பாதுகாக்கும் என்னும் நம்பிக்கையர்.
பேரம் இல்லாப் போதுகளிலும் அதனையே எண்ணியிருப்போர். தம் வெற்றியைக் கொண்டாட ஆடம்பர
விருந்துகள் அயர்வோர். தம் சுகிப்பிடங்களில் தாம் வைத்துள்ள அழகிய பெண்கள் அல்லது
பையன்களுடன் கள் மாந்தி போதை ஏறுவோர். மேலும், தம்மைத் தாமே வியந்துகொண்டு
கண்ணாடியின் முன் நீண்ட நேரம் செலவிடுவோர்.
நீங்கள்
அப்படியாய் இல்லை. நகர் விட்டகலும் மக்கள் தமது பொருட்களைப் பாதுகாப்பதற்காக
உம்மிடம் தரும் பணம் பற்றிக் கிஞ்சிற்றும் உமக்கு ஆர்வம் இருக்கவில்லை. உம்மை
அவர்கள் அல்-அமீன் (நம்பகமானவர்) என்றழைத்தனர். அப்பண்பு உம்மை விசித்திரமானவராக,
இன்னும் தாமதமானவராகக் காட்டியிருக்கக்கூடும். உமது புன்னகையும் இலகுவாய்ப்
பழகுதலும் கண்டு மக்கள் அவ்வாறு எண்ணுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. உமது நம்பகத்தைச்
சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பர் என்பதிலும் ஐயமில்லை.
Horace Vernet - "Arab Chieftains"
உம்
காலத்து மக்கா விழிப்படைந்த சமுதாயம் அல்ல. ஆரம்பக் காலத்து முஸ்லிம்கள் சிலரிடம்
ஜாஃபர் இப்னு அபூ தாலிப் அவர்கள் அபிசீனியாவின் மன்னரிடமிருந்து அடைக்கலம்
தேடியபோது, மறைவெளிப்பாட்டுக்கு முந்திய தமது காலம் போலவே அங்கே அப்போது இருந்ததாக
விளக்கம் தந்தார்: ”நாம் அறியாமையில்
தொலைந்த மக்களாய் இருந்தோம். சிலைகளை வணங்கினோம். அவதூறுகளில் ஒருவரையொருவர்
முதுகில் குத்தினோம், வெட்கமின்றிப் பாவங்கள் புரிந்தோம், இறைக்கருணையான இரத்த
உறவுகளைத் துண்டித்தோம், அன்பற்ற அண்டை வீட்டார்களாய் இருந்தோம். நம்மில் வலியவர்
மெலியவரைத் தின்றார்.”
ஜாஹிலிய்யா என்னும் அறியாமைக் காலம் பற்றிய
இந்த விவரணை நிகழ்காலத் தொனியில் எனது சமுதாயத்திற்கும் இப்போது பொருத்தமாகவே
உள்ளது. அறியாமையே எமது அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பொழுதுபோக்கிற்கும்
நியதியாக இருக்கிறது.
மேற்குலகில்
இஸ்லாம் ஓர் அபாயமாக நோக்கப்படுவதற்கு இதுதான் காரணம் என்பதே என் மனதில் தோன்றும்
பொருத்தமான விளக்கம். ஏனெனில் இஸ்லாம் எதார்த்தத்தின் அடிப்படையாகப் பயன்பாட்டை
வைக்கிறது, மனிதப் பிரிவினைக்குப் பதிலாக மனித இணக்கத்தை வலியுறுத்துகிறது. வீணடிப்போராக
அல்லது பேராசையராக இருக்க வேண்டாம் என்று கோருகிறது. பகுத்தறிவாலும் கற்பனையாலும்
ஒருசேர கிரகிக்க வல்ல செயல்பாடுகளைக் கொண்டதான ஆன்மிக விதியின்படி ஆளப்படும் ஓர்
பிரபஞ்சத்தில் அது நம்மை வைக்கிறது. என்னைப் பொருத்தவரை இஸ்லாம் என்பது குருட்டு
நம்பிக்கையின் கொள்கைக்கு எதிரானது. ஆரம்பம் முதலே அது அனுபவத்தால் அறிவடையும்
பாதையாக இருந்துள்ளது, அதன் ஒவ்வொரு காலடி வைப்பிலும் கேள்விகள் கேட்டுக்கொண்டு
தன்னையே கண்டறிகின்ற ஒன்றாக.
என்
சமயமாற்ற நிகழ்வை உமக்குச் சொன்னேனா? கப்பல் கவிழ்ந்த பின்னர் கரையொதுங்கியது போல்
இருந்தது அது. என் நாளில் அது 9/11. அந்நிகழ்வின் பின் இயல்பான நியூயார்க் நகரின்
அனைத்துப் பகுதிகளும் பிய்த்துக்கொண்டு மிதந்தன. அந்நாளிலிருந்து என் மனத்தில்
நின்றுவிட்ட காட்சிகளில் ஒன்று: நெடுஞ்சாலையின் நடுவில் மிக ஆசுவாசமாக இரண்டு நபர்கள்
மிதிவண்டியில் செல்கிறார்கள். டாக்சிகள் இல்லை, நிற்மேற்றிய கண்ணாடிகள் கொண்ட
ராட்சத கார்கள் இல்லை, விரையும் பைக்குகள் இல்லை. தெருக்கள் காலியாக இருந்தன.
திறந்து கிடப்பதான ஓர் உணர்வு ஓங்கியிருந்தது. வழமையான சட்டதிட்டங்கள்
தளர்த்தப்பட்டிருந்தன. பணிக்கு நீங்கள் செல்லமுடியாது. தானியங்கியில் அப்போது பணம்
எடுக்கக்கூட இயலவில்லை.
மக்கள்
பலரும் பூங்காக்களுக்கு அல்லது தாவரத் தோட்டங்களுக்குச் சென்றனர். நான் நூற்களைத்
தேடினேன். ஏனென்று எனக்குப் புரியவில்லை எனினும், செய்தியில் சொல்லப்படும் கதைகள்
எனக்கு உண்மை என்று படவில்லை. நகரின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய
நூலகத்திற்குச் சென்று, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்தியக் கிழக்கு
குறித்த நூற்களுள்ள 965-ஆம் எண் அடுக்குகளை அலசினேன். என்ன நடந்து ஏன் நடந்தது
என்று எனக்கு நானே தெரிந்துகொள்ள விரும்பினேன். ஓராண்டு காலம், என் கையில்
கிடைத்ததை எல்லாம் ஊன்றிப் படித்தேன். அச்செயலில், சார்புலம் மற்றும் பின்னணி
பற்றிய அறிவை ஓரளவு பெற்றிருந்தேன் எனினும் இன்னமும் தெளிவு பிறக்காதிருந்தது.
Shaykh Loqman Effendi. American Naqshbandi Sufi Order.
அதன் உடனிகழ்வாக நான் எதிர்பாராத ஒன்று நடந்தது.
படிப்பது அல்லது சிந்திப்பது பற்றி அதில் எதுவும் இல்லை. அது ஒரு புதிய
கண்ணோட்டம். திடீரென்று ஊடகங்களில் எல்லாம் முஸ்லிம்களின் உருவங்கள் நிறைந்து
வழிந்த நிலையில், அவர்களில் சிலரின் முகங்களில் ஒருவித ஒளி பிரகாசிப்பதைக்
கண்டேன். அப்போது அதனைக் குறிக்க நூர் என்னும்
சொல் என்னிடம் இல்லை, அது உமது தனித்தன்மையான அடையாளங்களில் ஒன்று என்பதையும் நான்
அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனை நான் காண முடிந்தது.
இப்போது
என் பார்வையில், திரை ஒன்று உயர்த்தப்பட்டதாக அதனை நான் சொல்வேன். தகவல்களின்
உண்மையை நான் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் உயர் நிலை ஒன்றின் சத்தியம் வெளிப்படுத்தப்பட்டது.
அப்படித்தான்
இஸ்லாத்தை நோக்கிய எனது பயணத்தை நான் தொடங்கினேன், நான் என்னை அன்னியளாக
உணர்ந்திருந்த ஓர் இடத்தை விட்டு விலகி என் வீட்டை அடைவது போல் உணருகின்ற ஒரு
பயணம்.
நகரின்
கதவை நெருங்கவும், உமது கைகளைப் பிடித்தபடி...
அன்னா.
No comments:
Post a Comment