5. அருளின் புன்னகை
அன்புள்ள மீம்,
உம்மை
அறிந்த ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை உடன்படுகிறார். “அவர் ஒப்பற்ற அழகுள்ள புன்னகை
கொண்டிருந்தார்” என்று எழுதுகிறார் ஒரு மேற்கத்திய அறிஞர். அவர் தனது வரைவை உமது
ஆரம்பக்கால சரிதக்காரரின் விவரிப்புக்களை வைத்து எழுதுகிறார். இதோ, உமது குறுநகையை
நான் இப்படிப் பார்க்கிறேன். கதகதப்பு, பிரகாசம். ஆனால் அதில் ஒரு வணிகனின் அல்லது
ஓர் அரசியல்வாதியின் மிகைப்பாடு ஒருபோதும் இல்லை.
பிறரின்
உணர்ச்சிகளைத் தமக்கெனக் கையாள்வதும், தமது லாபத்திற்காக பிறரின் நிலையை
வளைப்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்து வந்ததால் வெகு காலம்
நான் புன்சிரிப்போரை நம்ப மறுத்திருந்தேன். நானுமேகூட அதிகம் சிரிப்பதில்லை. தொழில்முனைவோர்,
கலை வணிகர் மற்றும் பிற பெருமக்களுடன் நான் சேர்ந்திருப்பதற்காக எனது இருபதுகளில் நான் கணிசமான தொகையை பல்மருத்துவத்தில் செலவழித்து வந்தேன். அந்நேரங்களில்,
புன்னகை என்பது எனக்கு ஒரு தப்பில்லாத கடவுச்சீட்டு: எனது சமூக அங்கீகாரத்தை
நிறுவும் அடையாள அட்டை. பிற்காலத்தில்தான், அவ்வுலகை விட்டு நான் வெளியேறிய பின்,
எனது உழைக்கும் வர்க்க மூலங்களைப் பற்றி நான் கவலுதல் ஒழிந்தேன். இந்தப் பாதைக்கு
வந்தபோதுதான் நான் உள்ளார்ந்த நிலையிலொரு மனிதமாக உணர்ந்தேன். பிறகு நான் தோதான
காரணங்களுக்காகப் புன்னகைக்கத் தொடங்கினேன்: எனது சீர் செய்த பற்களைக்
காட்டுவதற்காக அல்லாது, எனது சுயத்தின் மீது காட்டப்படும் பிரியத்திற்காகவும் அதே
போல் பிறரை என்னால் நேசிக்க முடிவதற்காகவும்.
அந்தப்
பண்பு உங்களிடம் எப்போதுமே இருந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். பிறரை எப்போதும்
அவர்களின் முழுமையிலும் அவர்களது சுயத்தின் சாத்தியப்பாட்டிலும் பார்க்க உம்மால்
முடிந்தது. அன்பின் கண்களால் நீங்கள் பார்த்ததால், எங்கெங்கு நீங்கள்
பார்த்தபோதும் அழகையே பார்த்தீர்கள்.
நாணுகின்ற ஒருவரின் புன்னகையை நீங்கள் வைத்திருந்தீர் என்று எண்ணுகிறேன். அவ்வபோது அது உமது
உதடுகளின் ஓரங்களில் மிதந்திருந்தது, உமது உள்ளார்ந்த நன்மையை மலர்த்திக்
காட்டியபடி. அது, வெடித்து மலர்வதற்கு ஏற்ற சூழல்களை மட்டுமே
எதிர்பார்த்திருந்தது.
இயற்கை
உலகம் எப்போதும் உமக்குக் களிப்பூட்டியது. குறிப்பாகப் பறவைகள். தத்துவதாயினும்
கொத்துவதாயினும் சிறகு விரிப்பதாயினும், அவை எப்போதும் உமக்கொரு ஆனந்த
ஊற்றாயிருந்தன. மேலும், நீங்கள் பிள்ளைகளை நேசித்தீர்கள். பெரியவர்கள்கூட, அவர்கள்
பிள்ளைகளைப்போல் நடந்துகொள்ளும்போது உம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
அப்படித்தான், தனது கணவன் தன்னைத் திட்டுவதாக உம்மிடம் வந்து வழக்குரைத்த ஒரு
பெண்ணின் கதையும். தொழுகையில் அவர் அடிக்கடி குசு விடுவதால் மீண்டும் மீண்டும் ஒளூ
(அங்கசுத்தி) செய்யுமாறு அவரை அப்பெண் சொல்லி வந்த எரிச்சலில் அவர் அவளைத் திட்டியிருந்தார்.
சிரித்தபடி (உமது தலை குலுங்கியிருக்க வேண்டும் என்று கற்பனிக்கிறேன்), அவரின்
மனைவி சரிதான் என்று அவரிடம் சொன்னீர்கள்.
உமது
நெருங்கிய கிளைஞருடனும் தோழருடனும் அடிக்கடி சிரித்திருந்தீர்கள். ஆனால்
அவர்க்ளின் சமூகத்தில் நீங்கள் மட்டும் தனியாகச் சிரித்த நிகழ்வு மிகவும் அபூர்வம்
என்றே நினைக்கிறேன். பெரும்பாலும், அவர்களின் கைகளை உமது கையுடன்
வைத்துக்கொள்வீர்கள், அல்லது உமது கரத்தை அவர்களின் தோளைச் சுற்றி அணைப்பீர்கள்
அல்லது உமது உதடுகளை அவர்களின் நெற்றியில் பதிப்பீர்கள். உமக்குள் நிறைய
அன்பிருந்தது. நீர் தொடும் எவரையும் அது சட்டென்று சிறகு விரித்து எழுமொரு
ஒளியாகச் சுற்றிக்கொண்டது.
அதனால்தான்,
அணுக்கமானவர் ஆயினும் அன்னியர் ஆயினும், அவ்வாறு உம்மால் தொடப்பட்டோர் அதனை நினைவு
கூர்ந்தார். தம்முள்ளிருந்த வலி மட்டும் சந்தேகத்தின் முடிச்சுக்களை விட்டும்
விடுதலையாகித் தாம் சுத்தப்பட்டதாயும் விரிவடைந்ததாயும் அவர்கள் உணர்ந்தனர்.
சரிதக்காரர் இதனை இப்படி நேரடியாகச் சொல்வதில்லை. உறுதியான அறிவிப்பாளர் தொடரில்
தம்மை எட்டிய சேதிகளையே அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். காய்ச்சல்
குணமானோர் அல்லது மீண்டும் நடக்க ஏதுவானோர் பற்றிய சேதிகளும் அவற்றில் உள்ளன.
எனது
மனக்கண்ணால் நான் பார்ப்பது யாதெனில், இந்நிகழ்வுகளின் உடனே அவர்களின் முகங்களில்
ஒளி துலங்கி வருகின்றது. பழைய அச்சங்கள் எல்லாம் நீங்குகின்றன. உம்மை வியப்புடன்
பார்க்கும் அவர்களின் கண்கள் தெளிந்து விரிகின்றன. சிலசமயம், சொல்லாத கேள்வியுடன்
அவர்கள் உமது கரத்தை இறுகப் பற்றுகிறார்கள். உமது குறுநகை மேலும் விரிவதில்லை –
நீர் பொய் வாக்குறுதிகள் தருவதில்லை – ஆனால் அது மங்குவதுமில்லை. அவர்கள் என்ன
செய்ய வேண்டுமென்று நீங்கள் சொல்லும்போது அது நிலைத்திருக்கிறது. அவர்கள் தலையை
ஆட்டி உமக்கு வாக்குறுதி தருகிறார்கள்.
உம்மைப்
பின்பற்றிக் கடந்து வருவோர் சிறுபான்மையே; உமக்கது நன்றாய்த் தெரியும். உமது
புன்னகையில் ஒரு துயர் இருக்கக்கூடும். மக்களின் உள்ளார்ந்த ஏக்கங்களைக் காண
உமக்கு மிகவும் கஷ்டமாயிருந்த தருணங்கள் உண்டு. அவர்கள் கூட்டங்கூட்டமாக உம்மைச்
சூழாதபோதும், அல்லது தம் கோரிக்கையுடன் வரிசையில் உம் முன் நில்லாதபோதும், இரவின்
ஆழங்களில் நீர் அவர்களை விட்டு விலகிச் சென்றிருந்தபோதும், அவர்களின் பெருந்துயர்
உம்மை அடையவே செய்தது. சுருண்டு படுத்திருக்குமொரு பணிப்பெண் கிழிந்த பாயிடம்
கிசுகிசுப்பதையும், தமது மெத்தைகளில் செல்வ வணிகர்கள் கதைப்பதையும் நீர் கேட்கவே
செய்தீர்.
அப்போதுதான்
ஜிப்ரீல் உமக்கோர் ஆறுதல் ஆனார். வீட்டை விட்டு நழுவி, மண்ணறைத் தோட்டத்தினூடே
நடந்து, நிலவொளியில் மலைப்பாறைகளின் மீதேறிச் செல்வீர். அங்கே அவரின் வரவை
உணர்வீர். அவரின் குரல் ஒரு மணியோசையாய் ஒலிக்கக் கேட்பீர்: ”உம் மீது கடமையெல்லாம் சேர்ப்பிப்பதுதான்” (13:40) என்றவர்
நினைவூட்டுவார்.
கீழே
விரிந்து கிடக்கும் மதீனா நகரை, தொழுகை வரிசை போல் அமைந்திருக்கும் முஸ்லிம்களின்
இல்லங்களை நோக்கி ஜிப்ரீலிடம் பெருமூச்சுடன் சொல்வீர்: “நான் மேலும் செய்வதற்கு ஏதுமே இல்லையா?”
தாமதமின்றி
அவர் பதில் சொல்வார்: ”நீரொரு
எச்சரிக்கையாளராகவே வந்தீர்”.
அவர்
புறப்படும்போது காற்று மெல்ல அதிரும், உமது செவிகளில் அவர் கொண்டு வந்த செய்தியின்
திறப்பு மீந்திருக்கும். இரவின் அசைவின்மையில் மூச்சுவிட்டபடி, அவரது தோற்றம்
விட்டுச் சென்ற அலையாடலில் அசைந்தபடி நீங்கள் சற்று நேரம் அங்கே அமர்ந்திருப்பீர்.
அவ்வப்போது,
நீர் பார்த்த கேட்ட விஷயங்களாலும், உம் மீது அருளப்பட்டதன் சுமையாலும் உமது இதயம்
கனத்துக்கிடக்கும். (குர்ஆன் ஒரு மலையின் மீது அருளப்படும் எனில் அது பாரம் தாளாது
நொறுங்கிவிடும் என்று எமக்குச் சொல்லப்பட்டுள்ளது). எனினும் உமது உள்ளொளியையும்
இலகுவையும் மங்கச் செய்வது எதுவுமில்லை. ஒரு கணத்தில், அளவற்ற அருளாளனின் அழகையும்
அருளையும் நினைவுகூர்வது மீண்டும் உமது புன்னகையைக் கொண்டுவரும், காணும்
ஒருவருக்கு தெய்வீகப் பண்புகளின் பிரதிபலிப்பாய் இருக்கும் ஒரு புன்னகை அது.
எனது
முழங்கால் உமதுடன் அழுத்தியபடி அமர்ந்து, உமக்குப் பிடித்தமான குருவிகளை
ரசித்திருக்கும்...
அன்னா.
No comments:
Post a Comment