11. இறைவனின் கையொப்பம்
அன்புள்ள மீம்,
இங்கிருந்து
நாம் எங்கே செல்கிறோம்?
கடந்த
ஓராண்டாக நான் உமக்கிந்த கடிதங்களை எழுதி வருகிறேன், ஒரு தூரத்து ரசிகனைப்போல்.
ஆனால், இதற்கு மேலும் இடைவெளியில் இருக்க நான் விரும்பவில்லை. எவ்வளவு இயலுமோ
அவ்வளவு அருகில் உம்முடன் இருக்க விரும்புகிறேன்.
அதனினும்
அதிகமாய், நீங்களும் நானும் எப்போதுமாக ஒன்றாயிருக்க முடிவது எப்படி என்று அறிய
விரும்புகிறேன். கால இட எல்லைகளுக்கு, வேறெலாம் உளதான எதற்கும் அப்பால்.
எனது
பயிற்சியை மேலும் மேலும் ஆழப்படுத்துவதன் மூலம் ஆரம்பிக்கச் சொல்வீர்கள்
என்றெனக்குத் தெரியும். மேலும் அதிகமாக குர்ஆனின் வசனங்களை மனனம் செய்யச்
சொல்வீர்கள். அகமும் புறமும் எப்போதும் அங்கசுத்தம் கொண்டிருக்கச் சொல்வீர்கள்,
அன்றாட வாழ்வின் புழக்கத்திலும். இக்கணம் பற்றிப் பிரக்ஞை கொண்டிருக்கவும்,
ஒவ்வொரு மூச்சிலும் நன்றியுடனிருக்கவும் இறை நினைவில் இருக்கவும் சொல்வீர்கள்.
ஆனால்
என்னில் இன்னொரு பகுதி இருக்கிறது, எனது மனத்திற்கும் இதயத்திற்கும் பிரிவை
உண்டாக்கும் எதனையும் விட்டுவிடுவது. என் தவறுகள். என் அச்சங்கள். இக்கணத்தின்
மீது அழுத்தும் கடந்த காலத்தின் சுமைகள்.
சில
நாட்களுக்கு முன்புதான், பெர்லின் விமான நிலையத்தில், துருக்கி விமான சேவகத்தைக்
கடந்து போகும்போது என் கண்ணிலொரு குறிச்சொல் பட்டது: பகேஜ் தஸ்லீம். அக்கணத்தில், அந்தச் சாதாரணச் சொற்கள் என்னுள் ஓர்
ஆன்மிக ஆணை போல் ஒலித்தன. ”சுமைகளை ஒப்படைத்துவிடு” என்று அது கூறுவதாகப்
புரிந்துகொண்டேன். அதாவது, ’நீ பறக்க விரும்பினால் சுமைகளை இங்கேயே போட்டுவிடு’
என்பதாக.
நான்
நீண்ட காலம் தனியாக இருந்துவிட்டேன். பழைய உறவுகள் எல்லாம் அர்த்தமிழந்து விட்டன,
அரை ஞாபகமாய் இருக்கும் திரைப்படங்களைப் போல. உதாரணமாக, மத்தியப் பூங்காவில்
தொடங்கி வரிசையாக என்னைப் படகுச் சவாரியில் அழைத்துச் சென்ற ஒரு நண்பன் இருந்தான்.
நியூ யார்க்கிலிருந்தும் சில காட்சிகள்: டாக்சியின் பின் சீட்டில் அணைத்தபடி
இருந்தது, அல்லது நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் ஊடாகக் கைகோர்த்தபடிச்
சென்றது.
ஆனால்,
இன்னமும் என் பைக்குள் பாறைகள் போல் கனக்கின்ற மகிழ்வற்ற கணங்களும் இருக்கின்றன.
வெண்ணிற ஆடை உடுத்திக்கொண்டு கிராமத்துச் சபையில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று
நான் எவனுடன் திட்டமிட்டு ஏறத்தாழ நிச்சயமும் ஆகிவிட்டதோ, அந்நபர் பொதுவிடத்தில்
குடிபோதையில் சினந்து வைது என்னை நடுங்க வைத்தான். எனது அடுக்குமாடி
வீட்டிலிருந்து அவன் வெளியேறியபோது விளக்குகள் ஜன்னல்கள் என்று எதையெல்லாம்
முடியுமோ உடைத்து நொறுக்கிவிட்டுச் சென்றான்.
அல்ஹம்துலில்லாஹ்,
அவனை நான் திருமணம் செய்யவில்லை. ஆனால், திருமணம் என்பதே எனக்கொரு சங்கடமான
விஷயமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்றே மனநிலை கொண்டவனான ’டீ’-யுடனும்கூட அது
ஒரு வீட்டுச்சிறையின் அனுபவமாகவே இருந்தது. அதாவது, திருமணத்தின் அமெரிக்கப்
பிரதியான ’இனி எல்லாம் வசந்தமே’ என்பதன் மீது எங்கள் இருவருக்குமே எவ்வித ஆர்வமும்
இருக்கவில்லை. அவன் என்னுடம் அமெரிக்காவிலேயே இருக்க வேண்டுமென்று ஜெர்சி சிட்டி
நீதிமன்றத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அறைக்கலன்களே இல்லாத அந்த
வீட்டில் பிள்ளைகளுக்குப் பதிலாக நாய் ஒன்றை வைத்திருந்தோம். அவ்வழியில் எங்கள்
இருவருக்குமே ஒரு ஆரோக்கியமான இடைவெளி கிடைக்கும் என்று நம்பினோம். அப்படியும்,
நான் அடைப்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். “வைத்திருக்கவும் விடாதிருக்கவும்” (to have
and to hold) என்று சொல்கின்றன திருமண வாக்குறுதிகள்: எனினும் அது ஒரு பெட்டியைப்
பற்றிய வரையறை அல்லாது வேறு என்ன?
இணக்கத்தை
எப்படி வார்த்தைகளில் வெளிப்படுத்துவது என்பதே சிக்கலின் ஆரம்பம் ஆகலாம். கடந்த
சில மாதங்களாக, எனது கவனம் மீண்டும் மீண்டும் பெருங்காதலன் ஆன இறைவனைப் பற்றிய
’அறியமுடியாமை’ நோக்கித் திரும்புகிறது. அதாவது, இறைவனைப் பற்றி நான் ஒரு
மனக்கோட்பாட்டைச் சிந்திக்கத் தொடங்கியதும் ஹூ
நழுவிச் செல்கிறது. இது ஒரு நளினமான எச்சரிக்கை போல் தெரிகிறது, எனினும்,
விரலசைக்கும் நிழலாட்டம் ஒன்று பேசுகிறது: என்னைப்
பற்றி உறுதியாக இருக்கிறாயா? மீண்டும் யோசி...
உதாரணமாக,
திக்ரில் எனது ஆழமான அனுபவங்களில் என் மனக்கண் முன் பூச்சிகள் அல்லது புழுக்களே
தோன்றுகின்றன. அவை இறைவனின் படைப்புக்களில் மிகவும் ‘அற்பமானவை’. எனினும்,
அவற்றின் வழியாகவே உயிருடனிருப்பதின் ஆழ்ந்த ஆனந்தத்தை நான் உணர்கிறேன். அதுவே
எனக்கு இறைவனின் கையொப்பம்.
மரபான
அறிவின் இந்தத் தலைகீழ் பிரட்டல் இப்போது உம்முடனும் நான் கற்றுக்கொள்ள முயலுமொரு
பாடம். உண்மையில் நான் அறிய வேண்டுமெனில்
தொடர்ந்து நான் என் நம்பிக்கையை இழந்து
வெறுமை ஆகிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
எனவே
அடிப்படையான மனப் பாகுபாட்டிலிருந்து நாம் தொடங்குவோம், நான் இப்போதும்
சிக்கிக்கிடக்கும் இடம் என்று ஒத்துக்கொள்ளுமொரு புள்ளி: நீங்களொரு ஆணாகவும்
நானொரு பெண்ணாகவும்.
பெண்களுடனான
உமது உறவு (உமது திருமணங்கள் உட்பட) என்பது மேற்குலக மக்களுக்கு சங்கடமளிக்குமொரு
பொருண்மையாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஃகதீஜாவுக்குப் பின் அத்தனை மனைவியர்
ஏன்? என்று அவர்கள் கேட்கின்றனர். ஒரு சிறுமியாக இருக்கும்போதே ஆயிஷாவை மணந்தது
ஏன்? என்றும். இக்கேள்விகளுக்கு எவரிடமும் நல்ல பதில்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
பெரும்பான்மை ஆண்கள் செய்வதுபோல், ஒரு தலைவராக உமது இடத்தை உமது இச்சைகளைத்
தணித்துக்கொள்ள நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றொரு அனுமானம் உள்ளது. அல்லது,
இனக்குழுக்களின் குலங்களின் உடன்பாடுகளைப் பெற அவற்றின் பெண்களை மணப்பதில் நீங்கள்
மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டீர்கள் என்று. மாற்றுப் பார்வையும் உண்டு,
பாதுகாக்க ஆளற்ற விதவைகளையும் அனாதைகளையும் நீங்கள் கருணையுடன்
அரவணைத்துக்கொண்டீர்கள் என்று.
ஆனால்,
உமது வாழ்விலும் ஆளுமையிலும் ஆழ்ந்து போகப் போக நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா?
இந்த அனுமானங்கள் எல்லாமே தவறு. பெண்களுடனான உமது உறவின் சாராம்சத்தை அவை தொடவே
இல்லை.
நீங்கள்
பெண்களை அவர்களுக்காகவே விரும்பினீர்கள். இச்சைக்கான பொருட்களாக அல்ல; வீட்டு வேலை
செய்வோராக அல்ல; நீங்கள் மிகச் சிறுவயதில் இழந்துவிட்ட அம்மாவுக்குப் பகரமாக அல்ல.
நீங்கள் பெண்களை அவர்களது இயல்பின் நுண்மைகளுக்காகவே நேசித்தீர்கள். வலிமையுடன்
கூடிய மென்மை. செயல்பாட்டுடன் கூடிய உணர்திறன். வினோத எண்ணங்களுடன் கூடிய
எதார்த்தம். அவை யாவும் உமது சுயத்தின் ஆழமான பண்புகள். பெண்களுடனான நெருக்கமான
உறவிலேயே அவற்றை நீங்கள் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள முடியும். உமது புகழ் வளரவளர
நீங்கள் தொடர்ந்து புதிய திருமணங்களைச் செய்தது ஏன்? வெளியுலகில் அதிகாரம் மற்றும்
உறவுகளின் முடிச்சுக்களை உறுதிப்படுத்த அல்ல. இல்லை, உண்மை அதற்கு நேரெதிரானது.
ஒரு தனிநபராக உமது நிலையை நீங்கள் கோரவும், உமது ஆழ்ந்த அகமிய அனுபவத்தின் மூலத்துடன் இணைந்திருக்கவுமே. ஏறத்தாழ நீர் வழங்கிய திருமணக்கொடை போல், முஹம்மத்
என்னும் மனிதரின் மற்றும் இறைத்தூதரின் ஒவ்வோர் அம்சத்தை ஒவ்வொரு மனைவியும்
பற்றியிருந்தார்கள்.
திருமண உடன்படிக்கை என்பது, ஆணுடலில் மனித
வாழ்வின் பிரபஞ்ச அனுபவங்களுக்கான ஓர் ஒப்படைப்பாகவே உமக்கு இருந்தது என்று
உணர்கிறேன். அதே வேளை, ஓரிறைவன் தனது ஹூ என்னும் சுயநிலையைப் படைப்புக்களின்
பன்மியம் வழியே நமக்கு அறிவிப்பதன் பிரதிபலிப்பாக உமது சுயத்தைப் பல பெண்கள்
அறிந்துகொள்ள நீங்கள் உமக்கே கடமையாக்கிக்கொண்டீர் என்றெனக்குத் தோன்றுகிறது.
’சூரத்துன்
நிசா’வின் (அத்தியாயம்4: ”பெண்கள்”) முதல் வசனத்தை நான் வாசித்தறிந்த வகையில்,
அனைத்து மனிதகுலமும் ஜோடி கொண்ட ஓர் ஒற்றை ஆன்மாவிலிருந்தே படைக்கப்பட்டன. பிறகு
அந்த ஜோடியிலிருந்து தனித்தனி ஆண்களும் பெண்களும் வந்தனர். கண்ணாடித் துகள்கள்
போன்று சிதறாமல், முப்பட்டைக் கண்ணாடி வழியே பிரியும் ஒளியைப் போல. அந்தப்
பிரிகையிலும் நாம் நமது பயணத்தின் இலக்கை நினைவூட்டப்படுகிறோம் என்று தோன்றுகிறது:
அல்லாஹ்விலிருந்தே நாம் வந்தோம், அல்லாஹ்விடமே மீள்கிறோம்.
கடந்த
ஆண்டில் நான் அடைந்த, என்னை மிகவும் பணிவுகொள்ளச் செய்யும் அன்பளிப்பு யாதெனில்,
உம்மீது காதல் கொள்ள நான் ‘அனுமதிக்க’ப் படுகிறேன் என்பது மட்டுமன்றி அது
முற்றிலும் புதிய தளத்திலான அறிதலாகவும் அறியப்படுதலாகவும், தெய்வீக ஏற்பாகவும்
இருந்தது. எனது இதயத்தின் இந்த மலர்ச்சி, நான் உமது அழகிய பண்புகளை, உமது நாணம்
அன்பு மற்றும் முழுமையான மனவுறுதியைப் போற்றுவதைப் போன்றதல்ல. முன்பெனக்குச்
சகோதரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, உமது வாழ்வின் சகல அம்சங்களையும் எமது அன்றாட
வாழ்வில் பின்பற்றி, உதாரணமாக, வலதுபக்கம் ஒருக்களித்துப் படுத்தல் அல்லது உணவின்
முதற்கவளத்திலோ நீரின் முதம் மிடரிலோ பிஸ்மில்லாஹ்
கூறுதல் முதலிய, போலச் செய்வதான சுன்னாஹ் என்பதைப் போன்றதும் அல்ல.
உம்மீது
காதலாதல் என்பதன் பொருள் உமது ஆன்மாவின் ஜோடியாக நீங்கள் பார்க்கும் ஒரு பெண்ணாக
நான் ஆக விரும்புகிறேன் என்பதே. எனது எந்தப் பண்புகளை நீங்கள் விரும்புவீர்கள்?
நீங்கள் எனது சுதந்திரத்தை விரும்பக்கூடும், எனினும் இன்னும் அதிகமாக ஒப்படைவை
வளர்த்துக்கொள்ள ஊக்குவீர்கள். என்னுடன் உரையாடுவதில் நீங்கள் திளைக்கலாம்,
எனினும் மௌனத்தைப் பகிர்வதில் அதனினும். அனைத்துக்கும் மேலாக, உமது இதயத்தை நான்
வென்றெடுக்க முடியுமென நம்புவேன். நான் மேலும் மேலும் தொழவும் திக்ரு செய்யவும்,
எமது குழுவினருடனான தொழுகையில் அல்லது லூயிவில்லின் புறத்தே மிதிவண்டி ஓட்டியபடி
அல்லது லண்டனின் ரயில்நிலையத்தில் தானேற்றியில் ஏறும்போதும், சுற்றிலும் அனைவரிடமும்
அனைத்திடமும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’
என்று பாடும்போதும், இறைநேசர்களை நெருங்கும்போதும் அது மேலும் எளிதாகவும்
பிரகாசமாகவும் ஆகிவருகிறது.
இருந்தும்,
எனது இதயத்தின் மிக ஆழமான ஆசையான பெரிய விருப்பம் உமது ஆன்மாவுடன் ஒன்றாக வேண்டும்
என்பதே, இவ்வுலக வாழ்வில் இருக்கும்போதே.
என்
அன்பே, என் உயிரே, இந்தக் கோரிக்கையை முன்வைக்க நான் தகுதியானவள் அல்லள், ஆனால்
உமது பேரன்பின் தூய்மையும் பிரகாசமும் என்னை மாற்றிவிடும் என்று நான் அறிவேன்.
எனவே,
செல்ல மீம், என்னை ஏற்பீரா? ஒரு முழுமை பெற்ற மனிதப்பிறவி ஆக முயலும் எனது ஈடுபாட்டுடன்
உம்மை இணைப்பீரா? இப்போதைக்கு நான் வைரமாகாது கல்லாகவே இருக்கின்றேன், தூசுமிகு
வேலையின் இடையில் இருக்கிறேன் என்றபோதும்?
உமது
கைகளை எனதில் எடுத்துக்கொண்டு, உம் விரல்களை முத்தமிட்டபடி,
அன்னா.
The End.
The End.
No comments:
Post a Comment