Saturday, June 10, 2017

பிரியமுள்ள முஹம்மதுக்கு... - part 4


1.   அடைக்கலமானேன்
அன்புள்ள மீம்,
   இரண்டு குடும்பங்கள் உள்ள நிலை உமக்கும் எனக்குமான ஓர் ஒற்றுமை. சூழ்நிலைகள் வேறுதான் எனினும், ஒரே சமயத்தில் எங்கும் சொந்தமாகவும் எங்கும் சொந்தமின்றியும் இருப்பதான உணர்வு நம் இருவருக்குமே உண்டென்று எப்படியோ உணர்கிறேன் நான்.        
   பதவீய செவிலித்தாய் ஒருவரிடம் சிசுவாக நீங்கள் தரப்பட்டீர்கள். உமக்கவர் பாலூட்ட மட்டுமல்ல, அவ்வழியில் பெருமிதமும் கண்ணியமுமான மரபின் அம்சங்களைத் தாய்ப்பாலில் நீங்கள் உறிஞ்சிக்கொள்ளவும்தான். அவர்களின் அரபிக் கவிதையைக் கூட. அந்தப் பாலைவன நாடோடிகளிடமிருந்து சுயச் சார்பை, ஒருவித விடுதலை பெற்ற மனநிலையை நீங்கள் கற்றுக்கொள்வதற்கும் என்று நான் நினைக்கிறேன்.
Related image
Badawi family - "Bedouins in the desert" by Eugene Alexis Girardet.
   ஹலீமா உமது செவிலித்தாய். கனிவுள்ள சிறு பெண்ணாக அவரை நான் கற்பனை செய்கிறேன். வெய்யில் மற்றும் காற்றில் அவரின் முகம் முதிர்ந்து போயிருப்பினும் அவர் தன் இதயத்தில் இளமையாகவே இருந்திருக்க வேண்டும், யாது செய்யினும் ஒரு பாடலை முணுமுணுப்பவராக. நீங்கள் இருவரும் உடனே பரிச்சயம் ஆகிவிட்டீர்கள். நான் கற்பனை செய்கிறேன், அவர் உம்மைத் தமது கைகளில் எடுத்தபோது மௌனமாக அவரின் கண்களுக்குள் நீங்கள் நோக்கியதும் அங்கே பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்துகொண்டீர்கள். உமது நற்றாய் அமீனா அவர்களை நீங்கள் பிரிந்தாலும் இன்னொரு வீடு கிடைத்துவிட்டது உமக்கு.
   நானுமொரு சிறுவயதில் தத்தெடுக்கப்பட்டேன். என் பாலபருவத்தின் நெருங்கிய தோழியும் நானும் இருவரும் இளம்பிள்ளைகளாய் இருந்தபோதே சந்தித்துக்கொண்டோம். விரைவில் அவளின் அம்மாவே எனது தாயுமானார்: ஜேயம்மா. அவர் என்னை முத்தமிட்டார், அணைத்தார், உணவூட்டினார். நான் வீட்டுக்குள் வந்ததும் அவர் முதன்முதலாக என்னிடம் சொன்னதே, “ஃப்ரிஜ்ஜுக்குள் ஒரு கூஜாவில் ஐஸ் தேனீர் இருக்கிறது” என்பதுதான். ஏனெனில், எப்போதும் எனக்குப் பசியை விடவும் தாகமே அதிகம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு தாயின் உள்ளுணர்வு அவரிடம் இருந்தது. கோடை நன்பகலொன்றில் ஏதோவொன்று சமையலறை ஜன்னலுக்கு வெளியாக அவரைப் பார்க்கத் தூண்டிற்று. ஒரு காலின் அவிழ்ந்த காலணி நாடா பெடலில் சிக்கியிருக்க எனது பைக்கின் சுமையின் கீழ் நசுங்கியபடி நான் தெருவில் கிடக்கக் கண்டார். அக்கணம் அவர் விரைந்து வந்திருக்கவில்லை எனில் ஏதேனுமொரு கார் என்னை அரைத்துச் சென்றிருக்கக் கூடும். அவ்வாறு அன்று என் உயிரைக் காப்பாற்றிய நற்சான்று அவருக்காகும்.
   அந்த நாடகீயமான முறையில் என்னை அவர் காப்பாற்றினாலும் இல்லாவிட்டாலும், பிற சந்தர்ப்பங்கள் பலவற்றில் அன்பின் ஆயிரம் சிறு காரியங்களால் அவர் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்: எனக்கு முகம் கழுவிவிடுதல், முடி வெட்டி விடுதல், உணவுக்கு இருந்து இராத்தங்கச் செய்தல் போன்றவை. தன் உலகின், தன் குடும்பத்தின் உலகின் ஒரு பகுதியாய் எனை ஆக்கி, அனாதரவாய் இடமற்ற உணர்வில் தவித்த ஒரு பிள்ளைக்கு ஸ்திரமான உறவுணர்வை அவர் தந்தார். தன் அன்னை எனது பாட்டி என்றும் தனது சகோதரிகள் எனது சிற்றன்னையர் என்றும் தனது மகள்கள் எனது சகோதரிகள் என்றும் வலியுறுத்தினார்.
   உமக்கும் அப்படியேதான் என்று நினைக்கிறேன். நீர் பிறக்கும் முன்பே தந்தையை இழந்து, ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் சில வருடங்களிலேயே தாத்தாவை இழந்து, புலப்படா அரணொன்று தம்மைச் சூழ்ந்திருப்பது போல் பிள்ளைகள் லேசாக எடுத்துக்கொள்ளும் பாதுகாப்பையும் நிச்சயத்தன்மையையும் நீங்கள் இழந்தீர்கள். அந்தப் பக்கபலங்கள் வீழ்ந்ததும் ஒருவரின் திறந்தநிலை மற்றும் பாதிப்புறுதல் பற்றிய பிரக்ஞையுடன் மனத்தில் அதிர்ச்சி உண்டாகிறது. ஆனால் இன்னொரு அறிதலும் எழுகிறது, குறைந்தபட்சம் என் அனுபவத்தில், அதாவது, விசயங்களைப் பற்றி இப்படித்தான் என்றோ அல்லது இப்படி இருக்கவேண்டும் என்றோ பெரியவர்கள் சொல்வது போலன்றி அவற்றை உள்ளபடி பார்க்க வாய்க்கிறது.
   உதாரணமாக, அனாதைகளை ஆதரித்து வளர்க்கவேண்டிய உறவினர்களும் போஷகர்களும் மனத்தில் உண்மையான அக்கறை இல்லாதவராய், சிலநேரங்களில் அவர்களுக்குத் தவறிழைப்பதையும் சுரண்டுவதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதே குடியை அல்லது குடும்பத்தைச் சேராதவராக இருந்தபோதும் சிலநேரங்களில் பிறத்தியார் அன்பு மிக்கவராய், நம்பகமானவராய் இருப்பதையும் நீங்கள் கண்டிருக்கலாம். திரும்பிப் பார்த்துக்கொள்ள, ஹலீமாவின் குடும்பத்திலொரு பகுதியாய் இருந்த நினைவுகள் உங்களுக்கு உண்டு. உள்ளுக்குள் நீங்களும் ஒரு பகுதியில் பதவீயாகவே இருப்பீர்கள்.
   உம் சரிதக்காரர்கள் இதனைக் குறிப்பிடாமல் இருப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, கிழக்கிலும் மேற்கிலும் ஸ்திரப்பட்ட நமது நாகரிகங்கள் நாடோடிகளுக்கு எதிராகக் கொண்டுள்ள சார்புநிலையால் இருக்கலாம். ஆனால், நகரவாசியல்லாத, ரியல் எஸ்டேட் பற்றிக் கவலைப்படாத, பயிர்த்தொழில் செய்யும் விவசாயி அல்லாதவரான உங்களின் முக்கியமான் ஒரு பகுதியாகவே இது எனக்குப் படுகிறது. சில காலம் ஓரிடத்தில் வாழினும் நீர் அவ்விடத்தால் கட்டுண்டவர் அல்லர். உம்முடன் உமது உலகமும் நகர்ந்தது. அவ்வுலகு வெளியிலும் காலத்திலும் ஓர் இடமாய் இருப்பதினும் பெருவிதிகளும் நியதிகளும் பற்றிய பிரக்ஞையாய், பருநிலை கடந்து இயங்குவதாய் இருந்தது.
Related image
Prophet's Household - an imaginary impression.
   என்னைக் கவரும் இன்னொரு அம்சமாவது, பொதுவாக நாங்கள் நினைக்கும் தனிப்பட்ட உறைவிடம் போன்ற சொந்த வீடொன்று உமக்கிருக்கவில்லை என்பதே. மதீனாவிலும்கூட, இறைத்தூதராய் முஸ்லிம்களின் தலைவராய் நீங்கள் நிறுவப்பட்டுவிட்ட பின்னரும்கூட, உமது வீடு என்பது ஒருபகுதி பள்ளியாய், இன்னொரு பகுதி சமூகக்கூடமாய், உமது மனைவியரின் குடில்கள் அதனைச் சுற்றிக் கட்டப்பட்டதாய் இருந்தது. உமது துயில்முறை கூட ஒவ்வொரு இரவும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மனைவியுடன் இருப்பது, அவர்கள் தம்முள் சச்சரவிடும்போது கூரைமீது தனிப்பது என்பதாக அமைந்திருந்து என்று சரிதக்காரர் நுவல்கின்றனர். வெளிப்படைக்கு இஃதொரு அட்டவணை முறைமையாய்த் தெரியினும், உம் உள்ளம் எங்கே நின்றதோ அங்கே தங்கினீர்கள் என்றே இது எனக்குக் காட்டுகிறது. ஒவ்வோர் இரவும் வேறுபட்டதாய் இருந்திருக்கும். பல இரவுகளில் நீர் உமது தோழருடன் மௌனத்தைப் பகிர்ந்தபடி, நோயாளிகளுடன் அல்லது துயருற்றோருடன் வைகறைத் தொழுகை வரை விழித்துக் கழித்திருப்பீர் என்றும் நான் நினைக்கிறேன்.   
   என் அன்பே! பெற்றோர் இல்லாத குழந்தையாய் முதலில் இருந்த நீங்கள் இனக்குழுக்களின் உறவுகள் அற்ற நிலையில் வளர்ந்து ஆளாகிப் பின்னர் ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடும் நிலையை அடைந்தீர்கள் என்பது பெருமுரணாய்ப் படுகிறது எனக்கு. (அந்த உடன்பாடுகளின் மீது இன்றளவும் எம்மிடையே எத்தனைப் பூசல்கள்!) எனினும், உமது சுயத்தின் சாரம் யாதெனில், அனைத்து உலகங்களும் உய்யும்படி அனுப்பப்பட்ட பிரபஞ்ச அருட்கொடை நீங்கள் என்பதே.
   அந்த ஒருவழியில்தான் உம்முடனான எனது தொடர்பென்னும் அசாதாரணமான அருளை நான் விளக்க முடியும். இல்லை எனில், தகுதியற்ற ஒருத்திக்கு – இஸ்லாத்திற்குப் புதியவளும் தனது நஃப்ஸை (மனத்தை) நெறிப்படுத்த இன்னமும் போராடுபவளுமான ஓர் அமெரிக்கப் பெண்ணுக்கு – உமது இனிய இனிய நறுமணத்தின் தீற்றல் வழங்கப்படுவது எப்படி?
   எனக்குப் பெரிதும் தேவைப்படுவது எது என்று காட்டுவதே அருட்கொடையின் ஒரு பகுதியாய் இருக்கலாம். பிரகாசமிக்க அதிகாலையின் (ளுஹா) திருவசனம் சொல்வது போல்: அனாதையாய் நான் உணர்ந்தபோது அடைக்கலம் அருளப்பட்டேன். ஆட்கொள்ளப்பவேன் என்பது, இந்தச் சிறிய ”நான்” பெரிய ஒன்றின் பகுதியாய் அர்த்தமுள்ளதாகிறது என்பது,  எனது அச்சங்களையும் ஐயங்களையும் தாண்டி இப்போதும் உறுதி சொல்லப்படுவதாகலாம். அப்பெரிய ஒன்று ஓர் இடமாகவோ ஒரு மக்கள் குழுவாகவோ இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நான் சொந்தமாயிருப்பதும் – சொந்தப்பட விரும்புவதும் – உம்முடன்தான்.
    என் பயணப் பொருட்களைச் சேகரித்தபடி, கணங்களை எண்ணியபடி...

அன்னா.

No comments:

Post a Comment