ஆனந்த
கெ. குமாரஸ்வாமி
(இந்தியக்கலையை
மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் குறீட்டியலாளரும் தத்துவவாதியுமான இலங்கைத் தமிழர்
ஆனந்த கெண்டிஷ் குமாரஸ்வாமி (1877-1947) எழுதிய Symbols என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)
குறியீடுகள் (Symbols) மற்றும் குறிகள் (Signs), அவை இயல், இசை, நாடகம்
அல்லது வார்ப்பு, எதுவாக இருப்பினும் தகவல் தொடர்பிற்கான வழியாகும். குறியீடுகள் கருத்துக்களைச்
சுட்டுகின்றன; குறிகள் பொருட்களைச் சுட்டுகின்றன. சூழலுக்கேற்ப ஒரே சொல் குறியீடாக
அல்லது குறியாக இருக்கும். உதாரணமாக, சிலுவை என்பது ஒரு குறியீடாக பிரபஞ்சத்தின் கட்டமைப்பை
உணர்த்தும். அச்சொல்லே குறுக்குச் சாலைகளை உணர்த்துகையில் குறியாகும்.
குறியீடுகளும் குறிகளும் அவற்றின் உள்ளார்ந்த தன்மையால் இயற்கையானது
ஆகவோ அல்லது வழமையானதாகவோ (தன்னிச்சையானது, தற்செயலானது), மரபானதாகவோ அல்லது தனிப்பட்டதாகவோ
இருக்கலாம். ஆபாசப் பேச்சிலும், யதார்த்த அல்லது புலனாகாக் கலையிலும் அறிகுறியாகப்
பயன்படுத்தப்படும் குறிகளின் மொழி பற்றி இங்கே நாம் கவனம் கொள்ளப் போவதில்லை. “புலனாகாக்
கலை” என்று நான் சுட்டுவது கட்புலனாகும் வெளிப்பாட்டினை முனைப்புடன் தவிர்க்கின்ற நவீனக்
கலையைத்தான். அது, மரபின் இயற்கையான குறியீட்டு மொழிபாக இருக்கும் “முதன்மைக் கலை”யை
விட்டும் வேறுபட்டதாகும்.
மரபுக் கலையின் மொழிபு – மறை, காப்பியம், நாட்டாரியல், சடங்குகள் மற்றும்
அவை சார்ந்த அனைத்து கைவினைகள் – குறியீடானவை. தனிநபர் கண்டுபிடிப்பாகவோ கூட்டு உடன்பாடாகவோ
வெறும் வாடிக்கையாகவோ இல்லாத நிலையில் இயற்கையான குறியீடுகளின் மொழிபான மரபுக் கலை
என்பதொரு பிரபஞ்ச மொழியாகும். தொடர்புறுத்த வேண்டிய கருத்து ஒன்றின் பிரதியாகு தோற்றத்தை
ஒலி / நிறம் / வடிவம் / சைகை ஆகியவற்றுள் ஒன்றாகப் பருவுருவாக்குவதே குறியீடாகும்.
அந்தப் பிரதியாகு தோற்றமே கலைப் படைப்பிற்கான முதற் காரணமாய் இருக்கும். குறியீடு இருப்பது
அது சுட்டும் கருத்துக்காகவே அன்றித் தனக்காக அல்ல. அசல் தோற்றம் எனபது அது சுட்டுவதன்
குறியீடாகவோ அல்லது வெறுமனே ஒரு புலப்படா வடிவமாகவோ, ரசனைக்கேற்ப விரும்பப்படுவதாய்
அல்லது வெறுக்கப்படுவதாய் இருக்கும்.
பெரும்பகுதி நவீன அழகியல் அனுமானிப்பது யாதெனில், கலை என்பது முழுவதும்
அத்தகைய புலனாகாத வடிவங்களைக் கொண்டுள்ளது அல்லது கொண்டிருக்க வேண்டும்; மேலும், தக்க
உணர்ச்சி விளைவுகளிலேயே கலையைப் பாராட்டுவது அமைந்துள்ளது அல்லது அமைய வேண்டும் என்பதாம்.
மேலும் அது அனுமானித்துக் கொள்வது யாதெனில், மரபுக் கலைப் படைப்புக்களில் ஏதேனும் நிலைத்த
மதிப்பிருந்தால் அதுவும் இப்படித்தான் என்பதும், அம்மதிப்பு அவற்றின் படிமவியலுக்கும்
அர்த்தத்திற்கும் சம்பந்தமற்றது என்பதுமாம்.
தொன்மை, கீழை அல்லது வெகுஜனக் கலைகளில் உள்ள அழகியற் கூறுகளை மட்டுமே
நான் தேர்ந்து கொள்வேன் என்று கூறும் உரிமை நமக்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால்,
நாம் அவ்வாறு செய்தால், அத்தகைய குறுகிய பார்வையிலிருந்து கலையின் வரலாற்றை நம்மால்
அறிந்து கொள்ள அல்லது எழுதிவிட இயலும் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாதிருக்க வேண்டும்.
ஒரு நடன
வரிசை அல்லது தேவாலயத்திலான ஒரு திரள் வழிபாடு அல்லது ஒரு படிமம் (icon) போன்ற ஒரு
கோர்வையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் பகுதிகளுக்கிடையிலான தர்க்க உறவை நாம்
விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு சொற்றொடரை நாம் விளங்க வேண்டுமெனில் அதன் இனிய
ஓசைகளை நாம் வியந்தால் மட்டும் போதாது, ஆனால் அதன் தனித்தனிச் சொற்களின் அர்த்தங்களுடனும்
அவற்றின் சேர்மானங்களின் தர்க்கத்துடனும் பரிச்சயம் கொண்டிருக்க வேண்டும். ஒரு வெறும்
’கலை நேசன்’ என்பவன் தனது கூட்டினை தன் விருப்பத்தைத் தூண்டும் எப்பொருளைக் கொண்டும்
கட்டுவதும் அவ்வேலையின் அழகியல் அனுபவத்துடன் திருப்தி அடைவதுமான காக்கையை விடவும்
மேலானவன் அல்லன்.
இதுவரை
சொன்னதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம், நவீனக் கலையில் ஒன்றுமில்லை அல்லது கலைஞனின்
தனிப்பட்ட ஆளுமையை அன்றி வேறொன்றும் இல்லை என்றபோதும் அழகியல் என்னும் மேற்பரப்பிற்கு
அப்பால், மரபுக் கலைகளின் உருவாக்கம் மற்றும் துய்ப்பிற்கான கோட்பாட்டின்படி, அழகிற்கான
அழைப்பு புலன்களுக்கானதல்ல, மாறாகப் புலன்களின் வழியே அறிவிற்கானது. இங்கே, “அழகென்பது
அறிவாற்றலுக்குரியது”, அறியவும் புரிந்துகொள்ளவும் வேண்டுவது ஒரு “ஸ்தூலமல்லாக் கருத்து”
(ஹெர்மிஸ்), “வண்ணங்களில் அல்லாத ஒரு படம்” (லங்காவதார சூத்ரம்), “வினோத வரிகளின் திரைக்குப்
பின்னே தன்னை மறைத்திருக்குமொரு கொள்கை” (தாந்தே), “உருவத்தை அல்ல, அதன் மூலப் படிவத்தை”
(தூய பேசில்), “பொருள்கள் எப்படி என்பதை அவற்றின் கருத்தினைக் கொண்டே நாம் தீர்மானிக்கிறோம்”
(தூய அகஸ்டின்).
கலைப்
படைப்புக்கள், தூய தாமஸ் சொல்வது போல், நுண்ணறிவில் கருக்கொள்பவை. எனவே, பிளேட்டொவின்
கண்ணோட்டத்தில் சொல்வதெனில், இன்னும் ”மறக்காத” நபர்களுக்குக் குறியீடுகளும் கோட்பாடுகளும்
யாதொரு பயனும் அளிக்காது என்பது உறுதியாகிறது. பிளாட்டினஸ் சொல்வது போல் ஜியூஸும் சரி
விண்மீன்களும் சரி, நினைவு கொள்வதுமில்லை கற்பதுமில்லை; “நினைவு என்பது மறந்தோருக்கே”,
அதாவது, “வாழ்வென்பது உறக்கமும் மறதியும்” ஆகிப்போன நமக்கு.
மனிதன்
ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டதும்தான் குறியீடுகள் மற்றும் குறியீட்டுச்
சடங்குகளுக்கான தேவை எழுகிறது. அவற்றின் வழி, அறிவும் தியானமுமான ஆன்மிக நிலையிலிருந்து
பருப்பொருளுலக ஸ்தூல நிலைக்கு அவன் இறக்கப்பட்டதன் பிற்கால கட்டங்களில் அவனுக்கு ஆதி
நிலையை நினைவுறுத்தலாகும். குறியீடுகள் முதன்முதலில் தேவைப்பட்ட மக்களை விடவும் நாம்
இன்னும் அதிகமாக ”மறந்து” விட்டோம் என்பது நிச்சயம். நிலையற்றதை உவமையாகக் கொண்டு நிலையானதை
அனுமானிக்கும் தேவை அவர்களினும் நமக்கதிகம். சடங்குகள் தேவையற்ற மேனிலையில் இருக்கிறோம்
என்றும் சத்தியத்தை நேரடியாக அறிய வல்லோம் என்றும் நாம் கோருவது எவ்வளவு பிழை என்பதை
இது காட்டும். நாமின்று வெறும் “அணிகலன்கள்” எனக் காணும் மரபுக் கலைக் கூறுகள் எல்லாம்
ஆரம்பக் காலத்தில் மீப்புல வேடர் பயணிக்கும் வழியின் குறிப்பலகைகளாய் அல்லது மறைந்திருக்கும்
பேரொளியின் சன்னக் கீற்றாய் நிறுவப்பட்டவை.
இந்த
சூக்கும வடிவங்களில் ஒருவர் எத்தனை தூரம் தொல் காலத்திற்குச் செல்லவியலுமோ, அல்லது
அவற்றைத் தற்கால ’மூடநம்பிக்கை’களில், வேளாண் சடங்குகளில், நாட்டார் கலைக் கூறுகளில்
காணவியலுமோ, அத்தனைக்கு அத்தனை அவற்றில் கட்புலனாகும் வடிவத்திற்கும் கட்புலனாகா செய்திக்கும்
இடையிலான துருவ சமநிலையைக் கண்டுகொள்ள முடியும். ஆனால், ஆண்ட்ரியா சொல்வது போல், இன்று
நாம் ”கலை வடிவங்கள்” என்று குறிப்பிடும் அவையெல்லாம் நம் வரை இறங்கி வந்த காலங்களில்
தம் உள்ளீட்டைப் பெரிதும் இழந்து வந்துள்ளன, ”நாகரிக” முன்னகர்வில் அவை மேலும் மேலும்
உருச்சிதைந்து வந்துள்ளன. நாம் முன்பு குறிப்பிட்ட காக்கையைப் போல், ஏதோ அழகியல் உணர்வுதான்
அவற்றை உருவாக்கிற்று என்பதாக ஆக்கிவிட்டோம். (மொ.பெ.குறிப்பு: ஆன்மிக உள்ளுணர்வும் மீப்புலனும் கொண்டிருந்த நம் பித்ருக்களை
வெறும் காக்கைகளாகப் பார்க்கிறோம்!).
Acanthus in Greek Column Architecture
அர்த்தமும்
நோக்கமும் மறக்கப்பட்ட பின்னர் அல்லது சாதகர்களால் மட்டுமே நினைவுகூரப்படும் நிலையில்,
”கலை”யுடன் நாம் சம்மந்தப்படுத்திப் பார்க்கும் அலங்கார மதிப்புக்களை மட்டுமே குறியீடுகள்
தக்கவைத்துக் கொள்கின்றன. இதற்கும் மேல், கலை வடிவத்திற்கு அந்த அலங்காரப் பண்பைத்
தவிர வேறு மதிப்புக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதையே நாம் மறுக்கின்றோம். கலை
வடிவம் என்பது இயற்கை அவதானத்திலிருந்தே உண்டாகியிருக்க முடியும் என்று நாம் எடுத்துக்கொண்டோம்.
அதற்கு முன்பிருந்தேகூட வளர்ச்சிக்கேற்ப அதனை விமர்சித்து (”அது அவர்கள் உடற்கூறு பற்றி
அறிவதற்கு முன்” என்பது போல், “அவர்கள் புரிந்துகொண்ட வகையில்” என்பது போல்), அவற்றின்
குறைகளைப் பட்டியலிட்டோம். தாமரைப் பனையம் (Lotus Palmette) கொண்டு அழகிய அகாந்தஸ்
(முட்செடிவகை) இலை வடிவம் செய்யப்பட்டபோது அதனை ஹெல்லனிய கிரேக்கர்கள் இப்படித்தான்
விமர்சித்தனர். ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் அப்படித்தான் படிமவியல் முறையிலான பழங்கலை
மீது “இயற்கைக்கு உண்மையாய் இருத்தல்” என்னும் கொள்கையைச் சுமத்திற்று. அதே பார்வைக்
கோணத்தில்தான் நாம் காப்பியங்களையும் தொன்மங்களையும் அர்த்தப்படுத்திப் பார்க்கிறோம்,
காப்பியம் நுவலும் மீவியற்கை அற்புதங்களை ஏதோ நிகழ்வுகளைச் சுவைபடச் சொல்வதற்காகக்
கவிஞன் செய்து வைத்திருக்கும் அபத்தமான அர்த்தமற்ற முயற்சி என்று எண்ணுகிறோம். அவற்றிடம்
நாம் ”வரலாறு” வேண்டுமெனக் கேட்கிறோம். மிகவும் எளிதான அறியாமையான வகையில் அதன் மீவியற்கை
மற்றும் அமானுஷ்யக் கூறுகளை எல்லாம் அகற்றித் தள்ளிவிட்டு அதிலிருந்து ஒரு வரலாற்றுக்
கருவை உருவியெடுக்க முயல்கிறோம்.
தொன்மம்
என்பதொரு முழுமை, அதில் பொதிந்திருக்கும் எதார்த்தத் தகவல்களைப் போன்றே அதன் அற்புதக்
கூறுகளும் ஒருங்கிணைந்த பகுதிகள்தாம் என்பதை நாம் உணர்வதேயில்லை. அவை வரலாற்று நிகழ்வுகளாய்
இருப்பதற்கான சாத்தியங்கள் அலல்து அசாத்தியங்கள் என்பதற்கப்பால் அந்த அற்புதக்கூறுகள்
அனைத்துக்கும் கராரான ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்வதில்லை.
No comments:
Post a Comment