பூமாலை
முடிவிலியின் வரம்புருவம்:
கவிதையனைத்தின் இயல்பு இது;
மனித வேலைகள் அனைத்தும்
அதனதன் எல்லை நோக்கிச் செல்கின்றன
சொர்க்கத்திலான அதன் மூலப்படிவம் தீர்வதேயில்லை
அழகின், கலையின் நோக்கம் என்ன?
ஆழ்மனதிற்கான வழிகாட்டல்
விண்ணிலிருந்து வந்ததொரு பறவையின் பாடல்
உலகமொரு கனவாய் இருந்தது
அந்தப் பாடலாய் இருந்தேன் நான்
painting by Frithjof Schuon
நினைவுகொள்
சொற்ப நம்பிக்கையின் நெஞ்சங்களே!
ஒருபோதும் மறவாதீர்
தூதர்களும் ஞானியரும் நல்லோரும் சொன்னதை:
இறைவனை நினைப்பீர், அவன் உம்மை நினைப்பான்
இதனினும் சிறந்ததாய் நாம் செய்யத்தக்கது
பூமியில் பிறிதொன்றில்லை
கீழெனினும் நாம் வெட்கப்படத் தேவையில்லை
இறைவன் நம்மை ஆசித்தான்
தான் பெயரிடப்பட வேண்டியிருந்தது அவனுக்கு
சத்தியம்
அழகில் உள்ளது சத்தியத்தின் பிரகாசம்
சத்தியத்தை அறிந்தால் அழகையும் அறிவோம்
அழகில் நன்மையைக் காண்கிறோம் எனில்
தேவையானதனைத்தும் புரிந்துகொள்கிறது உயிர்
நம் இம்மை மொழியின் வார்த்தைகள் பலமற்றிருக்கலாம்
எனினும் உண்மை சக்தி மிக்கது
விண்ணின் இதயம் கொண்டு பேசுகிறோம் நாம்
வாழ்வின் அந்தரங்கக் கடமைக்குப் பாதை காட்ட
”அல்லாஹ் அழகன்; அவன் அழகை விரும்புகிறான்”
நாம் பார்க்கவும் கேட்கவுமான பிரகாசம் ஒன்றுளது
அதன் கண்ணாடியாக நாமே இருக்கிறோம்
பாதை
நம் ஆழ்மையத்தில் உறைகிறது ஆத்மா
எனவே சொல்கிறார்கள்: நீ நினது தெய்வீகம் அறி
எனினும் அவர்கள் மறந்து போகின்றனர்:
இறைவனின் உதவி இன்றி நமக்கு விவேகமில்லை
இதைப் புறக்கணித்து வழி தவறுவோர் பலர்
வான் கருணை கொண்டு மட்டுமே வழி அடைகிறோம்
நாம்
நடனம்
புனிதப் பாடலின் மந்திர சக்தி
தொலைவுக்கு ஒருவர் கேட்கும் பறையொலி
விண்மீன்களின் அசைவுகள் நடனமுறுகின்றன
கோளங்களின் தீராத் தீரா இசை
காணப்படவும் கேட்கப்படவும் வேண்டுகிறது
நம் உள்ளார்ந்த உண்மை
நடனமென்பது நம் ஆழ்ந்த இயல்பும் அதன் பேச்சும்
ஆத்மாவின் மொழியைக் காட்டி நிற்கிறது நம் தேகம்
சிந்தனை தீண்டவியலாத ஒன்றைக் கைவசமாக்கும்
அது
இயற்கையின் அகவெளியில் தோன்றுகிறது நடனம்
அங்கிருந்து இங்கே வந்திருந்து
மீண்டும் இதயத்திற்கு மீள்கிறது
மிருகங்கள்
மிருகங்கள் கிடைமட்டமாயுள்ளன
அவற்றின் தாயகம் இப்பூமியன்றி வேறில்லையால்
மனிதனின் தோரணையோ செங்குத்து
ஈடேற்றம் தேடுவதில் சுயேச்சை
அவனின் மதிப்பைக் காட்டும்
விலங்குகள் சிலவற்றுக்குண்டு மேன்மை
அவற்றின் குறியீட்டு அர்த்தம் வாழ்கிறது அவற்றில்
சீர்கெட்ட மனிதனினும் உயர்ந்தவைதாம் அவை
அவற்றின் சாத்தியங்கள் சொற்பமெனும் போதும்
எப்படைப்பை அணுகினும் பணிவாய் இரு
ஒரு விலங்கு நின் புனிதக் கதவாய் இருக்கக்கூடும்
மேன்மையானதொரு செடியை, ஒரு கல்லை
ஒருபோதும் உதாசீனப்படுத்தாதே
இறைவனின் புனித விதானத்திலிருந்து
அவை சேதி கொண்டு வருகின்றன
கன்னிமை
பூமியில் எப்போதும் மனிதனே அரசன் எனினும்
படைப்பே அவனின் தாயும் அரசியுமாம்
எனவே இப்பூமியிடமிருந்து உன் வாழ்வை எடுத்துக்கொள்
மட கர்வத்துடன் அல்லாது
ஒரு பிரார்த்தனை சொல்லி
இறைவனை அஞ்சுகிறாய் எனில்
அவனின் புனித நிழலுக்கு மதிப்பளி
படைத்தவனை நேசிக்கிறா நீ
அவன் படைத்தவற்றையும் நேசி
இரை பொருட்டு பிரார்த்திக்கட்டும் வேட்டுவன்
அதன் மூலப்படிவம் வழங்கியுள்ளது அதனை
மௌனம்
நிம்மதியில்லாப் பொருள்களிடம்
எப்படி நிம்மதியைப் பெறமுடியும் நாம்?
விளையாட்டிலும் கனவுகளிலும்
தொத்திக்கொண்டிருக்கும் ஆசை என்ன?
ஆனந்தம் வேண்டுமெனில் கண்களை மூடு
மௌனம் ஸ்வர்ணம்
சாந்தி ஸ்வர்க்கம்
சுமை உணரப்படுவதில்லை; கூச்சல் கேட்கப்படுவதில்லை
எனினும் இந்த வெறுமையில்
இறைவனின் இருப்பும் அவனது வார்த்தையும்
நதி
மூலமற்றது நதியின் தொடக்கம்
மலையின் அறியா நிலத்தில் எழுந்து
முடிவற்றதைத் தேடுகின்றது அது
ஞானியின் இதயமும் அதுபோல்:
நதி பாய்கிறது
அதன் முடிவு ஒருபோதும்
கண்டடையப்படுவதில்லை
மலையாயினும் கடலாயினும்
நதியின் பாடலை ஒருபோதும்
கட்டுறுத்த முடியாது
இறைவனிடமிருந்து இறைவனிடம்
பாய்கிறது அன்பு
வடிவங்களுக்கு முடிவுண்டு
ஆத்மா காலமற்றது
ரெஜினா கொய்லி
குறியீட்டினும் மேல் நீ
இருதயம் போலும் இரத்தம் போலும்
என் அருகிலிருப்பவள் நீ
என்னை வாழச் செய்யும்,
தூய்மையாக்கும், அறிவூட்டும்
காற்று நீ
சுவனத்தின் இனிய மென் காற்று நீ
நின்னை விவரிக்கும் சொற்களினும் அதிகம் நீ
நின் புகழில் யாம் பாடும் அனைத்து கீதங்களினும்
அதிகம் நீ
மதுவை இறைவன் படைக்கும் முன்பே
நினதாயிருந்தது என் பரவசம்
(குறிப்பு: ரெஜினா கொய்லி
(’சொர்க்கத்தின் அரசி’) என்பது இயேசுவின் அன்னை கன்னி மர்யம் (அலை) அவர்களின் மீது
லத்தீன் மொழியில் இயற்றப்பட்ட ஒரு இசைப்பாடலின் பெயராகும்.)
லைலா
கரிய ஆழ்ந்த மௌன இரவுதான் அவள்
எனினும் பேரழகி, அற்புதக் காட்சி
பேராசைக்காரரால் ஒருபோதும் பார்க்கப்பட மாட்டாதவள்
அவளின் ஒப்பற்ற தேகம் திரைக்குப் பின்
மறைந்துள்ளது
சூரியனைப் போலும் அவளின் முலைகள்
கிழக்கிலும் மேற்கிலும்
பயணிக்கு அடைக்கலமும் ஓய்வுமாகும் அவை
அவனுக்கு இன்பமும் நிம்மதியும் தருகிறாள்
மென்னுதடுகளால்
வளைந்தாடும் இடையின் பரவசத்தால்
அலை
நம்மால் மாற்றப்படவும் கூடாதவுமான
விஷயங்கள் உள
நமது எழுதப்பட்ட விதியை ஏற்றுக்கொள்வோம்
இறைவனின் கருணையில் தழும்பேதுமில்லை
ஆத்மாவின் உள்ளார்ந்த ஓசை தூய பேரின்பம்
இஃதறிய வேண்டும் நாம்
நம்பிக்கை என்பது பொறுமையாமால்
நம்பிக்கை காத்திருக்கும்
கருணையின் ரகசியமும் வழியும் அறிந்தவன்
பேரன்பால் தன் இதயத்தின் மையத்தில்
இறைவனின் கரையை நோக்கிச் செல்லுமொரு
அலையாய் மாறியவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன்
to be continued...
very nice....
ReplyDelete