காலம்
இவ்வுலகை இயக்கிச் செல்லும்
கண்டிப்பும் குரூரமுமான தேவையின் நியதிகளை
பேரறிவு கொண்டோரும்கூட மாற்றிவிட முடியாது
வாழ்க்கை ஓர் அளவிடப்பட்ட கனவு
காலம் ஒரு குளிர்ந்த நித்யத்தின் இரவு
”நான் கறுப்பாய் இருக்கலாம்
இருந்தும் அழகாய் இருக்கிறேன்”
கடு விதியினுள் உள்ளன
அன்பும் விடுதலையும் காக்கும் கருணையும்
ஏனெனில், சுயத்தின் இதயம்
ஆனந்தமும் சாந்தமும் அம்ருதமுமாய் இருக்கிறது
திருநாமம்
நின் பெயர்
மதுவும் தேனுமாம்
எமக்குப் புனித வழியும் விதியும்
வார்க்குமொரு
தீம்பாடலுமாம்
பேசுவோன் யார்? சொல் எது?
சாஸ்வதம்
கேட்டிருந்த பாட்டு எங்கே?
கனிவும் அருளுமான விண்ணிலிருந்து வருகிறது
எமக்கு விடுதலை நல்கும் வார்த்தை
இத்தனை உயர்ந்த
பரிசு பற்றி வியப்படைகிறோம்
உண்மை வெகு தூரத்திலில்லை
இருப்பதும் யாமுமாய்
இருக்கிறது நின் பெயர்
"Pneumatic" by fritjof schuon
விடுதலை
இம்மண்ணுலகு ஒரு சோகமென்று உணர்கிறாய் நீ
இத்துயர் மீது புலம்பாதே
பிரபஞ்சம்
தீதென்று சொல்லற்க
மண்ணிழல் ஒவ்வொன்றிற்கும் முடிவு உண்டு
எனினும்,
பொருட்களின்
உள்ளார்ந்த ஆனந்தம் முடிவற்றது
பாரமாய் இருக்கலாம் வாழ்வு
எனினும்,
ஆதமாவிற்குச் சிறகுகளுண்டு
இவ்வுலகின் இரட்டை இயல்பை நோக்கு
ஒரு பக்கம்
அது இரும்பு, மறுபக்கம் தங்கம்
நின் அகத்தின் பேரானந்த இயல்பைக் கண்டிரு
பிறகு நீ அறிவாய்
இறைவன் அதைத் தூயதாய்ப் படைத்த நிலை
ஹகீகத்
வடிவம் மெய்யாய் இருக்கலாம்
ஆனால், உண்மை
ஒருபோதும் வடிவமன்று
மெய்ம்மை தனது ஆயிரம் திரைகளுடன் ஆடுகிறாள்
அவ்வழியில், தீதுவிட்டுச் சகலரையும் காத்து
அறிவோர்க்கு மட்டும் தன் அழகினைக் காட்டுகிறாள்
அழகின் இயல்பு விடுதலை செய்தல்
ரகசியக் கருணை இரவாகும்
ஏனெனில், பகலென்பது உலகின் கூடம்
உண்மை சார்பற்றது
எனினும், அதன் ஒளிக்கீற்று
இனிமையும் பிரியமுமாம்
bawa muhyuddin qadiri
ஜமால்
அழகு நமது, நாம் இறைவனுக்கு உரியோமால்
புறத்திருந்து அது அகத்துள் பாயட்டும்
இறைவனிடமிருந்து வருவது
இறைவனிடமே நம்மை மீட்டுச் செல்ல வேண்டும்
அழகு இவ்வுலகின் கலை அல்ல
அழகில் சத்தியம் காண்பாய் எனில் எல்லாம்
நலம்
தன்னலமற்ற அன்பே தருகிறது செம்மை
துய்ப்பினை மட்டுமே கருதுதல் நரகிற்கு உய்க்கின்றது
இறைவனை நேசி, அழகு சொர்க்கத்திற்கு இட்டுச்
செல்லும்
உலகின் நன்மையிலும் உண்டு தூய நன்மையின் சாயல்
சாரம் நோக்கிட வடிவம் பொலியும்
சத்தியக் காதலில் உள்ளது ஒரு ரகசிய மரணம்
மதுவை அருந்தும் முன் இறைவனில் மரணித்துவிடு
கேள்விகள்
நம் அற்பச் சிந்தனைக்கு எட்டாதன பலவுண்டு
வெளியின் முடிவின்மையை
கிரகிக்க இயலவில்லை அதற்கு
நாம் கேட்கக்கூடும்:
பிறகு ஏனிந்த உதவாக்கறை மனம்?
அதன் நோக்கங்கள் என்ன?
மூளையின் கவலைகள் எவை?
இதயத்தின் அழிவற்ற முகம் கொண்டு ஞானி பார்க்கிறார்
மாயையின் முகத்திரையால் அவரின் மனம்
ஒருபோதும் சஞ்சலமுறுவதில்லை
முடிவிலி என்பதென்ன? இடவெளி என்பதென்ன?
அனைத்தும் இறைவனின் அத்தாட்சிகள்
கேள்வி கேட்டல் துற
புதிர்
எண்களின், காலத்தின், இடத்தின்
சாத்தியங்களின்
முடிவற்ற தன்மை
மனித மூளைகளுக்கோர் பாதாளம்
அவற்றில் அவை இயைபேதும் காண்பதில்லை
எனினும், அது கடவுளின் அத்தாட்சி
உள்ளமையின் சாட்சி
மாயையின் பனிமூட்டத்திற்கப்பால்
சத்தியம் என்பது இல்லை எனில்
காலமும் இடமும் இருந்திருக்காது ஒருபோதும்
லீலை
மெல்லிசை இன்றி உண்மை இல்லை
உண்மை இன்றி இசையும் இல்லை
இப்பிரபஞ்சமே ஒரு நூல்
கடின எதார்த்தங்களுடன் கவித்துவம் பின்னப்பட்டது
நின் மனதில் துலங்குமொரு உண்மை எனில்
அதன் நிரூபணத்தின் இசையைக் கேட்கிறாய்
நீ
விதி என்பதை ஒருகணம் பார்த்தால்
இறையருள் இல்லாமல் நீதி இல்லை
உள்ளமை எப்போதும் ஒத்திசைவே நயக்கிறது
விதிகளும் கருணைகளுமான அதன் லீலை ஓய்வதேயில்லை
வாழ்க்கை தரலாம் நமக்கு
சிலநேரம் சொற்பமாகவும்
சிலநேரம் அபரிதமாகவும்
தூய சுயத்தின் ஆனந்தமே நாமாய பொருள்
வேதாந்தம்
பிரம்மமும் மாயையும்: இதுவே அறியப்பட்டுள்ளது
பிரம்மத்தில் மாயை: ஏனெனில் அவன் மறைந்திருந்தான்
அவனின் மௌனத்தில் அவன் வார்த்தை ஆனான்
மாயை மட்டும்? அப்படிக் கேள்விப்பட்டதில்லை
ஒருபோதும்
மாயையில் பிரம்மம்: ஏனெனில் அவன் தனது கருணையை
மனிதனிலும் வானவரிலும் வெளிப்படுத்துகிறான்
பிரம்மம் மட்டும்: “நானெதுவோ அதுவே நான்”
முதலில் மௌனம், பின்னர் வார்த்தை
பிரம்ம சத்யம்
விஷயம்
ஒரு ஞானி சொன்னார்:
இறைவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை
அவன் இனியதும் கைப்பதும் உஷ்ணமும்
குளிர்ச்சியுமான பழங்களைச் செய்கிறான்
இறைவனுக்கு எல்லையில்லை,
இந்த விஷயம் விடுபட்டுள்ளது,
எனவே அவன் அனுமதிக்கிறான்
வெறுமையும் இருப்பதற்கு!
இறைவனை விளக்கும்போது
எளிமைப்படுத்திவிடாதே
அவனின் சாத்தியங்கள் விசாலமானவை
அது ஏனென்று அறியாய் நீ
இல்லாமை உள்ளமையின் ஆடையை அணிகிறது
இதுவே உலகின் விதி
அபத்தமும் இருக்கத்தான் வேண்டும்
இறைவன் மிகப் பெரியவன்!
வெளி
வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு
அவற்றின் ரகசியங்கள் நம் இதயத்தில்
உச்சம் தாழ்வு ஆன்மா பூமி எல்லாம் நாம்
தூய்மை அன்பு வலிமை மற்றும் அமைதி
பிரபஞ்ச அமைப்பிலுள்ள ஒவ்வொரு மதிப்பும்
நம் ஆன்மாவினுள்ளும் அப்படியேதான்
இடவெளியின் ஒவ்வொரு கோணமும் புள்ளியும்
தெய்வீகப் பிரபஞ்சப் பேரழகின் முகம் காட்டுகிறது
சாஸ்வத ஞானத்தின் அழைப்பைக் கேட்போம்:
நிஜமாக இரு, நீயே எல்லாம்
எனக்குச் சொல்
மலையுச்சியை, அதன் சாந்த மௌனத்தை
அதன் தூய்மையை
நீ நேசித்தது ஏனென்று எனக்குச் சொல்
உன்னிடம் சொல்வேன் நான்:
நமது ஆத்மாவின் நிம்மதி இறைவனில்
சிந்தனைகளின் இரைச்சலைக் கடந்த அமைதியில்
கிசுகிசுக்கும் பெருங்காட்டின் ரகசியத்தை
அதன் புனிதத்தை, இருண்ட பாதுகாப்பை
நீ நேசித்தது ஏனென்று எனக்குச் சொல்
உன்னிடம் சொல்வேன் நான்
ஒன்றாதலே நமது நிலைத்த ஆனந்தம்
நம் இதயத்தின் ஆழத்திலான காதல்
நம் சுயத்தின் புதிர்மைக்குள் மூழ்கி
நானெதுவோ அதனுடன் நீயெதுவோ அதனுடன்
கலந்து ஒன்றாகிப் போதல்
to be continued...
No comments:
Post a Comment