Wednesday, August 2, 2017

ஒரு சூஃபியின் டைரி - 4


#26 இறைப் பிரசன்னத்தில் இறைத்தூதர்களுடன்
      ஓரிரவு இறைப் பிரசன்னத்தினுள் நுழைந்து சத்தியப் பரம்பொருளை அவனது மேன்மை மற்றும் மாட்சிமையிற் கண்டேன். பிரசன்னத்தில் நான் ஆதம், நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் நமது இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) ஆகியோரைக் கண்டேன். தூய நெருக்கத்தின் இடத்தை நான் அடைந்தேன். அவர்கள் என் மேல் இறங்கினர். பிறகெனக்கவன் அத்தகைய சன்மானங்களை வழங்கினான், படைப்புக்கள் முழுவதும் அவற்றிலொரு வார்த்தையைக் கேட்கும் எனில், மறைவின் திரைகளும் ஆட்சியுலகு மற்றும் வானவருலகின் மூடல்களும் தரும் துயரத்தில் அவை மரித்துப் போயிருக்கும். கடைசியில் நான் உலகம் மற்றும் படைப்பை விட்டும் கிளம்பினேன்.

Image result for prophets

#26 பூமிக்குக் கீழே இறை விதானம்
      நான் என்னை பூமிக்குக் கீழே, ஒளியின் ஆகாசத்தில் கண்டேன். சத்தியப் பரம்பொருள் (அவனின் வல்லமை பெரிது!) அங்கென்னிடம் தோன்றினான். நான் சொன்னேன், “என் இறைவா! உன்னை நான் ஒவ்வொரு மேலுக்கும் மேலே தேடினேன். ஆனால் உன்னை நான் இதோ பூமிக்குக் கீழே இவ்வுலகில் காண்கின்றேனே.” அதற்கவன் நான் புரிந்துகொள்ளாத ஏதொவொன்று செய்தான். பூமிக்குக் கீழே அர்ஷ் என்னும் இறைவிதானத்தை அவனது கையில் நான் கண்டேன், பெரும் பாலைவனத்திலொரு கடுகு விதை கிடப்பதைப் போல. அவன் சொன்னான், “பூமியையும் அதிலுள்ளவற்றையும் நான் மாற்றுவேன். தற்காலிகமானது எதுவும் என்னை பாதிக்காது. சமயச் சழக்கரின் கற்பனைகளையும் குறியீட்டாளர்களின் சங்கேகதங்களையும் கடந்தவன் நான்.” இறைவன் அனைத்து இடங்களையும் ஒப்புவமைகளையும் கடந்தவன். இந்தத் திரைநீக்கங்கள் எல்லாம் இறைஞானியரின் அகநிலைகளின் கோட்பாடுகள் மற்றும் அவர்களது அடைதல்களின் மதிப்பீடுகளைப் பொருத்தவையே.

#28 செங்குருதிச் சாக்கடைகள்
      அதி அப்பால் ஆன சத்திய இறைவனை ஓரிரவு நான் கண்டேன். அவன் என்னை எடுத்து அறுத்துப் பலியிட்டான். எனது கழுத்திலிருந்து அதிகக் குருதி பாய்ந்தோடிற்று. சாக்கடைகள் எல்லாம் எனது இரத்தத்தால் நிரம்பின. எனது இரத்தம் உதிக்கும் சூரியனைப் போல், வானங்கள் மற்றும் பூமியின் இடங்களை விடவும் அதிகமாக இருந்தது. வானவர்கள் கூட்டம் கூட்டமாக எனது குருதியை எடுத்துத் தமது முகங்களில் பூசிக்கொண்டார்கள்.

#29 இறைத்தூதரின் ஸ்தூல தீட்சைகள்
      நான் நமது இறைத்தூதர் முஹம்மது (ஸல்...) அவர்களை பல்வேறு ஆடைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தடவைகள் கண்டிருக்கிறேன். அவர்களின் கையிலிருந்து பேரீச்சங் கனிகளுண்டேன். அவர்கள் எனது வாயிலொரு பேரீச்சங் கனியை இட்டுச் சொன்னார்கள், ”இறைவனின் அனுமதியும் அருளாசியும் கொண்டு சாப்பிடு.” ஓரிரவு அவர்கள் தமது நாவை எனக்குத் தந்தார்கள். நான் அதைச் சுவைத்தேன். ஓரிரவு அவர்கள் எனது தலையில் தலைப்பாகை ஒன்றினைக் கட்டினார்கள்.

Image result for ocean of wine

#30 மதுக்கடல்
      ஓரிரவு மறைவுலகிலொரு பெருங்கடல் கண்டேன். அக்கடல் சிவந்த மதுவால் ஆகியிருந்தது. அந்த ஆழ்கடலின் நடுவில் இறைத்தூதர் சமனக்காலிட்டு அமர்ந்திருந்தார்கள்.  தங்கமிழைத்த ஆடைகள் அணிந்தபடி, தங்கமிழைத்த தலைப்பாகை சூடியபடி, மஸ்த் என்னும் இறைபோதை கொண்டிருந்தார்கள். அவர்களின் கையில் அக்கடலினின்றுமொரு மதுக்கோப்பை இருந்தது. அவர்கள் என்னைக் கண்டதும், அதனை அருந்திவிட்டு அக்கடலிலிருந்து இன்னொரு பகுதியை மொண்டு மீண்டும் அதனை அருந்தினார்கள். பிறகு அவர்கள் அக்கோப்பையுடன் தனது கையை அக்கடலினுள் செலுத்தி அதன் தூய திரவம் கொண்டு நிரப்பி எனக்குப் பருகத் தந்தார்கள். அதன் பின் ஏதோவொன்று எனக்கு வெளிப்படுத்தப்பட்டது. அனைத்துப் படைப்புக்களிலும் அவர்களே மிகவும் உன்னதமானவர்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அவை எல்லாம் தாகத்தால் மரணிக்கின்றன. ஆனால் அவர்களோ இறை மகத்துவம் என்னும் கடலின் நடுவில் பருகிய பரவசத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்.

#31 “புகழோங்கும் தலம்” (அல்-மகாமுல் மஹ்மூதா)
      முற்காலத்தில் அடிக்கடி எனது மனத்தில் ஒரு கேள்வி வந்திருந்தது: “புகழோங்கும் தலம்” (அல்-மகாமுல் மஹ்மூதா) (காண்க:குர்ஆன்:17:79) என்பதன் அர்த்தம் என்ன? கரைகளே இல்லாத கடல் ஒன்றினை ஓரிரவு நான் இறைப்பிரசன்னத்தில் கண்டேன். அனைத்து இறைத்தூதர்களையும் அதில் ஆடையற்ற நிலையில் கண்டேன். அனைத்து வானவர்களையும் அனைத்து இறைநேசர்களையும் அப்படியே அதில் கண்டேன். விண்ணிலிருந்து அக்கடலுக்கு அடர் திரை ஒன்று தொங்கியிருக்கக் கண்டேன். அக்கடலில் ஆதம் நபியைக் கண்டேன். கடல் அவர்களின் நெஞ்சு வரை இருந்தது. இறைவனுக்கு நெருக்கமான எவரும் அந்தத் திரையை விடவும் அவருக்கு மிகவும் நெருக்கமாகவே இருப்பார். ஆதம் நபியும் ”திருத்தூதர்களில் திடச்சித்தம் கொண்டோரும்” (உலுல் அஸ்மி மினர் ருசுலி – குர்ஆன்:46:35) அந்தத் திரைக்கு முன்னால் இருந்தனர். அத்திரைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் ஆவல் கொண்டேன். எனவே நான் அதன் விளிம்புக்குச் சென்றேன். நான் அதை அடைந்தபோது அதற்கு அப்பாலிருது பேரொளி ஒன்று வரக் கண்டேன். உச்சி முதல் பாதம் வரை நிலா போன்றிருந்த ஒரு நபரைக் கண்டேன். அவரின் முகம் நிலவின் முகம் போலிருந்தது. அனைத்து வானங்களை விடவும் அவர் பெரிதாக இருந்தார். இறைப் பிரசன்னம் முழுவதையும் அவர் தன்னில் கொண்டிருந்தார். ஊசியின் முனை அளவுள்ள பொருள்கூட அவரிலில்லாது விடுபட்டிருக்கவில்லை. அவரின் முகத்தில், இடையறாது, இறைப் பிரசன்னத்தில் இருந்து ஒரு ஒளி வீசிக்கொண்டிருந்தது. நான் அந்தத் திரைக்கு அப்பால் செல்ல முனைந்தேன் ஆனால் அது என்னால் முடியவில்லை. எனவே நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், “இது என்ன இடம்? இந்த மனிதர் யார்?” எனது பிரக்ஞையில் குரலொன்று ஒலித்தது, “இது புகழோங்கும் தலம். அவர் முஹம்மது (ஸல்...). அவரது முகத்தில் நீ காண்பது சற்குணப் பேரொளி. திரையைத் தாண்டி உன்னால் வர முடிந்திருந்தால் மேலான இறைவனையே நீ திரையின்றிக் கண்டிருப்பாய்.” மேலும் என்னிடம் சொல்லப்பட்டது, “இது பிரத்யேகமாக முஹம்மது (ஸல்...) அவர்களின் தலமேயாகும். வேறு எவருக்கும் இத்தலத்தில் பிரவேசிக்க உரிமை இல்லை.”

Image result for prophets and books

#32 வேதங்களைப் புசித்தல்
பிரகாசிக்கும் ஒளி ஒன்றினால் வெளிச்சமிடப்பட்ட உலகமொன்றினை நான் மறைவுலகில் கண்டேன். வல்லமை, அழகு மற்றும் மகத்துவத்தின் ஆடைகளிடப்பட்ட நிலையில் நான் மேலான சத்தியப் பரம்பொருளைக் கண்டேன். நேசத்தின் கடலிலிருந்து அவன் எனக்கொரு பானத்தை வார்த்தான். அதி நெருக்கத்தின் படித்தரம் தந்து என்னைக் கண்ணியப்படுத்தினான். புனிதத்தின் உலகை எனக்குக் காண்பித்தான். சாஸ்வதத்தின் இடவெளியில் நான் கடந்து போனபோது சக்தியின் கதவில் நான் நின்றுவிட்டேன். அனைத்து இறைத்தூதர்களும் அங்கிருக்கக் கண்டேன். தௌராத் வேதத்தைக் கையிலேந்தி மூசா நபி அங்கிருந்தார்கள். ஈசா நபி தனது கையில் இஞ்சீல் வேதத்தை ஏந்தியிருந்தார்கள். தாவூது நபி தனது கையில் ஸபூர் வேதத்தை வைத்திருந்தார்கள். முஹம்மது (ஸல்...) அவர்களின் கையில் குர்ஆன் இருந்தது. மூசா நபி என்னிடம் தௌராத்தைப் புசிக்கத் தந்தார்கள். ஈசா நபி எனக்கு இஞ்சீலைப் புசிக்கத் தந்தார்கள். தாவூது நபி எனக்கு ஸபூரைப் புசிக்கத் தந்தார்கள். முஹம்மது (ஸல்...) அவர்கள் எனக்கு குர்ஆனைப் புசிக்கத் தந்தார்கள். இறைவனின் அழகிய திருநாமங்களயும் மகாநாமத்தையும்  ஆதம் நபி எனக்குக் குடிக்கத் தந்தார்கள். இறைவன் தனது இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களுக்கு மட்டுமே அருளுகின்ற தேர்ந்த மேன்மையான அறிவுகளை நான் அப்போது அறிந்துகொண்டேன்.

Image result for turkish music painting

#33 துருக்கிய இசைக் கலைஞர்
      நான் துருக்கிஸ்தானில் இருப்பது போல் கண்டேன். சத்தியப் பரம்பொருள் துருக்கியரின் உடையணிந்தவனாக, அவர்களின் நரம்பிசைக் கருவிகளில் ஒன்றினை மீட்டியவனாகக் கிழக்குத் திசையிலிருந்து என்னிடம் தோன்றினான். அவன் சொன்னான், “நான் உன்னிடம் முன்னூழியின் கருவறைகளிலிருந்து வருகின்றேன்.” அவன் எனக்கு அழகிய பண்புகளைக் காட்டினான், என்னிடம் வந்தான், என்னிடம் அன்பாக இருந்தான். பிறகு என்னை விட்டும் மறைந்துகொண்டான். அது பற்றி அவனிடம் நான் புலம்பினேன். பிறகு சத்தியப் பரம்பொருள் நான் அதுவரை கண்டிராத பேரழகான தோற்றத்தில் என்னிடம் தோன்றினான்.

#34 பாலைவனத்தில் தற்சிறுமை குருநாதர்
      என் வாலிபத்தில் எனக்கொரு குரு இருந்தார். இறைவனை அறிந்தவரான அவர் எப்போதும் இறைபோதையிலேயே இருப்பார். அவரொரு தற்சிறுமை (மலாம(த்)தி) குரு ஆவார். அவரது இயல்பு என்னென்று யாரும் அறியார். ஓரிரவு நான் மறைவுலகின் பாலைவனங்களில் ஒன்றினைக் கண்டேன். அப்பாலையின் ஓரத்தில் அந்த குருவின் உருவில் மேலான இறைவன் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவனிடம் சென்றேன். அவன் எனக்கு இன்னொரு பாலையைச் சுட்டிக் காடினான். நான் அந்தப் பாலைக்குச் சென்றேன். அங்கே அவரைப் போன்றே ஒரு குரு இருந்தார். அவருருவிலும் இறைவனே இருந்தான். அவன் எனக்கு இன்னொரு பாலையைச் சுட்டிக்காட்டினான். அவ்வாறு எழுபதாயிரம் பாலைகள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டன. அந்த ஒவ்வொரு பாலையின் விளிம்பிலும் நான் முதலில் கண்டது போலவே கண்டேன். நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், “மேலான இறைவன் ஒருவன், தனியன், ஏகாந்தன், அப்பாலானவன். அவனோ தட்டுப்பாடு, பன்மியம், எண்ணிக்கை, எதிரிடைகள் மற்றும் ஒப்புமைகள் ஆகியவற்றைக் கடந்தவன்.” அப்போது எனக்குச் சொல்லப்பட்டது, “இவையெல்லாம் எண்ணிறந்த பூர்வீகப் பண்புகளின் வெளிப்பாடுகள்.” அத்தருணத்தில் தெய்வீக மாட்சியின் பெருங்கடலிலிருந்து வரும் ஏகத்துவ எதார்த்தங்கள் என்மீது மிகைத்தன. ஏனெனில், மேலான சத்தியப் பரம்பொருள் தன்னையே வியப்பினுருவில் வெளிப்படுத்துகின்றான்.

#35 சினாய் மலையில் மூசா நபி மறைதல்
      சத்தியப் பரம்பொருள் ஒரு மாபெரும் குருநாதரின் ஆடையை உடுத்தியவனாக சினாய் மலையிலிருந்து இறங்கி வரக்கண்டேன். அவனது வல்லமையான ரௌத்திரத்தின் தாக்கத்தால் மலை உருகிற்று. அவன் மறைந்தான், மீண்டும் தோன்றினான், மீண்டும் மறைந்தான், மீண்டும் தோன்றினான், மறுபடி மறுபடி. பிறகு அவன் சொன்னான், “நான் இவ்வாறே மூசாவுக்குச் செய்தேன்.”

#36 இடையனின் நூற்பு
      அப்பாலைக்கு அப்பாலான மேலான சத்தியப் பரம்பொருளை நான் ஓர் இடையனின் உடையணிந்தவனாகக் கண்டேன். அவனது கையிலொரு தறி இருந்தது. அவனதில் தனது விதானத்தை நூற்றுக்கொண்டிருந்தான். அவன் முரட்டு வெண் கம்பளி (சூஃப்) அணிந்திருந்தான். இதுவொரு உவமையே என்றும் இறைவன் கற்பனைகளை எல்லாம் கடந்தவன் என்றும் எனது இதயத்தில் நான் நினைவு கூர்ந்தேன். இவனே பூமியின் மற்றும் வானத்தின் இறைவன் என்று நான் எப்படிக் கூறுவேன்? ஆனால் அவனது தறியைச் சுற்றி ஒரு கம்பளி இழை போல அர்ஷ் என்னும் விதானம் நூற்கப்படுவதைக் கண்டேன். நான் மருந்து போய் இறை மகத்துவத்தின் பெருங்கடலில் மூழ்கினேன். பிறகவன் என்னை விட்டும் மறைந்துகொண்டான்.

Related image

#37 கூந்தல் கொண்ட வானவர்கள்
      நான் அவனை வல்லமை மற்றும் அழகு ஆகிய பண்புகளுடன் மீண்டும் மீண்டும் கண்டேன். அவனுடன் அழகிய பெண்களைப் போன்ற வானவர்கள் இருந்தனர். அவர்களின் கூந்தல் மிக நீளமாக இருந்தது, அவற்றுள் ஒன்று இன்னும் வளர்ந்தால் பூமியைத் தொட்டுவிடும் என்பது போல். நான் சொன்னேன், “இறைவா! நீ எனது உயிரை எப்படிக் கைப்பற்றுவாய்?” அவன் சொன்னான், “நான் உன்னிடம் முன்னூழியின் கருவறைகளிலிருந்து வருவேன். எனது கையால் உனது உயிரைப் பற்றுவேன். அதனை நெருக்கத்தின் தலத்திற்குக் எடுத்துச் செல்வேன். நெருக்கத்தின் பானத்தை உனக்குப் புகட்டுவேன். உனக்கென் அழகையும் வல்லமையையும் காட்டுவேன், நிரந்தரமாக, நீ விரும்பியபடி, திரையின்றி.” நான் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் மற்றும் இஸ்ராயீல் (அவர்கள் மீது அமைதி நிலவட்டும்) ஆகியோரைக் கண்டேன். ஒளியாடை அணிந்து அவர்கள் எனது வருணிப்புக்கு எட்டாத பேரழகுடன் இருந்தனர். மரணித்தோரின் ஆன்மாக்களை விசாரனை செய்யும் இரு வானவர்களான முன்கர் மற்றும் நகீர் ஆகியோரை இரண்டு அழகிய இளைஞர்களாகக் கண்டேன். அவர்கள் எனது மண்ணறை மீது யாழிசைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னார்கள், “நாங்கள் உனக்குக் காதலர்கள். உனது மண்ணறைக்குள் நாங்கள் இந்தத் தோற்றத்தில்தான் நுழைவோம்.” அச்சம் என்னை விட்டும் அகன்று போயிற்று.

#38 நண்பனொருவனின் மரணம்
      எனது நண்பன் ஒருவன் இறந்தான். ஏழு வானங்களுக்கு அப்பால் நானொரு பாலைவனத்தைக் கண்டேன். செங்களிமண்ணால் ஆன அது கோடித்துணி சுற்றப்பட்ட சவங்களால் நிரம்பியிருந்தது. நான் கேட்டேன், “இது என்ன பாலைவனம்?” அவர்கள் சொல்லினர், “இது இறைவனின் தியாகிகள் மற்றும் நல்லடியார்களின் இடம்.” வானவர்கள் தமது தோள்களில் பாடை ஒன்றினைச் சுமந்து வரக்கண்டேன். அதனை அவர்கள் அங்கே கொண்டுவந்து இறக்கி வைத்தனர். அப்பாலுக்கப்பாலான மேலான சத்தியப் பரம்பொருள் அதன் மீது தொழ வைப்பதைக் கண்டேன். இறைவன் அவர்கள் அனைவருக்காகவும் தொழுகை நடத்தினான். “யாரிவர்?” என்று நான் கேட்டேன். “உனது தோழர்” என்றார்கள். நான் மிகவும் உடைந்தழுதேன். ஏனெனில் அவர் எங்களுடன் ஒரு வாலிபராக இருந்தவர். பிறகு அவரை நான் சுவர்க்கத் தோட்டங்களின் மதிலுக்குள் கண்டேன். நான் சொன்னேன், “தலைவரே! என்ன செய்றீங்க?” அவர் தனது கைகளைப் பரப்பி நீலமணிகளால் ஆனதொரு மதிலை எழுப்பியபடிச் சொன்னார், “நான் சொர்க்கத்தில் உமது வீட்டையும் உமது தோட்டங்களையும் தயார் செய்கிறேன்.”

Image result for world of roses

#39 ரோஜாக்களின் உலகம்
      படைப்புக்களுக்கு அப்பாலான தூய சத்தியப் பரம்பொருளை நான் அடிக்கடி ரோஜாக்களின் கூடாரத்தினுள் ரோஜாத் திரையினுள், சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால் ஆனதொரு உலகில் கண்டேன். அவன் என் மீது பற்பல ரோஜாக்கள், முத்துக்கள் மற்றும் மாணிக்கங்களைக் கொட்டினான். புனிதத்தின் இல்லத்தில் அவன் வைத்திருக்கும் ஊற்றுக்களின் மதுவை நான் அதிகமதிகம் குடித்தேன். பெருவிரிவின் ரகசியங்கள் எனக்கும் அவனுகும் இடையில் நிகழ்ந்தன. அப்பொழுது எவரேனும் என்னைக் கண்டிருந்தால், அது மேலான இறைவன் தனது நேசர்கள் மீது காட்டும் விரிவு நிலை என்பதையும் அவனது நேர்மையின் அருள்கள் கொள்ளும் தோற்றம் எனப்தையும் அறியாது என்னை வழிகேடன் (முர்தத்) என்றே சாடியிருப்பார். இல்லையெனில், அழகின் இந்தத் தாக்குதல்களில் காஃப் மலையே பஞ்செனப் பறக்கும்போது முன்னூழிப் பெருங்கடல்களின் மோதும் அலைகளாலும் பெருமிதத்தின் புயற்காற்றாலும் காலம் என்ன கதிக்கு ஆளாகியிருக்கும்? இறைவன் குறியீட்டாளனின் ஒப்புவமைகளைக் கடந்தவனாக இருக்கிறான். மேலான இறைவன் இப்படைப்பினை நேர்த்தியான அறிவு நல்கிப் புரப்பானாக.

#40 ஏகத்துவத்தின் கம்பளத்தில் திரையேதுமின்றி
      இங்கே நாம் காட்டிவருவதும் கருதியிருப்பதும் எவ்வகையான அறிவு என்றால் ஆது உணர்வெழுச்சி மற்றும் காதல் ஆகிய கலைகளிலிருந்து வருவதாகும். இங்கே சத்தியப் பரம்பொருள் அழகிலும் வல்லமையிலும் தோன்றி அவர்களுக்கு அந்தக் காதல், உணர்வெழுச்சி மற்றும் அறிவில் சிறிதளவு அருளினான். இது ஏனெனில், ஏகத்துவத்தின் எதார்த்தத்தில் அறிய முடியாமையின் கடல்கள் இருக்கின்றன. இறைத்தூதர்களும் தீர்க்கதரிசிகளும் வானவர்களும் இறைநேசர்களும் அவற்றை விட்டும் ஓடுகின்றனர். இறை ஏகத்துவத்தில் பெருமிதத்தின் தீ உள்ளது. அஃது அனைத்து எண்ணங்களையும் சிந்தனைகளையும் புரிதல்களையும் பொசுக்கிவிடுகிறது. லா இலாஹ இல்லல்லாஹ் – பேரிறைவன் அன்றி வேறிறைவன் இல்லை; அறிவுகள் வருணிப்பதை விட்டும் அவன் மேலான தூயோன்.

      ஓரிரவு, யாமத்துப் பிற்பகுதியின் நடுநிசியில், நான் எனது வீட்டி இருக்கை ஒன்றில் தியான நிலையில் அமர்ந்திருந்தேன். திரைவிலகல்களை எனது பிரக்ஞை கூர்ந்து நோக்கியபடி, வானவருலகின் நீள்கொடிகள் தோன்றுவதைப் பார்த்தபடி இருந்தேன். திருப்பண்புகளால் ஒளியேற்றப்பட்ட ஜீவன்களை எனது அகக்கண்களால் கண்டுகொண்டிருந்தேன். மறைந்த வானங்களை அப்படி நான் நோட்டமிட்டிருந்ததில் ஒரு மணி நேரம் கழிந்தது. முன்னூழியின் சன்னல் வழியே சத்தியப்பரம்பொருள் என்னிடம் வல்லமையிலும் அழகிலும் தோன்றினான். சாஸ்வதத்தின் முகத்தில் திருப்தியின் ஆனந்தம் இலங்கிடக் கண்டேன். அவன் காணும் வல்லமை மற்றும் அழகு, கவர்ச்சிகள், மாட்சிமை மற்றும் விரிவு ஆகியவற்றை நான் காணும்படிச் செய்தான். வல்லமையில் அழிக்கப்பட்டவனாக நான் பரவசத்துள் புகுந்து மீண்டும் மீண்டும் கூவினேன். இல்லிய்யீன் என்னும் உயர் வானுலகம் நெடுகிலும் அவனுக்கும் எனக்கும் இடையில் மறைவின் பாலைவெளிகளும் பொறாமையின் திரைகளும் இருக்கின்றன. அவனுடன் எனக்குள்ள நெருக்கத்தால் நான் அவனுடன் நேரம் கழித்திருக்க விரும்பினேன். அவனை நான் கண்டேன், அவன் அப்போதுதான் எனது வீட்டினொரு அறையிலிருந்து ”தோற்றங்களில் மிக அழகான தோற்றம் கொண்டு” வெளியேறியிருந்தான். அவன் எனது இதயத்தைப் பொறாமை கொள்ள வைத்து எனது பிரக்ஞையை அழித்தான். நான் அவனைக் காணும் சாட்சியத்தின் இனிமையிலும் அவனது அன்பிலும் உருகினேன். பிறகவன் மீண்டும் இன்னொரு ரூபத்தில் தோன்றி அவனது இந்த அடிமையை நெருங்கி வந்தான், உச்ச பட்சமான நெருக்கத்தில். பிறகவன் மறைந்துகொண்டு, சாஸ்வதத்தின் உலகில் தெய்வீக சுயத்திலிருந்து தெய்வீக ஒருமையிலும் தனிமையிலும் வெளிப்பட்டான். அவனது கண்ணியத்திலும் எனக்கவன் விதித்திருந்த பரவசத்திலும் பல்வேறு திரைநீக்கங்களிலும் நான் வியப்படைந்தேன். பிறகவன் விதானத்தின் அப்பாலிருந்து மாட்சிமை மற்றும் அழகின் ஆடைகளின் தோன்றினான். ஒளியால் நெய்த ஆடை ஒன்றை இறை விதானத்தில் கண்டேன். அதற்கப்பாலிருந்து அவன் என்னை அழைத்தான். ஆனால் அது அவனை மறைத்திருக்கவில்லை. திரை நீங்கியவனாக அவனை நான் கண்டேன். அவன் சொன்னான், “ரூஸ்பிஹான்! வினைகளின் வடிவங்கள் கொள்ளும் மாற்றங்களின் இயக்கம் கண்டு கண்ணீர் சிந்தாதே. நீ பார்த்ததைப் பற்றி ஐயுறாதே. இன்னனீ அனல்லாஹ்! நிச்சயமாக நானே நான்தான் அல்லாஹ்! (குர்ஆன்:28:30), உனது ரட்சகன், ஒருவன், தனித்தவன். உன்னை நான் அறியாமையின் கடல்களில் துன்புறவிடுவேன் என்பது உனது தகுதிக்கு உகந்ததன்று. படைப்பு நெடுகிலும் நான் உனது. எனவே எது குறித்தும் கவலற்க. ”காட்சியின் காட்சி” என்னும் படித்தரத்திற்கு உன்னை நான் ஏற்றுவேன். திரையற்ற எனது நெருக்கத்தின் கம்பளத்தில் உன்னை நான் என்றைக்குமாக அமர வைப்பேன்.”


No comments:

Post a Comment