பாரசீக
ஞானியரின் அங்கீகாரம் (#41-45)
waadi-ul-jinn (the valley of genie)
#41
ஜின்களின் கணவாய்
ஃகீர் என்னும் நகரை நான் வந்தடைந்தேன். வாகன விலங்குகளுக்குத் தட்டுப்பாடாக
இருந்ததால் அப்போது எனக்கும் என் சகாக்களுக்கும் அவ்விடம் விட்டுக் கிளம்புவது சிரமமாயிற்று.
அப்போது ஷைஃகு அபூ முஸ்லிம் அல்-ஃபாரிஸ் அவர்களைக் கண்டேன். மண்ணறையிலிருந்து எழுந்து
வந்தது போலிருந்தார். அவர் சொன்னார், “கவலற்க! அங்கேயே இரு. நான் உன்னுடன் இருக்கிறேன்.”
அவர் எனது சகாக்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு சென்றார். நாங்கள் அங்கேயே இருந்தோம்.
சிறிது நேரத்தில் அங்கொருவர் வழிகாட்டியுடனும் கழுதைகள் மற்றும் பொருட்களுடனும் வந்து
சேர்ந்தார். அச்சாலையில் நாங்கள் பாதியிரவு பயணித்தோம். அவ்விடத்தில் மலைகள் பல இருந்தன.
எமது பாதையிலும் மலையொன்று இருந்தது. அது “ஜின்களின் கணவாய்” என்றொரு கணவாயின் குறுக்காக
அமைந்திருந்தது. அப்பாதையை நாங்கள் மீண்டும் மீண்டும் தவறவிட்டோம். எனவே பேரச்சத்துடனும்
சிரமத்துடனும் அதில் பயணித்தோம். அந்நிலையில் வைகறைக்கு முன்னேரம் வரை சென்றோம். நாங்கள்
எம்மை பாஸா நகருக்கருகில் கண்டுகொண்டபோது பெரிதும் மகிழ்ந்தோம். அந்நகரை அடைந்து ஷைஃகு
அபூ முஹம்மது அல்-ஜவ்ஸக் அவர்களின் மடத்தின் முன் நின்றோம். அங்கேயே இரவு கழித்துறங்கினோம்.
வைகறையில் நான் தொழுகைக்கென்று எழுந்தேன். அங்க சுத்தி செய்து முன்னிரு சுழற்சிகள்
தொழுது பின்னும் தொழ நின்றேன். அந்த மலைகள் மற்றும் கணவாய்களை விட்டும் இறைவன் எம்மைப்
பாதுகாத்தமைக்காக அவனுக்கு நன்றி நவின்றேன்.
#42
மலையின் மீதான இறைக்கருணை
திரைநீக்கம் மற்றும் சாட்சியாதலுக்கே உரிய பிரத்யேகமான விளிப்புகள்
கொண்டெனை இறைவன் அழைத்தான். அவன் சொன்னான், “ரூஸ்பிஹான்! நீ ஏன் வருந்துகிறாய்? உன்
பொருட்டு நான் அந்த மலையிலிருந்து ஒன்பது முறைகள் இறங்கி மீண்டும் ஏறியிருந்தேன்.”
மேலான சத்திய இறைவனின் உரையை அவ்வடிவில் கேட்டதும் எனது ஆன்மாவின் ஒவ்வோர் அணுவும்
மகத்துவத்தின் தீப்பொறிகளால் நிறைந்தது. என் வீட்டில் நான் கேட்டதை மலையின் உச்சியில்
கேட்டிருப்பேன் எனில் அங்கிருந்து பறந்திருப்பேன். நான் அழிக்கப்பட்டேன். எனது ரட்சகன்
தனது பெருங்கருணையையும் அவனது சாஸ்வதமான அருளையும் கிரகிக்கச் செய்தான். ஏனெனில் அவன்
தனது நண்பர்களிடம் கருணையானவனும் (ரஹ்மான்) தனது காதலரிடம் அருள்மிக்கவனும் (ரஹீம்)
ஆவான்.
#43
அபூ முஸ்லிமின் மண்ணறையில்
அபுன் நகரை விட்டகன்றபோது ஷைஃகு அபூ முஸ்லிம் அல்-ஃபாரிஸ் அவர்களின்
மண்ணறைக்குச் சென்றேன், எனது துர்நடத்தைகளுக்கு மன்னிப்புக் கேட்பதற்காக. அவரது அடக்கத்தலத்தை
நெருங்கியபோது எனது உள்ளத்தில் உணர்வே இல்லை. அது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. அவரின்
மண்ணறை முகட்டைக் கண்டவுடன் எனக்குப் பரவசம் உண்டாயிற்று. என் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி
எழுந்து கண்ணீர் பொங்கி அழத் தொடங்கினேன். நான் திரும்பியபோது, ஷைஃகின் பேரப்பிள்ளைகளில்
அபூ யஜீத் அவர்களின் குருமார்கள் இருக்கக் கண்டேன். அலைந்தபடிப் புறப்பட்டுச் சாலைக்கு
வந்தேன். எனது இதயத்தில் குரல் ஒன்று அழைத்துச் சொன்னது, ”துன்புறுத்தும் வேதனை உம்மைப்
பிடித்துக்கொள்ளும்” (குர்ஆன்:7:73). அக்குரல் என்னில் அச்சம் நிரப்பிற்று. பேராபத்து
என்மேல் விழும் என்று நான் பயந்தேன். எனவே நாங்கள் அந்நாள் முழுதும் பயணித்து அல்-சஞ்சத்
என்னுமிடத்தை அடைந்து அவ்விரவைக் கழிக்க ஹன்யானின் விடுதியில் தங்கினோம். அச்செய்தி
என் இதயத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது, நான் அந்தித் தொழுகையை முடிக்கும்வரை.
எனது இதயம் பதறிற்று, எனது பிரக்ஞை கொதித்தது.
#44
இறைவனின் ஒட்டகம்
அப்போது நான் மறைவின் ஒளிகளையும் சத்தியப் பரம்பொருளின் தடங்களையும்
கண்டேன். இந்தியாவின் குருமார்கள் எனக்கு முகமன் கூறக் கண்டேன். துருக்கி குராசான்
மற்றும் பாரசீகத்தின் குருமார்கள் எல்லாம் என்னை வாழ்த்தக் கண்டேன். மேலும் நான் ஷைஃகு
அபூ முஸ்லிம் அல்-ஃபாரிஸ் அல்-முஸஃப்பர், ஷைஃகு அபூபக்ரு அல்-குராசானி, ஷைஃகு அபுல்
காசிம் அல்-தரீஜீதி மற்றும் ஷைஃகு அபு அப்தில்லாஹ் இப்னு ஃகஃபிஃப் (இறைவன் அவர்கள்
மீது அருள் பொழிவானாக) ஆகியோரைக் கண்டேன். அவர்கள் ஒன்றாகச் சவாரி செய்திருந்தனர்.
ஷைஃகு அபூ முஸ்லிம் அவர்கள் ஒளியால் ஜொலித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்நாளின்
மக்களிடம் என்னை சுட்டிக் காட்டி, தல்மூதின் அரபியரிடம் இறைத்தூதர் சாலிஹ் அவர்கள்
சொன்ன வாசகம் கொண்டு சொன்னார்கள், “இது அல்லாஹ்வின் ஒட்டகம்; உமக்கோர் அத்தாட்சி; அதனை
அல்லாஹ்வின் பூமியில் மேய விடுக; அதனை யாதொரு தீமையும் கொண்டு தீண்டற்க; துன்புறுத்தும்
வேதனை உம்மைப் பிடித்துக்கொள்ளும்.” (குர்ஆன்:7:73). முற்செய்தியானது (#43-ல் இருப்பது)
இச்செய்தியுடன் தொடர்புள்ளது என்றுணர்ந்தேன். அச்செய்தி குறித்து பெரிதும் மகிழ்வெய்தினேன்.
ஏனெனில் அஃது என்னை இறைவனின் ஒட்டகையுடன் உவமித்துள்ளது. அது அத்தாட்சிகளில் மிகப்
பெரியதாகும்.
#45 இறைச் சுயத்தின் திருக்காட்சியைத்
தேடல்
அந்தச் சிறப்பான உரையாடலுக்குப் பின் (#42) சத்தியப் பரம்பொருள் என்னிடம்
பேசினான். அவ்வுரை கொண்டு அவன் தனக்கென்று நண்பர்களையும் தேர்ந்த அணுக்கரையும் எடுத்துக்கொள்கிறான்.
அதில் அவன் சொல்கிறான், “தெய்வீகத்தின் தோட்டங்களுக்குள் உம்மை நான் நுழைவிப்பேன்.
மேலும் எனது சாட்சியத்தை உமக்குக் காண்பிப்பேன். அஞ்சற்க. ஏனெனில், நீ எனது தேர்ந்த
சிலருள் ஒருவன்.” வல்லமை மற்றும் அழகின், மாட்சிமை மற்றும் பெருமையின் வடிவில் நான்
இறைவனைக் கண்டேன். தெய்வீகத்தின் ஆடையின் நெருக்கங்களை நான் கண்டேன். நான் சொன்னேன்,
“என் இறைவா! என் நண்பனே! என் ரட்சகனே! எத்தனைக் காலம்தான் இந்தத் தேர்ந்த காட்சியை
தெய்வீகத்தின் ஆடைவரம்பினுள் மட்டுமே என்னைக் காணச் செய்வாய்? தூய சாஸ்வதத்தையும் தெய்வீகச்
சுயத்தையும் எனக்குக் காட்டுவாயாக!” அதற்கவன் சொன்னான், “மூசாவும் ஈசாவும் இப்படித்தரத்தில்
அழிந்து போவர்.” மேலான சத்தியப் பரம்பொருள் பிறகு வலுப்பமும் மேன்மையும் மிக்க அவனது
முன்னூழிச் சுயத்தின் ஒளியில் ஓர் அணுவில் தன்னை எனக்கு வெளிப்படுத்தினான். எனது ஆன்மா
ஏறத்தாழ அழிந்துவிட்டது. அது அன்றி, அப்போது நான் மரணத்தை அஞ்சினேன். ஏனெனில் அந்நேரத்தில்
எனது அகநிலை இருந்தபடிக்கு அப்படியான அற்பத்தில் எனது வாழ்வின் முடிவு நேரக்கூடும்
என்று. பிறகு நான் இறைத்தூதர் முஹமத்
(ஸல்…), அனைத்து இறைத்தூதர்கள் (இறைச் சாந்தி அவர்கள் மீது உண்டாவதாக!), அன்னாரின்
அனைத்து நண்பர்கள் (இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) மற்றும் அனைத்து குருமார்கள்
(இறைவன் அவர்கள் மீது கருணை பொழிவானாக) ஆகியோரைக் கண்டேன். அவர்களெல்லாம் இறைவனிடம்
அவன் என்னை உயர்வான படித்தரங் கொண்டு போஷிக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment