மேலும்
ஆரம்பத் திருக்காட்சிகள் (#46-49)
#46
பிணியின் போது ஒளிகள்
ஒருமுறை நோயுற்றிருந்தேன். இரவில்
காய்ச்சலால் அவதிப்பட்டேன். பாதியிரவில் விழித்துக்கொண்டேன். நோயாளிகளின் வழமை போல்
குடும்பத்தினருடன் படுத்துக்கொண்டேன். வானவருலகின் அறைகளில் ஒன்றில் என்னைக் கண்டேன்.
ஒளிகள் எனக்குத் திரைநீக்கப்பட்டன. மேலான இறைவன் என்னிடம் தோன்றினான். எனது உயிரும்
உருவமும் ஏறத்தாழ கிழித்தெறியப்பட்டன. மேலான இறைவன் அவனது அமைதியை என் மீது இறக்கினான்.
பரவச விடியல்களும் இனிய ரகசியங்களும் அப்போதும் முடியவில்லை. என் குடும்பத்தினர் எவருக்குமோ
அல்லது என் சுற்றத்தார் எவருக்குமோ அந்நிலை பற்றி ஒன்றுமே தெரியாது.
#47
திருமுகத்தின் பேரொளி
மேலான சத்திய இறைவன் இன்னொரு முறை என்னுடன் இருந்தான். முத்தினும்
அல்லது பனியினும் வெள்ளிய ஒளியால் அவன் பிரகாசித்தான். பின்னர் சத்தியத்தின் நெருக்கத்திலிருந்து
நரம்புக் கருவிகளின் இசை வெளிப்பட்டது. அஃது என்னை குணப்படுத்துவதாக உணர்ந்தேன். திரைநீக்கம்
முழுமை பெற்றது. திருப்பண்புகள் எல்லாம் எனக்குக் காட்சியாயின. மேலான இறைவன் எனக்கு
கண்ணியம் செய்தான். எமக்குள் இடைவெளி ஏதுமில்லை. இறைவனின் திருமுகத்தில் நானோர் அழகையும்
வல்லமையையும் மாட்சியையும் கண்டேன். வானத்திலும் பூமியிலும் உள்ளோர் அதனைக் கண்டிருந்தால்
இன்பம் தாளாது மாய்ந்திருப்பர். வானும் மண்ணும் அவனைக்கொண்டே நிறைந்திருக்கக் கண்டேன்.
அனைத்திற்கும் மேலாய் நெருக்கத்தின் நெருக்கம் என்னும் படித்தரத்தில் அவன் என்னைச்
சேர்க்கும் வரை நான் அவனுடன் இருந்தேன். அவன் என் மீது எழுபதாயிரம் அழகுகள் வல்லமைகள்
மற்றும் சீர்மைகளை அருளினான். காஃப் மலை இன்பத்தில் உருகிவிடும் என்பது போன்ற இனிமையுடன்
என்னிடம் பேசினான். அது நெருக்கம் மற்றும் அன்பின் பேச்சாக இருந்தது. அவன் என்னைத்
தன் முன்னிலையில் அமர வைத்து என்னை மிகுந்த அன்புடன் நடத்தியபோது அவனது இருப்பின் பானங்களை
நான் பருகும்படிச் செய்தான். நான் விவரிக்க முடியாத மதுக்கள் அவை. மேலான சத்திய இறைவனிடமிருந்து
அப்போது புலப்படுத்த முடியாத ஓசைகள் வெளிப்பட்டன.
#48
இறைத்தூதர்கள் மீதான அருட்பொழிவு
நான் மௌனமுற்றபோது நினைத்தேன், “முஹம்மத் (ஸல்…) எங்கே? இறைத்தூதர்களும்
தீர்க்கதரிசிகளும் எங்கே?”. உயர் வல்லமை கொண்ட இறைவன் என்னிடம் பேசினான், “அவர்கள்
எல்லாம் நித்தியத்தின் பேரொளியில் அழிக்கப்பட்டுள்ளனர்”. நித்தியத்தின் பேரொளியிலிருந்து
அனைத்து இறைத்தூதர்களும் குடிகாரர்கள் போன்று வெளிப்போந்து இறைவனின் முன் நின்றிடக்
கண்டேன். முதலின் வந்து சேர்ந்தது நமது நபி முஹம்மத் (ஸல்...). பிறகு ஆதம், பிறகு நூஹ்,
பிறகு இப்றாஹீம், பிறகு மூசா, பிறகு ஈசா, அதன் பிறகு ஏனைய இறைத்தூதர்கள். மேலான இறைவனுக்கு
அவனது படைப்புக்களிலேயே ஆக மிக நெருக்கமானவர் என்பதால் முஹம்மத் (ஸல்...) அவ்விடத்திலேயே
நின்றுவிட்டார்கள். அவர்கள் எல்லாம் வட்டமாக நின்றார்கள். அவ்வட்டத்தின் நடுவே முஹம்மத்
(ஸல்...) அவர்களின் நாற்பெரும் பிரதிநிதிகளான அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ
(ரலி-ம்) ஆகியோர் நின்றனர். மேலான இறைவன் முதலில் முஹம்மத் (ஸல்...) அவர்களின் தலையிலும்
பிறகு ஏனைய இறைத்தூதர்கள் அனைவரது தலைகளிலும் அருட்கொடைகளைப் பொழிந்தான்.
#49 இறைவனின் பிரதிநிதி
மறைவின் கருவறைகளிலிருந்து வானவர்களின் படைகள் வெளிப்பட்டிருந்தன.
அவர்களின் தலைவர்களான ஜிப்ரீல் மீக்காயீல் மற்றும் இஸ்ராஃபீல் ஆகியோர் துருக்கியர்
போல் இருந்தனர். பெண்களைப் போல் நீள் கூந்தல் கொண்டிருந்தனர். பிறகு, மேலான இறைவன்
ரோஜாக்களும் முத்துக்களும் கொண்டதொரு குவியலை என் மீது பொழிந்தான், முன்பு இறைத்தூதர்கள்,
வானவர்கள் மற்றும் நாற்பெரும் பிரதிநிதிகள் ஆகியோர் மீது பொழிந்ததைப் போன்றே
[#48]. முஹம்மத் (ஸல்...) அவர்கள் என்னிடம் உரையாடி எனது முகத்தில் முத்தமிட்டார்கள்.
அவ்வாறே ஆதம், நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் அனைத்து இறைத்தூதர்களிடமும் செய்தார்கள்.
பிறகு அவ்வாறே நாற்பெரும் பிரதிநிதிகளிடம் செய்தார்கள். பிறகு, மேலான இறைவன் தனது முஹம்மத்
(ஸல்…) அவர்கள் மீதும் ஏனைய இறைத்தூதர்கள் மீதும் வாழ்த்து ஓதினான். பிறகு அவன் சொன்னான்,
“நான் எனது அடிமை ரூஸ்பிஹானை முன்னூழிப் பேரின்பத்திற்கும் ஞானநிலைக்கும் அற்புதங்களுக்கும்
தேர்ந்துள்ளேன். அவருள் எனது பேரறிவு மற்றும் ரகசியத்தை ஏற்கும் தன்மைகளை வைத்துள்ளேன். இனி ஒருபோதும் அவர் மீது பிரிவுத்துயர் நிகழாது.
என்னை அடிபணியாது போகும் நிலையை விட்டும் அவரை இனி காத்தேன். நேர்மை மற்றும் உறுதி
கொண்டோருள் ஒருவராக அவரை ஆக்கினேன். இவ்வுலகிலும் அனைத்துலகங்களிலும் அவர் எனது பிரதிநிதி
[ஃகலீஃபா]. யாரெனினும் அவரை நேசிப்போரை நான் நேசிக்கிறேன். யாரெனினும் அவரை வெறுப்போரை
நான் வெறுக்கிறேன். எனது தீர்ப்புக்களுக்கு அடிபணியாதார் யாருமிலர். எனது ஆணையை மறுப்போர்
யாருமிலர். ஏனெனில், ”நிச்சயமாக உம் ரட்சகன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்” (குர்ஆன்:11:107).
No comments:
Post a Comment