மவ்லானா
ரூமியின் தந்தை
பஹாவுத்தீன்
வலத்
ஆங்கில
ஆக்கம்
கோல்மன் பார்க்ஸ்
மற்றும்
ஜான் மொய்ன்
தமிழாக்கம்
ரமீஸ்
பிலாலி
பஹாவுத்தீன்
எழுதிய ’மஆரிஃப்’
இந்நூல் வாசகர்களை ‘மஆரிஃப்’ என்னும் பழைய ஆவணம் ஒன்றிற்கு அறிமுகம்
செய்கிறது. அது, ஆன்மிகக் கவிஞர் ரூமியின் தந்தையான பஹவுத்தீன் வலத் (1152-1231) அவர்களால்
எழுதப்பட்டது. மஆரிஃப் என்னும் அந்த நூலுக்குள் அகக்காட்சிக் குறிப்புக்கள், கேள்விகளும்
பதில்களும், இறைவனுடனான உரையாடல்கள், குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்கள், கதைகள், கவிதைத்
துணுக்குகள், திடீர் வெளிப்பாடுகள், மருத்துவ ஆலோசனைகள், தோட்டக்கலைக் குறிப்புக்கள்,
கனவுப் பதிவுகள், ஜோக்குகள், இன்பத்துப்பால் நிகழ்வுகள் மற்றும் பல்வித அவதானிப்புகள்
உள்ளன. இது ஓர் ஆன்மிக உரக்குவியல். வாசகர்களை இந்நூல் உரமேற்றி போஷிக்கட்டுமாக.
அனல் பறக்கும் நண்பரான ஷம்ஸ்
தப்ரேஸி அவர்களைத் தவிர மவ்லானா ரூமியின் பிரக்ஞையை வடிவமைப்பதில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது அவரின் தந்தையைத் தவிர வேறு யாருமில்லை. ரூமியும் ஷம்ஸும் சந்தித்துக்கொண்ட
நிகழ்வு பற்றிய பரம்பரைக் கதைகளுள் ஒன்று மஆரிஃப் என்னும் இந்நூலுடன் தொடர்புள்ளது.
கூன்யா நகரில், ரூமி தனது மாணவர்களுடன் பேசியபடி நீரூற்று ஒன்றின் அருகில் அமர்ந்திருக்கிறார்.
தடாக விளிம்பில் பஹாவுத்தீனின் புத்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஷம்ஸ் குறுக்கிட்டு
அந்தப் பொக்கிஷமான நூலினையும் பிறவற்றையும் நீருக்குள் தள்ளிவிடுகிறார்.
”ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று ரூமி பதறுகிறார். அவரது தந்தையின்
நாட்குறிப்புக்களின் அந்த மூலப் பிரதியைத் தவிர வேறு பிரதி இல்லை.
“நீ இதுவரை படித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததை வாழ வேண்டிய
நேரம் வந்துவிட்டது. உனக்கு வேண்டும் என்றால் புத்தகங்களை மீட்டுத் தருகிறேன். அவை
நனையாமல் காய்ந்துதான் இருக்கும். பார்க்கிறாயா?” என்று சொல்லிக்கொண்டே பஹாவுத்தீனின்
நூற்களை ஷம்ஸ் வெளியே எடுக்கிறார், “ஈரமே இல்லை!”
எனவே, பஹாவுத்தீனும் ஷம்ஸும் நேரில் சந்தித்தவர்கள் அல்லர் எனினும்
ரூமியின் ஆன்மிக நிலைமாற்றத்தில் அவ்விருவரின் ஊடறுப்பு இருக்கவே செய்கிறது. ஷம்ஸும்
ரூமியும் சந்திப்பதற்கு (1244) முன்பே பஹாவுத்தீன் இறந்துவிடுகிறார் (1231). இருவருமே
உணர்ச்சிகரமான துணிச்சல் மிக்க அசல் ஞானிகள். தோழமையில் அவர்கள் இறைவனுடன் மிக அந்தரங்கமாகவும்
காதலுடனும் பேசுகின்றனர். இருவருமே கவிஞர்கள் அல்லர். எனினும், அன்னிமேரி ஷிம்மல் சொல்வது
போல், “மிகப் பிரகாசமான, வியப்பூட்டுகின்ற, பாரசீக உரைநடையின் பெருங்கற்பாறைகளை, அவரது
தீவிர இறைக்காதலை வெளிப்படுத்தும் விசித்திரமான புலனுணர்வு மிக்கப் படிமங்களைக் கொண்ட
பத்திகளை” பஹாவுத்தீன் வரைகின்றார். ஷம்ஸ் தனது உரையாடல்களைத் தீவிரமான, சவால் விடுக்கின்ற,
முன்னும் பின்னும் வேடிக்கையான தன்மையில் அமைக்கின்றார். (வில்லியம் சிட்டிக்
“Rumi and Me: the autobiography of Shemsi Tabriz” என்னும் தலைப்பில் ஷம்ஸில் ‘மகாலாத்’
நூலை மொழிபெயர்த்துள்ளார்). அவ்விருவருமே தெய்வீக இருப்பினுள் மேலும் நெருக்கமான, மேலும்
சாரமுள்ள இயங்குதலை உணர்வெழுச்சியுடன் வேண்டுகிறார்கள்.
தன் தந்தையை அரசின் ஆளுநர் ஒருவர் சந்திக்க வரும் நிகழ்ச்சியை ரூமி
தனது பத்தாம் உரையாடலில் குறிப்பிடுகிறார் (நூல்: ஃபீஹி மா ஃபீஹி). அத்தகையதொரு பிரச்சனைக்குள்
அந்த மனிதர் சென்றிருக்கக் கூடாது என்று பஹாவுத்தீன் சொல்கிறார்.
”நான் பல்வேறு நிலைகளுக்கு ஆட்படுகிறேன் (சூஃபிகள் சொல்லும் ஹால் என்னும்
ஆன்மிக மனநிலை). ஒரு நிலையில் என்னால் பேச முடிகிறது, இன்னொன்றில் என்னால் பேச முடிவதில்லை.
இன்னொன்றில், பிறர் தம் வாழ்வின் கதைகளைச் சொல்வதைக் கேட்டு பதில் அளிக்கிறேன். எனினும்,
இன்னொன்றில் நான் என் அறைக்குள் தாழிட்டுக்கொண்டு ஒருவரையும் பார்க்க விரும்புவதில்லை.
இறைவனில் மேலும் மூழ்கியிருக்கும் நிலையில் (சூஃபிகள் இதனை இஸ்திக்ராக் என்பர்) நான்
முற்றும் இல்லாமல் ஆகி ஒருவருடனும் தொடர்பு கொள்ளாத மௌனம் ஆகிறேன். நான் உங்களுடன்
உரையாடக்கூடும் என்று நினைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு நீங்கள் இங்கே வருவது
பெரிய சோதனை முயற்சிதான்!”
பஹாவுத்தீன் தனது மூர்க்கமான ஏகாதிபத்திய ஆன்மாவில் வாழ்கிறார். சரணாகதியின்
படிநிலைகள் அவர் மீது பருவகாலங்களைப் போல் வந்து போகின்றன. தனது காட்டுத்தனமான அந்தரங்க
வாழ்வினுள் ஒதுங்கியிருக்கும் அவர் ஆலோசனை கூறவோ அல்லது நண்பர்களுடன் உரையாடவோ எப்போது
கிடைப்பார் என்று சொல்ல அவரிடம் தற்கட்டுப்பாடு இல்லை. அவரின் தீவிரமான அனிச்ச நிலைகள்
பார்வையாளரால் தாங்க முடியாத ஒன்றாக ஆகிவிடக்கூடும். இந்த பத்திகளில் நாம் நேர்மையின்
இரக்கமற்ற அழுத்தத்தைக் காண்கிறோம். அவர் வேறு எதுவாயிருப்பினும், பஹாவுத்தீன், அசலில்
தாமாகவே இருக்கிறார்.
இன்னொரு ஒப்பான நிகழ்வு. ஒரு நாள் பஹாவுத்தீனின் மாணவர்கள் அவரைப்
பரவச நிலையில் காண்கின்றனர். மாலைத் தொழுகைக்காக அவர்கள் அவரிடம் வந்துள்ளனர். அவர்
அவர்களைக் கண்டுகொள்ளாது தனது பரவசத்திலேயே மௌனமாக இருக்கிறார். அந்த பேரின்ப நிலைக்குள்
நுழையும் நோக்குடன் இரு மாணவர்கள் அவர் அருகில் அமர்கின்றனர். ஏனையோர் மக்காவின் திசை
நோக்கி நின்று இமாமுடன் சேர்ந்து தொழத் தொடங்குகிறார்கள். அவர்களில் ஃகாவ்ஜகியும் ஒருவர்.
ஆனால் தொழுகையின் இடையில் அவருக்கு அகக்கண் திறக்கின்றது. மக்காவை முன்னோக்குவதற்காக
பஹாவுத்தீனுக்கு முதுகைக் காட்டியோர் எல்லாம் இறையொளியை விட்டும் திரும்பியவர்களாகவும்,
பஹாவுத்தீனின் சமாதி நிலையில் அவருடன் அமர்ந்துகொண்டவர்கள் இறையொளியில் தம்மைக் கரைத்துக்கொண்டு,
நபி சொன்ன “மரணிக்கும் முன் மரணித்துவிடு” என்னும் நிலையில் ஆகியிருப்பதையும் அவர்
காண்கிறார்.
பஹாவுத்தீன் 1152 வாக்கில் பிறந்து 1231-ல் கூன்யாவில் இறந்தார். அவருக்கு
இரண்டு வயதாக இருக்கும்போதே அவரின் தந்தை ஜலாலுத்தீன் ஹுசைன் இறந்துவிட்டார். ஹுசைனின்
தந்தை அஹ்மதல் ஃகாத்திபியிடமிருந்து பிதுரார்ஜிதமாக வந்த நூலகத்துக்குள் பஹாவுத்தீனை
அவரின் அன்னை அழைத்துச் சென்று “இந்தப் பணிக்காகத்தான் உன் தந்தைக்கு நான் திருமணம்
முடிக்கப்பட்டேன். இந்த நூற்களைப் படித்ததால்தான் இஸ்லாமிய உலகில் உன் தந்தை அத்தகைய
பேரையும் புகழையும் ஈட்ட முடிந்தது” என்று சொன்னதாக அவரின் பரம்பரைச் சரிதம் சொல்கிறது.
அந்தப் பரம்பரையில் ஆன்மிக வளர்ச்சியில் நூற்கள் மிக ஆற்றலுள்ள புலமாக இருக்கின்றன.
ஆன்மிக விழிப்புணர்வின் சுடரை ஒரு பெண் ஏற்றி வைத்தார் என்பதும் அக்குடும்பத்திற்குத்
தனித்தன்மையான ஒன்றே. அந்த தீட்சைக்குப் பின் ”அறிஞர்க்கு அரசர்” என்றும் “ஆன்மிக அறிதலின்
பேரரசர்” என்று பஹாவுத்தீன் அழைக்கப்பட்டார். (அந்நாளிரவில் பல்ஃக் நகரின் அறிஞர்கள்
ஞானிகள் அனைவரும் ஒரே கனவைக் கண்டார்கள் என்றொரு கதையுண்டு: ஒளிமயமான ஒருவர் பஹாவுத்தீனுக்கு
”சுல்தானுல் உலமா” (அறிஞர்களின் பேரரசர்) என்னும் பட்டத்தை வழங்குகிறார் (பார்க்க:
இந்நூலில் 1:188-189). ரூமியின் மூத்த மகன் சுல்தான் வலத் அவரின் தாத்தாவின் பட்டத்தை
வைத்தே பெயரிடப்பட்டார்.)
1207-இல் ரூமி பிறந்த நேரத்தில் பஹாவுத்தீன், பல்ஃக் நகரில் ஒரு தீவிரமான
விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். குறைந்தது நூறாண்டுகளாவது பற்றி எரிந்துகொண்டிருந்த
பிரச்சனை அது. சுருங்கச் சொல்வதெனில், அது ஆத்ம ஞானிகளுக்கும் தத்துவவாதிகளுக்கும்
இடையிலான விவாதம்; தமது ஆன்மிக அனுபவங்களைச் சார்ந்திருப்போருக்கும் இறையியற் கொள்கைக்
கல்வியை ஏற்று வழிநடப்போருக்கும் இடையிலான விவாதம்.
கிரேக்க அடிப்படையிலான பகுத்தறிவுத் தத்துவத்தின் மீது தனது தாக்குதல்கள்
மூலம் விவாதத்தை இமாம் கஸ்ஸாலி (இறப்பு: 1111) தொடங்கி வைத்தார். பஹாவுத்தீன் ஒருவகையில்
கஸ்ஸாலியின் மாணவர். தத்துவவாதி ஃபக்ருத்தீன் ராஜி அவர்கள்தான் பஹாவுத்தீனின் தலைமை
எதிர்ப்பாளர். இருவருமே மன்னருக்கு நண்பர்கள். அரசரின் சில அதிகாரங்களைத் தானும் கையாள
பஹாவுத்தீன் விரும்புகிறார் என்று ராஜி குற்றஞ் சாட்டினார். கதை இப்படிச் செல்கிறது:
அரசர் தனது கருவூலத்தின் சாவிகளையும் தனது மகுடத்தையும் பஹாவுத்தீனிடம் அனுப்பி வைத்தார்.
மண்ணுலக அதிகாரம் எதன் மீதும் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அத்தகைய புரளிகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தான் நாட்டை விட்டே வெளியேற நாடுவதாகவும் பஹாவுத்தீன்
பதிலனுப்பினார். இந்தக் காலக் கட்டத்தில்தான், கி.பி.1212 வாக்கில், ரூமிக்கு ஐந்து
வயதாக இருக்கும்போது, பஹாவுத்தீன் தனது குடும்பத்துடன் தன்னார்வ அகதிகளாக சமர்கந்த்
நகரில் குடியேறியிருக்க வேண்டும். பின்னர் அவர்கள் பல்ஃகிற்குத் திரும்பினாலும்
1219-இல் ஒரு நெடும்பயணத்தைத் தொடங்கினார்கள். அது அவர்களை நைஷாபூர், பக்தாத், மக்கா,
டமஸ்கஸ், லாரந்தா ஆகிய நகர்களுக்கு இட்டுச் சென்று இறுதியில் துருக்கியின் கூன்யா நகரில்
சேர்த்தது. பல்ஃக் நகரை அவர்கள் நீங்கிப் புறப்படும் முன், அரசர் மற்றும் அவையினர்
முன்னிலையில் பஹாவுத்தீன் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில், மங்கோலியப் படையால்
அந்த அரசாட்சி வீழக்கூடும் பல்ஃக் நகர் பேரழிவுறும் என்றும் அனுமானித்துச் சொன்னார்.
அடுத்த ஆண்டில், கி.பி.1220-இல் அவர் சொன்னது போலவே நிகழ்ந்தது.
ரூம் என்று அழைக்கப்பட்ட பகுதியை ஆண்டு வந்த ஞானமுள்ள செல்ஜூக் மன்னர்
அலாவுத்தீன் கைகூபாத், கூன்யாவுக்கு வரும்படி பஹாவுத்தீனுக்கு அழைப்பு விடுத்தார்.
அங்கே அவருக்கு ஒரு கல்விச்சாலை கட்டப்பட்டது. கூன்யா மக்களின் ஆன்மிகத் தலைவராக இரண்டு
ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பஹாவுத்தீன் இறந்தார். அப்போது அவருக்கு எண்பது வயதிருக்கலாம்.
அப்பதவியில் அவரின் மகன் ஜலாலுத்தீன் ரூமியை அரசர் நியமித்தார். அப்போது ரூமிக்கு வயது
இருபத்து நான்கு.
ரூமியிடம் இருந்த ’அல்-மஆரிஃப்’ நூலின் மூலப்பிரதி ஒருபோதும் கண்டடையப்
படவில்லை. ஃபாரசீகத்தில் உள்ள ஃபுரூஸன்ஃபார் பதிப்பு இரண்டு பாகங்களாக உள்ளன. அவற்றிலிருந்தே
யாம் இந்த மொழிபெயர்ப்பைச் செய்கிறோம். அவை மொத்தமாக தொண்ணூற்றுப் பதினான்கு பக்கங்கள்.
எனவே, இங்கே நாம் தருபவை, ரூமி மிகவும் நேசித்த அந்த பெரும்பரப்பிலிருந்து சில தரிசனங்களை
மட்டுமே உங்களுக்குத் தரமுடியும். அதனை மனனம் ஆக்கிக்கொள்ளும் அளவுக்கு ரூமி மீண்டும்
மீண்டும் வாசித்திருக்க வேண்டும். ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது: ஓர் இரவு நெடுகிலும்
ரூமி தனது நினைவிலிருந்து தனது தந்தையின் மஆரிஃப் நூலின் பகுதிகளைச் சொல்லிக்கொண்டே
போகிறார், தன் முன் அதன் பிரதி எதுவும் இன்றியே. அவர் சொல்வதை ஒரு மாணவன் குறிப்பெடுத்துக்கொண்டே
இருக்கிறான். அருகில் இன்னொரு மாணவன் கனப்பின் முன் வைத்து அந்தத் தாள்களை உலர்த்திக்கொண்டிருக்கிறான்.
பேரறிஞர் ஹென்ரி கார்பின் சொல்கிறார், “கண்ணியமிக்க ஷைகு பஹாவுத்தீன்
அவர்களது ஆன்மிக உரைகளின் போதிய தொகுப்பு, மஆரிஃப், அவரது மகனின் ஆன்மிகக் கோட்பாடுகளைப்
புரிந்துகொள்ள வேண்டும் எனில் விட்டுவிட இயலாத ஒரு நூலாகும்”. பஹாவுத்தீனின் இறப்பிலிருந்து
ரூமி தனது குரு ஷம்ஸைச் சந்தித்த வரை, ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள், மஆரிஃப் என்னுமிந்த
நாட்குறிப்பே ரூமியின் உற்ற தோழனாக உடனிருந்து வந்திருக்கும் என்று கருதலாம். பஹாவுத்தீனின்
வார்த்தைகளைச் சார்ந்திருப்பதை ரூமி விட்டுவிட வேண்டும் என்று பல முறை ஷம்ஸ் வலியுறுத்த
வேண்டியிருந்தது, அவற்றைப் படிப்பதாகக் கனவுகூடக் காணாதே என்னும் அளவுக்கு. ஆம், ரூமியின்
கனவுநிலைக்குள் ஷம்ஸால் நுழைய முடிந்தது!
பதின்மூன்றாம் நூற்றாண்டில் மஆரிஃப் ஓர் அரிய நூலாகவே இருந்தது. சில
பிரதிகளிலும் ரூமியின் நினைவிலும் மட்டுமே அது இருந்தது. பொது வாசிப்பிற்கு அல்லாத
நிலையில் அது தனிச்சுற்றுக்கு மட்டுமே தரப்பட்டது. அதன் பிரதிகள், அன்றிலிருந்து இன்றுவரை,
எவரின் அறிவுக்கும் எட்டாது சாக்கடல் ஆவணங்கள் தொலைந்திருந்தது போல் அல்லாமல், அவற்றின்
நூலக அடுக்குகளில் யாராலும் கண்டுகொள்ளப்படாது பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. மறுபதிப்புக்
காணாத ஜெர்மானிய மொழிபெயர்ப்பு ஒன்றுள்ளது (ஃப்ரிட்ஸ் மெய்யர், “பஹாயி வலத்: க்ரந்த்ஸூஜ்
சேனஸ் லெபென்ஸ் உந்த் சேனர் மிஸ்டிக்”, ஈ.ஜே.லெய்டன் ப்ரில், 1989). ஆனால் அது பரவலாக
அறியப்படவில்லை. ஏ.ஜே.ஆர்பர்ரி தனது நூலொன்றில் மஆரிஃபிலிருந்து இருபது பத்திகளை எடுத்துக்காட்டியுள்ளார்
(”Aspects of Islamic Civilization as Depicted in the Original Texts”, New York,
A.S.Barnes, 1964, pp.227-255).
இந்நூலில் உள்ள பல குறிப்புக்கள் பஹாவுத்தீன் தனக்குத் தானே நினைவூட்டிக்கொள்வதற்காக,
பின்னர் அவற்றை விரித்துப் பேசுவதற்காக எழுதி வைத்தனவாக இருக்கக்கூடும்: தோட்டப் பராமரிப்பு
நினைவூட்டல்கள், பல்வேறு மருந்துகளின் நினைவூட்டல்கள். இப்பகுதிகளை எவரும் படிக்கவேண்டும்
என்றுகூட அவர் நினைத்திருக்க மாட்டார் ஆகலாம். பிற குறிப்புக்களில் தீர்க்கதரிசனச்
செய்திகளின் துல்லிய உணர்வுகளும், பிற்பகல் அதிகாலை அத்தி இரத்தக்கட்டி விண்மீன் முற்பகல்
என்று குர்ஆனிய அத்தியாயங்களின் தலைப்புக்களை வரித்துக்கொண்ட, குர்ஆனின் அழகிய இறுதிப்
பகுதிகளின் ஞாபகங்களும், குறிப்பிட்ட தோற்றங்கள் அல்லது நிகழ்வுகள் மீதான சுருக்கமான
வெளிப்பாட்டுத் தெறிப்புகளும் உள்ளன. மஆரிஃபிலிருந்து சில தலைப்புக்களைச் சொல்ல வேண்டும்
எனில்: தாவர மறுவுயிர்ப்பு, செரிமாணம், மற்றும் அனைத்து ஆசைகளுக்குள்ளும் உறைகின்ற
இச்சையின் மையம். தானும் வெளிப்படுத்த புனிதச் செய்திகளைத் தரலாகாதா? என்று பஹாவுத்தீன்
ஒரு கட்டத்தில் வேண்டுவதைப் பார்க்கிறோம் (மஆரிஃப் 1:151-153). அப்பகுதிகளின் வியப்பான
துணிச்சலையும், பிறவற்றின் அன்றாட இயல்புகளையும், மேலும் துடுக்கான பகுதிகளின் ஈரமுள்ள
களிப்புக்களையும் இந்த மொழிபெயர்ப்பில் யாம் கொண்டுவந்துள்ளதாக நம்புகிறோம்.
பஹாவுத்தீனுடைய குறிப்புக்களைப் படிக்கும் எந்தவொரு வாசகனையும் முதலில்
சட்டென்று தாக்கும் புலனம், ஆசைகளின் உலகினுள் அவர் கொள்ளும் தடையற்ற மூழ்குதலே. தனது
இச்சைகள் இன்னும் தீவிரமடைய வேண்டும் என்று அவர் பிரார்த்திக்கிறார். தனது இச்சா சக்தி
வலுப்படும் போதெல்லாம் தன்னில் இறைவன் இயங்குவதை அவர் உணர்கிறார். இப்புலனத்தில் வில்லியம்
பிளேக்கை நாம் நினைவு கூர்கிறோம்: ”சக்தியே
முடிவிலாத் திளைப்பு. காலத்தின் வெளிப்பாடுகள் மீது காதல் கொண்டுள்ளது சாஸ்வதம்”.
பிளேக்கிலும் பஹாவுத்தீனிலும் சக்தியின் ஞானம் ஒன்றுள்ளது. உடலைப் போஷிப்பதே ஆன்மாவையும்
போஷிக்கின்றது. முரண்கள் இன்றி முன்னகர்வு இல்லை. தனது ஆசைகள் கூர்மைப்பட வேண்டும்
என்று பஹாவுத்தீன் அடிக்கடியும் வெளிப்படையாகவும் பிரார்த்திக்கிறார். தன்னால் முடிந்த
அளவு பிரக்ஞைப் பூர்வமாகவும் முழுமனதுடனும் இந்த உடலின் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே
அதன் அர்த்தம். “ஆற்றா ஆசைகளை வளர்ப்பதினும் குழவியை அதன் தொட்டிலிலேயே கொன்றுவிடுதல்
மேல்” என்கிறார் பிளேக்.
பஹாவுத்தீனின் நாட்குறிப்பில் உள்ள விசித்திரமான புலனுணர்வுப் படிமங்களைப்
பற்றி அன்னிமேரி ஷிம்மல் அலசுகிறார். (”I am Wind. You are Fire”, Boston and
London: Shambala, 1992., p.32.). சில குறிப்புக்கள் ’சைக்கடெலிக்’ என்னும் மனமாயத்
தோற்றமாகத் தொனிக்கின்றன என்று ரூமி அறிஞர் ஃப்ரான்க்ளின் லூயி சொல்கிறார். பஹாவுத்தீனுடைய
உடல்நல அடிப்படையின் அடையாளமாக இதனை நாம் காணலாம். உருவம் என்பதே தன்னவில் பேரின்பம்தான்
என்கிறார் ரூமி; வடிவமும் உணர்வுநிலையும் கொண்டிருப்பதே தூய பரவச நிலைதான். நம்மிடமுள்ள
அனைத்து வழிகளிலும் நாம் பிரக்ஞையாக இருப்பது – அப்பாலான ஆன்மிக தரிசனங்களிலும் நமது
அதிகார பயத்திலும், பரவசமான வழிபாட்டிலும் நமது கோப தாபங்களிலும், ஏன் காக்கை வலிப்பிலும்கூட
– பிரக்ஞையின் ஒவ்வொரு வடிவமும் நமக்கு தெய்வ இருப்பின் சுவையை நல்குகின்றது.
பஹாவுத்தீனை
நாம் ஒரு ”கனிந்த ஞானி” (Juicy Mystic) என்று அழைக்கலாம், அன்பு நிறைந்து வழியுமொரு
மனிதப் பிரக்ஞையின் பல்வேறு அடர்த்திகளை அவர் நேசிக்கின்றார் என்னும் பொருளில். தேகத்தின்
கனிவையும் அதன் வழி இறையிணைவை அடைதலையும் பஹாவுத்தின் பெரிதும் விரும்புகிறார். மனிதப்
பரிமாறுதலின் ருசியையும் அது நிகழ்த்தும் எவ்வொரு பிரகாசத்தையும் அவர் நேசிக்கிறார்.
ஓர் அதிகாலை நேரத்தில் அவர் விழித்தெழுகின்றார். நாய் ஒன்றின் குரைப்பு அவரின் தியானத்தை
இடையூறு செய்கிறது. நாம் அதனைக் கேட்கிறோம் (1:381-382). எழுநூறு வருடங்களுக்கு முந்திய
ஒரு கிராம வாழ்வின் தோற்றம் பற்றி அவர் தருகின்ற சிறு குறிப்புக்களின் சுவைகள் இன்னமும்
ரம்யமாகவும் நிஜமாகவும் படுகின்றன.
பஹாவுத்தீனைப்
பொருத்த வரை இருத்தல் மற்றும் வலிய ஆசைகளின் தெளிவுணர்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஏனெனில் அவையே தெய்வீக வெளிப்பாட்டின் இன்னும் மேலான சாத்தியங்களை உருவாக்குகின்றன.
உயிராற்றலின் அதிர்வு இறைவன் இவ்வுருவத்தினுள் இன்னும் துலக்கமாக இருப்பதற்கு ஏது செய்கிறது.
“நானொரு மறைந்த பொக்கிஷமாய் இருந்தேன். அறியப்பட நாடினேன்” என்கிறது ஒரு இஸ்லாமிய ஹதீஸ்.
சுய அறிதலுக்கான இறைவனின் ஆசையே நமது ஆசையின் உயிர்ப்பின் வழியே வெளிப்படுகிறது என்று
பஹாவுத்தீன் சொல்கிறார்.
இதற்கொரு
திடுக்கிட வைக்கும் உதாரணம் மஆரிஃபில் உள்ளது (1:327-329), நீதிபதி ஷரஃபின் மகளைக்
கூடும் ஆசையுடன் ஓர் அதிகாலையில் பஹாவுத்தீன் எழுகிறார். அப்பெண், பஹாவுத்தீனின் மனைவியருள்
ஒருவர்தான், இதே போன்ற இன்னொரு நிகழ்வில் (1:381-382) சொல்லப்படும் பீபி அலவி போல.
எனினும், அவரது காலத்திற்கு, ஏன் நமது காலத்திற்கும்கூட, இவையெல்லாம் மிகவும் துணிச்சலான
பாலுணர்வுக் குறிப்புக்கள். 1950-களில் இந்நூலைப் பதிப்பித்த பேராசிரியர் ஃபுரூஸன்ஃபார்,
இந்த அந்தரங்க வெளிப்பாடுகளின் துணிச்சலை, அவற்றின் நேர்மை மற்றும் வன்மையை விதந்த
போதும் ஒரு மாபெரும் ஞானி கொண்டுள்ள பதவிக்கு இத்தகைய குறிப்புக்கள் பொறுப்பற்றவையாகப்
படுகின்றன என்கிறார். “பஹா வலத் (பஹாவுத்தீன்) முஸ்லிம்களின் முன்னணித் தலைவராக இருந்தார்
என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவர் கற்பிப்பதிலும் போதிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்.
தலைமை நீதிபதியாகவும் மார்க்க வழக்குகளில் நடுவராகவும் இருந்தார். எண்ணற்ற மாணவர்களின்
புறநிலை மற்றும் அற நடத்தைகள் ஆகியவற்றைச் செம்மை செய்வதன் திசையில் அவரது பொறுப்பு
இருந்தது.” எனினும், அவரது பாலியற் திறப்புக்களில் நாம் மரபார்ந்த நெறிகளைக் காட்டிலும்
இறைவனின் முன்னிலையிலான நேர்மையின் விசையே மிகைத்திருக்கக் காண்கிறோம். தனது நம்பிக்கை
வெளிப்பாட்டிலும் தனது வாழ்விலும் பஹாவுத்தீன் ஒளிவு மறைவு அற்றவராகவே இருக்கிறார்.
அவரது அசல்தன்மையே அவரின் மகத்துவம்.
மஆரிஃப்
என்னும் இந்நூலின் தலைப்பே இக்குறிப்புக்கள் எல்லாம் மஃரிஃபத் என்னும் இறைஞான நிலையிலிருந்து
வருபவை என்பதற்கான குறிப்புக்காட்டலாக இருக்கிறது. ஞானமடைதலின் நான்கு நிலைகள் ஷரீஅத்,
ஹகீக்கத், மஃரிஃபத் மற்றும் சூஃபியத் என்பதாக மகான் பாவா முஹ்யுத்தீன் பலமுறை பேசியிருக்கிறார்.
மஃரிஃபத் என்பது அந்நிலைகளின் நிறைவு. சூஃபியத் என்பதோ வரைபடத்தினுள் அடங்காத நிலை.
சூஃபியத்திலிருந்து ஒருபோதும் நாம் குறிப்புக்களைப் பெறவியலாது. பிரக்ஞையின் அந்தப்
பிரதேசம் பற்றி, அல்லது அதில், ஒன்றுமே சொல்ல முடியாது.
மஃரிஃபத் என்பது ஆத்மஞானம், இறைஞானம். மனிதர்களுக்கு
வழங்கப்பட்ட பூர்வீக ஒளியிலிருந்து வருகின்ற அறிவு அது. அந்தப் பூர்வீக ஒளி நெற்றியின்
நடுவில் திரளும் என்று சொல்லப்படுகிறது. அவ்விடத்தில் கவனத்தைக் குவிப்பது ஒருவரது
ஆன்மாவின் வழிகாட்டியுடன் இணைப்பை ஏற்படுத்தும். மஃரிஃபத் என்பது, பெருங்கடலின் அலைகளில்
அலைகளுடன் மிதக்கும் நிலையில் ஒரு தனிநபருக்குள் முடிவிலியைக் கண்டுகொள்வது. இரவோ பகலோ
இல்லை, பிறப்போ இறப்போ இல்லை, முழுமையின் தூய பொருண்மை மட்டுமே. எனவேதான் பஹாவுத்தீன்
அடிக்கடி மலர்களைக் குறிப்பிடுகிறார். பொருண்மை-பொருள் என்னும் இருமை இன்றிப் பூக்கள்
அறிகின்றன. மஃரிஃபத் என்பது இருத்தலின் வழியே, முழுமையான சக்திப்புலம் மற்றும் அதன்
வடிவத்தின் வழியே, பூவின் மலர்தல் மற்றும் நறுமணத்தின் வழியே வருகின்றது.
மஃரிஃபத்
என்பது ரூமியும் ஷம்ஸும் ஒருவருக்கொருவர் முகம் பார்க்கும் குறுக்குச்சாலை. இறைவனை
முகத்துக்கு முகம் பார்க்க வேண்டும் என்று சினாய் மலையில் மூசா நபி கேட்பது மஃரிஃபத்திலிருந்து
சூஃபியத்துக்கான நிலைமாற்றத்தில் நிகழ்வது. முஹம்மது நபியின் விண்ணேற்றமும் ஏசுநாதரின்
இறுதி விருந்தும் அப்படியே. இறைவனைச் சந்திப்பது மட்டுமல்ல, அவனாதல் என்பதை தயக்கமின்றி
பஹாவுத்தீன் கேட்பதிலும், ரூமியின் தந்தையின் நூலை ஷம்ஸ் நீருக்குள் தள்ளிவிட்டு எழுதப்பட்ட
பிரதியின் மீது ரூமி கொண்டிருக்கும் பிடிமானத்தை அவர் உடைப்பதிலும் நாம் அதனை உணர்கிறோம்.
”Mysticism” என்பது ஒரு பூடகமான துல்லியமற்ற ஆங்கில
வார்த்தை. எனினும் அது ஏதோ ஒன்றை நிச்சயம் குறிப்பிடுகிறது. பொதுவாகவே ஞானிகள் எல்லாம்
வரையறைகள் மற்றும் மொழியுடன் கொஞ்சம் சங்கடமாகவே உணர்கிறார்கள். கண்டிப்பான அனுபவக்காரர்களான
அவர்கள் சுவைத்தல் என்றும், சொல்ல முடியாததன் நறுமணத்தை முகர்தல் என்றுமே எப்போதும்
பேசுகிறார்கள். அவரைப் போல் இருப்பது என்றால் என்ன என்று ஒருமுறை பாவா முஹ்யுத்தீனிடம்
கேட்கப்பட்டது. ஒரு குழந்தை பால் குடிப்பது போன்று அவர் சப்புக்கொட்டிக் காட்டினார்.
புத்தகத்தன்மை இல்லாத ஓர் இருத்தலையும் அறிதலையும் ஞானிகள் வைத்திருக்கிறார்கள். அது
இருத்தல் மற்றும் புலன்களின் வழியே வருகின்ற ஒரு ருசியும் நறுமணமும் ஆகும். நாம் ஒவ்வொருவருடனும்
எப்படி இருக்கிறோம் என்பதிலிருந்து அது வருகிறது. “நாம் எப்படி நேசிக்கிறோம் என்பதில்தான்
இறைவனின் ரகசியம் சொல்லப்படுகிறது”.
”மிகவும்
அரிதான நுட்பமான விஷயங்களைப் பரிமாறும் ஞான ஆன்மாக்களின் நெடிய வழியில்” தனது தந்தை
வந்திருப்பதாக ரூமி சொல்கிறார் (உரையாடல்#16). அந்த ஆன்மிக விஷயங்களை வார்த்தைகளிலோ
கவிதையிலோ பரிமாற இயலாது. ஆனால், தனித்திருப்பதிலும் உள்ளமைக்குத் திறந்திருப்பதிலும்
அந்தரங்க உரையாடலிலும் இந்நூல் சுட்டிக்காட்டுவது போன்ற சம்பாஷனைகள் மற்றும் பயிற்சிகளிலும்
பரிமாற முடியும். ஆழமான ஆன்மிக மாற்றம் என்பது நூற்களின் வழியாக அல்ல, பிரசன்னத்தின்
வழியாகவே ஏற்படுகிறது என்று பஹாவுத்தீன் காலத்து சூஃபிகள் கண்டார்கள்.
“சூஃபிகளின் நூல் என்பது புத்தம்புது பனியில், தூய
இதயத்தில்
நாம்
ஒன்றாக உரையாடுவதில் இருக்கின்றது”
பஹாவுத்தீன்
அவரது அன்றாட உரையாடல்களுக்காகவே அவர் வாழ்ந்த பகுதியில் பிரபலமாகியிருந்தார். அவற்றில்
ஆட்சியாளர்களையும் ஆற்றல்மிகு தத்துவவாதி ஃபக்ருத்தீன் ராஜியையும் அவர் கண்டனம் செய்தார்.
முன்னணி இறையியலாளர்களும் கற்றறிந்த நீதிபதிகளும் பல மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து
அவரது பேச்சைக் கேட்டார்கள். அந்த உரைகளே அவரது மிகச் சிறந்த கருத்துப் பதிவுகளாக இருந்தன.
ஆனால், மிக அரிதான, பெருமுயற்சியில் கைப்பிரதிகள் செய்யப்பட்ட அவரது பேச்சுக்கள் அடங்கிய
(மஆரிஃப்) அகமியமானதாக, சிலர் மட்டுமே காணத்தக்கதாக இருந்து பின்னர் மேற்குலகில் எவ்வடிவிலும்
கிடைக்காத ஒன்றாகிப் போனது.
ரூமியின்
பெயர் எந்த ஊரிலிருந்து வருகின்றதோ, ரோமானியர்களின் ஆளுகையில் இருந்த அனடோலியா என்னும்
ரூம் பகுதியைச் சேர்ந்த கூன்யா என்னும் அந்த ஊரில், தான் குடியமர நேர்ந்தது பற்றி மவ்லானா
ரூமி மிகவும் வருத்தப்படுகிறார். ஏனெனில் அவரது தந்தைக்குக் கிடைத்தது போன்ற ஆன்மிகப்
பாரம்பரியம் அங்கே அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே தனது சகாக்களை சுவாரஸ்யமாக வைத்திருக்க
அவர் கவிதை புனைய வேண்டியிருந்தது. உணவின் மீது விருப்பமே இல்லாத ஒரு பண்டாரி போன்று
அவர் தன்னை உணர்கிறார். ஆனால் அவரின் விருந்தினர்கள் எல்லாம் பெருந்தீனிப் பிரியர்களாக
இருக்கிறார்கள். எனவே ஆடு மீன் கோழி என்று அறுத்து உரித்து அவற்றின் வாடை வீசும் உட்பகுதிகளை
எல்லாம் கழுவியெடுத்துத் தான் விரும்பாத உணவு ஒன்றை அவர் தன் விருந்தினருக்காகச் சமைத்துப்
பரிமாறுகிறார். அந்த உணவோ, இதுவரை பரிமாறப்பட்டதிலேயே ஆகச் சுவையான ஆன்மிகக் கவிதையாக
அமைந்துவிட்டது.
இந்த
குறிப்பேட்டில் மிக அழகான விஷயமாக நாம் காண்பது இதன் இலகுவும் ஒருங்கிணைவும், தெய்வீகத்திற்கும்
மனிதத்திற்கும் இடையிலான அனிச்சமான உடன்பாடும், தோழமையும், இடமற்ற சொல்லவியலாத பிரசன்னம்
அல்லது, அனைத்து ஜீவன்களின் ஊடாகப் பாய்ந்திருப்பதான ஓர் உடனிருப்பும் (மஇய்யத்) ஆகும்.
“நீ எங்கிருப்பினும் அவன் உன்னுடன் இருக்கிறான்” என்கிறது குர்ஆன் 57:4. வார்த்தைகளில்
வெளிப்படுத்த முடியாத ஆனால் நிஜமான, பிரதிப்பெயர்களின் கலப்பை இங்கே காண்கிறோம். தனது
குர் ஆன் மொழிபெயர்ப்பிற்கான முன்னுரையில் இந்த நிகழ்வு பற்றி என்.ஜே.தாவூத் சொல்கிறார்,
“இறைவன் தன்மைப் பன்மையில் பேசுகிறான். அவ்வப்போது அது தன்மை ஒருமையாக அல்லது படர்க்கை
ஒருமையாக மாறிவிடுகிறது, அதே சொற்றொடரிலேயே!” மஆரிஃபில் பல இடங்களில் பஹாவுத்தீனும்
தனிப்பட்ட ”நான்” என்பதிலிருந்து (குர்ஆனின்) தெய்வீகமான ”நாம்”-இற்கு மாறி பிறகு மீண்டும்
தனிப்பட்ட நானுக்கு இசைவுடன் மாறிக்கொள்வதைக் காண்கிறோம். இந்தப் பாய்மம் ஆன்மிகத்திற்கு
பஹாவுத்தீனின் பங்களிப்பாகும். அவரது பிரதி அடையாளங்களின் சங்கமம் ஆகும், குரல்களின்
பெருமரம் ஆகும். அவரது பிரதிக்குள் சில இடங்களில் இரட்டை மேற்கோளிட்டு நாம் அதற்கு
கண்ணியம் செய்கிறோம். பல இடங்களில் அப்படியே விட்டுவிடுகிறோம். மஆரிஃபின் பதின்மூன்றாம்
நூற்றாண்டின் ஃபார்சியில் மேற்கோள் குறிகள் இல்லை. (நவீன ஃபார்சியில்தான் அவை தோன்றின).
எப்படியோ, பேசுவது யார் யாரிடம் என்னும் மர்மத்தை நாம் உணர்கிறோம். நிறுத்த்க்குறிகளின்
விதிகள் அறிவதை விடவும் இது மிக ஆழமாக இருக்கின்றது. பஹாவுத்தீன், அவரது பல மனங்களில்
(காண்க: 1:277-278) வார்த்தைகளைத் தருவது எது என்பதைச் சில நேரங்களில் அவரே அறிவதில்லை.
ஆன்மிக ரகசியம் அவரில் தன் விருப்பில் நகர்ந்து போகிறது, பெயரிடப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
பஹாவுத்தீனின் பிரதி நிரலுக்குத் தெய்வீக நண்பனின் (இறைவனின்) கருணை உதவி புரிகிறது.
இறைவனின் வெளிமூச்சு, புலனாகும் பருவுலகமாய், இருத்தலாய் (பிரதி) ஆகிறது எனில் இறைவனின்
உள்மூச்சு புலனாகாத மறைந்த இன்மை உலகங்களாய்
(உள்ளுதிப்பு) ஆகிறது என்று சூஃபிகள் சொல்கின்றனர்.
பஹாவுத்தீன்
நம் முன் ஒரு பன்மைப் பரிமாணப் போக்குவரத்துச் சந்தியாக நிற்கிறார், கட்டற்ற பத்திகளை
எழுதுபவராக எனினும் கவிஞராக அல்லது ஒழுங்கமைவு கொண்ட தத்துவவாதியாகவோ அல்ல; அறிய முடியாததன்
குகையில் உருவங்களை ஒளிரச்செய்யும் திறன் பெற்றவர் என்றபோதும்.
பஹாவுத்தீனின்
விசித்திரமான அசல்தன்மையை ஏற்றுக்கொண்ட நிலையில், அதனின் மாறான, நியாயமான, அதனினும்
நடைமுறைக்கு உகந்த, மரபான சமயப் பரிமாணத்திற்கு அதன் விவாத நேரத்தை நாம் வழங்க வேண்டும்.
அது அவரின் முதன்மையான சக்திப்புலம் அல்ல என்றாலும் பஹாவுத்தீனை நியாயமாகக் காட்ட குறிப்பு#1:150
போதுமானது. அப்பத்தியிலிருந்து சில வரிகள்: “தொழுகையின் அர்த்தம் இதுதான்: ஆன்மாவின்
மகத்துவத்தை அனுபவிக்க நாம் உடலின் இச்சைகளைக் கட்டுப்படுத்துகிறோம். ... ... நீ உனது
இதயம் மற்றும் ஆன்மாவில் நின்று செயல்படு. அல்லது உனது வாழ்வு மிருக மனத்திலிருந்து
(நஃபஸ்), உனது இச்சைகள் மற்றும் பேராசைகளில் இருந்து செயல்படும். அவை எல்லாம் இறப்பதன்
குணங்கள், சரணாகதி அடைந்து தெய்வீகக் கருணையை அடைந்துகொள்ளாததன் குணங்கள்.
இந்தக்
குறிப்பை விட்டுவிடலாமா என்றுகூட நாங்கள் யோசித்தோம். ஏனெனில், வில்லியம் ப்ளேக் மிகவும்
வெறுத்ததான மரபார்ந்த உடல்-ஆன்மா என்னும் பிளவு இப்பத்தியில் மிகவும் அழுத்தமாக இருக்கின்றது.
பிளேக்கை விடவும் கம்மி எனினும் பஹாவுத்தீனை யாம் ப்ளேக்கியப் பார்வையிலேயே காண்கிறோம்.
(ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ப்ளேக்
(1757-1827) பஹாவுத்தீனுக்கு அறுநூறு வருடங்களுக்குப் பின் வாழ்ந்தவர் என்பதைக் கவனிக்கவேண்டும்).
இங்கே சொல்லப்பட்டிருப்பது போன்ற உடல்-ஆன்மா பிளவுதான் வன்கொடுமைகள், காமப் பிறழ்வுகள்
மற்றும் இன்ப அழிவு ஆகியவற்றுக்குப் பெரிதும் காரணம் என்று ப்ளேக் கருதினார். ஒப்புக்கொள்கிறோம்,
ஆனால் இன்னொரு பக்கமும் இருக்கிறது. மனிதர்களுக்கு இச்சைகளும் பேராசைகளும் அடக்குதல்களும்
சோம்பல்களும் இருக்கவே செய்கின்றன. அவை தமது சொந்த, வலிமையான நீடிப்பில்லாத தூண்டல்களுக்கு
அடிபணிகின்றன. அவற்றைப் பின் தொடர்வதில், சிலநேரங்களில் நாம், ஆன்மாவின் வீடு என்று
ஒருவரும் பிழைபட நினைத்துக்கொள்ளாத இடங்களுக்குச் சென்று சேர்கிறோம். உள்ளுதிப்பிலிருந்து,
ஆன்மாவிலிருந்து, இதயத்திலிருந்து வரும் குரலைக் கேட்டபோதும் நாம் செய்யக்கூடிய பிழைகள்
இருக்கவே செய்கின்றன. இந்தப் பத்தி (1:150) குறிப்பிடுகின்ற முரண்பாடும் அதன் எல்லைகளும்
நிஜமானவை. ஆன்மாவை ஆழமாகவும் உண்மையாகவும் ஏற்றுக்கொள்ள உடலுக்கு ஒழுக்க நெறிகள் தேவைப்படுகின்றன.
யூத இறையியலாளரும் தத்துவவாதியுமான ஆப்ரஹாம் ஹெஷல் தனது “God in Search of Man” என்னும்
நூலில் சொல்கிறார்:
“நம்
உடலை உதாசீனப்படுத்தக் கூடாது. ஆன்மாவை பலி கொடுத்துவிடவும் கூடாது. உடலே ஒழுங்கும்
கட்டமைவும் நியதியுமாகும். ஆன்மா என்பது அக
வளர்ச்சி, அனிச்சம், விடுதலை. ஆன்மா இல்லாத உடல் ஒரு பிணம்; உடல் இல்லாத ஆன்மா ஓர்
ஆவி.”
பஹாவுத்தீன்
ஒரு குறிப்பிட்ட நபரிடம் பேசுவதாகவே அவ்வப்போது அவரின் உரையாடல்கள் அமைகின்றன,
1:150 போல. அந்நபர், சமயம் விதித்த எல்லைகளுக்குள் தனது நடைமுறைக்கான தேடலை உடையவர்
எனில் சார்புண்மையான பதிலே வெளிப்படுகின்றது. உடலும் ஆன்மாவும் ஒற்றை அறிதலுக்குள்
ஆசைக்குள் கரைந்துபோவது உண்மையே. மனித பெருக்காடியின் வழியே நோக்குகின்ற, அதனைத் தன்
மர்மத்தின் பகுதி ஆக்கிக்கொள்கின்ற ஒரு தெய்வீகப் பொருண்மை இருக்கவே செய்கிறது.
எமக்குப்
பெரிதும் களிப்பூட்டும் பஹாவுத்தீனின் பரிமாணம் மனித சக்தியின் ஒவ்வொரு வடிவத்தின்
மீதும் அவர் கொண்டிருக்கும் நேசமே. இந்த அசட்டையான அழகான வடிவங்களுக்குள் நாமெல்லாம்
ஒரு பெரிய, முரண்படுகின்ற ஜீவன்கள் என்று அவர் வால்ட் விட்மனுடன் இணைந்து கூறுவதை நாம்
கேட்கிறோம். அதே நேரம் அவர் “இல்லை” என்னும் வாளினையும் உறுதியாகக் கையாள்கிறார். அது
இன்னொரு வழியில் நம்மை ஆன்மாவுக்குத் திறந்து தரும் நியதியாகிறது. இரு கண்ணோட்டங்களுமே
உண்மையானவை, உயிரோட்டமுள்ளவை மற்றும் அவசியமானவை. அவை ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.
அதனை ஏற்பதை விட்டும் நாம் சுருக்கிக்கொள்கிறோம். அனால் ப்ளேக்கின் புரட்சிகரமான சொலவடைகள்,
மேதைமையும் சுவையும் கொண்டிருந்த போதும், பயணத்திற்குரிய முழுமையான கட்டுச்சாதம் அல்ல.
பரவசமே அழகு; சக்தியே சாஸ்வதப் பேரின்பம்.
எப்போதும் அல்ல. நமது ஆன்மிகப் பிரக்ஞையைப் பாழாக்கும் தீர்மானம் கொண்ட மடத்தனமான பரவசங்களும்
சக்திகளும் கணிசமாகவே உள்ளன. கட்டுப்பாட்டுக்கும் சரணாகதிக்கும் இடையே சமனம் காண்பது
என்பதொரு தொடரும் மனிதப் புதிராகவும் உச்சமான வாழ்க்கைப் பிரச்சனையாகவும் இருக்கிறது.
நாம் உள்ளிட்ட பலருடன் பஹாவுத்தீனும் அந்தக் கேள்விக்குள் வாழ்கிறார். பக்தியுள்ள ஒரு
முஸ்லிமாக அவர் குர்ஆனைப் போற்றுகிறார். அவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர்.
எவ்விடத்து எங்கெங்கு தோன்றினும் அதன் வசனங்களை அவர் குறிப்பிடுகிறார். அது பற்றி அவரே
சொல்லும் ஓரிடமேனும் நிச்சயமாக இருக்கிறது, “குர்ஆனின் வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது,
உரையாடலின் சார்புலத்திற்கு அது தொடர்பற்றது என்றாலும் அதனை நான் மேற்கோள் காட்டுகிறேன்”.
குர்ஆன் மீதான அவரின் பேரார்வம் வலிமையானது, நேர்மையானது.
கோல்மன் பார்க்ஸ் & ஜான் மொய்ன்.
No comments:
Post a Comment