Tuesday, August 22, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 3




சுவடிகள்
Badi-ol-Zaman-Forouzanfar.jpg

       சிறந்த ஈரானிய அறிஞரான பதீவுஸ்ஸமான் ஃபுரூஸன்ஃபார் அவர்கள் ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருந்த போது டெஹ்ரானில் அவருக்கொரு கைப்பிரதிப் பழஞ்சுவடி கிடைத்தது. அது பேராசிரியர் அலீ அக்பர் தெஹ்குதா என்பவருடையது. அது 1549-இல் மவ்லவி அல்-கூன்யவி என்பவரால் எழுதப்பட்ட பிரதி என்று அச்சுவடியின் கடைசிப் பக்கம் தெரிவித்தது. அதுவே ஃபுரூஸன்ஃபார் வெளியிட்ட பஹாவுத்தீனுடைய நாட்குறிப்புக்களின் முதல் பாகமாக அமைந்தது. வேறு இரு நபர்கள் கையெழுத்திட்ட வேறு இரண்டு பகுதிகள் அந்த முதல் பாகத்தில் இருந்தன. பின்னர் இஸ்தான்பூல் பல்கலைக்கழகத்தில் வேறு ஒரு பிரதியின் நகலை அவர் கண்டார். அதில் பதினாறாம் நூற்றாண்டில் மூன்று பேர் கோர்வை செய்த, மஆரிஃபின் மூன்று பகுதிகள் இருந்தன. மேலும் ஹாகியா சோஃபியாவிலும் கூன்யா அருங்காட்சியகத்திலும் வேறு பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவை. மஆரிஃபின் முதல் பாகத்தின் முதற்பதிப்பை ஃபுரூஸன்ஃபார் 1954-இல் வெளியிட்டார் (இரண்டாம் பதிப்பு: 1974). பதினாராம் நூற்றாண்டின் பிரதிகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவற்றுக்கு முந்திய பிரதிகளை ஒப்புநோக்கவும் திருத்தவும் அவர் பயன்படுத்திக்கொண்டார். அந்த முதற்பதிப்பின் கட்டமைப்பு நாட்குறிப்புக்கள் போன்ற சிறு பத்திகளாக அல்லாது உபன்யாசங்களின் தொகுப்பைப் போன்று இருந்தது. 1959-இல் அவர் வெளியிட்ட இந்நூலின் இரண்டாம் பாகம் கூன்யாவில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பிரதியை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டது. அது நாட்குறிப்புக்களாக இருக்கின்றது. அந்தத் தொல்பிரதியில் பஹாவுத்தீனின் கையெழுத்தும் அவரது மகன் (மவ்லானா ரூமிதான்) எழுதிய ஓரக்குறிப்புக்களும் இருக்கக்கூடும். பஹாவுத்தீன் மற்றும் ரூமியின் ஆதாரபூர்வமான கையெழுத்து மாதிரிகளுடன் இப்பிரதியை ஒப்புநோக்கியே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. 

இப்போது மஆரிஃபில் நாம் காண்பவை பஹாவுத்தீனின் சொந்தப் பதிவுகள் அல்லது பேச்சுக்கள் என்பதை அவற்றின் தனித்தன்மையான மற்றும் வலிமையான மொழிநடை இந்நூலின் நெடுகிலும் அமைந்து நிரூபிக்கின்றது என்று பேராசிரியர் ஃபுரூஸன்ஃபார் கருதுகிறார். உரைகளைக் கேட்டுக் குறிப்பெடுக்கின்ற எழுத்தர்கள் அல்லது மாணவர்களின் ஆக்கமாக அவை இருக்க முடியாது என்று அவர் வலியுறுத்துகிறார். பஹாவுத்தீனின் ஒரு மதிப்புமிகு பண்பு யாதெனில் அவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவராக இருந்ததால் தனது குறிப்புக்களில் பெரும்பான்மை இடங்களில் ஒவ்வொரு குறிப்புக்கும் ஒன்றல்லது இரண்டு குர்ஆன் மேற்கோள்களை அரபியில் வழங்குகிறார். குர்ஆனின் பிரதி ஒன்றை அவர் எப்போது எங்கும் எடுத்துச் சென்று தோதான மேற்கோள்களைத் தேடியெடுத்து அங்கங்கே எழுதுவது சாத்தியமற்றது என்பது தெளிவு. மஆரிஃப் ஓர் ஆன்மிகப் பயண ஏடு. நகைச்சுவையும் நற்போதனையும் உணர்வெழுச்சியும் கொண்டது. பஹாவுத்தீன் வலத் என்றும் பஹா வலத் என்றும் பஹாவுத்தீன் என்றும் அழைக்கப்பட்ட, முஹம்மதிப்னு ஹுசைன் ஃகத்தீபி பல்ஃகி என்று முழுப்பெயர் கொண்டவருமான பஹாவுத்தீனைப் பாரசீகக் கவிவசன உரைநடையின் ஓர் அசல் பாரம்பரியத்தை உருவாக்கியவராகவே ஃபுரூஸன்ஃபாரும் அன்னிமேரி ஷிம்மலும் காண்கிறார்கள்.
         ஜான் மொய்ன்.



Related image


மூழ்கிய புத்தகம்
(மஆரிஃபில் உள்ளவை)

பெயரிடவியலாப் பெரும் ரகசியத்தின் புகழ்ச்சி
தெய்வீகத்துடனான உரையாடல்
ஆத்மாக்களின் காட்சிகள்
குர்ஆனின் தேர்ந்த வசனங்களுக்கு விளக்கங்கள்
மூலிகை மருத்துவக் குறிப்புக்கள்
கனவுப் பதிவுகள்
பாலியற் காட்சிகள்
தோட்டக்கலைக் குறிப்புக்கள்
தமது மாணவர்களுக்கான போதனைகள்
மற்றும் பயிற்சிகள் பற்றிய குறிப்புக்கள்
பழஞ்சடங்குகள் பற்றிய விவரங்கள்
பணியின் மதிப்புப் பற்றிய நியமங்கள்
செறிமானம் என்பது விழிப்புணர்வுக்கான குறியீடாயிருத்தல்
குறிப்பிட்ட நபர்களுக்கான அறிவுரைகள்
அதிகமான சுயவிசாரனை
வானியல், மீப்பொருண்மை மற்றும் உளவியல் அவதானங்கள்
மற்றும்
வகைப்படுத்த இயலாதன பிற.



  




No comments:

Post a Comment