Monday, August 28, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 5

Image result for body of flowers


1:34-35 இன்னமும் வளர்கிறது
       என் உடலுக்கு உள்ளிலும் வெளியிலும் பூக்களின் மருங்கில் தூய குளிரோடைகளைக் காண்கிறேன். நான் இறந்த பின் எனது பிணம் அவற்றிடமும் அவற்றைச் சுற்றிய மென் காற்றிடமும் மீண்டுவிடும். நமது ஆன்ம விதைகள் மறைவிலிருந்து வருகின்றன. நாம் இங்கே, இன்னமும் வளர்கிறோம். நாம் தேய்ந்து விதையிடம் செல்கிறோம். நாம் சாகிறோம். காணாத நிலத்தில் புதிய விதைகள் புதைகின்றன, நீரின் அருகில் தம் தனித்த வம்சத்தை வளர்ப்பதற்காக. இறைவன் இத்தொடர்ச்சியை அருள்கிறான்.
      நமக்கு மிகவும் நெருக்கமானவர்களில்கூட நமக்கு எதிரிகள் இருக்கலாம் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது (64:14). மிகவும் கவனமாயிருங்கள். நீங்கள் மன்னித்து, அவமதிப்புக்களைப் பொருட்படுத்தாதபோது, கருணை கோபத்தைக் கரைத்துவிடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1:42 மன்னிப்பும் தூண்டலும்
      குறிப்பான பாவம் ஒன்று மன்னிக்கப்பட்டுவிட்டதா என்று அறிய, அதனைச் செய்வதற்கான தூண்டல் உள்ளுக்குள் இருக்கிறதா என்று கவனித்துப் பார். அப்படி இருந்தால், அது மன்னிக்கப்படவில்லை. அந்தத் தூண்டல் நீக்கப்பட வேண்டும் என்று கேட்டிரு.


Image result for loaves at table painting
Loaves and Fruit on a Table - Pablo Picasso.

1:49-50 மேஜையில் ரொட்டிகள்
      வேறு எதன் மீதும் கருணையே இல்லாத ஒருவனுக்குத் தன் மீதும் இரக்கமே இருக்காது. அன்னியன் ஒருவனுக்கு நீ கடுமையான அநீதம் செய்தால், அதையே அல்லது அதனினும் மோசமானதை உனக்கே நீ செய்துகொள்வாய். மறதியான ஒவ்வொரு மோச காரியமும் திரும்பி வரும். நிஜமாகவே உன்னால் தாங்க முடியாத பெருஞ்சுமை ஒன்று உன் மீது இருப்பதைக் காண்பாய். நீ போதிய வலிமை உள்ளவன் அல்லன். ஆனந்தமோ அர்த்தமோ இல்லாது அலைந்திருப்பதான சாபம் பல வருடஙகள் உன்னுடன் வரும், உனது முதல் அடைக்கலமான கொட்டிலணைக்கு நீ வந்து சேரும் வரை.
      அலைந்து திரிந்த குதிரை ஒன்று கடைசியில் சிங்கங்கள் இருக்கும் குகைக்குள் வந்து சேர்ந்தது. நீ காமம் கலை மற்றும் செல்வத்தின் மீதான உனது ஆசைக்குள் ஆழமாக நுழைகின்றாய். உனது வாழ்க்கையே வெறுமையாகிவிடும் நேரம் ஒன்று வரும் (காண்க:76:1). ஆனால். மனிதர்கள் அக்கறை காட்டப்படாத நேரம் எப்போதாவது இருந்திருக்கிறதா என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நமக்கு அடையாளமே இல்லை. எனினும் இந்த அற்புதத் தருணத்திற்கு, இந்தப் பிரகாசமான பிரக்ஞையான ஆயுளுக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அறியவும் பின்னர் இருக்கவும் நமக்கு இத்தகைய நிம்மதியின்மையைத் தந்தது யார்?
      கருவறை என்னும் அடுப்பில் நீயொரு பச்சை மாவாக இருந்தாய், உலகின் நெடிய விருந்து மேசைக்கு இன்னமும் வெந்துகொண்டிருப்பவனாக. அச்செயல்முறையைப் பற்றிய அறிவே நினக்குக் கிடையாது. இந்த நறுமணமான தாராளமான தருணத்திற்கு உன்னைக் கொண்டு வந்திருக்கும் திறன்களைப் பற்றி நீ ஒன்றுமே அறியாய். சமையற்காரரைப் பற்றி ரொட்டி மாவு ஒன்றுமே அறிவதில்லை, மேசையில் அமர்கின்ற விருந்தினரைப் பற்றியும்தான்.
      உனக்கிருக்கும் கண்ணோட்டத்தை நீ வழங்கப்பட்டிருக்கிறாய். அர்ப்பணம் ஆக வேண்டும் என்னும் நாட்டமும். அது ஏதோ அடங்கிக் கிடப்பதன்று. ஆனால் அது புகழ்ச்சியுடன் வழிபடுதலாகும். கற்கள் அல்லது உலோகத்துண்டுகள் போன்ற உயிரற்ற பொருட்கள் பார்க்காது என்பதைப் போன்ற வரையறுத்த தெளிவான இந்த நியதிகளெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியவையே. உன் உயிருடனும் உயிரில் வாழும் ஜீவன்களுடனும் நீ அப்படித்தான் இருக்கிறாய். நீ அவற்றைக் காணவியலாது அல்லது அவற்றின் சூழல்களையும் நோக்கங்களையும் நீ அறியவியலாது.
      நாம் அறிபவை மிகச் சொற்பமே. அடைவதற்கு நமக்குத் தகுதியே இல்லாத அன்பளிப்புக்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. நாம் புழுதியிலிருந்து எழுகிறோம், குறுகிய கஷ்ட ஜீவனம் செய்து வென்ற பின் மீண்டும் புழுதிக்குள் மறைகிறோம். இதில், இறைவனின் நீதியை அல்லது பொது எதார்த்தத்தை அல்லது ஆழ்ந்த கருணையைக் கேள்வி கேட்பது என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமும், இழிந்த சாத்தானிய அராஜகமும் ஆகும். கண்ணியமின்மை அல்லது தாழ்ச்சி அல்லது இன்னும், முட்டாள்தனமான பேரிடர் என்று நீ உணர்வது எதுவெனினும் புகழ்ந்து போற்று. தெய்வீக இருப்பு என்பது நமது தவறான புரிதல்கள் அனைத்தைவிட்டும் மேலானதொரு அறிதல் என்றும் அந்த அறிதல் அனைத்தையும் ரட்சிக்கிறது என்றும் நீ புகழ்வாயாக. 

Image result for dark night painting
1:52-53 இரவுக் காவல்
      இருள் நாம் உறங்குதற்கொரு இரவாடையாகத் தரப்பட்டுள்ளது (காண்க:25:47). குருதி மற்றும் சதைக்காக நீர் மற்றும் மண்ணிலிருந்து, எலும்புக்கூட்டின் உருவாக்கத்திற்காகத் தணலில் வதக்கப்படும் நெய்ப்புப் பிசின்கள் கொண்டும் மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை நினைவு செய். பின்னர் தெய்வீக ஒளியான ஆன்மா, மனித உருவங்களுக்குள் ஊதப்பட்டது. இப்போதைய வேலை நமது தேகங்கள் தூய ஒளியாக மாற்றம் அடைவதற்கே. இது நிகழ்வதில்லை என்பது போல் தோன்றலாம். ஆனால் ஒரு புழுக்கூட்டினுள் புழுக்கரைந்த குழம்பின் துகள் ஒவ்வொன்றும் பட்டாகின்றது. நாம் ஒளியை உட்கொள்ளும்போது நமது ஒவ்வொரு பாகமும் பட்டாகின்றது.
      இரவை நாமோர் இருளாக்கினோம். எனினும் அதிலிருந்து நாம் ஒளிரும் விடியலைக் கொண்டுவருகிறோம். அவ்வாறே, நினது மண்ணறை மேடு மறுவுயிர்ப்புக் கொண்டு மலரும். சூஃபிகளும் இதயத்தின் பாதையில் அவர்களுடன் உள்ளோரும், உள்ளே செல்வதற்கு இருளைப் பயன்படுத்துகின்றனர். இரவுக் காவலின் விழிப்பில் பிரபஞ்சம் முழுவதும் அவர்களுடையது (காண்க:40:16). சிற்றரசரகள் அரசர்கள் மற்றும் அவர்களின் கற்றறிந்த அமைச்சர்கள் அனைவரும் ஆழ்ந்து உறங்கும்போது, ஒவ்வொருவரும் வேலை இழந்தோரே, தெய்வீக இருப்பும் அதனுடன் விழித்திருக்கும் சிலரையும் தவிர.
1:62-63 தோட்டத்தின் கீழே
      யாரொ கேட்டார்கள், ஏன் அத்தகைய துன்பங்களும் பேரிடர்களும் இறைவனின் நண்பர்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் நேர்கின்றன என்று. நான் சொன்னேன், துயரம் இதயத்தைத் திறக்கின்றது. அது  ஒரு நல்ல விஷயம்தான். வலியும் சிரமங்களும் மழைக்கால மின்முகில்கள். மேலே கருமை, கீழே பூக்களும் புன்னகையும். கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகம் உடலை வருத்தும் துயர்களின் வீடு. ஆனால் இங்கே ஆன்மா மேலும் உயிர்ப்படைகின்றது.
      இழந்த சமூகம் துக்கிக்கின்றது. பிறகு உடலைத் தேற்ற வழி தேடுகின்றது. அவர்கள், அவர்களது தலைகீழ்ப் பார்வையின் சோகத்தை வாழ்கிறார்கள். ஒரு தர்வேஷ் (சூஃபித் துறவி) இதயத்தின் பூமிக்குள் எப்படி மறைந்துறைகிறார் என்பதைப் பார், மதில்களே இல்லை என்னுமாறு இடிந்துகொண்டிருக்கும் மதிற்சிதலங்களில்கூட மண்டிச் செழிக்கும் தனது ரோஜா வனத்தினடியில் மட்டற்ற மகிழ்ச்சியுடன். அது சமயம், இதயத்தின் வெளியே வசிப்போர் தமது உடைமைக் குறிப்பான்களைச் செம்மையான கட்டுமானத்துடன் பளபளப்பதாக மிகவும் கூர்மையாகவும் துல்லியமாகவும் ஆக்கி வைக்கிறார்கள். ஆனால் அவற்றினுள்ளே மலர்கள் நறுங்கியும் வெளிறியும் உள்ளன.
      பக்திக்கு இரண்டு சிறகுகள் உள்ளன. ஒவ்வொரு சிறகிலும் பல இறகுகள். ஐவேளை தொழுகையில் ஆனந்தம் என்பது ஒரு சிறகு. இன்னொன்று நோன்பில். தனது குடும்பத்தைக் கவனிப்பதிலும் பிற கடமைகளிலும் ஒரு பதின்பாகம். மற்றொரு சிறகில் வலிமைக்கான இறகுகள் இருக்கின்றன. ஒன்று, தவறான சகவாசத்தை நீக்குதற்கான மனவுறுதி. இன்னொன்று, பாதகஞ் செய்வாரைத் துரத்தியடித்து பாதிப்பிலிருந்து சமூகத்தைக் காப்பதற்கான தீர்மானம்.

 Related image
1:64-65 காத்திருப்பு
      ”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியைத் திறந்தளித்தோம்” (48:1). கற்பாறை உடைந்து திறந்து இனிய நன்னீர் பாய்ந்தோடுகிறது. மனத்தாங்கல் கொண்ட ஒருவர் ஆழ்ந்த அன்புடன் நோக்கும்போது, பொறி மேல் பொறி பற்றிப் பெருந்தீ மூள்கிறது. மூடிய கரிய களிமண்ணிலிருந்து நம்மை போஷிக்கும் பசிய முளைகள் வருகின்றன. உன்னிலிருந்தொரு வனம் வளர்க்கிறோம் நாம். உன்னைச் சோகமாக்கும் எதனைக் கண்டாய் நீ?
      ”பேரிறைவன் அன்றி வேறிறைவன் இல்லை” (2:255). அதாவது ஏகம். அதனுள் திறந்துகொள். ஆசைப்படுவதையும் ஜாக்கிரதையாகக் கணக்கிடுவதையும் வழித்தெறி. நீ மிகவும் அஞ்சுவது ஏற்கனவே நடந்துவிட்டது. உனது பாத்திரம் ஏற்கனவே உடைந்துவிட்டது.
      யாரோ ஒருவர் ரொட்டி தந்துவிட்டு அதைப் பறித்துக்கொண்டால் என்ன? அப்பா சில நேரங்களில் தனது பிள்ளைகளிடம் தங்கத்தையும் வெள்ளியையும் காண்பிக்கின்றார். பிறகு காசுகளை அப்பால் மறைத்துவிடுகிறார். அவர்கள் தமக்கு இப்போதே அன்பளிப்புக்களை வேட்கிறார்கள். ஆனால் அப்பா அவற்றை அவர்களின் திருமணங்களுக்காகச் சேமித்து வைக்கிறார். அவர் அவற்றை இப்போதே அவர்களிடம் தந்தால் அவற்றை அவர்கள் வீணடிப்பார்கள். பிறகு  வெட்கப்படுவார்கள். நாம் கூடாரங்கள் கட்டும் வலிய துணிகளை இறைவன் பருத்திக் கொட்டையினுள் மறைத்து வைக்கிறான். புழுக்கூடுகளுக்குள் காத்திருக்கிறது மென் பட்டு. திறனற்ற கற்றுக்குட்டித் திருடர்கள் அவற்றை (பருத்திக் கொட்டைகள் மற்றும் புழுக்கூடுகளை)த் திருடுவார்கள் எனில் அவற்றின் மதிப்பை ஒருபோதும் அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள்.

 Related image
1:66 துரு
”அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும் செவிப்புலன்களின் மீதும் முத்திரை இட்டுவிட்டான்” (2:7). முத்திரை இடப்படுதல் என்பதொரு மூடிய நிலை, கண்ணாடி துருப் பிடிப்பது போல. நீயொரு கண்ணாடியை வாங்கினால் அவ்வரக்குப் பாசி அதன் பரப்பில் படர்ந்து அதனைப் பிரதிபலிக்க விடாது.
      நீ உனது இதயக் கண்ணாடியை உலகின் குப்பை மேட்டில் வீசிவிட்டாய். நெடுங்காலம் அதனை அங்கே வானிலை தாக்கும்படி விட்டுவிட்டாய். ஒரு காலத்தில் அது பிரதிபலித்திருந்த நித்யத்தின் படிமங்கள் இப்போது தொலைந்து போய்விட்டன.
      சோம்பலும் புறக்கணிப்பும் கொண்டதால், தன்னைச் சுற்றியிருக்கும் அழகினைப் பிரதிபலிக்கும் ஆற்றலை இதயம் இழந்து விடுகிறது. நாம் செய்வன மற்றும் செய்யாதிருப்பன ஆகியவற்றின் பின்விளைகள் மெல்ல மெல்லத் திரண்டு வருகின்றன. 

Related image
1:82-83 தோட்ட வேலையும் நட்பின்பால் அக்கறையும்
      கோணல் புத்தி கொண்ட ஃபக்ருத்தீன் ராஜிக்கும் அரசர் குவாரசம்ஷாவுக்கும் ஆனந்தமற்ற தத்துவவாதிகளான ஏனைய சிலருக்கும் நான் சொல்லியிருக்கிறேன், உங்கள் வழியில் நீங்கள் பூக்களின் அழகையும் பேரமைதியையும் முதுகுக்குப் பின்னே விட்டுவிட்டு நீங்கல் நேராக இருளுக்குள் நடக்கிறீர்கள். புகைகளுக்கும் ஆவிகளுக்கும் பகரமாக நீங்கள் தெளிந்த அற்புதங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். உமது தன்முனைப்பின் பொய்யான சுயம் உமது முடிவுகளை எடுக்கிறது. நீங்கள் குழம்பிப்போய் அடைப்பட்டுக் கிடக்கிறீர்கள், ஆனால், இப்பருவுலகம் ஆன்மாவிற்கான கதவு என்பதை ஞானம் அறியும். குறிப்பிட்ட செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. மேலும், நட்பின்பால் அக்கறையான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
      முட்களும் விஷச் செடிகளும் காட்டுத்தனமாகச் செழிக்கின்ற, ஆனால் கனி மரங்களும் ரோஜாக்களும் காய்கறிகளும் வளர்வதற்கு கவனிப்புத் தேவைப்படுகின்ற உலகமொன்றில் இருக்கின்றோம் நாம். அந்தத் தளராத சிரத்தை கொண்ட தோட்ட வேலையே ஒழுக்கம். ஃபக்ருத்தீனும் குவாரசம்ஷாவும் ஒப்ப மறுக்கின்றனர். ”கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளிவரும் வெட்டுக்கிளிகளைப் போல்” (54:7) இருக்கின்றார்கள். பயிரை வளர விடாது தின்றழிக்கின்றார்கள். நானோ, முண்டமும் கைகால்களும் முகமும் ஆன இப்போர்வையால், முஹம்மதைப் போல் போர்த்திக்கொள்கிறேன் (காண்க:74:1). அது, நானறியாத இலக்கொன்றினை நோக்கி நான் வளர்ந்து வருகின்ற, இந்த காரண காரிய இருத்தலின் அற்புதமான போர்வையாகும். மறுமையை நான் சென்றடைய இங்கே இம்மையில் நான் முழுமையாக வாழ்ந்தாக வேண்டும்.

1:89 தொங்கல்
      அண்மையில் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒருவரிடம் கேட்கப்பட்டது, “பஹாவுத்தீனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
      தனது பேச்சின் ஓட்டத்தில் தானே பெரிதும் திளைக்கின்ற அவர் சொன்னார், “வானில் தொங்கியபடி இருக்கிறார். அவரிலிருந்து ஒளிக்கதிர்கள் பீறிடுகின்றன.”
      ”அவரின் உரைகளைக் கேட்கும் எங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
      ”அவரது பாதங்களைச் சுற்றிக் கொத்தித் திரியும் கோழிகள்.”
      எனது இறைக்காதல் எனது உடலுக்கும் உவகை ஊட்டுவது உண்மைதான். காம இச்சை எனது கை கால்களையும் அங்கங்களையும் மேலும் உயிரூட்டம் கொள்ளச் செய்வதில் நான் அதே வகையில் ஒளியேற்றப்படுகிறேன்.

Related image
Shaykh Abdul Karim al-Kibrisi (rah).
 
1:92 சுயத்தின் வழிகள்
      பற்பல வழிகளில் நாம் இப்படி உயிருடன் இருப்பதன் இயல்பை இப்போது நான் அவதானிப்பேன். வாழும் உதாரணம் ஒன்றில்தான் சுயம் அறியப்பட முடியும். சுயம் தனது பண்புகளுடன் பிரகாசிக்கும் போது மக்கள் அவ்வப்போது வடிவத்தால் திகைப்படைகிறார்கள். இங்கே நான் சொல்வது உடல்நலம் பற்றிய உணர்ச்சிகளையோ அல்லது நோய் தரும் உணர்ச்சிகளையோ அல்ல. பசுமையுலகு, புதிய நட்புக்கள், கண்டறிதல்கள், சூழ்நிலைகள், நீருணர்வு, மனித உடலிலும் அதன் கற்பனைகளிலும் நாம் கொள்ளும் திளைப்பு, இவையே சுயம் செழிக்கும் களங்கள். எவரொருவரின் இருப்பையும் நாம் எப்படி அறிகிறோம், மக்களின் வாழ்வுகள் எப்படி உடலில் பதிகின்றன, ஆன்மா எப்படித் தனது வழிகாட்டலிடம் செல்கிறது, கொடுக்கப்படும் பணியை எப்படி ஏற்கிறது. இந்த வாழும் சாத்தியங்களுக்கு இன்னும் இன்னும் விழிப்புடணிருக்க முயல்க. இன்னும் மகிழ்ச்சியாய் இருக்க முயல்க. 

1:103-104 பசிகள்
       நீ இறைவனை நேசிக்கும்போது இறைவன் உன்னை நேசிக்கின்றான் (காண்க:3:31).
      நட்பின் இன்பங்களில் அல்லது ஆசையின் புலனின்ப மயக்கங்களில் நீ உனது ஏக்கத்திற்கான உண்மையான நிவாரணத்தை அடைந்துவிட்டாய் என்று உன்னால் சொல்ல முடியுமா? மேன்மையானதொரு நேசத்தில் நாம் கலந்துவிட வேண்டும் என்று முஹம்மது (ஸல்...) அறிவுறுத்துகிறார்.
      உனது நட்பிலோ அல்லது இச்சையிலோ இந்த விரிவை நீ அடைந்துவிட்டதாகச் சொல்வாய் எனில் நீ புளுகுகின்றாய், மக்கள் தமது ஆசைகளால் பிரகாசமடைவதும் நேசிப்பவரை இழக்க நேரிடுகையில் வெளிறிப்போவதும் நடப்பதுதான் என்றாலும்.
      நேசிப்பதற்காகவே பசிகள் தம்மை ஊட்டிக்கொண்டு உயிரோடிருக்கின்றன. பரந்த பேராவல் ஒன்றுள்ளது. இந்தப் பல்வேறு உடனிழுப்புக்கள் எல்லாம் அதனுள் நடனமிடுகின்றன. ஆசையினுள் இழையோடுமொரு நோக்கம் மேலும் உன்னதமான திருப்தியைத் தேடியபடியுள்ளது.


No comments:

Post a Comment