மக்காவின்
காட்சிகள் (#50-53)
kaaba ripple - by siddiqa.
#50
ஒளியின் கஃபாவின் கனவு ஒன்று
கனவாளன் காண்பதை நான் கண்டேன். மேலான இறைவனது ஆலயத்தின் புனிதச் சந்நிதியில்
நானிருப்பதாக. அவ்வாலயத்தின் நடுவில் இவ்வுலகில் காணக் கிடைக்காத ஒளி ஒன்று இருந்தது.
அவ்வொளியின் நடுவில் கஃபா இருப்பதைக் கண்டேன். அதன் மீது விசேட ஒளியாலான ஆடைகளிருந்தன.
அதுபோல் நான் கண்டதே இல்லை. அவ்வொளியில் பிரகாசமானது இறை அரசணையின் பிரகாசம் போன்றிருந்தது.
அவ்வீட்டின் அழகையும் பள்ளியின் பிரகாசத்தையும் நான் வியந்தேன். பிறகு நான் விழித்துக்கொண்டேன்.
அங்க சுத்தி செய்துகொள்ள குளியலறைக்குள் நுழைந்தேன்.
#51
குளியலறையில் மக்காவின் காட்சி
கனவில் நான் கண்டதை நினைவு கூர்ந்து அதில் பெரிதும் திளைத்தேன். அக்கனவின்
படித்தரம் பற்றியும் அது கொண்டுவரவிருக்கும் நற்பேறுகள் பற்றியும் சிந்தித்தேன். அப்போது,
பள்ளியில் நபித்தோழர்களை எல்லாம் நான் காண்பது போலாயிற்று. அவர்கள் கூடியபடியும் கலைந்தபடியும்
இருந்தனர். அவர்களிடையே இறைத்தூதர் (ஸல்...) அவர்களைக் கண்டேன். அவர் நறுமணமுள்ள தூய
வெண்ணொளிக் கோளம் போன்றிருந்தார். தனது கூட்டாளிகளை விட நெடியராகவும் உடலில் கம்பளி
ஆடை அணிந்தவராகவும் தலையில் தொப்பி அணிந்தவராகவும் இருந்தார்கள். மிக அழகியதான கூந்தல்
கொண்டவராகவும் சிரிக்கும் சூரியனைப் போன்ற முகம் கொண்டவராகவும் இருந்தார்கள். அவரது
அம்சங்கள் எல்லாம் செவ்வொளியினும் அழகாய் இருந்தன. ஸம்ஸம் கிணற்றின் பின்னிருந்து அவர்
என்னை அழைத்தார், ஏதோ தொலைவிலிருந்து அழைப்பவரைப் போல. “என் மக்களில் நீயே சிறந்தவன்”
என்று சொன்னார். அவர் சொன்னதில் பெருமிதம் கொண்டு நான் பெரிதும் தேம்பியழுதேன். பின்
என் நிலை அமைதி கண்டது. எனது கீழ்மனம் இந்த திரைநீக்கங்களை எல்லாம் நம்ப மறுத்தது.
ஏனெனில் நான் அப்போதும் குளியலறையில்தான் நின்றிருந்தேன். பிறகு நான் எனது கீழ்மனம்
அப்படிப் பேசியதற்காக மேலான இறைவனிடம் மன்னிப்புக் கோரினேன். எனக்குக் காட்டப்பட்டது
குறித்து என் உள்ளம் உறுதியடையும் வரை மேலான இறைவன் எனக்கு யகீன் என்னும் தெளிவை அதிகரித்தான்.
இவ்வடையாளத்தின் வழமை போல், அதன் பின் எனது கீழ்மனம் இல்லாமல் போனது.
kaaba - by samir malik.
#52
கஃபாவில் பரவசங்கள்
அதன் பின் கூச்சலிடுதற்கு எழுந்தேன். பரவசங்கள் என்னை ஆட்கொண்டன. நான்
கஃபாவில் இருப்பது போல் கண்டேன். இறைத்தூதர் (ஸல்...) அங்கிருக்கக் கண்டேன். அவர்கள்
பரவசத்தில் இருப்பது போல் பட்டது. ”ஹஜருல் அஸ்வத்” என்னும் கருங்கல்லின் அருகில் கஃபாவின்
இடது பக்கம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அல்-சஃபாவின் தூணருகே ஜிப்ரீல் நின்றிருந்தார்கள்.
அவரினருகில் மீக்காயீலும் நின்றிருந்தார். மேலும் அவர்களிருவரின் அருகில் இஸ்ராஃபீலும்
அவர்கள் மூவரினருகில் வானவர் குழாம் ஒன்றும் நின்றிருந்தது. அவர்கள் எல்லாம் கஃபாவின்
தரையிலிருந்தனர். வியப்பு மேலிட்டவனாக இறைத்தூதரை நெருங்கினேன். இறைத்தூதர் என்னை நோக்கித்
திரும்பி என் பெயர் சொல்லி அழைத்தார்கள். ஜிப்ரீல் அவர்களும் என்னை அப்போது “ரூஸ்பிஹான்!”
என்று அழைத்தார்கள். அவர் பரவசமுற்றிருந்தார். மீண்டும் ஒருமுறை என்னை அழைத்தார். மீக்காயீலும்
என்னை அழைத்தார். அவரும் எனது பெயர் சொல்லியே அழைத்தார். இஸ்ராஃபீலும் என்னை எனது பெயர்
கூறி அழைத்தார் “ரூஸ்பிஹான்!” என்று. ஜிப்ரீல் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார், இஸ்ராஃபீல்
பரவசத்தில் ஆழ்ந்திருந்தார், மீக்காயீல் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார். இறைத்தூதரின்
அருகிலிருத்தல் வேண்டி ஒவ்வொருவரும் தமது இடத்தை விட்டகன்றார்கள். கஃபாவும் அவர்களுடன்
இருப்பதற்காகத் தன்னிடம் விட்டுப் பெயர்தல் கண்டேன். அஃது அவர்களுடன் நடனமாடிற்று.
மேலான இறைவன் அவர்களுக்கு வெளிப்பட்டான். நானும் அவர்களுள் ஒருவனாகப் பரவசத்தில் ஆழ்ந்திருந்து
பிறகு தணிந்தேன்.
kaabe - by hamsa nizami.
#53
மக்காவின் பள்ளியினுள் சொர்க்கம்
அதன் பின் ஒரு மணி நேரம் திரையிடப்பட்டேன். பரவசத்தை விட்டும் நானிருந்த
நிலை விட்டும் வைகறை வரை தணிந்திருந்தேன். பின்னர் பரவசம் என்னை ஆட்கொண்டது. புனிதப்
பள்ளியின் மத்தியில் ஒரு மனிதர் எனக்குக் காட்சியானார். பள்ளியின் நடுவிலிருந்து அவர்
மண்ணை அள்ளி ஒரு பக்கமாகக் குவித்துக்கொண்டிருந்தார். அள்ளப்பட்ட இடத்தில் கதவு ஒன்று
தெரிந்தது. அக்கதவு திறக்கப்பட்டதும் அவர் உள்ளே நுழைந்தார். அவரின் பின்னே நானும்
நுழைந்தேன். கதவின் பின்னே இன்னொரு மனிதர் நிற்கக் கண்டேன். அம்முதல் மனிதர் நபி இஸ்மாயீல்
(அலை...) [கஃபாவைக் கட்டிய நபி இப்றாஹீம் அவர்களின் புதல்வர்]. அந்த இரண்டாம் நபர்
ரிள்வான் (அலை…) [சொர்க்கத்தின் வாயிற்காவல் வானவர்]. அக்கதவினுள் நான் நுழைந்தபோது
சொர்க்கத் தோட்டத்தையும் அதிலுள்ளவை அனைத்தையும், அதன் மரங்கள், ஓடைகள் மற்றும் எண்ணற்ற
ஒளிகள் ஆகியவற்றைக் கண்டேன். அதில் நான் முஹம்மத் (ஸல்...), ஆதம் மற்றும் அனைத்து இறைத்தூதர்கள்,
ஞானிகள், தியாகிகள் மற்றும் வானவர்கள் ஆகியோரைக் கண்டேன். இறை விசுவாசிகளின் பெருந்திரளை
அங்கு கண்டேன். எத்தகைய உலகைக் கண்டேன் எனில், அதனுள் வானங்களையும் பூமியையும் தூக்கி
எறிந்தால் ஒருவரும் அவற்றைக் கண்டுபிடிக்க மாட்டார். அவ்வளவு பெரிதாகவும் எல்லையற்றதாகவும்
அவ்வுலகம் இருந்தது. இவ்வுலகில் நான் பார்த்த எதனையும் அவ்வுலகில் நான் பார்க்கவில்லை,
ஒளி மேல் ஒளி, பிரகாசம் மேல் பிரகாசம், மாட்சிமை மேல் மாட்சிமை, ஆட்சிமை மேல் ஆட்சிமை
என்பதைத் தவிர.
No comments:
Post a Comment