தீட்சையின்
முதல் தரிசனங்கள் (#14-40)
Pir vilayath khan and pir zia inayath khan.
#14
இறைவனின் நண்பன்
எனக்கு நினைவு வருபவற்றுள் ஒன்று, ஆற்றல் வல்லமை மற்றும் சாஸ்வதம்
ஆகிய பண்புகள் கொண்டவனாக மேலான இறைவனை நான் எனது வீட்டின் கூரை மீது கண்டேன். அவ்விடமே
முழு உலகம் என்பது போல் பிரகாசமான ஒளியாக, எண்ணிலடங்காத பேருருவாகத் தோன்றிற்று. அவ்வொளியின்
நடுவிலிருந்து அவன் என்னை பாரசீக மொழியில் எழுபது முறை அழைத்தான், “ரூஸ்பிஹான், நான்
உன்னை எனது ஞான நேச (விலாயத்)த்திற்குத் தேர்ந்துள்ளேன். காதலுக்கு உன்னை எடுத்துள்ளேன்.
நீ எனது நண்பனும் (வலீ) காதலனும் ஆவாய். துயர் பற்றி அஞ்சற்க, ஏனெனில் நான் உனது இறைவன்.
உனது ஒவ்வொரு லட்சியத்திலும் நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.” நான் மண்டியிட்டிருந்தேன்.
மீண்டும் மீண்டும் மண்டியிட்டேன். பிறகு பரவசங்களின் பெருங்கடல்கள் என்னை மூழ்கடித்தன.
தேம்புதலும் குறையாத அழுகையும் என்னை ஆட்கொண்டன. அதிலிருந்து மிக அதிகமான அருள்களை
அடைந்தேன்.
#15
புனிதத்தின் கோட்டை
எனது இளமைப் பருவத்திலிருந்து நான் நினைவுகொள்ளும் ஒன்று. ஏழு வானங்களுக்கு
மேலுள்ள மறைவான பாலைவனங்களில் எனக்கொரு பெருங்கடல் காட்டப்பட்டது. அதன் நடுவில் தீவு
ஒன்றினைக் கண்டேன். அத்தீவின் நடுவில் அளக்கவியலா உயரம் கொண்டதொரு மாபெரும் கோட்டையைக்
கண்டேன். அதன் அடிவாரத்திலிருந்து என் பார்வை எட்ட முடிந்த உயரம் வரை எண்ணற்ற சாளரங்கள்
இருந்தன. ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும் எனக்கு இறைவன் தரிசனமானான். “இறைவா! இது என்ன
கடல்?” என்று கேட்டேன். “இது புனிதத்துவத்தின் பெருங்கடல்” என்று அவன் சொன்னான். “இது
என்ன தீவு?” என்றேன். “புனிதத்துவத்தின் தீவு” என்றான். “இது என்ன கோட்டை?” என்றேன்.
“புனிதத்துவத்தின் கோட்டை” என்றான். ஆனால், மேலான இறைவன் இடப் பரிமாணத்தைக் கடந்தவன்.
#16
கிள்ருவின் ஆப்பிள்
நான் அப்போது அகமிய எதார்த்தங்களின் அறிவுகள் இல்லாத மூடனாய் இருந்தேன்.
ஒருநாள், நீடூழி வாழ்வு பெற்ற நபியான கிள்ரு (அவர் மீது அமைதி நிலவட்டும்) அவர்களைக்
கண்டேன். அவர் எனக்கொரு ஆப்பிள் தந்தார். அதில் ஒரு கடி தின்றேன். பிறகு அவர் சொன்னார்,
“அதை முழுமையாகச் சாப்பிடு. நான் அந்த அளவுதான் சாப்பிட்டேன்.” இறைவிதானம் முதல் பூமி
வரை ஒரு பெருங்கடல் போன்று இருப்பதாகக் கண்டேன். அதை அன்றி வேறொன்றும் கண்ணில் படவில்லை.
அது சூரியனைப் போல் பிரகாசித்தது. என் வாய் அனிச்சையாகத் திறந்துகொண்டது. அது முழுவதும்
என் வாயினுள் நுழைந்தது. அதில் ஒரு சொட்டும் மீதம் இல்லாது நான் குடித்துவிட்டேன்.
#17 ஹள்ரத் அலீயைப் போல் கடலில்
நீந்துதல்
ஒரு நாள், கிழக்கில் ஒரு மலைமீது நான் இருப்பதைப் போல் கண்டேன். வானவர்க்
குழாம் ஒன்றையும். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்றதொரு பெருங்கடல் இருந்தது.
அதற்கப்பால் எதையும் நான் காணவில்லை. அவர்கள் என்னிடம் சொன்னார்கள், “இக்கடல் நுழைந்து
மேற்கிற்கு நீந்து.” எனவே நான் அக்கடலுள் நுழைந்து அதில் நீந்தினேன். மாலையில் நான்
சூரியனின் இடத்தை அடைந்தபோது கிழக்கு மற்றும் மேற்கின் பெருமலைகள் சிறு குன்றுகள் போலிருக்கக்
கண்டேன். மேற்கு மலையின் மீது ஒரு வானவர்க் குழு இருந்தது. அவர்கள் சூரியனின் ஒளியால்
பிரகாசித்தனர். அவர்கள் கூவி என்னிடம் சொன்னார்கள், “நீ யாராக இருப்பினும், நீந்து,
அஞ்சாதே!” எனவே, நான் மலையை அடைந்ததும் அவர்கள் சொல்லினர், “நான்காம் கலீஃபா அலீ இப்னு
அபீதாலிப் (இறைவன் அவர்களின் முகத்தைக் கண்ணியம் செய்வானாக) அவர்களைத் தவிர வேறு எவரும்
இதுகாறும் இக்கடலினைக் கடந்ததில்லை. அவருக்குப் பின் நீயே அதைச் செய்திருக்கிறாய்.”
#18
சமய அறிவுக்கப்பால் சமய அனுபவம்
அதன் பின், இறையுள்ளமையின் அறிவுகளுக்கான கதவுகள் எனக்குத் திறக்கப்பட்டன.
அவை, சமய அறிஞர்களின் புரிதல்கள் திகைப்படையக்கூடிய அந்தரங்க எதார்த்தங்களும் நுட்பங்களும்
அறியாக் கல்விகளும் ஆகும். பிறகு எனது சில வேண்டுதல்கல் ஏற்கப்பட்டன. அற்புதமான அருள்கள்
நேர்ந்தன. எனது பிரக்ஞை எதார்த்தங்களில் வேர் பிடித்தது. எனினும், உயர்தலுக்கு மேல்
உயர்தல்கள் எனக்குத் தோன்றின. படித்தரங்கள், அகநிலைகள், திரைநீக்கங்கள், ஆன்மிக மறைஞானம்,
தெய்வீக ஒருமை மற்றும் வியப்புமிகு உள்ளத்தில் மறைவின் எண்ணற்ற திரைநீக்கங்கள் ஆகியவற்றை
நான் அடைந்தேன்.
#19
கரடிக் குட்டியின் தைலம்
மனிதகுலம் முழுதும் ஒரு வீட்டில் விருந்து நடத்துவதாகக் கண்டேன். அது
ஒரு பகல் எனலாய் பற்பல விளக்குகள் எரிந்தன. நான் அவர்களை அடைய முடியவில்லை. எனவே நான்
அவ்வீட்டின் கூரைக்குச் சென்றேன். அங்கே, என்னைப் போலவே தோன்றிய, சூஃபி ஆடை அணிந்த
அழகிய குருமார்கள் இருவரைக் கண்டேன். கெண்டி ஒன்று அந்தரத்தில் மிதக்கக் கண்டேன். அவ்விரு
குருமார்களின் விறகுகள் புகையின்றி மிக நுட்பமாக எரிந்துகொண்டிருந்தன. அவர்களின் கூடாரத்திலிருந்து
உணவு விரிப்பொன்று தொங்கியது. நான் அவர்களுக்கு முகமன் உரைத்தேன். அவர்கள் என்னை நோக்கிப்
புன்னகைத்தனர். அவர்கள் நல்விதமாய்த் தோன்றிய ஷைகுகள். அவர்களில் ஒருவர் தனது உணவு
விரிப்பை எடுத்துத் திறந்தார். அதில் ஓர் அழகிய கிண்ணமும் தூய வெண்ணிற ரொட்டிகளும்
இருந்தன. அந்த ரொட்டிகளைப் பிய்த்துக் கிண்ணத்தில் போட்டுவிட்டு, கெண்டியை அதில் கவிழ்த்தார்.
எடையற்ற மங்கிய தைலம் போன்ற நுட்பமான ஆன்மிகப் பொருளொன்று அதில் வழிந்தது. நான் அதனை
உண்ணவேண்டும் என்பது போல் அவர் என்னிடம் குறிப்புக் காட்டினார். நான் கொஞ்சம் உண்டேன்.
நான் அவை அனைத்தையும் தின்று முடிக்கும் வரை அவர்களும் என்னுடன் கொஞ்சம் உண்டனர். ’அந்தக்
கெண்டியில் என்ன இருந்தது என்று உனக்குத் தெரியுமா?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார்.
“எனக்குத் தெரியாது” என்றேன். “இது கரடிக்குட்டியின் (விண்மீன் மண்டலத்தின்) தைலம்.
உனக்காக அதை நாங்கள் எடுத்து வந்தோம்” என்று அவர் சொன்னார். நான் எழுந்த போது அதைப்
பற்றிச் சிந்தித்தேன். அது, வானவருலகின் ஏழு அச்சாணிகளுக்கு (அக்தாப்) நேர்ப்பட்ட ஏழு
படித்தரங்களில் இப்பூமியில் அமைந்த இறைநேசர்கள் எழுவர் பற்றிய குறியீடு என்பதும் அவற்றின் படித்தரங்களின்
தூய சாராம்சத்திற்காக மேலான இறைவன் என்னைத் தேர்ந்திருக்கிறான் என்பதும் சில நிமிடங்கள்
கழித்தே எனக்குப் புரிந்தது. பிற்கு நான் கரடிக்குட்டி விண்மீன் மண்டலம் நோக்கித் திரும்பினேன்.
அவ்விண்மீன்கள் ஏழு ஜன்னல்கள் எனக் கண்டேன். அவை அனைத்திலும், மேலான இறைவன் என்னிடம்
தோன்றினான். ”என் இறைவா! என்ன இது?” என்று கேட்டேன். கற்பனைகள் அனைத்தையும் கடந்த மேலான
இறைவன் சொன்னான், “இவை ஏழும் எனது விதானத்தின் ஜன்னல்கள்.”
#20
விண்ணின் சாளரங்கள்
காலம் கடந்தது. ஒவ்வோர் இரவும் நான் அதைப் பற்றிச் சிந்தித்திருந்தேன்.
அவற்றின் மீதான காதலால் ஏங்கினேன். ஒரு நாள் இரவு, அவை திறந்திருக்கக் கண்டேன். மகத்தானவனும்
நிராமயமும் ஆன சத்தியப் பரம்பொருள் அவற்றிலிருந்து வெளிப்பட்டு என்னிடம் சொன்னான்,
“நான் இந்த ஜன்னல்களில் உன்னிடம் தோன்றினேன். இவை வானவரது பேருலகின் எழுபதினாயிரம்
கதவுகளாகும். அவை அனைத்தின் வழியாகவும் உன்னிடம் நான் தோன்றினேன். இதைப் புரிந்துகொள்.”
நான் என் பிரக்ஞையால் படைப்புக்களின் வசிப்பிடங்களைக் கடந்தேன். என் உயிர் வானங்களுக்கு
மேல் உயர்ந்தது. மேலான இறைவனின் வானவர்களை நான் ஒவ்வொரு வானத்திலும் கண்டேன். ஆனால்
இறைவனின் பிரசன்னத்தை அடையும் வரை அவர்களை எல்லாம் கடந்து போனேன். அவனின் வானவர்கள்
பூமியில் உள்ள அவனது படைப்புக்களை விடவும் மாபெரிய படைப்புக்களாக இருக்கக் கண்டேன்.
அவர்கள் தொழுதுகொண்டும், இறை நெருக்கத்தின் சாட்சியத்தில் திளைத்துக்கொண்டும், அவனது
புகழினை முழங்கிக்கொண்டும் இருந்தனர். பிறகு நானோர் ஒளிரும் உலகிற்குள் புகுந்தேன்.
அது என்ன என்று உசாவினேன். அவ்வுலகே அர்ஷ் எனப்படும் இறை விதானம் எனப்பட்டது. பரிமாணங்கள்
அற்றதொரு வெளியிடை ஏகி நித்தியத்தின் கதவுகளை அடைந்தேன். அங்கே நான் பாலைகளையும் பேராழிக்
கடல்களையும் பார்த்தேன். நான் அழிந்துகொண்டிருந்தேன். நான் மருண்டிருந்தேன், மறைந்துகொண்டிருந்தேன்.
சத்தியப் பரம்பொருள் எங்கிருந்து வந்தான் என்று வியந்திருந்தேன். ஏனெனில், எங்கு என்பதோ
எப்போது என்பதோ இல்லவே இல்லை.
#21
இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன்
ஆதியின் விடியல்களில் இருந்து
அவன் என் முன் நித்தியத்தின் வடிவில் தோன்றி என்னிடம் சொன்னான், “மறைவின் மறைவிலிருந்தும்
மேலும் மறைவின் மறைவிலிருந்தும் நான் உன்னிடம் வந்திருக்கிறேன்; உனக்கும் எனக்கும்
இடையில் எழுநூறாயிரம் ஆண்டுகள் பயணத்தொலைவு இருந்தது.” அவன் என்னிடம் பேரன்புடன் பேசினான்.
என்னைப் பிரியமுடன் நடத்தினான். கருணையாக இருந்தான். அவன் சொன்னான், “அனைத்துப் படைப்புக்களிலும்,
உனது காலத்தில் இந்தப் படித்தரத்திற்கு உன்னையே நான் தேர்ந்திருக்கிறேன்.” புனிதமான
விழுப்பங்களையும் முன்னூழியின் சிறந்த தன்மைகளையும் அவன் எனக்குத் திரைநீக்கினான்.
அழகில் ஒரு வல்லமையையும், வல்லமையில் ஓர் அழகையும் நான் கண்டேன். அதை ஒருபோதும் என்னால்
விவரிக்க இயலாது. தூய காதலும் விசேஷ ஞானமும் அவன் எனக்கு வழங்கிய அன்பளிப்புக்களில்
உள்ளவையாகும். என்னை அவன் தன் முன் வைத்தான். பிறகு, ஒவ்வொரு நொடியும் அவன் ஆயிரம்
வகையிலான மாட்சி பிரகாசம் ஒளிர்வு மற்றும் மேன்மைகளில் காட்சியளித்தான்.
Persian king shah tahmasp I
#22
பாரசீகத்தின் அரசன்
எனது இளமைக் காலத்தில் நள்ளிரவில் தியானிக்கும் வழக்கம்
கொண்டிருந்தேன். ஓர் இரவில் நான் தொழும்போது சத்தியப் பரம்பொருள் “மிக அழகான தோற்றத்தில்”
என்னிடம் வந்தான். அவன் என் முகத்தில் சிரித்து ஒரு கஸ்தூரி முடிப்பை என்னிடம் வீசினான்.
“இன்னும் அதிகமாகக் கொடு” என்று நான் கேட்டேன். அவன் சொன்னான், ”அவ்விரண்டும் அரசர்கள்.
ஆனால் நீயோ பாரசீகத்தின் அரசன்.”
#23
இறைவன் என்னும் பெருவள்ளல் (அல்-வஹ்ஹாப்)
ஓரிரவு யாமத்தில் விழித்திருந்தேன். உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
இடையில் அரை சுதாரிப்பில் இருந்தேன். எனது நிலைமாற்றத்தில் “யா வஹ்ஹாப் (வள்ளலே!)”
என்றழைத்தேன். ஒளியின் நகைகள் அணிந்த தோற்றத்தில் தனது வல்லமை மற்றும் அழகின் திருப்பண்புகளுடன்
சத்திய இறைவன் என்னிடம் தோன்றியான். மாபெரும் நிதியத்தை என்னிடம் பொழிந்தான். அஃது
அவனது சாஸ்வதமான திருமுகத்திலிருந்து பொழியப்பட்ட நிதியமாகும். அவன் சொன்னான், “வள்ளலே
என்றெனை நீ அழைத்ததால் வள்ளலிடமிருந்து இதனை நீ எடுத்துக்கொள். ஏனெனில், நான் மிகவும்
தாராளமான வள்ளல்தான்.”
#24
சக்தியிரவில் சொர்க்கம்
சக்தியின் இரவை (லைலத்துல் கத்ரு) இறைவன் எனக்குத் திரைநீக்கி, மனிதவுருவில்
வானவர்களை, சிரித்தவர்களாகவும் ஒருவரை ஒருவர் வாழ்த்தியவர்களாகவும் இருப்பதைக் காண்பிக்காமல்
ஒரு வருடமும் சென்றதில்லை. அவர்களில் ஜிப்ரீலும் ஒருவர். வானவருள் அவரே அதி அழகர்.
வானவர்களுக்குப் பெண்களது போன்ற கூந்தலுண்டு. அவர்களின் முகங்கள் செந்நிற ரோஜாக்களைப்
போலிருக்கும். சிலரின் தலைகளில் ஒளியாலான திரை இருக்கும். சிலரின் சிரங்களிலோ நவமணிகள்
பதித்த தொப்பிகள். சிலரோ முத்துக்களால் ஆன ஆடைகள் அணிந்திருப்பர். நான் அடிக்கடி அவர்களைத்
துருக்கியரின் தோற்றத்தில் கண்டேன். நான் ரிள்வானையும் சொர்க்கத் தோட்டத்தையும் கண்டு
அதனுள் நுழைந்தேன். குர்ஆனில் இறைவன் வருணித்திருப்பது போன்றே நானங்கு சுவன அழகிகளையும்
சிறார்களையும் கண்டேன். நான் கோட்டைகளுக்குள் நுழைந்து ஓடைகளில் பருகினேன். சொர்க்கத்
தோட்டத்தில் நான் கனிகளை ருசித்தேன். மேலும் அங்கே தர்பூஸ் பழமும் உண்டேன். இறைவிதானத்தையும்
பாதபீடத்தையும் (அர்ஷ் வ குர்ஸி) நான் அடிக்கடிக் கண்டேன். தெய்வீக ஆடைகட்டிய மேலான
இறைவனைப் பார்த்தேன். அங்கியணிந்ததொரு எஜமானன் போலிருந்தான். அவனது வல்லமை மற்றும்
மாட்சிமையில் நான் உருகினேன்.
#25
வல்லமையின் அங்கி
வானங்களை ஏதோவொன்று சுற்றி வளைத்திருப்பதை ஓரிரவு கண்டேன். செந்நிற
முத்தினைப் போல் அது ஒளிர்ந்தது. “இது என்ன?” என்று நான் கேட்டேன். “இதுதான் வல்லமையின்
அங்கி” என்று சொன்னார்கள். படைப்புக்களுக்கு அப்பாலான சத்திய இறைவன் என்னைத் தனது விதானத்திற்கும்
பாதபீடத்திற்கும் இடையில் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றான். அவனது கால்கள்,
ஆடையால் மூடப்படாது வெளிப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment