பகுதி ஒன்று
நினைவுகள்
திறப்பு
(#1-6)
#1.
இறைமேன்மைப் புகழ்ச்சி
பேரருளாளனும் அருங்கருணையாளனுமான
அல்லாஹ்வின் திருப்பெயரால். இறைவனுக்கே புகழ் உரியது.
அவனது
இருப்பின் மீது யாதொரு ஐயமும் விமரிசனமும் எழ இயலாது. மாறும் காலங்களாலும் யுகங்களாலும்
அவனது சுயத்திலும் பண்புகளிலும் எந்த மாற்றமும் நேராது.
அவனது
சாஸ்வதம் அளக்கப்படக்கூடிய ஆரம்பம் உடையதன்று. அவனது சுயமும் அதன் விளைவுகளுக்கு ஆட்படுவதன்று.
அவனது முன்னூழிகள் எல்லாம் கால இடைவெளிகளுக்கு அப்பால் புனிதமுள்ளவை. அவனது பின்னூழிகள்
எல்லாம் தற்கணம் மற்றும் தற்பொழுது ஆகியவற்றை விட்டும் தூயவை.
அவனது
சுயத்திலும் திருப்பண்புகளிலும் அவன் ஆதாரங்களுக்கும் அத்தாட்சிகளுக்கும் அப்பால் ஆனவன்
என்றபோதும் அவனை சாட்சியாகப் பார்த்திருப்போரால் அவனது சுயத்தாலும் திருப்பண்புகளாலும்
அறியப்படுகிறான்.
அவனது ஏகத்துவத்தின் களங்களில் நியதிகளும் நிகழ்வுகளும்
மறைந்துபோகின்றன. அவனது ஆட்சியின் மகிமையில் உணர்வுகளும் அறிவுகளும் அழிந்துபோகின்றன.
அவன் தன் சுயத்தால் கற்பனை ஒப்புவமைகளை விட்டும் மேலானவன். அறிவுகளும் கற்பனைகளும்
கிரபிப்பதை விட்டும் அவனது திருப்பண்புகள் மேலானவை.
இருக்கும்
பொருள் யாவினுக்கும் முன் தனது தெய்வீகத்தால் அவன் இருந்தான். அனைத்து நிலைகளும் கடந்து
போன பின்னும் அவன் தனது ஆற்றலால் இருப்பான்.
உயர்ந்த
உணர்வழுச்சிகளும் அவனது ஆழத்தை முழுமையாய் அளப்பதில்லை. தேடும் அறிவும் அவனது திருப்பண்புகளின்
வானத்தை அளப்பதில்லை. அவனது வல்லமையின் ரகசியங்களுக்குள் எதுவும் துளைத்துப் புக முடியாது.
அவனது அழகின் ஒளியை உள்வாங்கிக்கொள்வது என்பதும் இல்லை.
அவனது
மேன்மையின் நுட்பங்கள் பார்வையை அழித்துவிடுகின்றன. அவனது மாட்சிமையின் தாக்கம் சிந்தனையைத்
துடைக்கிறது. அவனது சாஸ்வதத்தின் ஆற்றல் தற்காலிகப் புரிதல்களைத் திகைக்க வைக்கிறது.
அவனது ஒருமையின் கோபம் இடவெளியின் எல்லைகள் மீது மிகைக்கிறது.
அதி தூய
பண்புகளும் மிக அழகிய பெயர்களும் நனி சிறந்த குணங்களும் அவனுடையதே. அவன் தன் அறிவால்
அறிகிறான், தன் சக்தியால் ஆற்றலுடன் இருக்கிறான், தன் ஜீனவால் ஜீவிக்கிறான், தன் கேள்வியால்
கேட்கிறான், தன் பார்வையால் பார்க்கிறான், தன் பேச்சால் பேசுகிறான், தன் நாட்டத்தால்
நாடுகிறான்.
அவன்
ஊழிக்கு முந்தையனும் பிந்தையனும் ஆவான். அவன் இருப்பவன், ஆனால் காலத்திலிருந்து அல்ல;
அவன் உள்ளவன், ஆனால் இல்லாமையிலிருந்து அல்ல. தனது சுயம் மற்றும் திருப்பண்புகளால்
அவன் எப்பக்கமிருந்து நோக்கினும் ஒன்றேயான கண்ணாடியாக இருக்கிறான். அவனது ஒருமை என்பது
இணைதல் அல்லது பிரிதல் என்பதிலிருந்து அல்ல. அவனே உலகிற்கு உள்ளமை நல்கினான், ஆனால்
தனிமையிலிருந்து அல்ல.
எப்பொருளும்
அவனுக்கு ஒப்புவமை அல்ல. அழியக்கூடிய படைப்புக்கள் அவனைப் போன்றன அல்ல. அவன் தனது மாட்சிமையால்
ஒப்பு மற்றும் இணை ஆகியவற்றை விட்டும் மேலானவன். கற்பனைகள், கோட்பாடுகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு
அப்பால் அவன் தனது சுயத்தின் பிரகாசத்தால் ஒருவனாக இருக்கிறான். வருணனைகள் அவனைத் திறந்து
காட்டுவதில்லை. முயற்சிகள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்துவதில்லை.
#2
படைப்புக்களின் திறப்பும் இறைத்தூதர் மீதான வாழ்த்தும்
அவன் மனிதர்களுக்கு பக்தியையும் ஆன்மிக ஞானத்தையும் கொணர்ந்தான். தனது
ரட்சகத் தன்மையால் அவர்களை பணிவுக்கும் நம்பிக்கைக்கும் அழைத்தான். தனது ஆட்சியின்
கருவூலத்திற்குள் அவன் விதானத்தையும் பாதபீடத்தையும் கொண்டு வந்தான்.
தன் அதிகாரத்தின்
வெளியை இடத்தில் வைத்தான். வானவர்க்கும் உயிர்களுக்கும் ஆடுகளம் அமைத்தான். வருந்துநர்க்காக
நெருப்பையும் மகிழ்நர்க்காகத் தோட்டத்தையும் படைத்தான்.
நெருக்கத்தின்
கூடாரக் கயிறுகள் கொண்டு வானங்களை விரித்தான். அண்ட வெளியின் எரியும் விளக்குகளால்
அவற்றை அலங்கரித்தான். புகழ்ச்சிக்காரர்க்கு விண்மீன்களைத் தொழுகை திசையாகவும் தியானத்
திடலாகவும் ஆக்கினான். பக்தர்களுக்கும் அரசர்களுக்கும் பூமியை விரித்தான். கல்முளைகளின்
கடினத்தால் அவற்றை ஸ்திரப்படுத்தினான். நளினமுள்ள மரங்களால் அதனை அலங்கரித்து ஊற்றுக்களும்
நதிகளும் பாய்ந்தோடச் செய்தான்.
புனிதத்திற்கும்
தூய்மைக்கும் ஆன்மிக ஆளுமைகளைத் தனியாக்கி வைத்தான். தனது வெளிப்பாட்டுக்காகவும் தீர்க்கதரிசனத்துக்காகவும்
தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் தேர்ந்தான். பரவசங்களுக்கும் ஞானத்திற்கும் ஞானியரைத்
தேர்ந்தெடுத்தான். நல்லோர்க்கு அவன் ஏக்கம், உணர்வெழுச்சி மற்றும் காதலைக் கொண்டுவந்தான்.
தீர்க்கதரிசிகளுக்கும்
தூதர்களுக்கும் சாட்சிமையும் தரிசனமும் தந்து கண்ணியப்படுத்தினான். திரைநீக்கங்கள்
மற்றும் தெளிவுகள் கொண்டு ஞானியரது உட்பிரக்ஞையின் கண்களைத் திறந்தான். அவற்றைப் பல்வேறு
தளங்கள், உயர்வுகள் மற்றும் படித்தரங்களில் அமைத்தான்.
ஆன்மிக
அறிவு, திரைநீக்கங்கள், அரிய ஞானம் மற்றும் அருள்கள் ஆகியவற்றின் பெருங்கடல்களுக்குள்
மூழ்கி நீந்துபவரும், தீர்க்கதரிசிகள் மற்றும் திருத்தூதர்களின் தலைவரும், ஞானியர்க்கும்
நல்லோருக்கும் தூய முன்மாதிரியும் ஆன முஹம்மது அவர்களின் மீது அல்லாஹ்வின் பேரருள்
உண்டாவதாக; மேலும், அன்னாரின் தூய சந்ததியினர் மற்றும் உயர்ந்த சகாக்களின் மீதும் உண்டாவதாக.
#3
தன் காதலர்க்கு இறைவனின் சுய வெளிப்பாடு
பரம்பொருளான மேலான இறைவன் தனது தூதர்கள் தீர்க்கதரிசிகள் வானவர்கள்
மற்றும் ஞானியர் ஆகியோர்க்குத் தன்னை பற்றி விசேஷமான அடையாளங்களால் கற்பித்தான். அவ்வடையாளங்கள்
விதானம் முதல் பூமி வரை உள்ளன. அவர்களுக்கு அவன் ஆதியிலேயே தனது அடையாளங்களைக் காட்டினான்.
அந்த அருள் மற்றும் வாத்ஸல்யத்தால் அவர்கள் அவனை நேசித்தார்கள். எனினும் அவர்களுக்குத்
தான் வழங்கியது பற்றி அவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் அது அவர்களது படைப்பின
நிலைக்குக் காரணமாயிருந்தது. எனவே அவன் அவர்களுக்குத் தனது இருத்தலின் ஒளிகளைத் திறந்து
காட்டினான், தனது வல்லமையின் அஞ்சனத்தை அவர்களின் கண்களில் தீட்டினான், தனது வானவருலகின்
சூரியக் கதிர்களை அவர்களுக்குக் காண்பித்தான். இப்போது அவர்கள் அவனை ஒரு விசேஷமான காதலால்
நேசித்தார்கள். ஆனால் உண்மையில் அக்காதல் முடிவு தொடங்கியதன் காதலாக இருந்தது. பின்னர்
அவன் அவர்களுக்குத் தனது அழககு மற்றும் வல்லமையின் நுட்பங்களைத் திரைநீக்கினான். அதனால்
அவனின் சுயம் மற்றும் திருப்பண்புகள் உருக்கொண்டன.
அவர்கள் அவனை அறிந்து, கால ஓட்டத்தாலும் துன்பங்களாலும் சோதனைகளாலும்
மாறிவிடாத மேன்மையான உண்மையான காதலால் நேசித்தார்கள். திரையற்ற உண்மையின் சாட்சிமை
கொண்டு அவர்கள் அவனுக்கு சாட்சியானார்கள். பிறகு அவன் அவர்களை விளித்து, அவர்களிடம்
அறிதான ஞானங்களைப் பேசினான். தனது பெயர்களின் உச்சாடனத்தை அவர்களுக்கு போதித்தான்.
தனது திருப்பண்புகள் மற்றும் குணாம்சங்கள் பற்றிய நுட்பங்களை அவர்களுக்கு அறிவித்தான்.
தனது நெருக்கத்தின் ரோஜா மற்றும், அணுக்கங்கள் மற்றும் இணைதல் ஆகியவற்றின் மூலிகைகளின்
நறுங்காற்றை அவர்கள் முகரும்படிச் செய்தான்.
தனது தாராளமான அந்தரங்கமான உரையாடல்களால் அவன் அவர்களிடம் விரிந்திருந்தான்.
தனது ரகசியங்களைத் திரைநீக்கினான். தன் அழகால் நெருங்கியிருந்தான். அவர்கள் தனது வல்லமையின்
காதலர்களாய் இருக்கும்படிச் செய்தான். இப்படித்தரங்களால், தவப் பயிற்சிகள் மற்றும்
முயற்சிகளின் சுமையை அவர்கள் முடிந்த வரை சுமந்தனர். அவர்கள் அவனது இருத்தலின் மணப்பெண்கள்
ஆயினர். அவனது பேரரசு மற்றும் வானவருலகின் பிரஜைகள் ஆயினர். அவர்களில் சிலர் சீடர்கள்,
சிலர் ஞானியர், சிலரோ அடையாளங்களின் மக்கள், மேலும் சிலரோ உரைகள் ஆலோசனைகள் மற்றும்
அந்தரங்க உரையாடல்களின் மக்கள், மேலும் சிலரோ சாட்சியுரைத்தல் மற்றும் கோட்பாடுகளின்
மக்கள், மேலும் சிலரோ ஆன்மிக ஞானம் மற்றும் காருண்யத்தின் மக்கள், மேலும் சிலரோ இறையறிவு
மற்றும் மெய்ஞ்ஞானத்தின் மக்கள், மேலும் சிலரோ ஏகம் ஒருமை மற்றும் தனிமை ஆகியவற்றின்
மக்கள், மேலும் சிலரோ தனித்தன்மையினர், மேலும் சிலரோ இணைவினர்.
முன்னூழிகள்
மற்றும் ஊழிகளின் பெருங்கடல்களைக் கடந்து அவர்கள் தம் இலக்கினை அடைந்தால் அவர்கள் பிதற்றும்
களியர்கள் ஆகின்றனர். திரைநீக்கம் மற்றும் பரவசங்களால் மறைவிலிருந்து ஏற்படும் அபாயக்
கொந்தளிப்புக்களின் முன் அவர்கள் அமைதி காத்து உறுதியுடன் நிற்பரேல் அவர்கள் தெளிஞர்கள்
ஆகின்றனர். களியேற்றத்தின் பின்னும் அவர்கள் உறுதியுடன் நிற்பார்கள் எனில் இறைவன் அவர்களைக்
காலத்தின் ஒளிவிளக்குகளாய், ஆன்மிக அறிவின் அடையாளங்களாய், சத்திய எதார்த்தத்தின் படிநிலைகளாய்,
சமயச் சட்டத்தின் குறிப்பலகைகளாய் ஆக்குகின்றான். இந்தப் அக்நிலைகள் மற்றும் படித்தரங்கள்
ஆகியவற்றின் மக்களில் இறைவன் எம்மையும் உம்மையும் ஆக்கி வைப்பானாக.
#4
ஒரு நண்பன் வழி கேட்கிறான்
ஒரு முறை, இறைக்காதலர் ஒருவர் (படைப்புக்களையும் காலத்தையும் முதுகின்
பின் ஒதுக்கிவிட்டு, தனிமையிலிருந்து ஆத்மஞானத்தையும் இணைவையும் தேடுகின்ற நேர்மையாளர்களுள்
ஒருவர்), எனக்கு நேரும் திரைநீக்கங்கள் மற்றும் தரிசனங்களின் ரகசியங்களைப் பற்றியும்,
வானவருலகத்து மணப்பெண்கள் பற்றியும், எனக்குத் திறக்கப்படும் சக்தியொளிகளின் அற்புதங்கள்
பற்றியும், இறை வெளிப்பாட்டின் நுட்பங்கள் பற்றியும், ஒருவனுக்குத் தெய்வீக ஆடைகள்
உடுத்தப்படும் படித்தரத்தின் இறங்குதல் பற்றியும், எனது பரவசங்களிலும் போதையிலும் மற்றும்
எனது தெளிவிலும், இரவும் பகலும் நிகழும் இறை சுயத்தின் நுட்பங்களின் தூய திரைநீக்கம்
பற்றியும், மேலான இறைவன் தனது பிரசன்னத்திலிருந்து எனக்குத் திறந்து கொடுத்த மறைவான
அறிவுகளைப் பற்றியும் தனக்குச் சொல்லுமாறு மிகவும் அன்புடன் கேட்டார். அதுவே அவருக்கு
அவரது பாதைக்கான பிரகடனமாகவும் மறைவுலகில் அவரது இதயத்திலும் ஆன்மாவிலும் அவருக்கான
அணுக்கத் தோழனாகவும் இருக்கும் என்பதற்காக.
#5
இறைநேசம் மற்றும் தூதுத்துவம் பற்றி
இது பற்றி அவருக்கு நான் பதிலளித்தேன். அவரது கோரிக்கையை ஏற்றேன்.
நான் சொன்னேன், “இது எனக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், சராசரி அறிவுகொண்ட மக்கள்
அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இந்த ஆன்மிகப் படித்தரங்களை எல்லாம் வெளியிடுவது
மிகவும் சிக்கலானது. அவர்கள் நம்மைத் தூற்றி இதனைக் கண்டனம் செய்கிறார்கள். அவர்கல்
துயரப் பெருங்கடலில் விழுகிறார்கள். முஹம்மது (ஸல்...) அவர்களின் மக்கள் மறுப்பிலும்
பகைமையிலும் விழுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் அழிவார்கள். ஏனெனில், இறைநேசர்களின்
திரைநீக்கங்களை நம்பாத ஒருவன் இறைத்தூதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் அற்புதங்களை
நம்பாதவனே ஆவான். ஏனெனில், இறைநேசம் மற்றும் இறைத்தூதுத்துவம் ஆகியவற்றின் கடல்கள்
ஒன்றுள் ஒன்று ஊடாடுகின்றன. மேலான இறைவன் சொல்கிறான், “அவனே இரு கடல்களையும் ஒன்றோடொன்று
சந்திக்கச் செய்தான்” (55:19).
இற்றை நாட்களில், சூஃபிகளின் அனுபவ வெளிப்பாடுகளில், அரிதின் அரிதான
அறிவுகளின் நிகழ்வுகளும் பல்வேறு வடிவங்களிலான அற்புதமான திரைநீக்கங்களும் இருந்துள்ளன.
ஏனெனில், அவன் தனது தூதர்களுக்கு தன்னை வெளிக்காட்டியது போல, ”அவர் நெருப்பின் அருகே
வந்தபோது, பாக்கியம் பெற்ற அப்பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் ஒரு மரத்திலிருந்து
’மூசாவே! நிச்சயமாக நானே நான்தான் அல்லாஹ், அகிலங்களின் ரட்சகன்’ என்று கூப்பிடப்பட்டார்”
(28:30) என்பதாக கலீம் (பேசுபவர்) ஆன மூசா (அலை...) அவர்களைப் பற்றி அவன் சொன்னது போல,
சத்தியப் பரம்பொருள் ‘படைப்பாளன்’ என்னும் போர்வையில் தன்னையே வெளிப்படுத்தியுள்ளது.
இதனைப் போன்றே, அவன் தனது காதலரான முஹம்மது (ஸல்...) அவர்களுக்குத் தனது அழகை வெளிப்படுத்தியது
பற்றி ”ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இலந்தை மரத்தருகே; அதன் அருகிலேயே மஃவா என்னும்
சொர்க்கம் இருக்கிறது; அப்போது அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன”
(53:14-16) என்பதாகச் சொன்னான். மேலும், இதனைப் போன்றே, இறையாடையின் திரைநீக்கம் பற்றி
முஹம்மது (ஸல்...) அவர்கள் சொன்னார்கள், “நான் எனது ரட்சகனை மிகவும் அழகிய தோற்றத்தில்
கண்டேன். அப்போது இறைவன் என்னிடம் ‘முஹம்மதே கேளுங்கள்’ என்றான். எனவே நான் ‘இறைவா!
நான் உன்னிடம் சொர்க்கத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் கேட்கிறேன்’ என்று
சொன்னேன். அதற்கு அவன் சொன்னான், ‘முஹம்மதே! (வானவர்களின்) மிக உயர்ந்த சபை எதனைப்
பற்றி விவாதிக்கிறது?’ (காண்க: 38:69). நான் சொன்னேன், ‘ ரட்சகனே! நீயே நன்கு அறிவாய்’.
பின்னர் அவன் தனது கையை எனது தோளில் வைத்தான். எனது நெஞ்சிலொரு குளுந்த கூச்சத்தை உணர்ந்தேன்.
அப்போது நடந்தவையும் நடக்கப் போகின்றவையும் நான் அறிந்தவை ஆயின.”
#
6 கதை ஆரம்பமாகிறது
எனவே நான் சொன்னேன், “என் நண்பனே! இந்த அரிதான படித்தரங்கள் பற்றியும்
இந்த உயர்வான அகநிலைகள் பற்றியும் நீ கேட்டதற்கு விடை சொல்ல நான் மிகவும் தாமதித்துவிட்டேன்.
நான் எனது வாலிபத்தில், எனது போதை நாட்களில், எனது ஊதாரித்தனமான பொங்கும் பருவத்தில்
இருந்தேன். எனது இதயம், ஆன்மா, பிரக்ஞை மற்றும் அறிவில் வானவருலகின் திரைநீக்கங்களும்
சக்தியின் அற்புதமான வெளிப்பாடுகளும் நிகழ்ந்தன.
நான் உன்னதமான ஆதிப் பெருங்கடலில், சாஸ்வதத்தில், இறை பிரசன்னத்தில் நீந்தினேன். இறைவனின்
சுயம் மற்றும் பண்புகளின் திரைநீக்கத்தைக் கண்டறிந்தேன். அதனைப் பெரும் பாறைகளும் உயரச்
சிகரங்களும்கூட தாங்க முடியாது. எனது வாழ்வின் தொடக்கத்திலிருந்து இப்போது வரை எனக்கு
நிகழ்ந்தவை அனைத்தையும் நான் எழுதினால் அது நூற்கள் மற்றும் பக்கங்களின் பெருஞ்சுமைப்
பொதி ஆகிவிடும்.”
No comments:
Post a Comment