Friday, July 28, 2017

ஒரு சூஃபியின் டைரி - 2

ஆரம்ப நாட்கள் (#7-13)

Image result for dargah boy
photo by manyak jindal.

#7 கடந்த கால அனுபவத்தை விவரித்தல்
      இந்த ரகசியங்களின் ஆரம்பங்கள் என் இதயத்தில் நேர்ந்த போது எனக்குப் பதினைந்து வயது.  இப்போது நான் ஐம்பத்தைந்து. எனது திரைநீக்கங்கள் மற்றும் எனது நுட்பமான தரிசனங்கள் ஆகியவற்றின் ரகசியங்களை, உனக்கு நிகழாது தப்பியவற்றை எப்படி உனக்கு நான் விளக்குவேன்? ஆனால், கடந்த காலத்தில் எனக்குத் திரைநீக்கப்பட்ட சில விஷயங்களை உனக்கு நான் விளக்குவேன், அதன் பின்னர் என்ன நடந்தது என்றும் சொல்வேன், மேலான இறைவன் நாடினால்.

Image result for sufi orders of west
#8 மிக ஆரம்பக் காலத்து நிமித்தங்கள்
      புரிந்துகொள். உன் புரிதலை இறைவன் ஆசீர்வதிப்பானாக. நான் வழிதவறிய குடிகார முட்டாள்களின் மத்தியில் பிறந்தேன். மூன்று வயது வரை சந்தையின் பொதுமக்களால் வளர்க்கப்பட்டேன்.  ”வெருண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கின்றனர்; சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்)” (74:50-51). என் இதயத்தில் ஒரு கேள்வி எழுந்தது, “படைப்புக்களின் கடவுளான உன் இறைவன் எங்கே?” எனது இல்லத்தின் முற்றத்தில் எமக்கொரு பள்ளிவாசல் இருந்தது. நான் சில சிறார்களைச் சந்தித்து “உமது இறைவனை நீங்கள் அறிவீரா?” என்று கேட்டேன். “அவனுக்குக் கைகளோ கால்களோ இல்லை என்று சொல்கிறார்கள்” என்று அவர்கள் பதில் அளித்தனர். மேலான இறைவன் உறுப்புக்கள் மற்றும் பாகங்களை விட்டும் தூய்மையானவன் என்று அவர்கள் தமது பெற்றோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கேள்வியை நான் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எனது இதயத்தில் மட்டற்ற ஆனந்தம் நிறைந்தது. இறைவனின் திருப்பெயர்களை உச்சாடனம் (திக்ரு) செய்யும்போதும் தியானத்தின் ஆழ் நிலைகளிலும் ஏற்படும் ஒளியேற்றங்களைப் போன்றதொரு அனுபவம் அப்போது எனக்கு நேர்ந்தது. ஆனால் அதன் எதார்த்தம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

Image result for sufi love
#9 காதலின் கண்விழிப்பு
      நான் ஏழு வயதை அடைந்தேன். அவனை நினைப்பதும் அடிபணிவதுமான ஒரு நேசம் என் நெஞ்சில் உண்டாயிற்று. நான் எனது பிரக்ஞையில் தேடி அது என்னவென்று அறிந்துகொண்டேன். பிறகு என் இதயத்தில் தீவிரக் காதல் எழுந்தது. உக்கிரமான காதலில் என் உள்ளம் உருகிற்று. அக்காலத்தில் நான் காதலின் பித்தேறிக் கிடந்தேன். முன்னூழியின் நினைவெனும் ஆழியிலும் புனிதத்துவத்தின் நறுமணக் காற்றினிலும் பாய்ந்து மூழ்குபவனாக இருந்தேன். பின்னர், எவ்வொரு சிரமமமும் இன்றி பரவசங்களின் தொடரலைகள் என்னில் எழுந்தன. ஒரு மெல்லுணர்வு என் இதயத்தை அதிர்வித்தது. என் கண்கள் நீரால் நிரம்பின. அந்நிலை இறைவனின் திருநாம தியானமே அன்றி வேறில்லை என்பதை நான் அப்போது அறியவில்லை. அக்காலத்தில் முழு இருத்தலையும், அழகிய முகங்களால் அது நிறைந்திருப்பது போன்று கண்டிருந்தேன். அப்பருவத்தில் தனிமைகள், தொழுகைகள், தியானங்கள் மற்றும் மாபெரும் குருமார்களைச் சந்தித்தல் ஆகியவற்றின் மீது எனக்குப் பேரார்வம் வளர்ந்து வந்தது.


#10 ஆன்மிகப் பாதையில் நுழைதல்
      எனக்குப் பதினைந்து வயது ஆனபோது மறைவுலகிலிருந்து விளிக்கப்பட்டது போல் நேர்ந்தது. என்னிடம் சொல்லப்பட்டது, “நீ ஓர் இறைத்தூதர்.” நான் என் மனதினுள், “என் பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள், முஹம்மதுக்குப் பிறகு வேறு இறைத்தூதர் கிடையாது என்று. நான் புசித்தும் பருகியும், இயற்கை உபாதைகளுக்குச் சென்றுகொண்டும், அந்தரங்க உறுப்புக் கொண்டவனாகவும் இருக்கையில் நான் எப்படி ஓர் இறைத்தூதனாக இருக்க முடியும்?” என்று சொல்லிக்கொண்டேன். ஏனெனில், இறைத்தூதர்களுக்கு இத்தகைய விஷயங்கள் கிடையாது என்று கருதினேன். காலம் சென்றது, நான் தீவிரக் காதலில் தொலைந்து போனேன். மதியத் தொழுகைக்காக என் கடையிலிருந்து எழுந்து அங்க சுத்திக்கான நீர் தேடிப் பாலைவனத்திற்குச் சென்றேன். ஓர் இனிய குரலைக் கேட்டேன். எனது பிரக்ஞையும் இதயமும் துடித்தன. நான் சொன்னேன், “பேசுபவரே, என்னுடன் இரும்!” அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறினேன். குருமார்களின் உடையணிந்த ஓர் அழகிய நபரைக் கண்டேன். என்னால் பேச இயலவில்லை. இறைவனின் ஏகத்துவம் பற்றி அவர் ஏதோ சொன்னார். ஆனால் அதைப்பற்றி நான் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஒரு பிதற்றலும் திகைப்பும் என்னைப் பீடித்தன.

Related image
#11 பாலைவனத்திற்கு ஓடுதல்
      நான் அஞ்சினேன். மக்கள் என்னைச் சுற்றிலும் உலவினர். ஒரு பாழ் மண்டபத்தில் இருந்தேன். இரவு வரை அங்கேயே தங்கினேன். பிறகு அவ்விடம் நீங்கி எனது கடைக்குத் திரும்பினேன். விடியும் வரை அங்கேயே பரவத்திலும் சிரமத்திலும் பெருமூச்சுக்களும் கண்ணீரும் கொண்டிருந்தேன். நான் மருண்டு திகைத்தேன். அனிச்சையாக எனது நாவில் சொற்கள் எழுந்து வந்தன, “என் ரட்சகனே! உனது மன்னிப்பு! என் ரட்சகனே! உனது மன்னிப்பு!” (குர்ஆன்:2:285). எனது நா அசைவு அற்றது. ஏதோ பல நாட்களாக அமர்ந்திருப்பது போல் அப்படி இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் அப்படி அமர்ந்திருந்தேன். பிறகு என்னைப் பரவசம் ஆட்கொண்டது. பணப்பெட்டியையும் கடையிலிருந்த சரக்குகளையும் தட்டுப்பாட்டிற்கான சேமிப்புக்களையும் சாலையில் வீசியெறிந்தேன்.  என் ஆடைகளைக் கிழித்தபடி பாலைக்கு ஓடினேன். ஒன்றரை வருடங்கள் அந்நிலையில் இருந்தேன், பிதற்றலும் திகைப்பும் மிகைத்தவனாக, அழுகையிலும் பரவசத்திலும். பெரும் களிப்புக்களும் மறைவான காட்சிகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தன. அப்பரவசங்களில் நான் வானங்கள பூமி மலைகள் பாலைகள் மற்றும் ஒளியாலானவை போன்ற மரங்கள் ஆகியவற்றைக் கண்டேன். பிறகு அக்கொந்தளிப்பு மெல்ல அடங்கி அமைதியானேன்.

#12 முதல் திரைநீக்கம்
      எனது வாழ்வின் ஆரம்பக் காலத்துத் திரைமூடலை விட்டும் நான் மீண்டுவிட்டேன். சூஃபிகளுக்குத் தொண்டு செய்ய ஏங்கினேன். மிக அழகிய கேசம் இருந்தபோதும் என் தலையை மழித்துக்கொண்டேன். சூஃபிகளிடம் சேர்ந்தேன். அவர்களின் பணிகளில் ஊழியம் செய்தேன். கடுமுயற்சிகளும் ஆன்மிகப் பயிற்சிகளும் மேற்கொண்டேன். குர்ஆனைப் பயின்று மனனமும் செய்து முடித்தேன். எனது பொழுதுகள் பெரிதும் சூஃபிகளுடன் பரவசத்திலும் ஆன்மிக நிலைகளிலும் கழிந்தன. ஆனால், ஒரு குறிப்பிட்ட நாள் வரை மறைவின் திரைநீக்கம் எனத் தக்க எதுவும் எனக்கு நிகழாதிருந்தது. அந்த நாள் வந்தபோது, மறைவுலகை தியானித்தபடி நான் கூரை மீது அமர்ந்திருந்தேன். அப்போது நான் இறைத்தூதர் (ஸல்...) அவர்களை, அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலீ (இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) ஆகியோருடன் என் முன் வரக் கண்டேன். அதுவே எனது முதல் திரைநீக்கம்.

Related image
#13 குருவைத் தேடல்

      ஆனால் அப்போது எனக்கொரு குரு இருக்கவில்லை. நான், பாசாவில் இருந்த எனது வீட்டிற்குத் திரும்பினேன். ஈடேற்றம் அடைந்துவிட்ட ஒரு குருவை, வழிகாட்டியைத் தேடினேன். மேலான இறைவன் என்னை ஷைகு ஜமாலுத்தீன் அபில் வஃபா இப்னு ஃகலீல் அல்-ஃபசாயீ (இறைவன் அவர் மீது கருணை புரிவானாக) அவர்களிடம் கொண்டு சேர்த்தான். அவருமே ஆரம்ப நிலையில்தான் இருந்தார். அவரின் சகவாசத்தில் இறைவன் எனக்கு வானவருலகின் கதவுகளைத் திறந்ததுடன் தடங்கலற்ற திரைநீக்கங்களையும் தந்தான். அவரது சகவாசத்தில் ஆன்மிக நிலைகள் மறைஞானங்கள் மற்றும் சமய ரகசியங்களுடன் பாய்ந்திருந்தன, எண்ணற்ற பரவசங்களும் திரைநீக்கங்களும் நிகழ்ந்து முடிக்கும் வரை.


No comments:

Post a Comment