(ஞானக் கதைகள் நூறு)
ஆங்கில மூலம்
இத்ரீஸ்
ஷா
தமிழில்
ரமீஸ்
பிலாலி
நூறு கதைகள் (The Hundred Tales) என்னும் இந்நூல்,
ஒரு மரபான தொண்டர் வரலாறு (hagiography). எழுநூறு ஆண்டுகளாக சூஃபிகளால் தமது ’பாடத்திட்டத்தின்’
ஒரு பகுதியாகப் பயிலப்பட்டு வந்த ஒரு செவ்வியல் நூல் இது. அவர்களில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது
கிறித்துவர்களும் யூதர்களும் அடங்குவர். இதன் நாயகர் மவ்லானா ரூமி. அவரின் இறுதி ஊர்வலம்
அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட ஒன்றாக அமைந்தது. அவர்கள் எல்லோரின் நாவும் ‘மௌலானா’
(எம் தலைவர்) என்றே உச்சரித்தபடி இருந்தன.”
-டோரிஸ்
லெஸ்ஸிங்(நோபல் பரிசாளர், 2007).
”சராசரியான புலக்காட்சிகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை
உருவாக்குவதற்கு உதவியாக சூஃபிகளால் பயன்படுத்தப்படும் நூற்களில் இதுவும் ஒன்று.”
-ஜான்ஸ்
வான் கெல்தர்
(சைக்காலஜி டுடே).
மவ்லானா (ஜலாலுத்தீன் ரூமி) அவர்கள்
ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கும்போதே அவ்வப்போது ஏதேனும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியுற்ற
மனதுடன் கட்டிலின் மீது நின்று கொண்டிருப்பார்கள். ஆன்மிக ஆளுமைகளான ஜிப்ரீல், கன்னி மேரி, இபுராஹீம்
நபி போன்றோரைப் பார்த்த தரிசனங்கள் அவை. அவர் அப்படிப்பட்ட நிலையில் நிற்கும் போதெல்லாம்
அவரின் தந்தையே அவரை அமைதிப் படுத்துவார். அந்தத் தந்தை, இறைஞானி பஹாவுதீன் அவர்கள்,
சிறுவன் ரூமிக்கு அப்போதே “கடவுளால் வடிவமைக்கப்பட்டவர்” என்று பட்டம் வழங்கினார்!
ஆஃப்கானிஸ்தானில் உள்ள பல்க் என்னும் பகுதியில் 6 ரபியுல் அவ்வல் 604 ஹிஜ்ரி
(30-09-1207 கி.பி) அன்று ரூமி பிறந்தார்.
அறிவிப்பு: ஷைகு பதுருதீன் நக்காஷுல் மவ்லவி சொல்கிறார், “(மவ்லானா
ரூமியின் மகன் சுல்தான் வலத் என்னிடம் சொன்னார், ‘பஹாவுதீன் வலத் அவர்களின் சொந்தக்
கையெழுத்தில் எழுதப்பட்ட குறிப்பேட்டில் நான் ஒரு சம்பவத்தைப் படித்திருக்கிறேன். ரூமிக்கு
ஆறு வயது நடந்தபோது அவர் ஒத்த வயதுள்ள தனது நண்பர்களுடன் மொட்டை மாடியில் விளையாடிக்
கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவன், ‘வாருங்கள், இந்த மாடியிலிருந்து அடுத்த மாடிக்குத்
தாவலாம்’ என்று சொன்னான். அப்போது மவ்லானா ரூமி சொன்னார்கள், ‘நீ சொல்லும் விளையாட்டு
பூனைகளும் நாய்களும் விளையாடுவது. அது மாதிரி கீழான விளையாட்டுக்கள் நமக்கு அழகல்ல.
வாருங்கள், வானத்தின் மீது தாவிச் சென்று வானவர்களைப் பார்ப்போம்.’ இதைச் சொன்னவுடன்
அவர் சிறுவர்களின் பார்வையை விட்டும் மறைந்துவிட்டார். பயந்து போன சிறுவர்கள் கதறிக்
கூவினார்கள். அவ்விடத்திற்குப் பெரியவர்கள் ஓடி வந்தனர். எல்லோருக்கும் அந்த நிகழ்வு
தெரிய வந்தது.
சிறிது
நேரம் கழித்து ரூமி அங்கே தோன்றினார். அவரின் நிறம் சற்றே வெளிறியிருந்தது. அவர் பயந்தவராகக்
காணப்பட்டார். அவர் சொன்னார், ‘நான் உங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பச்சை நிற ஒளிர்
உயிர்கள் சிலர் வந்து வானத்திற்கு மேலே என்னைத் தூக்கிச் சென்றார்கள். வானில் மிதக்கும்
கோளங்களின் காட்சிகளைக் காட்டினார்கள். என்னைக் காணாமல் நீங்கள் எல்லாம் கூச்சல் போடுவதை
நான் கேட்டேன். அவர்கள் என்னை மீண்டும் உங்களிடம் கொண்டு வந்தார்கள்.”
அந்தச்
சின்னஞ் சிறு வயதிலும், ஆன்மிகப் பெரியோர்களைப் போலவே, இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை
அல்லது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ரூமி சாப்பிட்டார்.’”
இன்னொரு
அறிவிப்பில் மௌலானாவின் தந்தை பஹாவுத்தீன் வலத் தனது மகனைப் பற்றிச் சொல்லும்போது சிறந்த
பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்றும், ஓர் உண்மையான இளவரசர் என்றும் குறிப்பிட்டு,
ஏனெனில் ரூமியின் பாட்டி ஷம்சுல் அயிம்மா அவர்கள் சம்சுத்தீன் ஷரக்ஸியின் மகளாவார்;
அவர் ஒரு சய்யிதா (அதாவது, நபிகள் நாயகத்தின் வமிசத்தில் உள்ளவர்); அவரின் வம்சாவழி
நான்காம் கலீஃபாவான ஹழ்ரத் அலீயிடம் சேர்கிறது; ரூமியின் அம்மா பல்ஃகின் அரசரான குவாரஸ்ம்ஷாவின்
மகள்; மேலும் பஹாவுத்தீனாகிய எனது தாத்தாவின் அம்மா பல்ஃக் நாட்டின் இளவரசிதான் என்று
சொல்கிறார். இவ்வாறு, உலகியல் மற்றும் ஆன்மிக நிலைகளில் மவ்லானா ரூமிக்கு மேலான தொடர்புகள்
இருந்தன.
இன்னொரு
அறிவிப்பில் மவ்லானா ரூமி சொல்கிறார், அவருக்கு ஏழு வய்தாக இருக்கும்போதே குர்ஆனின்
108வது அத்தியாயமான “அல்-கவ்ஸர்” (அபிவிருத்தி)-யை ஓதி வந்திருக்கிறார்:
”நிச்சயமாக நாம் உமக்கு நன்மைகளின் அபிவிருத்தியை
வழங்கியுள்ளோம். எனவே, உமது ரட்சகனுக்காகத் தொழுவீராக! பலியும் கொடுப்பீராக! நிச்சயமாக
உமது எதிரிதான் வாலறுந்தவன் (சந்ததியற்றவன்)”
இதை ஓதும்போதெல்லாம்
அதன் அர்த்தங்களுக்குள் மூழ்கிக் கண்ணீர் வார்த்திருக்கிறார். ’ஒரு நாள் இறைவன் ஓர்
ஓளியை என் இதயத்தினுள் பாய்ச்சினான். குரலொன்று என்னிடம் கூறிற்று, “என் வல்லமையின்
மீது சத்தியமாக, ஜலாலுத்தீனே! இனி ஒருபோதும் அளவு கடந்து உம்மை நீ ஆன்மிகத்தில் வருத்திக்கொள்ள
வேண்டாம். பிரகாசத்தின் மணிக்கதவம் ஏற்கனவே உமக்குத் தாழ் திறக்கப் பட்டுவிட்டது”.
எனவே நான் அதிகமதிகம் நன்றி செலுத்தினேன், என்னுடன் தொடர்பில் வருவோரை எல்லாம் ஞானமடையச்
செய்வதற்காக.’
கவி:
தலைவனின்
விரல்
தந்தியைத்
தீண்டிய நாள் முதலாய்
என் சுயம்
முழுதும்
ஆன்மிக
யாழின் நரம்பானது.
பெருந்தடைகளைத்
தாண்டினேன்
பாதையை
என் நண்பர்களுக்கு
எளிதாக்கிவிட்டேன்.
No comments:
Post a Comment