Friday, April 12, 2019

ஒரு சூஃபியின் டைரி - 16



#115 இணைதலின் ருசி

      














பச்சாதாபம் மற்றும் அகவிரிவு ஆகியவற்றின் படித்தரத்தில் நானிருந்தபோது இரண்டு மாலைத் தொழுகைகளுக்கு இடையில் அவனைக் கண்டேன். வானவருலகின் மாடங்களை நான் கண்டபோது என் இதயத்தில் ஏக்கத்தின் மின்னல்கள் தாக்கின. என் இதயத்தை விட்டும் எண்ணங்களை உயர்த்திய தியானங்களில் நான் அமர்ந்திருக்கும் நிலையிலேயே பல இரவுகள் கழிந்தன. என் பிரக்ஞை உலகங்களைக் கடந்து சென்றபோதும் என்னால் இருப்பின் நிலைக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஏனெனில், உள்ளமைக்கு அப்பால் அவனது சக்தியுடன் தொடர்பில் இல்லாத எதுவுமில்லை. எனவே, சில மணித்துளிகள் கழியும்வரை நான் என்னிடத்திற்குத் திரும்பினேன். மணப்பெண்களின் வீட்டைக் கண்டேன், அது மகத்துவத்தின் வீடு. இறைவன் என்னிடம் தானாகவே வந்தான். அவனுடன் இணைதலை ருசித்தபடி நான் அகவிரிவு, பரவசம் மற்றும் ஆன்மிக நிலைகளின் படித்தரத்தினுள் நுழையும்படிச் செய்தான். அதுபோல் எதையும் நான் சுவைத்ததில்லை. அவன் எனது ஏக்கத்தையும் என் காதலையும் விரும்பினான். பிறகு, என்னால் வார்த்தைகளில் வருணிக்க இயலாத ஒரு நெருக்கத்துடன் என்னை அணுகினான். ஏகத்துவத்தின் புனிதம் கெட்டுவிடாதா என்று நான் முதலில் கவலை கொண்டேன். அவன் சொன்னான், “சத்தியமாகிய என்னைச் சுற்றி நட.” காதலின் படித்தரம் என்பது குணங்களுடையோரை விட்டு விலகி உள்ளமையுடையோரிடம் நீ நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும் என்று அவன் எனக்குக் கற்பித்தான்.

#116 கோளங்களின் இசை
      மேலான இறைவனை வைகறையில் தேடினேன். ஆனால் அவனை நான் காணவில்லை. பல வடிவங்களில் அவன் என்னில் ஆன்மிகக் கற்பனைகளை உண்டாக்கினான். அவற்றை ஏகத்துவச் சிந்தனைகளாக மாற்றினான். அவற்றைக் காதலின் உணர்வுடன் பரிச்சயமாக்கினான். நேரம் கடந்தது. என் சிந்தை எல்லாம் அழிவற்ற குணங்களால் தகுதி செய்யப்பட்ட தனித்தன்மையான உருவகிப்புக்களின் ஒளிகள் ஏற்படுவதைப் பற்றியே இருந்தது. இவை செயல்களாகவோ அல்லது தெய்வீகம் போர்த்தப்பட்ட பண்புகளாகவோ வெளிப்படுவதில்லை. ஆனால், சத்தியப் பரம்பொருள் முதன்முதலில் தன்னை மறைவின் கருவறையில் இருந்தே வெளிப்படுத்தினான். பின்னர் அர்ஷ் என்னும் விதானத்திலிருந்து வெளிப்பட்டான். அதன் பின்னர் ஆதமின் உருவில் வெளிப்பட்டான். என் சிந்தை இதனைக் கற்றுக்கொண்டு ஏகத்துவத்தின் உண்மையைத் தேடியது. என்னால் விண்டுரைக்க இயலாத திருப்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றுடன் அவன் என்னிடம் தோன்றினான். அவன் அப்படித் தோன்றியபோது நிகழ்ந்த சிலவற்றை மட்டும் நான் உங்களுக்குச் சொல்வேன். அவன் முகத்திலிருந்து ரோஜாக்களும் முத்துக்களும் சிந்தின. ஒளிரும் கோளங்கள் நிறைந்ததோர் உலகில் அவனைக் கண்டேன். அவனோ இசைக் கருவிகள் ஒத்திசைவது போல் இருந்தான். இருப்பவை யாவும் அதன் இன்பத்தில் முறுவல் பூத்தன. பிறகு அவன் ஒவ்வொரு கணமும் நான் எப்போதும் கண்டிராத மிக அழகான பண்புடன் தன்னை வெளிப்படுத்தினான். அஃது, அவனது அனிச்சையான கலைப் படைப்பாகும்.

#117 அழகின் உவமை

      











 இறைவனின் முன் தூதர்கள் எல்லாம் பிதற்றியபடி அலைவதைக் கண்டேன். அவனது ஏகத்துவத்தைப் பற்றிப் பேசத் தயங்கி அவனது பண்புகளைப் பற்றி மட்டுமே பேசுகின்ற நிலையில் நான் அவனைத் தேடினேன். மறைவின் அற்புதங்கள் என்னிடம் வடிவங்களில் தோன்றிய போதெல்லாம் அவற்றை நான் புறக்கணித்தேன், ஏனென்று கேட்காமல், மேலான சத்திய இறைவனை வல்லமையிலும் அழகிலும் நான் காணும் வரை. அவன் சுட்டிக் காட்டினான். அங்கே ஒளிச் சுரங்கங்கள் இருந்தன. பிறகு அவனை நான் பூர்வீகத்தின் கோட்டையில், நித்திய உலகின் வாசலின் கண்டேன். வல்லமை பேரழகு மற்றும் மகத்துவத்தில் அவனை நான் சந்தித்தபோது ஆனந்தம் மற்றும் ஆன்மிக நிலைகளின் கடலில் நான் மூழ்கினேன். கொந்தளிப்புகள், நுட்பங்கள் மற்றும் அசைவுகள் எல்லாம் நெருக்க நிலைகளுக்குத் தோதுவாக இருந்தன. பிறகு நான் சத்தியத்தின் பூர்விகத்தில் ஆச்சர்யம் அடைந்து அவனை ‘மிக அழகிய வடிவத்தில்’ கண்டேன். “நீ எப்படி ஏகத்துவத்தின் உலகிலிருந்து குறியீடுகளின் தளத்தில் வீழ்ந்தாய்?” என்று நான் என் மனதிற்குள் எண்ணினேன். அவன் என்னருகில் வந்து எனது தொழுகை விரிப்பைப் பற்றியிழுத்துச் சொன்னான், “எழு! என்ன சிந்தனைகள் இதெல்லாம்? நீ என்னை சந்தேக்கித்தாய், எனவே நீ என்னுடன் பரிச்சயமாகி என்னைக் காதலிக்க வேண்டும் என்பதற்காக உன் கண் முன் என் அழகிற்கு ஓர் உதாரணம் செய்தேன்.” அவன் மீது வல்லமை மற்றும் அழகின் எண்ணற்ற ஒளிகள் இருந்தன. பின்னர் நான் அவனை ஒவ்வொரு கணமும் புதுப்புது அழகில் தரிசித்தேன்.

#118 மகத்தான வெற்றி

    














  நான் அங்கசுத்தி செய்தபின் எனது இந்த அனுபவத்தின் ஆரம்பம் காதலன் என்னுடன் பேசுவதாக அமைந்தது. அவன் சொன்னான், “நிச்சயமாக நாம் தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றியளித்தோம். உமது முன் பின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து உமக்காகத் தனது அருட்கொடைகளை முழுமையாக்கி உம்மை நேரான வழியில் செலுத்துவதற்காக” (48:1). வைகறை நெருங்கியபோது வழிபாடுகள் செய்யும்படி அவன் என்னைப் பணித்தான். நான் சொன்னேன், “நான் உன்னிடமிருந்து என் விருப்பத்தை இன்னும் அடையவில்லை; உன் சக்தியால் எனக்கு உனது காதலின் உணவை ஊட்டுவாயாக! உன் அழகு மற்றும் வல்லமையின் எதார்த்தங்களை எனக்குக் காட்டுவாயாக! அப்படி எனில் நான் உன்னில் களி மிகுந்து உனது நெருக்கத்தின் இனிமையில் கரைந்து போவேன்.” அவன் சொன்னான், “நீ எழுந்து மடத்தின் மேற்கூரைக்குப் போய் நில். அங்கே உன் மனதின் விருப்பம் உனக்கு வெளிப்படுத்தப்படும்.” நான் சென்று விடிகாலைத் தொழுகைக்கான அழைப்பை வழங்கியபோது ஷைகு அபுல் ஹசன் இப்னுல் ஹிந்த் அவர்களை தியானத்தில் இருக்கக் கண்டேன். ”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று என் மனதிற்குள் கேட்டேன். எனது பிரக்ஞையின் உள்ளே குரலொன்று சொன்னது, “அவர் வல்லமையை தியானித்துக் கொண்டிருக்கிறார்.” நான் தலை உயர்த்திப் பார்த்தபோது துருக்கிஸ்தானின் எல்லையிலிருந்து தொலை மேற்கு வரையில் சூஃபி குருமார்கள் இறைவனின் வல்லமையை தியானித்திருப்பதைக் கண்டேன்.

#119 குடிகாரனைப் போல் ஆடுதல்
      இறைவனின் வல்லமையை தியானித்தபடி முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் அனைத்து இறைத்தூதர்களும் அமர்ந்திருக்கக் கண்டேன். இறைவனின் புனிதத்திற்கு சாட்சி உரைத்தபடி ஜிப்ரீலும் பிற வானவர்களும் இருந்தனர். பிறகு நான் முன்பு குறிப்பிட்ட முறையில் இறைவன் அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தினான். நானோ சூஃபிகளின் நடுவில் ஒரு கலவரக் குடிகாரனைப் போலிருந்தேன். அவனது சக்திக்கு அருகில் என் முகத்தைக் கொண்டு வந்தேன். அவன் என்னை அணுகி என்னை நடனமாடச் செய்தான். அவனும் என்னுடன் ஆடினான். அவர்களிலிருந்து இதற்காக அவன் என்னைத் தேர்ந்தெடுத்தான். அகவிரிவின் இனிமையை நான் சுவைத்தபோது வானவர்களின் கூக்குரல்கள், நித்தியர்களின் அழுகைகள் மற்றும் மேலானவர்களின் அணத்தல்கள் என்னை மிகைத்தன.

#120 மறைவின் பாலைகளில் முஹம்மத் (ஸல்)






















மறைவின் பாலைகளில் நான் மேலான இறைவனைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் பாலைகளின் பாதைகளில் நான் முஹம்மதைக் கண்டேன். அவரது தோற்றம் ஆதமின் தோற்றமாக இருந்தது. அவர் தூய வெண்ணிற அங்கியும் தூய வெண்ணிறத் தலைப்பாகையும் அணிந்திருந்தார். புன்முறுவல்கள் ஒளிர அவர் முகம் ஒரு சிகப்பு ரோஜாவைப் போல் இருந்தது. வல்லமையான சத்திய இறைவனைத் தேடியபடி அவரின் முகம் நித்திய உலகின் பக்கம் திரும்பியிருந்தது. அவர் என்னைக் கண்டபோது என்னருகில் வந்தார். நாங்களிருவரும் ஒரே இலக்கும் நோக்கும் கொண்ட இரண்டு பாலைவனப் பயணிகளைப் போலிருந்தோம். அவர் என்னிடம் மிகவும் அன்புடன் சொன்னார், “நானொரு அன்னியன். நீயும் அப்படியே. என்னுடன் இந்தப் பாலையில் நட, அப்போது நீ வல்லமையான இறைவனைத் தேடலாம்.” எனவே நாங்கள் அந்தப் பாதையில் எழுபதாயிரம் ஆண்டுகள் நடந்தோம், இடையிடையே சில இடங்களில் உண்ணவும் பருகவும் அமர்ந்தபடி. ஓர் அன்னியன் இன்னொரு அன்னியனைக் கருணையுடன் நடத்துவது போல அவர் எனக்கு உணவு வழங்கி என்னை நேசத்துடன் நடத்தினார். நித்தியத்தின் திரையையும் பூர்வீகத்தின் மாடங்களையும் நாங்கள் அடைந்தபோது நாங்கள் வெகு நேரம் காத்திருந்தும் சத்திய இறைவனைக் காணவில்லை. அவனின்மை குறித்து நாங்கள் மிகவும் வருந்தினோம். பிறகு, அந்த மேலான சத்திய இறைவன் தன்னை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்தினான். அவரிடம் அவன் எதையோ காட்டுவதைப் பார்த்தேன். மேலான இறைவன் தனது நேசக் காதலரை எவ்வாறு நடத்துகிறான் என்பதை நான் கண்டிருந்தேன். நேரம் கடந்தது, அவர்களுக்கு இடையே ரகசியப் பறிமாற்றம் நடந்துகொண்டே இருந்தது. அவற்றை நான் அறியேன். நான் அவர்கள் இருவரையும் கண்டேன், அவர்களிருவரும் என்னை ஏற்றுக்கொண்டனர் என்று தோன்றியது.

#121 பாலைகளுக்கு அப்பால்

     












 மேலான சத்தியப் பரம்பொருள் என்னை அழைத்துச் சென்று மறைவுலகின் காட்சிகளைக் காண்பித்தான். அவனது அனைத்திலுமிருந்து என் மீது நேசம் உண்டாகச் செய்தான். பிறகு நான் ஒளிகள், வல்லமை, பேரழகு ஆகியவற்றைக் கண்டேன், எக்கத்துவத்தின் பாலை வெளிகளை அவன் எனக்குக் காட்டும் வரை. அவ்விடங்களில் எங்களுக்கு எந்த நிறுத்தமும் இல்லாத நிலையில் அவற்றை நாங்கள் கடந்து சென்றோம். ஏனெனில், நித்திய ஆற்றலின் அருகில் காலம் வரும்போது அது நின்று இல்லாமல் ஆகிவிடுகிறது.

(தொடரும்...)

No comments:

Post a Comment