Tuesday, April 2, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 12

















 1:130 வாழ்க்கையை அழகாக்கும் நட்பு

      நட்பின் ஆழமும் மலர்ச்சியுமே உங்கள் வாழ்க்கைக்கு அழகு சேர்க்கின்றன. நட்பே உங்கள் மரத்தை நீங்கள் நட்டு வைக்கும் நிலம். அது உங்கள் செழிப்பின் வளமிக்க அடித்தளம். உங்களைச் சுற்றிலும் உங்களிலும் ஒரு ஜீவிதத் தன்மையை நட்பு உண்டாக்குகிறது. ஒரு பறவை அல்லது பூனை அல்லது இறந்து கொண்டிருக்கும் ஒரு நலிந்த நபர், யார் வேண்டுமெனிலும் உங்கள் நண்பராக இருக்கலாம். எனினும், உங்களுடைய நட்பு வலிமையாக இருக்கும் எனில், தான் விழும் நிலத்தை இறைத்தூதரின் இரத்தத் துளி தூய்மை செய்வதைப் போல் அது உங்கள் வாழ்வின் வட்டத்தைத் தூய்மையாக்கும்.

      உண்மையான நண்பர்கள் ஒருவருக்காக ஒருவர் தமது செல்வத்தை, புகழை, அனைத்தையும் தியாகம் செய்வர். ஏன் என்று கேட்டால் அவர்கள் சொல்வார்கள், தியாகம் செய்ய இன்னும் அதிகமாக என்னிடம் இருந்திருக்க வேண்டுமே? அபூபக்கரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் இதர சகாக்களும் அத்தகைய நட்பில்தான் வாழ்ந்தார்கள்.















1:315-316 வெண்பறவை வாக்கியங்கள்

      என் கனவு ஒன்றில், அன்னத்தை விடவும் பெரிய வெண் பறவைகள் பறந்திருந்தன. பறந்தபடி அவை புகழ்ந்திருந்தன. நான் பறவை மொழியைப் புரிந்துகொண்டேன். ஒன்று சொன்னது, எல்லா நிலையிலும் உனக்கே புகழனைத்தும். இன்னொன்று அதே செய்தியை வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தது. மேலும் இன்னொரு பறவை வேறு வாக்கியமாக. ஆனால் நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை என்னால் நினைவில் வைக்க முடியவில்லை. இந்தக் கனவின் பொருளாக நான் புரிந்துகொள்வது இதுதான். நான் விழிதிருக்கும் வாழ்க்கையில் எது வரினும் தொடர்ந்து நன்றியுணர்வில் இருக்கும்படி அவை சொல்கின்றன. இன்னொன்றும், அதாவது புகழ்வதற்கு நூறாயிரம் வழிகள் உள்ளன என்பதை மறக்காதே.

      இந்த வெண்பறவை வாக்கியங்கள் அப்பறவைகள் தோன்றாக் காலத்திலேயே,  படைப்புகள் இன்மையிலிருந்து தோற்றுவிக்கப்படும் போதே தோன்றிவிட்டன. மூசா நபியும் ஈசா நபியும் இதர இறைத் தோழர்களுடன் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்தே நம் வழியே பாயும் இந்தப் புகழ்ச்சிகள் வருகின்றன.

      இன்னொரு இரவில் தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் நான் ஒரு மான் ஒன்று வாயைத் திறந்தபடி என்னை நோக்கி வரக் கண்டேன். என் தலை முழுவதையும் தன் வாயினுள் வைத்து அது தனது நாவால் எனது நெற்றியிலும் தாடையிலும் தலையின் பக்கவாட்டுகளிலும் நக்கியது. அந்த மானின் வாய் மேலும் மேலும் பெரிதாயிற்று. என் உடல் முழுவதையும் அது விழுங்கியிருக்கக் கூடும். மயக்கம் அடைவது போன்ற நிலையில் நான் சொல்லிக் கொண்டிருந்தேன் உனதன்றி சக்தி ஏதுமில்லை உனதன்றி சக்தி ஏதுமில்லை... என்னைத் தின்றுவிட நினைத்த அந்த வினோத விலங்கு விலகிப் போயிற்று. நிம்மதி வந்தது. பித்தர் எப்படி உணர்கிறார்கள் என்பதை இப்போது நான் அறிவேன்.

      இன்னொரு கனவில், நான் உப்புக் கரிக்கும் உணவை உண்டு கொண்டிருந்தேன். என் ஈருகள் உவர்ப்பாயின. என் வாயில் உப்புக் கரிப்புடன் நான் எழுந்தேன். எவருமே பதிவு செய்யாத நிகழ்வுகள் இங்கே நிகழ்கின்றன. பிரபஞ்சங்கள் ஊடுறுவுகின்றன. நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் நாம் செலுத்தப்படுகிறோம். வானவர் கோன் ஜிப்ரீல் வந்து முஹம்மத் (ஸல்) அவர்களை ஒரு கணத்தில் அப்பால் கொண்டு போகிறார் என்றால் எவரும் இதில் வியப்படையத் தேவை இல்லை.

      யாரோ கேட்டார்கள், கடவுளின் ஆணைகள் எல்லாம் ஏற்கனவே விதிக்கப்பட்டவை என்றால் பிறகு வாழ்வில் நாம் தேர்ந்தெடுக்க என்னதான் இருக்கிறது? முன்விதி மற்றும் ஆணைகள் ஆகிய சொற்களுக்கு இடையில் பெரிய மர்மம் உள்ளது. இறைவனின் சுயம் (ஜாத்) அல்லது உள்ளமை (உஜூது) எதனைப் போன்றதும் அல்ல. அதை அல்லது அதன் விளைவுகளை நாம் பரிசோதிக்கவும் முடியாது. உன்னிடம் வந்துள்ள ஏதேனும் ஒரு பொருளை அதன் மூலம் வரை நினைத்துப் பார். இப்போது, நீ ஒரு குருடு என்றும் இதுவரை உலகில் நீ எதையுமே கண்டதில்லை, எதன் பொருளையும் அறிந்ததில்லை என்று கற்பனை செய்து பார். 




















1:316-318 முஹம்மத் (ஸல்) அவர்களின் வமிசத்தின் தனி ஆற்றல்
     
 நான் ஒருமுறை குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது நெருப்புப் பற்றிக் கொண்டது. அப்படியான திடீர் தழல் எங்கிருந்து வருகிறது? இந்த நேரத்தில் இந்த இடத்தில் அப்படி வெடிப்பு நிகழ என்னென்ன தாதுக்கள் கலக்கப்பட வேண்டும் அல்லது வெடிப்பிற்கான சரியான தூரம் எது? ஒரு உடலை இன்னொரு உடலுடன் அழுத்தினால் காம இச்சை எழும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஈரமான குளுமையான இடங்களில் சூடான அதிர்வுகள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயங்களை நான் சிந்திக்கும்போது ஒவ்வொரு படைப்பும் ஒரு மாபெரும் தெய்வீகப் பேருதவியின் ரசவாதத்தில் நகர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். அது, ஒரு மூலையில் தொட்டால் பிற பாகங்கள் அனைத்தும் பதிலுக்கு அசைவதான, பல வண்ணங்களும் நுட்பமும் கொண்டதொரு உயிர் வடிவம் போன்றது. அல்லது, அஃதொரு மையக் கோலமிட்ட தரைவிரிப்பைப் போன்றது. அதன் அடியில் இன்னொரு விரிப்பு நகர்கின்றது. அவற்றின் ஒளி கசியும் வடிவங்கள் புதுப்புது வடிவமைப்புக்களைக் காட்டுகின்றன, அவற்றின் ஆழங்களில் நிறங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கின்றன.

      அல்லது இப்படிச் சொல். இவ்வுலகம் ஒரு நடனமாடும் சூஃபி. அவரது கை ஒரு வழியில் போகிறது. அவரது தலை வேறொரு தாளகதியில். அவரின் கால்களும் பாதங்களும் அவற்றுக்கு இடையே ஒத்திசைந்து, பாகங்கள் எல்லாம் ஒருங்கே ஒற்றைக் களிப்பில் பிரசன்னத்தில், சருமம், கேசம், கண்கள், குரல், பாடல்: இவ்வுலகின் ஓய்வற்ற மாறுதல்கள். மேலும், எனது ஆன்மா ஒரு நெகிழ் படிவம். அது வெறுமையாகிறது, வெவ்வேறு வடிவங்கல் எடுக்கிறது, அவை ஒன்றுடன் ஒன்று நிரம்பி மோதுகின்றன, சிந்துகின்றன, உருமாறுகின்றன, அப்படியே போகின்றன. இந்தக் கைகளும் கால்களும் தாமாகவே தமது தன்னிச்சை நிலையை அடைந்து அதற்கு வெளியே செல்வதில்லை. மகத்தான ஏதோ ஒன்று உள்ளும் புறமும் அவற்றின் வழியே நகர்கிறது.

      ஒவ்வொரு மாபெரும் குருவும் (ஷைஃகு) தமது உயர்வையைத் தமது தாயிடமிருந்தே பெருகிறார் என்று என் அம்மா சொல்கிறார். அம்மா தாயே! இதையும் கவனியுங்கள். நான் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் என்னைச் சத்தம் போடுகிறீர்கள், நான்தான் அதற்குப் பொறுப்பு என்று. பிறகு நான் ஏதாவது நன்மை செய்தால் அதற்கும் நான்தானே பொறுப்பு. எனவே தாயே, எப்போதும் நீங்கள் என்னைப் பார்த்துக் கத்தக் கூடாது!

~~~   ~~~   ~~~

      இந்தியாவின் பெண் தெய்வங்கள் பற்றிக் கற்க நான் முயற்சி செய்தேன். தேவதைகளுக்கு பக்தர்கள் பொன்னும் வெள்ளியும் காணிக்கை தருகிறார்கள் என்றும் யார் மிக உயர்ந்த காணிக்கையைத் தருவது என்று போட்டி போடுகிறார்கள் என்றும் யாசிமீன் கூறினார். அந்தத் தெய்வங்கள் பக்தர்களின் சொத்துக்களைப் பாதுகாத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக நம்புகிறார்கள். உதாரணமாக, ஒருவர் ஒரு கோயிலுக்குப் போய் பத்து அல்லது இருபது நாட்கள் நோன்பிருந்து, ஏதேனுமொரு காரியம் சரிப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்வார். பசியாலும் தாகத்தாலும் அரை மயக்க நிலையில் இருக்கும்போது அவர் தனது தேவதையின் குரலைக் கேட்பார். அவரது வேண்டுதல் கொடுக்கப்பட்டதாகவோ அல்லது பத்து நாளில் நிறைவேறும் என்றோ அல்லது இருபது நாளில் நிறைவேறும் என்றோ அல்லது ஒருபோதும் நிறைவேறாது என்றோ அது சொல்லும். அக்குரலை அவன் கேட்டதும் உடனே அவன் அந்தக் கோயிலை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லை எனில் அந்தத் தெய்வ உருவம் அவனின் கனவில் வந்து அவனை அறையும். உண்மையாக, அந்தச் சிலையால் அல்ல, ஆனால் அத்தகு வலிய நம்பிக்கையின் ஆற்றல் கொண்ட சூழல்களில் அற்புதங்கள் நிகழத்தான் செய்கின்றன. யாசிமீன் சொல்கிறார், யாரேனும் ஒருவர், உதாரணமாக ஒரு துருக்கன், அந்தத் தெய்வத்திற்குப் பாதகம் செய்யும் நோக்கில் அந்தக் கோயிலுக்குள் போனால் அவன் வெளியே வரும் பாதையைக் கண்டறிய முடியாமல் சிக்கிக் கொள்வான், இருளில் அலைந்து குருடனாவான்.

      ஒருமுறை கனவு ஒன்றில் நான் மாபெரும் சய்யிதான நஸ்பா அவர்களுடன் அமர்ந்திருந்தேன். (சய்யித் என்னும் பட்டம் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வமிசத்தினருக்குச் சொல்லப்படும்). பிறகு, நட்புடன் நாங்கள் இருவரும் நடை பயின்றோம். நான் கண் விழித்து எழுந்தபோது சக்தியாலும் வலிய மோகத்தாலும் நிரம்பியிருந்தேன். கலவிக்கான அசாதாரணமான வீரியம் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருந்தது. அவர்களின் பரக்கத் (அவர்களின் வழியாக வெளிப்படும் பல்வகை சக்திகளும் தெய்வீக பிரசன்னங்களும்) அவர்களின் குடும்பத்தினர் மற்றும் வம்சத்தினர் வழியாக இறங்குகின்றது. இவ்வகையான நம்பிக்கை வழிமுறை, தன்னில் நபிகளாரின் தனி வலிமையையும் ஆற்றலையும் (முஜாமத்) கொண்டு வருகிறது.

1:323-324 சிறாத் என்னும் பாலம்

      நிராகரிப்பின் உள்ளடக்கம் பற்றி என்னிடம் கேட்டார்கள். இறைவனை ஒருவர் எப்படி நிராகரிக்க முடியும்? நான் சொன்னேன், அது முழுமையான வெளிச்சம் இருந்தும் நீங்கள் இருளைப் பார்ப்பது போன்றது. உங்களைச் சுற்றிலும் அற்புதங்கள் நிகழ்ந்த நிலையில் அதற்குப் பகுதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதால் நீங்கள் இறுதி விசாரணைக்கு ஆளாவது போன்றது. உங்களுக்கு அருளப்படும் திருகாட்சி, அகப்பார்வை ஆகியவற்றை நீங்கள் ஏற்க மறுப்பதே அது.

      கண்டதிலிருந்து காணாததற்கு, இவ்வுலகிலிருந்து மறைவுலகிற்கு ’சிறாத்’ என்றொரு பாலம் இருக்கிறது. மயிரினும் மெலியது. இருந்தாலும், எந்த உயிரினமும் அதன் வழியே கடந்து செல்ல முடியும். சிலர் அதனை மிக விரைவாக மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே கடந்து போவார்கள். பிறர் மௌனமாகவும் அவகாசம் எடுத்துக்கொண்டும். தாமே பாலமாக இருக்கலாம் என்று நம்புகிறார்களே அவர்கள்தான் விசுவாசம் அற்றவர்கள்.

      சதையின்பமும் துன்பமும் உண்மை என்பதைப் போலவே ஆன்மாவுக்கு வந்து சேரும் இன்பமும் துன்பமும் உண்மைதான். நிலத்தில் பூமியின் வாரிசுகள் கிழிக்கப்பட்டுத் துகள்களாக மட்கிப் போகும் இடத்தைக் கொஞ்சம் கவனி. தூய வண்ணத்தை, இருத்தல் மற்றும் இல்லாமை ஆகிய உலகங்கள் தனித்தனியாகப் பிரிவதை, சூரியனை விடவும் பன்மடங்கு பிரகாசமான இறை ஆட்சியின் ஒளியை நோக்கி வைகறையின் தரிசனங்களைப் போல் திறக்கின்ற சிறு காட்சிகளை அங்கிருந்து ஒருவர் காணலாம். நான் இதை அறிவேன். ஏனெனில், நான் இதைப் பார்த்திருக்கிறேன்.

      இறைத்தூதர் முஹம்மதின் ஆன்மா அவரது உதடுகளின் வழியே எப்படிப் பறந்து வெளியேறியது என்பதை நினைத்துப் பார். உடலின் வில்லிலிருந்து ஆன்மாக்கள் கணைகளைப் போல் புறப்பட்டு வெளியேறத்தான் செய்கின்றன. சில, இலக்கு நோக்கிப் பாய்கின்றன. மற்றவை, கவனமின்றி விட்டேற்றியாக.


















1:324-326 வெள்ளி காலை

      ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இரண்டு வாய்ப்புகளுடன் வெள்ளி காலையில் எழுந்தேன். இறைத்தூதர்களைப் பின்பற்றுவது அல்லது, சட்டவியல் மார்க்க அறிஞர்களை, நீண்ட போதனைகளை மற்றும் கவனமாக வடித்தெடுக்கப்பட்ட பண்பாடுகளை. நான் இறைத்தூதர்களின் வழியைத் தேர்ந்தெடுத்தேன். அவ்வாறு தேர்ந்தெடுக்க எனக்கு இறைவனே வழிகாட்டினான் என்று நம்புகிறேன். என் வாழ்க்கை எப்படிச் செல்ல வேண்டும் என்பதை என்னை விடவும் நன்கு அறிந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் இருத்தல் மற்றும் அறிதலுடன் தங்கள் சுயங்களை இணைப்பதற்கு பிறருக்கு நான் உதவுவேன்.

      பிறகு, இறைவனின் நேசர்களுக்கு நடந்தவற்றை எண்ணிப் பார்த்தபோது நான் குழப்பம் அடைந்தேன். யஹ்யா நபி சிரச்சேதம் செய்யப்பட்டார். இயேசுவைச் சிலுவையில் அறைய முயன்றார்கள், நூஹ் நபியைப் புறக்கணித்தார்கள். அபூபக்கரின் கடுமையான பல்வலி, அய்யூப் நபியின் தாயும் விஸ்ஸும் தாங்கிக்கொண்ட துன்பங்கள், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அபூஜஹல் கொடுத்த வேதனைகள். யஹ்யா நபியைப் போன்றோ அல்லது அவரின் தந்தை ஜகரிய்யா நபியைப் போன்றோ துணிச்சலான பிரகடனங்களைச் சொல்ல என்னால் முடியாது.

      நான் மேலும் சிந்தனையை நீட்டினேன். நன்மை அல்லது தீமை, புகழ் அல்லது இகழ், நிகழ்வது யாதாயினும் இறைவனின் நாட்டப்படியே நிகழ்கிறது. ஒவ்வொரு இறைத்தூதரும் புகழிலேயே நிறைவடைகிறார். நீ இளமையில் இருந்தாலும் சரி அல்லது முதுமையில் இருந்தாலும் சரி, இறைப் பிரசன்னத்திற்கு அருகில் வா. நீ இன்னும் சிறந்தவன் ஆவாய். வியாழனும் வெள்ளியும் பள்ளியில் தங்கு. வழிபடு, “அனைத்தையும் படைத்தவன்” (6:102) மற்றும் “நீங்கள் செய்பவற்றைப் படைப்பவன்” (37:96) ஆகிய இறைவனின் நாட்டத்துடன் உனது நாட்டம் இயைந்து போக ஆசைப்படு.

(குறிப்பு: விஸ் என்பவர் ஈரானிய பழம் பாரசீகக் காவியமான விஸ்-ரமின் என்பதில் ஒரு கதை மாந்தர்).

(தொடரும்...)

No comments:

Post a Comment