Wednesday, April 10, 2019

ரூமியின் வாழ்வில்... - 2


2
பச்சை அங்கி அணிந்த உருவங்கள் 


  


















    தனது தந்தை இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரூமி தனது மார்க்க மற்றும் உலகக் கல்வியை நிறைவு செய்வதற்காக சிரியாவுக்குச் சென்றார். அவ்விடத்திற்கு அதுவே அவரின் முதற் பயணம். அலெப்போ நகரில் உள்ள ஹலவியா என்னும் சமயக் கல்லூரியில் அவர் தங்கினார். அங்கே அவரது தந்தையின் சீடர்கள் அவரைச் சந்திக்கவும் அவருக்குப் பணிவிடைகள் செய்யவும் வந்தனர். நெடுங்காலம் அவர் அந்நகரில் தங்கியிருந்தார்.

அப்போது அலெப்போ நகரின் ஆளுநராக இருந்த கற்றறிந்த சான்றோரான கமாலுதீன் அதீம் ரூமியின் தொண்டராகி அவரை அடிக்கடி சந்தித்து வந்தார். ரூமி அக்காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் ஞானியின் மகன் என்பதாலும் கல்வி கற்பதில் அசாத்தியமான வேகமும் திறனும் பெற்றுள்ளார் என்பதாலும் அவரின் மீது கமாலுதீன் அதீமுக்கு ஒரு விசேஷமான நேசம் உண்டாகியிருந்தது. ரூமியின் ஆசிரியர்கள் அவரின் பாடங்களில் தனிக்கவனம் செலுத்தி வந்தனர். இதனால், இறையியல் கல்வியில் அவரது முன்னேற்றத்தின் மீது சக மாணவர்கள் பொறாமை கொண்டு சாம்பினர்.

இன்னொரு நிகழ்வும் அப்போது நடந்தது. கல்லூரியின் முதல்வர் ஆளுநரிடம் ஒரு முறையீடு செய்தார். அதாவது, நள்ளிரவில் ரூமி அடிக்கடி தனது அறையை விட்டுக் காணாமல் போய்விடுகிறார். இந்தப் புகார் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் ஆளுநர் கமாலுதீன் அதீம் மிகவும் கவலை கொண்டார். உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதைக் கண்டறிய அவர் முடிவு செய்தார்.

ஓரிரவு மணி பன்னிரண்டு ஆனதும் மவ்லானா ரூமி கல்லூரியை விட்டு வெளியேறிய போது அவர் அறியாதபடி கமாலுதீன் பின் தொடர்ந்தார். அவர்கள் நகரின் தலைவாசலை அடைந்தபோது அதன் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. மவ்லானா ரூமி விட்டேற்றியான பாவனையுடன் இப்றாஹீம் கலீலுர் ரஹ்மானின் பள்ளிவாசலை நோக்கி நடந்தார். வெண்ணிற விதானம் கொண்ட கட்டடம் ஒன்று அவருக்கு முன் நின்றிருப்பதைக் கமாலுதீன் கண்டார். பச்சை நிற அங்கி அணிந்திருந்த வினோதமான உருவம் கொண்டோர் அதனுள் நிரம்பியிருந்தனர். அத்தகைய மக்களைக் கமாலுதீன் தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை. அந்த வினோத நபர்கள் ரூமிக்கு முகமன் உரைப்பதை அவர் கண்டார். அந்தக் காட்சியின் தாக்கத்தால் அவர் மயக்கமுற்றுச் சாய்ந்தார். அதே நிலையில் மறுநாள் காலை வரை அங்கே கிடந்தார்.




















 கமாலுதீனுக்குச் சுதாரிப்பு வந்து விழித்தபோது அங்கே எந்தக் கட்டடமும் இல்லை, இரவில் அங்கிருந்த மனிதர்களும் இல்லை. அதிர்ந்துபோய் அவர் அந்தப் பாலை நிலத்தில் நாளெல்லாம் அலைந்து திரிந்தார், இரவு வரும் வரை. அதே மனநிலையில் அவர் இரண்டு நாட்கள் அல்லும் பகலும் அலைந்தார். இரண்டு நாட்களாக ஆளுநரைக் காணவில்லை என்பதால் தமது தலைவரின் பாதுகாப்புப் பற்றி அஞ்சிய அரசுக் காவலர்கள் அவரைத் தேடத் தொடங்கினார்கள். இரண்டு நாட்களுக்கு முன் அவர் கல்லூரியில் மவ்லானாவின் இரவுத் திரிதல்களைப் பற்றி விசாரித்ததால் மவ்லானாவைப் பின் தொடர்ந்து அவர் ஊருக்கு வெளியே சென்றிருக்கலாம் என்று துப்புக் கிடைக்கவே ஒரு தனிப்படை அமைத்து அனுப்பினார்கள். அந்தத் தனிப்படை ஊர் எல்லைக்கு விரைந்தது. அதையும் தாண்டிப் பாலைவனப் பகுதிக்குச் சென்றது.  அவர்களில் ஒரு காவலன், கமாலுதீனைத் தேடியபடி ஒரு பகல் முழுவதும் குதிரையை ஓட்டிச் சென்றான். அவன் முதலில் அங்கே மவ்லானா ரூமி அலைந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் யாரைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த மவ்லானா ரூமி அவனுக்கு வழி காட்டி கலீலின் பள்ளிவாசலை நோக்கிச் செல்லுமாறு அனுப்பினார்கள்.

நீண்ட நேரத் தேடலுக்குப் பின் அந்தத் தனிப்படை ஆளுநரைக் கண்டது. அவர் சக்தியிழந்த நிலையில் தாகத்தாலும் பசியாலும் துவண்டு கிடந்தார். அவர்கள் அவருக்கு உணவும் பானமும் கொடுத்தார்கள். புத்துணர்ச்சி வந்தவுடன், தன்னை அவர்கள் எங்கே கண்டார்கள் என்று காவலர்களை வினவினார். மவ்லானா ரூமிதான் அவர் இருக்கும் இடத்தைத் தமக்குச் சுட்டிக் காட்டினார் என்று அவர்கள் சொன்னார்கள். தான் பெற்ற அனுபவத்தை அவர்களிடம் கமாலுதீன் சொல்லவில்லை. புரவியேறி அவர் மீண்டும் அலெப்போவுக்குத் திரும்பினார்.

தான் கண்ட காட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆளுநர், மவ்லானாவைக் கண்ணியப்படுத்தும் வகையில் ஒரு விருந்து வழங்கினார். ஊரின் பெருமக்கள் பலரும் அதில் கலந்து கொண்டனர். ரூமியின் எதிரிகள் வெட்கித் தலை கவிழ்ந்தனர். எனினும், பெருந்திரளாக மக்கள் தன்பால் ஈர்க்கப்படுகின்றனர் என்பதைக் கண்ட ரூமி, பேரும் புகழும் வேண்டா நெஞ்சினராய் அந்நகர் விட்டகன்று திமிஷ்க் (’டமஸ்கஸ்’) நகருக்குப் பெயர்ந்தார்கள். ரூமி தமது ஊருக்கு வர வேண்டும் என்று திமிஷ்கின் ஆளுநரான சுல்தான் அசீசுதீன் ரூமி பதுருதீன் யஹ்யா முன்பே அலெப்போ நகரின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருந்தார். எனவே, ரூமி அவ்வூரில் அரச மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ரூமி அலெப்போவில் தங்கியிருந்த போது அவரின் உன்னதமான ஆன்மிக அடைதல்களைத் தான் கண்டதாகவும் திமிஷ்கின் ஆளுநரிடம் கமாலுதீன் சொல்லியிருந்தார்.

3
ரூமியைச் சுமந்து பறந்தவர்






















ஷைகு சலாஹுதீன் ஒரு நிகழ்வை அறிவிக்கிறார். அவர் மீது இறைவனின் அருள் நிலவட்டுமாக. ஒருமுறை அவர் மகா ஞானியான சையது புர்ஹானுதீனின் முன்னிலையில் அமர்ந்திருந்தார். ஆன்மிக தியான நிலையில் அந்தப் பெரியவர் இருந்தார். அப்போது அவர் மவ்லானா ஜலாலுதீன் ரூமியைப் பற்றிப் பேசினார். ஆன்மிக மரபில் ரூமியின் மிக உயர்ந்த படித்தரத்தைப் புகழ்ந்தார்: “எனது வாழ்வின் மிக உச்சமான காலக்கட்டத்தில் நான் ரூமியின் தந்தையான சுல்தான் பஹாவுதீனுக்கு ஆசிரியராக இருந்தேன். அப்போது ரூமி ஒரு சிறு பிள்ளை. இருபது முறை அவரை எனது தோள்கள் மீது சுமந்தபடி ஆன்மிக வானத்தில் மிகவும் உச்சமான இடங்களுக்கு நான் உயர்ந்திருக்கிறேன். அப்படித்தான் மவ்லானா ரூமி இப்போது தம்மை ஒப்பாரில்லாத ஆன்மிக உச்சத்தை அடைந்துள்ளார். அந்த வகையில் அவர் எனக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறார்.”

இச்செய்தி மவ்லானா ரூமியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சொன்னார், “ஆம். அவர் சொல்வது சரிதான். உண்மையில், நான் நூறாயிரம் மடங்கு கடமைப் பட்டிருக்கிறேன். அந்தக் குடும்பத்திற்கு எனது நன்றியுணர்வு எல்லையற்றது”.

4
சிசிலியாவின் துறவிகள்


















ஆன்மிக உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்த ஷைகு சினானுதீன் அஷ்ஷஹ்ரி குலாதோஸ் ஒரு நிகழ்வை அறிவிக்கிறார். மவ்லானா ரூமி அவர்கள் திமிஷ்க் சென்றபோது வழியில் சீஸ் மாகாணத்தில் சிசிலியா என்னுமிடத்தில் பயணக்குழு நின்று கூடாரமிட்டது. அவ்விடத்தில், தகாத வகையில் தீய மாந்திரீகம் செய்துவந்த துறவிகள் இருந்தனர். அவர்கள் தமது மந்திர ஆற்றலால் வருங்கால நிகழ்ச்சிகளைக் கணித்துச் சொல்வதில் சிறந்து விளங்கினர். அவர்கள் தமது வினோத கலையால் நிறைய பணம் ஈட்டியிருந்தனர்.

மவ்லானாவை அவர்கள் கண்டதும் தமது ஆற்றலை அவருக்கு வெளிப்படுத்திக் காட்டி அசத்த நினைத்தார்கள். எனவே ஒரு சிறுவனை அந்தரத்தில் உயர்ந்தெழ வைத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் அங்கேயே நிற்க வைத்தார்கள்.

அதைப் பார்த்த மவ்லானா ரூமி தனது தலையை தியானத்தில் சாய்த்தார்கள். உடனே அந்தச் சிறுவன் தன்னைக் காப்பாற்றுமாறு அலறினான். இல்லை என்றால், தியானம் செய்யும் அந்த நபரின் அச்சத்தால் தான் இறந்துவிடுவான் என்று கூறினான். கீழே வருமாறு அவனிடம் அந்தத் துறவிகள் சொன்னார்கள். அவன் சொன்னான், “என்னால் இறங்க முடியவில்லை. இங்கே ஆணி அடித்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது எனக்கு”. துறவிகள் தம்மிடம் இருந்த மந்திர தந்திர வித்தைகளை எல்லாம் செய்து பார்த்தார்கள். எல்லாம் வீணாகிப் போகிறது என்பதை உணர்ந்தார்கள். மவ்லானா ரூமியின் பாதங்களில் தங்கள் தலைகளைச் சாய்த்து மன்னிப்புக் கோரினார்கள். தம்மைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். மவ்லானா ரூமி சொன்னார்கள், ”அதற்கு நீங்கள் ஒன்று செய்தாக வேண்டும். அல்லாஹ்வை அன்றி வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி சொல்கிறேன், முஹம்மத் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று நான் சாட்சி சொல்கிறேன்’ என்று நீங்கள் உரைக்க வேண்டும்.” இதைக் கேட்ட அந்தச் சிறுவன் அந்த சாட்சி வாக்கியத்தைச் சொன்னான். உடனே அவன் கீழே வந்துவிட்டான்.

இந்த அற்புத நிகழ்வைக் கண்ட துறவிகள் தாமும் சாட்சி மொழிந்தார்கள். மவ்லானாவுடன் தாமும் பயணிக்க அனுமதி கேட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்று மவ்லானா ரூமி விரும்பினார்கள். அங்கிருந்தபடியே அவரகள் தமக்கு வாழ்த்துக்கள் அனுப்பலாம் என்றும் தமக்காகப் பிரார்த்தனை செய்யலாம் என்றும் கூறினார்கள். அவ்வாறு அவர்கள் முன் உலக மற்றும் ஆன்மிக நல்வாழ்வு திறந்து வைக்கப்பட்டது. அவர்கள் அவ்வூரிலேயே இருந்தார்கள். அவ்வூருக்கு வந்து செல்கின்ற பயணிகளுக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்கள்.

5
ஷம்ஸி தப்ரேஸ் தோன்றுதல்


























மவ்லானா ரூமி அவர்கள் திமிஷ்க் நகரை அடைந்த போது அவ்வூரின் அறிஞர்களும் பிற பிரமுகர்களும் தக்க கண்ணியத்துடன் அவர்களை வரவேற்று மதறஸா முகத்தஸா (புனிதக் கல்லூரி) என்னும் சமயக் கல்லூரியில் அவரைத் தங்க வைத்தனர். மேலும் சமயக் கல்வியைக் கற்று அடைவதில் அங்கே ரூமி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திமிஷ்கில் அவர் ஏழாண்டுகள் இருந்தார். அப்போது அவருக்கு நாற்பது வயது.

ஒரு நாள் திமிஷ்கின் பூங்காவில் ரூமி நடந்திருந்தபோது மக்கள் கூட்டத்திலிருந்து வினோதமாகத் தோன்றிய நபர் ஒருவர் வெளிப்படக் கண்டார். அவர் கறுப்பு நிற அங்கி அணிந்திருந்தார். தலையில் வித்தியாசமான முக்காடு. நிச்சயமாக அவர் மற்ற மனிதர்களை விடவும் வேறுபட்டவர்தான். ரூமியின் அருகில் வந்த அவர் ரூமியின் கையில் முத்தமிட்டு, “மதிப்புரைக்கும் அறிஞரே! என்னை அர்த்தம் கண்டு மதிப்பிட்டுச் சொல்க!” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று மக்கள் திரளுக்குள் புகுந்து மறைந்துவிட்டார். அவர்தான் மவ்லானா ஷம்ஸி தப்ரேஸ். ரூமி அவரைத் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் பறந்துவிட்டிருந்தார்.

(தொடரும்...)

No comments:

Post a Comment