Monday, April 8, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 15



















1:372-373 தனிப்பட்ட பேரங்கள்

      உயிரினங்களுக்கு அவற்றின் தனித்தன்மைகளை கவனித்தே வீடுகள் வழங்கப்படுகின்றன. மணிப்புறாவுக்கு அதன் பரிச்சயமான இடம், மைனாவுக்கு மறைவான கூடு. காக்கைகளின் இல்லம் வேறு விதம். சாலையில் கிடக்கும் கற்களுக்கு இல்லாத மதிப்பு நவரத்தினக்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு சுயமும் ஏக்கத்தின் சிறகுகள் கொண்டு அதன் கூட்டுக்கு, அதன் மதிப்புக்குப் பறந்து போகிறது. ஒன்று அரசன் ஆகிறது, இன்னொன்று சக்கிலியனாகிறது. ஒவ்வொன்றிடமும் வேறுபட்ட பேரங்கள் செய்யப்படுகின்றன.

      அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து எனது சுயத்திடம் செய்யப்பட்ட பேரத்தை மாற்றுவதற்காகப் பள்ளிக்குச் சென்றேன். அதை நான் செய்யும்போது பல அகப்பார்வைகள் வந்தன. ஒன்று, அதிகாலை என்பது எழுவதற்கு மிகவும் சிறந்த நேரம். இரண்டு, தீய சக்திகள் நாய்க்கூட்டம் போல் மனிதர்களைத் தாக்குகின்ற இடங்களும் இருக்கின்றன, மனிதர்கள் மீது வானவர்களின் நல்ல விளைவுகளும் உதவிகளும் ஏற்படுகின்ற இடங்களும் உள்ளன. மூன்று, மனிதர்கள், குறிப்பாக ஆண்கள், தீய சக்திகளின் தாக்கங்களை உள்வாங்கிக் கொள்கிறார்கள், பிறகு செல்வத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள். பணக்காரர்களைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீ அபாயத்தைப் பார்க்காமல் இருக்கக்கூடும். அது கட்புலனாகும் பருப்பொருள் அன்று. அவை உண்டாக்கும் பாதிப்புக்கள் உன் இதயத்தில் ஏற்படுகின்றன.


























 1:374 பண வாடை

      சில நேரங்களை என்னை நானே ஆள்வதற்கு ஏதுமற்ற ஓர் அரசனாக, சட்டமே இல்லாத ஒரு நீதிபதியாக, அமுல் படுத்துவதற்கான திட்டமே இல்லாத ஒரு அமைச்சராக, செல்வமே இல்லாத ஒரு பணக்காரனாக எண்ணிக் கொள்கிறேன்.

      இந்த எண்ணங்களில் பகட்டான பண வாடையை நீங்கள் முகர்கிறீர்களா? என் இலக்கை அறிந்து நீங்கள் பொறாமைப் படுகிறீர்களா?

      இருத்தலில் என் சுயத்தை நான் ஒன்றாக்க முடிந்தால், என்னை நான் முழுமையாகக் கரைக்க முடிந்தால், நான் யார் என்பது பற்றிய இந்தக் கற்பனையான சுயக் கழிவிரக்கக் கதைகள் எல்லாம் மறைந்து போய்விடும்.

      சந்தையில் மக்கள் அதிகாரம் மற்றும் செல்வத்தை நோக்கிய மிக உயரமான ஏணிகளில் ஏறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உச்சத்தை நெருங்கும் நேரத்தில் மண்ணில் விழுந்து விடுகிறார்கள்.




















1:377-379 இஸ்லாமும் பணமும்
     
 சத்திய வழியை இன்னும் தெளிவாகப் பின்பற்ற வேண்டும் என்னும் உறுதியுடன் இன்று காலை நான் கண்விழித்தேன். மன்னர்கள் மந்திரிகள் மற்றும் எனக்கு அதிகமதிகம் பொற் காசுகளும் வெள்ளிக் காசுகளும் தருகின்ற செல்வந்தர்கள் ஆகியோரின் சகவாசத்தில் இருப்பதற்கு நான் திட்டமிடும் நிலையில் அதை நான் எப்படிச் செய்வது? இஸ்லாம் பணத்தைப் பற்றியது அல்ல. முஸ்லிம்கள் வாழ்வாதாரம் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவர்கள் தமது அர்ப்பணத்தின் ஆழம் பற்றியே கவலைப் படுகின்றனர். பயணத்தில் தாம் எப்படி உணவுக்கும் தங்குமிடத்திற்கும் சமாளிக்கப் போகிறோம் என்று முஹம்மதின் தோழர்கள் ஒருபோதும் கலந்து பேசியதில்லை. குர்ஆன் வாழ்முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான கையேடு அல்ல.

      மூசா நபி இஸ்ரவேலர்களைப் போருக்குக் கட்டளையிடவில்லை. ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு போர் வீரனாக இருக்கும்படி அழைக்கப் பட்டார்கள். அந்தக் கோரிக்கையில் ஓர் உயர்வு இருந்தது. ஒரு குறிப்பிட்ட தீவிரமான உறுதிப்பாடு தேவைப்படுகிறது. பின்னர் நான், இந்த மரபின் மீது ஐயப்பட்டு இதற்கு வெளியே வாழ்வோரின் சோகத்தையும் இம்மரபை நம்புவோரின் மகிழ்ச்சியையும் உணர்ந்தேன். முஹம்மதே சத்திய சன்மார்க்கத்தின் மிகவும் புகழுக்குரிய அடித்தளம் என்று நான் முடிவுரைக்கிறேன். இஸ்லாமிய அரசாங்கத்தை ஒருவன் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது அதன் மேன்மையை ஒருபோதும் குறைத்துவிடாது. கள்ள நகை உண்மையான நகையின் மதிப்பைக் குறைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையான பொறுப்பு இருக்கிறது. ஆதமின் மகன் பாவம் செய்தால் ஆதமைக் குறை சொல்லாதே. ஹழ்ரத் அலீயின் வமிசத்தில் வந்த ஒருவர் உன்னிடம் தவறாக நடந்துகொண்டால் அதற்காக அலீயின் வமிசத்தையே குறைத்துப் பேசாதே. படித்தவன் ஒருவன் கெட்டவனாக இருப்பதைப் பார்த்து அதிலிருந்து கல்வியே கெட்டதுதான் என்று முடிவு செய்யாதே.














1:379-380 பதில் தகவல்

      ஃபசீஹ் வல்வல்ஜி பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே தனது தலைப்பாகையின் பக்கவாட்டில் இருந்து கடிதம் ஒன்றை உருவி எடுக்கிறார். இது புகாராவில் இருக்கும் எனது குருநாதரை அடைய வேண்டும். யார் எடுத்துச் செல்வது? தர்வேஷ் ஒருவர் சட்டென்று குதித்து எழுகிறார், கடிதத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

      ஃபசீஹ் தனது உரையைத் தொடர்கிறார், எப்போதையும் விட மிக நுட்பமாகவும் திறமையாகவும். ஒரு மணி நேரத்தில் அவர் தனது பிரசங்கத்தை முடித்துக்கொண்டு தனது இல்லம் திரும்புகிறார். சற்று நேரத்தில் யாரோ கதவைத் தட்டுகிறார்கள். புகாராவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதில் தகவல் கொண்டு வந்திருப்பதாக ஒருவன் நிற்கிறான். வாயிற்காவலன் அதை வாங்கி வந்து தர, ஃபசீஹ் படிக்கிறார்: அஸ்ஸலாமு அலைக்கும், மகனே. இவ்வுலகில் வெளிப்படையாக நடந்துகொள்ளத் துணிகின்ற ஒருவன் தனது இறைக்காதலின் வேலைக்கு நல்லது நினைப்போர் யார் கெட்டது நினைப்போர் யார் என்பதைத் தனது இதயத்தின் கண்ணைக் கொண்டு கவனித்துவர வேண்டும்.
 
      ஃபசீஹ் வாசலுக்கு ஓடுகிறார். ஆனால் தெருவும் இரவும் வெறுமையாக இருக்கின்றன. முன்னர் ஃபசீஹ் நிகழ்த்திய பிரசங்கத்தின் அதி அற்புதமான புத்துணர்ச்சியான சிந்தனைகள் எல்லாம் அந்த சபையில் அமர்ந்திருந்த சூஃபிகளின் இருப்பால் வந்தவைதாம்.

      நான் செய்யும் நற்செயல்களும், உணர்ச்சியற்ற, பிரக்ஞையற்ற செயல்களும் உள்ளமையின் பிரசன்னத்திலேயே நடைபெறுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இதுதான் வேறுபாடு: என் நற்செயல்கள் போற்றப் படுகின்றன; விழிப்பற்ற செயல்கள் அப்படி அல்ல. வழிகாட்டப்படும் செயல்களை மட்டுமே ஓர் ஆன்மா ஆற்றும் எனில் அதன் ஒவ்வொரு செயலும் போற்றப்படும். இப்போது எனக்குத் தோன்றுகிறது, இறைத்தூதர்கள் வந்திராத இடைவேளையில் மக்கள் விக்கிரகங்களை வணங்கியிருந்து அவர்களின் மடமை மன்னிக்கப்பட்டு வந்த காலத்தில் அவர்களின் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டன. இப்போதும்கூட, உலகில் நமது இறைத்தூதர்களின் வழிமுறை அறியப்படாத பகுதிகளில் மனிதர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு ஏற்கப்படுகின்றன. நான் அவ்விடத்தில், அல்லது அக்காலத்தில் வாழ விரும்புகிறேன். ஏனெனில், எனது அறியாமை மன்னிக்கப்படும், எனது பிரிவே இணைதலுக்கான ஓர் வழியாக ஆகிவிடும்.

(தொடரும்...)

No comments:

Post a Comment