Thursday, April 4, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 13


1:327-328 நீதிபதியின் மகளும் நானும்

      சுவர்க்கத்தின் அணங்குகள், “வெண்ணிறக் கன்னியர்”, எப்படியிருப்பார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நீதிபதி ஷரஃபின் மகளுடன் நான் படுத்திருக்கும் காலைப் பொழுதைப் போல் இருக்கக் கூடும். என் அணைப்பிலிருந்த அவளது உதடுகளை மெல்ல கடித்தேன். அவளொரு அழகிய யுவதி. ஆனால், குழந்தை விளையாடுவது போல் அவளின் கீழாடை இடைக்கு மேல் விலகிக் கிடந்தது.

      அவள் என் காதில் ‘அல்லாஹ், அல்லாஹ்…’ என்று முணகிக் கொண்டிருந்தாள், ஒத்திசைந்து இயங்கும் எங்களின் உடல்களில் சுகங்களை நல்கிய இறைவனை அழைத்தபடி. கலவிக் களிப்பில் நான் அவளை முத்தமிட்டபடி அவளது சுவாசத்தை சுவாசித்துக் கொண்டிருந்தேன்.

      ”அணியணியான மஞ்சங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள்” (52:20) என்கிறது குர்ஆன். எனவே, எப்போதாவது நாம் கவலையில் அல்லது வேதனையில் இருந்தால், நமது ஆன்மா அத்துன்பத்திலிருந்து வெளியேறி காதலின் ஆசையில் இணைகிறது. சாய்ந்திருப்பதன் உடல் சவுகரியத்திற்கு நமது தேகத்தின் உறுப்புக்கள் இணங்கும்போது காமத்தில் திளைபபதும் ஆன்மாவிற்கு விடுதலை ஆகிறது.

      ”இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான்” (55:19). ஒன்று உப்பு நீர்; மற்றது நன்னீர். எது எக்கடல் என்று எவருக்கும் தெரியாது. இன்ப துன்பம் எல்லாம் கரையில்தான். ”அவ்விரண்டில் இருந்து முத்தும் பவளமும் வெளியாகின்றன” (55:22).

1:328-329 இந்தக் கதவருகில் இரு

      அருட் கொடைகளை பங்கு வைத்து வினியோகிப்பவர் யார்? குர்ஆன் ஏன் ’பிரபலமான’ நபர் யாருக்காவது அருளப்படவில்லை?

      நாம் விரும்புகின்ற வகையில் நிகழ்வுகள் நடப்பதில்லை. அவ்வாறு நாம் கோரவும் கூடாது. அப்படிச் செய்வது நமது இச்சைகளை நாம் வணங்குவது ஆகிவிடும். முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்க மறுத்தபோது மக்காவின் மக்கள் அப்படித்தான் செய்தார்கள். மஸூது ஸகஃபீ அல்லது வலீதிப்னு முகைரா ஏன் ஆகக்கூடாது? என்று கேட்டார்கள்.
     
 இறைவன் சொல்கிறான், இந்த உலகம் என்னும் அழகிய அன்பளிப்பைக் கவனி. அதை நீ இலகுவாக ஏற்றுக் கொள்கிறாய். ஆனால், நான் என் வார்த்தைகளை எவரின் வழியே அனுப்புகிறேனோ அவரை ஏற்க மறுக்கிறாய். இந்தக் கதவின் அருகில் இருந்து அற்புதங்களைப் பார்த்துக் கொண்டிரு. முக பாவனைகள், கறுப்பு வெள்ளை முடி. நீ ருசிக்கும் எவ்வொரு சுவையும், அது எத்தனை மங்கியதாக இருப்பினும், இறைவனின் இருப்பிலிருந்தே நேரடியாக வருகிறது.



























1:331-332 இலையுதிர்காலம் என்று ஏன் சொல்கிறாய்?

      ”எவர் தீமை செய்யினும் அவரின் கூலி அதனைப் போன்ற தீமையே” (10:27). பிரக்ஞையின்றி நீ செய்யும் தீய காரியங்கள் எல்லாம் உன்னிடமே திரும்பி வரும்.

      பிறரின் மறைவுறுப்பை நீ நோட்டம் இடுபவனாக இருந்தால், உனதும் பிறரால் பார்க்கப்படும். நண்பர்களே, நீங்கள் இப்படியொரு மர்மத்தில் வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் கடைகளில் இருக்கும்போது நினைவில் நிறுத்துங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள். யாரையும் ஏமாற்றாதீர்கள். அது நல் வணிகம் அல்ல. மார்க்க வழிபாடுகளை உங்கள் சமூக அந்தஸ்த்தை உயர்த்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தும் நயவஞ்சகராக மாறிவிடாதீர்கள். கண்கவரும் ஏதேனுமோர் அற்பப் பொருளுக்காக உள்ளத்தின் நிம்மதியை விற்றுவிடாதீர்கள்.

      உறக்கத்தில் உம் உடற்சிறை உலகிற்கு அப்பால் உள்ள உலகிற்குக் கதவு திறக்கிறது. ஆறு திசைகளும் நமது வீடுகளில் ஒன்று மட்டுமே. பிறவும் உள்ளன.

      ஆன்மாவின் கண் ஓர் உருவத்தைப் பார்க்கிறது
      செயற்படும் ஆசை எழுகிறது உடனே.
      இலையுதிர்காலம்
காதலின் முடிவென்று
      ஏன் சொல்கிறாய்?
      இருக்கின்றது நமக்கு
      இன்னொரு வசந்த காலம்






















1:337-338 விவரிக்க முடியாத மாற்றங்கள் என்னில்
      
 உள்ளூர்க் கணியனிடம் சொன்னேன், அவன் ஒன்றைப் பார்க்கவில்லை என்பதால் அது இல்லை என்று அர்த்தம் அல்ல என்று. வேறு யாரும் காண முடியாத ஓர் ஒளியைக் காதலியின் முகத்தில் காதலன் பார்க்கிறான். நாவு கசந்த நோயாளி சுவைக்க முடியாத வகை வகையான ருசிகளை ஆரோக்கியமான ஒருவன் உணவில் சுவைக்கிறான். நோயாளிகளுக்கு எல்லாமே கசப்புதான்.

      வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் மாற்றங்கள் என்னுள் நிகழ்கின்றன. ஆனால் அவை எல்லாம் உண்மைதான். வழிகள் திறக்கின்றன. இறைமையின் நறுமணம் வருகின்றது. இதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் என் வாழ்வில் மிகவும் ஆழமான நிகழ்வு இதுதான். நட்பு என்பது பார்க்கப்படவோ அளக்கப்படவோ முடியாத ஒன்று. ஆனால் அதனுடன் வாழ்வது என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்டது. நம்பிக்கை, நேர்மை, உண்மை போன்ற வார்த்தைகளை விவாதி ஒருவன் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடும். இஸ்லாமிய இறைத்தூதர்களின் ஆற்றலைப் பற்றி அண்மையில் பட்டு நெசவாளியான ஹசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய வார்த்தைகளையே எடுத்து அவன் தனது கட்டற்ற வாழ்க்கை முறையை நியாயப்படுத்தத் தொடங்கினான்.

      இவ்வுலகையும் உடலையும் இரவையும் அதிகாலையில் வெளிச்சம் பரவும் நிலப் பரப்புக்களையும் நோட்டமிடவே ஆன்மாக்கள் மறைவுலகிலிருந்து இங்கே வருகின்றன. அவை சொல்கின்றன, “நான் இதைப் பார்த்துவிட்டேன். உனது பிற தன்மைகளை இப்போது எனக்குக் காட்டுவாயாக. ’அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவனே! (3:26)’


















1:337-338 சூரியன் ஒரு விட்டில்

      ஞானமடைந்த சுயத்தைப் பற்றி விளக்குமாறு நீதிபதி ஒருவர் என்னிடம் கேட்டார்.

      ஞானி என்பவர் எப்போதும் இறை ரகசியத்தின் ஆழத்தைப் பற்றிய விழிப்பில் இருப்பவர். சுவர்க்கம் அல்லது நரகம், வட்டி அல்லது மது பற்றிய சட்ட நுணுக்கம், இந்த உலகம் அல்லது உயிர்த்து எழுப்பப்படும் மறு உலகம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் படுவதில்லை. ஒரு மெய்ஞ்ஞானியின் சிந்தனைக்கு இதெல்லாம் பொருட்டில்லை. அவர் அப்பட்டமாகத் தன்னை அறிகிறார். உள்ளமையைப் பற்றி அவர் ஒன்றும் பேசுவதில்லை. ஞானம் என்னும் மதுவால் அவரது ஆன்மா போதை அடைந்துள்ளது.

      என்னுள் ஒரு மெழுகுவத்தி ஏற்றப்பட்டுள்ளது
      சூரியன் அதற்கு விட்டில் ஆகிறது.

1:352 ஆன்மிகப் பகுத்தறிவு

      குறிப்பிட்ட சில கட்டளைகளால் இபுறாஹிம் நபி சோதிக்கப் பட்டார். தன் சமுதாயத்தின் தலைவர் என்ற முறையில் அவற்றை அவர் எதிர் கொண்டார்.

      பார்க்கப்பட முடியாத முகங்களை நாம் உருவாக்குகிறோம். எல்லா உயிர்களையும் போன்றே ஆன்மாவும் ஐம்புலன்களால் அறியப்பட முடியாதது. ஆன்மாவின் சாராம்சம் பார்க்கவோ கேட்கவோ சுவைக்கவோ முகரவோ தீண்டவோ முடியாதது. இருப்பினும், இந்தப் புலப்படாத சுயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. அனுபவ நிரூபணத்துக்கு அப்பால் தமக்கே உரிய பகுத்தறிவு அவற்றுக்கு உண்டு. அபாயம் எவை அருள் எவை என்று அவை தம்முள் அறிகின்றன. சில சமயங்களில், திறன்களையும் எல்லைகளையும் கண்டறிவதற்காக தீயின் நாவைப் போன்ற ஓசையற்ற ஆணை ஒன்று ஆன்மாவை நோக்கி எய்யப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு தருணத்தை இபுறாஹிம் நபி கடந்து வந்தார். தொழுகைகளுக்குத் தலைமை ஏற்கும்படி அழைக்கப்பட்டார்.















1:354-355 எடுத்து ஏகுதல்

      சிரம் பணியும்போது உன்னை மற. இலக்கற்ற நிலையில் புலன்களை அணைத்துவிடு. அப்போது நீ எதனையும் அறியாத நிலையில், கவலையற்ற நிலையில், கிழக்கிலும் மேற்கிலும் கொண்டு செல்லப்படுவாய். அத்தகைய ஒரு மனமற்ற நிலையில் நீ அறியாமலேயே உன் சுயம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் போயிருந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை.

      மேகங்களிலும் தண்ணீரிலும் அத்தகைய அலைதல்களை நாம் பார்க்கிறோம். மக்கள் திரளுடன் காடுகளும் பயிர்களும்கூட பூமியுடன் சேர்ந்து தமது பாதைகளில் பயணமாகின்றன. நாம் ஒன்றுமே அறியாத பயணங்களில் நமது ஆன்மாவை இறைவன் எடுத்துச் செல்கிறான். ஏன்? நமக்கென்ன தெரியும்? எங்கோ போகும் வண்டியில் மல்லாந்து கிடக்கும் களிமக்கள் நாம். நாம் எதை நேசிக்கிறோம், நாம் எதை விரும்புகிறோம், இருத்தலில் நாம் எப்படி இருக்கிறோம், இப்படிக் கொண்டு செல்லப்படுதல், எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. அதுதான் திருப்தி. நாம் எங்கே எப்படி ஏன் இருக்கிறோம் அல்லது வேறெங்காவது எப்போது சேர்வோம் என்பதை அறியாதிருத்தல்.

      இந்த ரகசியங்களை விளக்கும் முறைமை ஒன்று இந்துக்களிடம் இருக்கிறது. உயிர்த்தெழுதல் மற்றும் பிற உலகங்கள் பற்றிய தொன்மங்கள். அவ்வுலகங்களில் பல்லிகள், பாம்புகள், தேள்கள், யானைகள், குரங்குகள் மற்றும் மனித-மிருகக் கலவைகள் நிறைந்துள்ளன. திருடன் ஒருவனின் தலையை ராட்சத முதலை ஒன்று கடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் வரைந்து வைத்து அக்காட்சி மக்களை பயமுறுத்தி அவரகள் திருடாமல் தடுத்து வைக்கும் என்று நினைக்கிறார்கள். 

      வருகின்ற ரமளான் மாதம் முதல் தேதியில் எனக்கு ஐம்பத்தைந்து ஆகிறது. பன்னிரண்டாயிரத்து சொச்சம். சராசரி ஆயுள் என்பது, ஒருவரின் உயிராற்றலுக்கு ஏற்ப, அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் என்று கருத, எனக்கு இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கலாம். மூவாயிரத்து அறுநூற்று ஐம்பது நாட்கள். அவை ஒவ்வொன்றையும் வைத்து நான் என்ன செய்வது? நான் அறியாத நிலையில் என்னைச் சுமந்து செல்லும் இந்த ரகசியத்தைக் கொண்டாடுவதைத் தவிர வேறு சிறந்த காரியத்தை இதுவரை நான் கண்டறியவில்லை. என்னைச் சுமந்து செல்லும் அந்த ரகசியத்திடம் நான் சொல்கிறேன், “நீயன்றி உண்மையில் வேறில்லை. நீ மட்டுமே”.


















1:359-360 அறுந்த நரம்புகள்

      என் உடல் மிகவும் நலிந்து உடைந்துள்ளது. தெய்வீகக் குறுக்கீடு ஏதேனும் வந்து காப்பாற்றினாலே ஒழிய நான் பிழைப்பது சிரமம். எந்த நொடியும் சாத்தியம் இல்லாமல் போகலாம். அப்போது எனக்குத் தோன்றியது, நகரின் சாலை ஓரத்தில் மரங்களுடன் ஒரு மரமாக நான் இருந்தால் மீண்டும் துளிர்க்கலாமே. மரங்கள் பிற மரங்களின் சகவாசத்தில்தான் செழிக்கின்றன. எனக்கு அப்படி இல்லை. என்னுள் உயிரோட்டம் இல்லை. பட்டுப்போய் சாய்ந்துவிட்ட ஒரு பெருமரம் நான்.

      காரணமே இல்லாமல ஓர் ஊரிலிருந்து இன்னொன்றுக்குப் புறப்பட்டுப் போய் மீண்டும் முதலூருக்கே திரும்பி வந்து பிறகு வேறொரு ஊருக்குப் பயணமாகி மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்த ஒருவனைப் போல் நான் மிகவும் சோர்ந்து போயிருக்கிறேன் என்று தோன்றியது. உள்ளுக்குள் இருந்து உந்தப்படாத பயணத்தில் பயனும் இருக்காது பரவசமும் இருக்காது.

      மனிதர்கள் தொங்கு விளக்குகள், காற்றில் வாழும் வெளிச்சத் துகள்கள். ஊக்கமே விரைப்புடன் அவற்றைப் பிடித்திருக்கும் கயிறு. அவை அறும்போது விளக்குகள் வீழ்ந்து சிதறி அணைகின்றன. மக்கள் மந்தமாக மண்ணில் புரள்கிறார்கள். நேராக தெய்வீகத்துடன் இணைக்கும் இழையே ஆன்மா. அதன் வழியாகவே நமக்குள் மாற்றங்களும் அசைக்கும் பலமான தூண்டல்களும் வருகின்றன.

      தனது அறியாமையைப் புரிந்துகொள்ளும் ஒரு முழுமையை ஞானம் கொண்டு வருகிறது. அரைகுறை அறிவு கொண்ட ஒருவன் இதனை மறுக்கலாம். ஆனால், தனது வாழ்க்கையை நீண்ட காலம் பொறுமையாக அவதானித்த ஒருவர் அறிவார், தனக்குத் தெரிந்தது ஒன்றுமே இல்லை என்று.

(தொடரும்...)

1 comment:

  1. Mesmerizing Words...

    தனது அறியாமையைப் புரிந்துகொள்ளும் ஒரு முழுமையை ஞானம் கொண்டு வருகிறது. அரைகுறை அறிவு கொண்ட ஒருவன் இதனை மறுக்கலாம். ஆனால், தனது வாழ்க்கையை நீண்ட காலம் பொறுமையாக அவதானித்த ஒருவர் அறிவார், தனக்குத் தெரிந்தது ஒன்றுமே இல்லை என்று.

    ReplyDelete