Wednesday, April 17, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 17
















 1:413-414 தவிர்க்க இயலாமல் ஆதல்
      
 ”போர்த்திக் கொண்டவரே! எழுக, எச்சரிக்கை செய்க” (74:1-2). இவ்வரிகள் நமக்கு இறைத் தூதின் அற்புதங்களைக் கொண்டு வந்தன. முஹம்மத் (ஸல்) தனிமையில் வாழ விரும்பினார்கள். ஆனால் இவ்வசனங்கள் அவர்களை மறைவிலிருந்து வெளியே கொண்டு வந்துவிட்டன. ”உம் இறைவனுக்காகப் பொறுப்பீர்” (74:7). நடக்க இருந்தபடியே நடந்தது.

      மனிதனின் பார்வைப் பழுதே ஈருலகங்களுக்கு இடையிலான திரை. ஒவ்வொரு கண்ணின் மீதும் ஒரு விரல் நுனி போதும், இந்த உலகமே உள்ளே வர முடியாமல் தடுப்பதற்கு. இறை தரிசனத்தை விட்டும், அறியும் ஆன்மாவை விட்டும் உன்னைத் தடுக்கின்ற தடை, அத்தனைச் சிறிதும் விலக்கிட எளிதும் ஆகும்.

      உனக்கு அங்கீகாரமும், நல்லுணவும், இசையும், மதுவும், விடுதியில் அரட்டையடிக்கும் மகிழ்ச்சியும் வேண்டுமா? அவை எல்லாமும் மேலும் அதிகமும் மறுமை உலகில் உள்ளன. உனக்கு விளையாட்டு பிடிக்குமா? களங்கள் செம்மையாய் உள்ளன. இச்சைகளின் இன்பங்கள்? மறுமையின் எதார்த்தம் செய்யப் பட்டதே காதலர்கள் களிக்கத்தான். மனிதர்கள் தமது புலன்களின் ஆற்றலை அதிகரித்துக் கொள்வதற்கே, தவிர்க்க இயலாமல் ஆவதற்கே இந்த அன்பளிப்புக்களை இறைவன் வழங்கியுள்ளான். அப்படியெனில், ஆசை என்றால் என்ன என்று நாம் அறிந்து சுவைத்து அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வோம் என்பதற்காக.

      ”கூறுக: அவன் அல்லாஹ் ஏகன்” (112:1). இதன் பொருள், வெவ்வேறு வகையான கணியர்களும் மருத்துவர்களும், தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இசுலாத்தின் உட்பிரிவுகளும் எல்லாம் இறுதியில் அந்த ஏகத்திடமே சென்று தம்முள் கலந்து ஒன்றாகிவிடும் என்பதாம்.






















 1:419-420 காமம் மட்டுமே உருவாக்குவதில்லை
      
 பெண்கள், பொன் மற்றும் வெள்ளிக் குவியல்கள், நிமிர் புரவிகள் மற்றும் கண்ணுக்கு அழகான உழுநிலங்கள் ஆகியவற்றிடம் ஆண்கள் மிக ஆழமாக ஈர்க்கப் படுகின்றனர். இதெல்லாம் விரும்பி அடைகின்ற இவ்வுலக இன்பங்கள். இறைவனின் கருணை அவற்றின் வழியே வேறொரு அழகைக் கொண்டு வருகிறது. இதில் பாடம் என்னவென்றால், நாம் அந்த ஈர்ப்பில் மூழ்கிக் கிடக்காமல் விளைவுகளைப் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனித்திருக்கலாம், சில நேரங்களில், நோய்ப்பட்ட சகிக்க முடியாத பெண்ணிடமிருந்து அழகிய குழந்தை பிறந்து வருகிறது. அந்தக் குழந்தையின் அழகிய அம்சங்களைக் காமம் மட்டுமே உருவாக்கிவிடவில்லை. நமது சுக துக்கங்களின் ஊடே இறைவனின் செயலாற்றலும் இருக்கிறது.

      மனித இச்சிப்பின் அவசரத்தினூடே தெய்வீக ஆற்றலின் இடையீடு நிகழவில்லை என்றால் மக்கள் எல்லோரும் கட்டாந்தரையில் படுத்துக் கிடக்கும் புழுதி நிற ஒட்டங்களைப் போல் ஆகியிருப்பர். அடிப்படையில், இறைவனின் கருணை மட்டும் வேறுபடுத்திக் காட்டாவிட்டால், தாம் உண்ணும் வைக்கோல் மற்றும் தவிடு பற்றி மட்டுமே கவலைப்படும் கழுதைகள்தான் மனிதர்கள் எல்லோரும் [காண்க: குர்ஆன் 62:5]. இறை நம்பிக்கை வந்தவுடன் உங்களுக்கு ஒரு மகத்துவம் வந்துவிடுகிறது, உங்களின் லேசான உழைப்பில் இறைவனின் ஆற்றல் ஒரு சிறு விதைக்குள் நுழைந்து ஒரு பசுஞ்செடியை முளைக்கச் செய்வதைப் போல். ஒவ்வொரு செயலும் இந்த அன்பளிப்பின் ஒரு பகுதியாகிறது. விண்ணிலும் மண்ணிலும் சுற்றி நோட்டமிடு. பலகையைப் போல் மரத்துக் கிடக்காதே. வானம் நகர்வதை கவனி. படைப்பில் ஒவ்வொரு அசைவும் எப்படிப் படைத்தவனுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் பார். விண்மீன்கள், இந்த இயற்கைத் துடிப்புகள், நமது சொந்த சுயங்கள்.

      ஷம்ஸ் அமீர் தாதும் எனது பிற பாரசீக மாணவர்களும் தங்களின் கனவுகளில் முஹம்மத் (ஸல்) அவர்களைக் காண்கிறார்கள். நான் காண்பதில்லை. அவர்கள் என்னை மிகவும் ஓர்மையுடனும் திறந்த மனதோடும் கவனித்ததால் இந்தக் கனவுகளை அவர்களுக்கு இறைவன் நற்கூலியாக அருளுகிறான்.

      இன்பத்தினும் துன்பம் நன்று. ஏனெனில், துன்பத்தில் ஒருவன் இறைவனை நெருங்குகிறான். உம் சிறகுகள் திறக்கின்றன. இறைவன் உம்மைச் சந்திக்கத் தோதுவாகப் பாலைவனத்தில் ஒரு கூடாரம் அடிக்கப் படுகிறது. துன்பத்தில் வந்து சேரும் செல்வத்தையே நாம் இன்பத்தில் செலவு செய்கிறோம். நீ இழந்த எதனை விடவும் உன் ஆன்மா பெரிது.
















1:421 துணி துவைத்தல்
       
வெளி உலகில் என்ன நடக்கிறது என்பது தூங்கும் மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் தமது கனவுகளில் வாழ்கிறார்கள். அதேபோல், ஒருவர் இறக்கும்போது அவர் இவ்வுலகின் பகுதி அல்லர். ஆனால் அவர் வேறு எதார்த்தங்களைக் காண்பார். விதைகளுக்கும் பூக்களுக்கும் தமது வழிகளுண்டு. நீர், காற்று, தூசு, விண்மீன்கள், கதிரவன், திங்கள் ஆகியவற்றுக்கு அவ்வவற்றின் வழிகள்.
      
 [இறைவன் சொல்கிறான்] எரிப்பதற்குத் தோதுவான முட்களையும், திரவியங்களுடன் கலந்து மருந்தாக மாறுவதற்குத் தமது சாரத்தை வெளிப்படுத்தும் ரோஜாக்களையும் நாமே படைக்கிறோம். அந்த முட்கள் குத்துகின்றன; அந்த ரோஜா இதழ்கள் வதங்கி உதிர்கின்றன. இரண்டு குணங்களுமே செம்மையானவை. சில மனித மரபுகள் முட்களைப் போல் கடினமானவை; சில, ரோஜாக்களைப் போல் மென்மை. ஒவ்வொன்றுக்கும் நம்மிடம் தீர்ப்புகளும் நிர்ணயங்களும் உள்ளன. விதைகள் ஒன்றே போல் தெரிகின்றன. ஆனால் ஆப்பிள் ஆகின்றன சில. மாதுளை, நாவல், கொய்யா என்று ஆகின்றவையும் உண்டு. ஆனால் அவை தம்மை யாரென்று வெளிப்படுத்த நீங்கள் கொஞ்சம் உதவ வேண்டும். நிலத்தில் அவற்றை விதைப்பது.

      சில நேரங்களில் கொடூரமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள், பிற நேரங்களில் அன்பான நண்பர்கள். வாள், கோபம், கண்ணியம், அமைதி என்னும் கண்ணாடி – அவற்றை வெவ்வேறு கருவிகளாகப் பயன்படுத்து. உடல்கள் ஆன்மாவைச் சிறப்பிக்கும் ஆடைகளாகும். நாம் அவற்றைச் சலவை செய்வோம், நதிக்கரைக் கல்லில் தப்பி, நீரில் அலசி, பிழிந்து உதறி, மரக்கிளைகளில் தொங்கவிட்டு உலர்த்துவோம். ஆன்மாக்களுக்கு ஆடையாக உள்ள இந்த உடல்கள் என்னும் புதிய ஆடைகளை நாம் இங்கே அமர்ந்து அழுக்கு நீக்கித் தூய்மை செய்வோம்.

      சிலர் பிரபல்யத்தையும் சமூக அந்தஸ்த்தையும் குவிக்கிறார்கள். நாம் காதலின் செல்வத்தையும் உள்ளமையின் மர்மத்தையும் சேகரிக்கிறோம். உன் ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அதனை மகிழ்விக்காத எவ்வொரு வேலையும் கால விரயம்தான்.



























1:424-425 ஆறு மேலடுக்குகள்
      இந்தப் பருவுலகுக்கு மேல் ஆறு அடுக்குகள் இருக்கின்றன. அவை ஆத்மவுலக உயிர்கள், வானவர்கள், மற்றும் இறைத்தூதர்களுக்கான இல்லங்கள். அங்கே பெரிதும் பேசப்படுவதெல்லாம் வேறு உலகங்களைப் பற்றிய செய்திகளே, இங்கே என்ன நடக்கிறது என்பதல்ல. நீர், வளி, தீ மற்றும் ஓரைகளின் விண்வெளி ஆகியவை கொண்ட இவ்வுலகம் ஏழில் முதலாவது மட்டுமே. மேலுள்ள ஆறு அடுக்குகளும் கீழுள்ள நரகமும் முற்றிலும் வேறு. மேலுலகக் குறியீடுகளாக வரையப்படும் பசு மற்றும் மீன் ஆகியவை சோதிடர்கள் தமது பொய்க் கணிப்புகளுக்காகப் பயன்படுத்துபவையே. ”எதைப் பற்றி உமக்கு அறிவில்லையோ அதனைப் பின்தொடராதீர்! கண் காது உள்ளம் ஆகியன ஒவ்வொன்றுமே விசாரிக்கப்படும்!” (17:36) என்பதை மறவாதே.

1:426 கொள்கை விவாதம்

      விதிக் கொள்கை, முன்விதிப்பு, குழுப்பிரிவு நுட்பங்கள், தீ வழிபாட்டுப் போக்கிலிச் சிந்தனையாளர்கள், சிலை வணக்கம் மற்றும் பிறவற்றைப் பற்றிய கேள்விகளில் நீ குழம்பிப் போய் உன் நேரத்தை வீணடிக்கிறாய். இருந்தும், உன்னை நீயே அரிதாகத்தான் சோதனை செய்கிறாய். நீ உண்மையில் நம்புவது என்ன? அதைச் சொல்வதில் தெளிவாக இருக்க முயற்சி செய். பிறரையும் அவர்தம் விசித்திரமான கண்ணோட்டங்களையும் விட்டுவிடு. உண்மையான பாதை என்பது இறைத்தூதர்களின் வாழ்க்கைதான். அந்த ராஜபாட்டை கிழக்கிலிருந்து மேற்கு வரை நீண்டும் உண்மையாகவே இருக்கிறது. முழு தேசங்களும் பிற குழுக்களும் அதிலே தாம் இருப்பதாக பாவிக்கிறார்கள், ஆனால் அவர்கள் இதன் அருகில்கூட வரவில்லை. அவர்கள் தமது கொள்கைப் பிறழ்வுகளில் திளைத்துக் கிடக்கிறார்கள். மூசா நபியை அவர்கள் பின் தொடர முயல்வார்கள் எனில் அவரின் கைத்தடி அவர்களின் தலைகளைத் தகர்த்துவிடும்.















 1:428-429 அவர் எப்படிக் கேட்பார்?

      முஹம்மதை நான் புகழ்ந்திருந்தேன். என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, முஹம்மத் சர்வவியாபியா? சர்வஞானியா? உன் இதயம் சொல்வதை அவர் எப்படிக் கேட்பார்?

      விடை: உள்ளமையின் ரகசியத்தில் அனைத்தும் பின்னப்பட்டுள்ளது. இந்தப் புகழ்ச்சியில் நீ சொல்வது முஹம்மத் (ஸல்), பிற இறைத்தூதர்கள், முற்கால மற்றும் இக்கால இறைநேசர்களால் கேட்டுப் புரிந்துகொள்ளப் படுகிறது.

      உள்ளமையில் இருந்தே தவிர யாருக்கும் எந்த அறிவும் வருவதில்லை. மருத்துவம், வானியல், கலைகள் இத்தியாதி. அந்த உள்ளமையின் மூலமும் அடைக்கலமும் இல்லை எனில் இந்தத் துறைகளில் எல்லாம் நாம் கல்லாத மூடர்களாகவே இருந்திருப்போம். குர்ஆனை வாசிப்பது நமக்கு அதனை நினைவூட்டுகிறது.

 (தொடரும்...)

No comments:

Post a Comment