1:381-382
வெந்தழல், செந்நெருப்பு, சாம்பல்
செங்கற்
சூளை எவ்வாறு இயங்குகிறது என்பதை கவனித்திருக்கிறேன். உள்ளே அதன் மேற்பகுதி வெண்மையாக
இருக்கும். அதன் கீழே செந்நிறப் பகுதி, அதன்பின் செந்தூர நிறம், அதற்கும் கீழே கறுப்பு.
தீக்குள் நுழைபடும் எதுவும் இந்த நிறங்களின் நிலைகளைக் கடந்தே செல்கிறது. இறைக்காதல்
என்னும் நெருப்பின் நிலையும் இப்படித்தான். யாரேனும் முதலில் அதனுள் நுழைந்தால் அவன்
அல்லது அவள் சோகமாகவும் எதையோ பறிகொடுத்தது போன்றும் இருக்கின்றனர், சாம்பலைப் போல.
அதன் பின் வருகிறது உள்ளுதிப்பின் பரவசம், செந்நிறம் செந்தூரம். பிறகு பிரகாசமாகத்
தூய்மை செய்யப்படும் வெண்ணிறத் தழல். மூசா நபி இம்மூன்றையும் அனுபவித்தார். முஹம்மது
(ஸல்) அவர்களும். அனைத்து இறைத் தூதர்களும்.
ஞானத்தைப் பயில விரும்புவதாக யாரோ சொல்கிறார்கள். இரண்டு பாதைகள் இருப்பதாக
அவனுக்கு நான் சொல்கிறேன். ஒன்று மிகவும் சம்பிரதாயமானது, பொதுவானது. அதில் நீ பிரசங்கம்
செய்யத் தயாராகிறாய், பிறருக்குக் கற்பிக்கிறாய், ஒரு நீதிபதியின் மிகச் சிக்கலான சட்ட
முடிவுகளை எடுக்கிறாய். மற்றது முற்றிலும் தனிப்பட்டது. தேடுபவனைத் தவிர வேறு எவரும்
அதனை அறியார் (”மறைவின் திறவுகோல்கள் அவனிடமே
இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார்” – குர்ஆன்:6:59) அத்தகைய பயணிகள்
எப்போதும் இறை ரகசியத்தால் மறைவாக வழிநடத்தப் படுகின்றனர். இவ்வுலகம் பற்றி அவர்கள்
அறிவதெல்லாம் அவர்களுக்கு அவனால் காட்டப்படுவது மாத்திரமே.
அதிகாலை. எனது சிந்தனைகள் நாய் ஒன்றின் குரைப்பால் தடைபடுகின்றன. அப்போது
பீபி அலவி எனது அறைக்குள் வருகிறாள், அரை சுணக்கமாக, அப்போதுதான் கட்டிலிலிருந்து எழுந்தவளாக.
அவள் மீதான ஆசை என்னில் கிளர்கின்றது. இதெல்லாம் இறையருள் என்றே எனக்குத் தோன்றுகிறது.
நாய்க் குரைப்பின் இடையூறும் பீபி அலவியும்கூட. ஆசையுறுதலில் ஏன் வெட்கப்பட வேண்டும்?
ஓர் உதிப்பு வருகிறது: என் வேலை மேலுயர்த்துவதும் கேவலப்படுத்துவதும்
ஆகும். ஒரு கணம் ஒருவரை உனக்கு மிகவும் பிரியமானவர் ஆக்குகிறேன். இன்னொரு கணம், வெறுப்பானவராக.
எனவே, நீ கவலைப்படும் போதெல்லாம் கடவுளை நினை. ஏனெனில் கவலை அங்கிருந்தே வருகிறது.
உனக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது பற்றி உனக்கு வேதனை இருந்தால் அதை நீக்கும்படி பிரார்த்தனை
செய். நீ மகிழ்ச்சி அடைந்து உன்னைச் சுற்றி இருப்பவர்களும் குதூகலித்தால் அந்நிலை தொடர
வேண்டும் என்று கேள். இருப்பினும், நான் இப்போது சொன்னதைப் போல் எப்போதும் பிரக்ஞையுடன்
இருக்க உன்னால் முடியும் என்றால் நீ ஓர் இறைநேசன்தான்.
என் மண்டையில் இந்தச் சிந்தனைகளோடு நான் தொழுகை வரிசையில் ஹாஜி சித்தீக்குடன்
நின்றிருந்தேன். நான் தொடர்ந்தேன், ஆன்மாவின் புரிதல் என்னவென்றால் எல்லாமே இறைவனின்
பிரசன்னத்தில் இருந்து வருகிறது என்பதே. அப்படித்தான் நாம் இறைவனை அறிகிறோம், ஆன்மாவில்
உள்ள விழிப்புணர்வால். ஒவ்வொருவரும் எப்போதும் இதை அறிந்திருந்தால் ஒவ்வொருவருமே இறைத்
தூதர்களாக இருப்பார்கள். ஆனால் எதார்த்தம் அப்படி அல்ல. இறைத் தூதர்களுக்கு ஓர் வலிமை
கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சுவையான உணவுகளையும் பானங்களையும் துறந்து சுகங்களை
மறுத்து தமது கவனம் முழுவதையும் இறைவனில் கரைந்து போவதிலேயே ஆக்கி விடுகிறார்கள். சொற்பமானவர்கள்
மட்டுமே இப்படிச் செய்ய இயலும். நம்மில் பெரும்பாலோர் ஆசையிலும் காமத்திலும் திளைக்கிறோம்.
நாம் உணவுகளில், இவ்வுலக இன்பங்களில் திளைக்கிறோம். மேலும் நாம் இறைத் தூதர்களின் மரபிலும்
அதன் வழி நம்மிடம் வருகின்றவற்றிலும் திளைக்கவே செய்கிறோம். இறைத் தூதர்களை விடவும்
வேறு வகையில் நாம் அருள் புரியப் பட்டிருக்கிறோம்.
1:382-383
கைவிரித்தல், சிறகளவு
”நீங்கள் விருப்புடன் ஆயினும் அல்லது வெறுப்புடன் ஆயினும் வாருங்கள்”
(41:11). சுயேச்சையாளர்கள் விண்ணிற்குத் தாமாகவே திறந்து கொள்கிறார்கள். ஆனால், எவருக்கு
எல்லாமே முன்பே விதிக்கப்பட்டுவிட்டதோ அத்தகைய விதிக்கொள்கையர் கால்நடைகளைப் போல் ஓட்டப்படுகிறார்கள்
[’இவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை,
அவற்றினும் கீழானவர்கள்’ – 7:179. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் பல காலங்கள் கழித்து
வந்த விதிக்கொள்கையரை குர்ஆன் கண்டனம் செய்யவில்லை. இப்பத்தியில் பஹாவுதீன் (ரஹ்) அவர்கள்
விதி பற்றிய விளக்கம் இல்லாதவர்களையே பொதுவாகச் சாடுகிறார்கள் – கோல்மன் பார்க்ஸ்]
நல்ல வண்ணம் வாழ நீ முடிவுகள் எடுத்தல் வேண்டும். நீ உன் ஆசைகளையும்
வாழ வேண்டும் ஆன்மிகத்தையும் வாழ வேண்டும். அபூஹனீஃபா சொல்லும் துறவு நிலை போன்ற மார்க்கச்
சட்டம் எனக்கு உவப்பாயில்லை. தனித்துவமாக இருக்க வேண்டும் எனில் நீ மனைவி மக்களுடன்
வாழ்வதை, உன் ஆசைகளை முழுமையாக வாழ்வதைத் தேர்ந்தெடு. அப்போதுதான் உன் ஆன்மா பிற ஆன்மாக்களுடன்
கலக்கும். அந்தக் கூட்டு ஆன்மா தெய்வீகத்தின் உலகிற்கு உயர்ந்து எழும். உன் நினைவுகள்
விரிந்து பிற நினைவுகளையும் உள்ளடக்கிக் கொள்ளும்.
நான் எனது ஆன்மாவை நோட்டமிட்டேன். அது கிழக்கிலிருந்து மேற்கு வரை
ஒவ்வொரு செயலுக்கும் அகப்பார்வைக்கும் திறந்ததாக இருந்தது, இறைநேசத்துடன் வியப்பும்
கொண்டதாக இருந்தது. வானவர் ஜிப்ரீல் நானாக மாறினால் என்ன? அப்போது நான் எனது சிறிய
உடற்சுயத்தைக் கண்டேன். இரண்டு எண்ணங்கள் தோன்றின. ஒன்று: நோட்டமிடுபவர்கள் பொதுவாக
ஆன்மா எட்டுகின்ற எல்லை வரை காண்பதில்லை, வெறுமனே கை முழம் மட்டுமே. இரண்டு: மண்ணறைகள்
இருட்டாகவும் அசைவற்றும் தோன்றுகின்றன. ஆனால் அதனுள் உள்ள ஆன்மாக்கள் எவரின் கற்பனைக்கும்
எட்டாத வகையிலே உயிருடன் இருக்கின்றன, மிகவும் பிரகாசமான புத்துணர்ச்சியுடனும் துறுதுறுவென்றும்
தாங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வேலைகளில் ஈடுபாட்டுடனும்.
1:383-384
படிக்கட்டில் இளம்பெண்
பருவான பயன்களை மட்டுமே நல்குகின்ற, ஆன்ம வளர்ச்சிக்கு எதுவுமே செய்யாத
ஒரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைப் பற்றிய புதிய நீதிக் கதை ஒன்றை உருவாக்க
நான் முயன்றிருந்தேன். ஒரு கருமானை நினைத்தேன். இரும்படிக்கும் வேலையில் என்ன ஆன்மிகப்
பயன் இருக்க முடியும்? என்று. பிறகு நான் என்னையே நோக்கி வியந்தேன், நான் செய்துகொண்டிருக்கும்
இந்த வேலையில்தான் என்ன ஆன்மிகப் பயன் இருக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
யாரோ ஒருமுறை சொன்னார்கள், ஆசையில் அல்லது பதவி அதிகாரத்தில் இன்பம்
அனுபவிக்காத ஒருவர் இச்சையும் அதிகாரமும் பிரதானமான இந்த உலகத்தின் பரிசை உண்மையில்
பாராட்டவே இல்லை என்பதாக.
ஆம், நான் ஆமோதித்தேன், ஆனால் நீ மறந்துவிட்ட எண்ணற்ற வகையிலான இன்பங்கள்
இருக்கின்றன. இறைவன் ஒரு கதவைச் சாத்தும்போது பிற பல கதவுகள் திறக்கின்றன. நாம் அறிய
முடியாத வழிகளில் வானவர்கள் திளைக்கிறார்கள். பேய்கள் அவற்றுக்கு எதில் சுகமோ அதையே
செய்கின்றன. ஒவ்வொரு விலங்கிற்கும் அதன் சொந்த வினோத நடனம் இருக்கிறது.
ஒருநாள், சோம்பலும் சோர்வும் மிகைத்திருந்த போது இக்காட்சியைக் கண்டேன்:
ஒரு வீட்டின் முன்னால் படிக்கட்டில் ஓர் அழகிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். அத்தருணத்தின்
பிடியில் ஆட்பட்டவர்களாக அவளைச் சுற்றிலும் இளம் ஆண்கள், தனது ஆளுமையின் தனித்தன்மையைக்
காட்டும் நோக்கில் ஒவ்வொருத்தனும் மற்றவர்களைக் கிண்டல் செய்தபடி. அவளின் கவர்ச்சியில்
அவர்களின் வாய் பிளந்து கிடக்கிறது. அவர்களின் கவனிப்பால் அவளின் வாலிபம் இன்னும் பிரகாசமாகிறது.
அப்போது எனக்குத் தோன்றுகிறது, புத்துணர்ச்சியாக உணர்ந்திடுவதன் ரகசியம்,
நீ சீண்டவும் அசதியாடவும் கேலி பேசவும் தோதாக உன்னைச் சுற்றிலும் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு
அவர்களை மெல்ல மெல்ல உன் மீது காதலில் விழும்படியாக இட்டுச் செல்வதில் இருக்கக் கூடும்.
எனவே நான் பிரார்த்தித்தேன், இறைவா! நீயே என்னைப் படைத்தாய். உனது
சாராம்சமே என்னில் வாழ்கிறது. உன்னை நீயே ஒரு ரசிகர் கூட்டமாக எனக்குக் காட்டு. நான்
உன்னைச் சீண்டுவேன். நீ என் உரிமையான பேச்சுக்களை ஏற்றுக் கொள்வாய். நான் சற்றே நிறுத்துவேன்.
அடுத்து வருவது என்ன என்று நீ ஆவலோடு எதிர்பார்ப்பாய். நான் புதிய கதைகளைப் புனைவேன்.
நீ செவி கொடுப்பாய், எனது கவர்ச்சியில் வசப்பட்டவனாக.
1:393-394
எதிர்காலக் களிப்புகள் ஏதுமில்லை
நாம் காண்பதும் தொடுவதும் அன்றி வேறு எதுவுமில்லை என்று சொல்பவர்களுக்கு
நான் எப்படி மற்ற உலகங்களை விளக்குவேன்? உணவால் தன்னைத் திணித்துக்கொண்ட ஒருவன் சட்டென்று
காணும் உணவுகளை எல்லாம் சுவையற்றதாக நோக்குவது போல பொருள் முதல்வாதிகள் தமது எல்லைகளை
விரைந்து எட்டி விடுகின்றனர். இதற்கு மேல் இன்பம் ஏதுமில்லை என்று உணர்வதானது நன்றிகெட்டத்
தனத்தாலும் உன் தோல்விகளை நீ ஒப்புக்கொள்ள மறுப்பதாலுமே உண்டாகின்றது.
1:394-395
நம் மிருக சக்திகளும் நம் அழகும்
குர்ஆனின் மொழி பற்றி யாரோ கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், அது என்ன
சொல்கிறது என்பதை அறியாமலே அறபியை மனனம் செய்திருப்பவன் ஒருபோதும் சுவைத்துப் பார்க்காமலே
தண்ணீர் ஜாடியை சுமந்து திரிகின்ற ஒருவனைப் போன்றவன். ”இறை நம்பிக்கையிடம் உம்மை வழிப்படுத்தியதால் அல்லாஹ்தான் உமக்கு உபகாரம் செய்திருக்கிறான்”
(49:17). அதனை விடவும் மேலான கருணை இல்லை. இறைவனின் சித்தத்திற்கு முற்றும் சரணடைதலான
இஸ்லாத்தின் மாட்சிமைக்குள் ஒருவன் இன்னும் நுழைந்திடவில்லை எனில் அவன் அல்லது அவள்
அதற்காக உழைக்க வேண்டும். உன்னை நேசிக்கும் ஒருவர் அதனைச் சப்தமாகச் சொல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அந்நபரின் ஏழு சக்கரங்களும் விழிப்புடனும் அவற்றால் இயன்ற வகைகளில் உனக்கு உபகாரம்
செய்வதற்குத் தயாராகவும் அங்கே இருப்பதை நீ அறிவாய். நீ அழகு கொடுக்கப் பட்டிருக்கிறாய்.
அந்த அழகிற்கு ஆற்றலும் மதிப்பும் சேர்க்கின்ற மிருக் சக்திகளும் கொடுக்கப் பட்டிருக்கின்றாய்.
உன் நன்மையும் அழகும் உயிரோடு உள்ளன. ஏனெனில் நீ வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறாய்,
அந்த வாய்ப்பை நீ தேர்ந்தெடுத்திருக்கிறாய்.
நான் எப்படி ஒரு முஸ்லிமாக நேசிக்கப்பட்டு வந்திருக்கிறேன் என்பதையும்
எப்படி ஏழைகளுக்கு உதவி வந்திருக்கிறேன் என்பதையும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நிராகரிப்பாளர்
மீது எனக்கு வெற்றி வேண்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்கிறேன். என்னைப் படைத்த
இறைவனே அல்லவா அவர்களையும் படைத்தான்? இதற்கு என்னிடம் விடை இல்லை. எனவே, நான் இப்பிரச்சனையை
விட்டுவிட்டு மேலும் தனிப்பட்ட பிரச்சனைகளை நோக்கி கவனத்தை நகர்த்துகிறேன். அவை எனக்கு
நிறையவே இருக்கின்றன. ஏதோ சில காரணங்களுக்காக இவ்வுலகில் முஸ்லிம்களை விடவும் நிராகரிப்பாளர்கள்
அதிகமாக இருக்கின்றனர். ஏனென்று யார் அறிவார்? மாறாக, நான் என் பொழுதுகளை இறை தியானத்தில்
கழிப்பேன்.
1:396-397
தத்துவவாதிகளும் அபூ ஹனீஃபாவும்
சத்தியத்தின் இயல்பைப் பற்றி உரையாடுவதற்காகத் தத்துவவாதி ஒருவர் அபூ
ஹனீஃபாவிடம் வருகின்றார். [இமாம் அபூ ஹனீஃபா
– இஸ்லாமிய சட்டவியல் மேதை, இறையியல் அறிஞர் (கி.பி.699-767)]. பள்ளிவாசலின் கதவருகில்
தனது ஒட்டகத்தைக் கட்டிய அவர் அபூ ஹனீஃபாவை நோக்கி நடந்தபடியே தனது வாதத்தை ஆரம்பித்து
விட்டார். அவரின் ஒட்டகத்தை மறைத்து வைக்குமாறு தனது பணியாளருக்கு அபூ ஹனீஃபா ஜாடை
காட்டுகிறார்கள். எதற்கும் எதார்த்தம் என்று எதுவுமில்லை. எல்லாமே மாயை, கனவு, கானல்
நீர். சில மணிநேர மயிர் பிளக்கும் தர்க்க வாதங்களுக்குப் பின் அவர் வெளியே வந்து தனது
ஒட்டகத்தைத் தேடுகிறார். நீ உனது ஒட்டகம் என்று ’நினைத்தது’ அந்த நாயாகவோ அல்லது அந்தப் பறவையாகவோ இருக்கலாம் அல்லவா?
என்று அவருக்குச் சுட்டிக் காட்டப்படுகிறது. சீக்கிரம், அது பறந்து போகிறது. எல்லாமே
நிலையற்றவை. இவ்வாறு சீண்டி அபூ ஹனீஃபா அவரை இஸ்லாமை நோக்கி ஆற்றுப் படுத்துகின்றார்.
இன்னொரு முறை ஹஜ்ஜில், கழுதையின் மீது இவர்ந்து வரும் ஒரு தத்துவவாதியை
ஹஜ்ஜில் கண்டார்கள். கீழிறங்கும்படி அவனுக்குக் கட்டளை இட்டார்கள். அங்கிருந்தோர் கழுதையின்
மீதிருந்த பொதியை அவிழ்த்தெடுத்து அந்தத் தத்துவவாதியின் முதுகில் வைத்துக் கட்டினார்கள்.
நீங்கள் ஏன் எனக்கு இப்படிச் செய்கிறீர்கள்? அபூ ஹனீஃபா சொன்னார்கள், தெளிவான எதார்த்தம்
என்று எதுவுமே இல்லை என்பதால் நீ மனிதன் அது கழுதை என்பது உண்மையா? அல்லது அது மனிதன்
நீ கழுதை என்பது உண்மையா? என்று எங்களால் முடிவு செய்ய இயலவில்லை! எனவே நாம் அவ்வப்போது
நிலைமைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இரண்டு வாய்ப்புகளுமே கையாளப்படும்!
1:402-403
ஒரு ரொட்டித் துண்டை உண்ணுதல்
நீ ஒரு ரொட்டித் துண்டை உண்ணும்போது அது நிகழ என்னென்ன நிகழ்வுகள்
கூடி வந்தன என்பதை எண்ணிப் பார். ரொட்டியை வேக வைத்த அடுப்பின் சூடு, அதன் தானியம்
விளைந்து வந்த உழுநிலம், வெய்யில், மழை, அறுவடை, உமி தூற்றல், களஞ்சியத்திற்கு எடுத்துச்
சென்றது, ஆலைக்கு எடுத்து வந்தது. மட்டுமல்ல, அந்த ஆலையைக் கட்டி எழுப்பிய நுணுக்கமான
திட்டமும் செயலும்கூட. நான்கு பருவங்களில் தட்பவெப்பத்தில் ஏற்படும் சீரான மாற்றங்கள்.
ரொட்டியை அறுக்க உதவிய கத்தி, அதை உருவாக்கிய உலோகவியல் மற்றும் கத்தியாக வடிவமைத்த
திறன் ஆகியவற்றை மறந்துவிடாதே. மேலும், உண்மையான அரைவை எந்திரம் – உன் பற்கள்! அதன்
பின், ரொட்டியை செரிக்கின்ற உன் வயிறு. அதன் பின், ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு வகையில்
போஷாக்கு பெறும் உன் உடல். இருநூற்று நாற்பத்தெட்டு எலும்புகள், ஐநூற்று முப்பது தசைகள்,
முந்நூறு நாளங்கள், தசை நார்கள், குருத்தெலும்புகள், உள்ளுறுப்புக்கள், கைகள், கால்கள்,
உன் மூளை. ரொட்டி கரையும்போது அதன் பயனை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதை உன்னுள்
பற்பல அறிவுகள் முடிவு செய்து இணங்குகின்றன. அவற்றிடையே ஏதேனும் பிணக்கு இருக்குமெனில்
நீ வலியை உணர்ந்திருப்பாய், கதறியிருப்பாய். ஆனால் அப்படி இல்லையே.
இப்போது, உன்னுள் இருக்கின்ற ஒருங்கிணைந்த மனித விழிப்புணர்வைக் கவனி.
அது உன் உடலுக்குள் வாழ்கிறது, பிற உயிர்களுடன் தொடர்பு கொள்ளும் ஓர் ஆன்மாவுடன். பிற
மனிதர்களை அன்புடன் நோக்குகின்ற ஒரு மனிதனாக அது இரண்டு உலகங்களுக்கு இடையில் அமர்ந்திருப்பதைக்
கவனி. இதுவே உடற் பரிணாமத்தின் உச்சமான நிலை என்றும் அடுத்த உருமாற்றத்தின் ஆரம்ப நிலை
என்றும் சிலர் சொல்கிறார்கள். உணவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், ஏதேனும் சிரமமோ,
வலியோ அல்லது திடீர் ஏமாற்றமோ வந்தால் அதற்கும்கூட நன்றியுணர்வோடு வாழும் நீ, காலத்திற்கு
உள்ளேயும் வெளியேயும் ரொட்டி உண்ணும் பரிசுத்த சுயமாக, எண்ணற்ற தெய்வாதீனங்கள் ஒன்றிணைவதை
நோக்கும் சாட்சியாக வாழும் நீ, இறைவனின் பேரறிவிலிருந்து உண்டாகி வந்த ஒரு தனி ஆன்மாவாக
உன்னில் நீ இருக்கிறாய்.
1:404
தாராளம்
படைப்பைப்
பற்றி நான் தொடர்ந்து வியந்தபடி இருக்கிறேன். இந்தப் பிரபஞ்சம் எப்படி வந்தது? ஏன்?
இந்த விஷயங்களைப் பற்றிய உறுதியான புரிதல்கள் இருக்க முடியுமா? இப்போது எனக்குத் தோன்றுகிறது,
பூமியிலிருந்து முளைத்து வருகின்ற பற்பல தாவரச் சங்கமங்கள் படைப்பின் ரகசியத்தை விளக்கும்
உதாரணம் என்று.
ஆப்பிள், வெங்காயம், கோதுமை, பிஸ்தா பருப்புக்கள், துளசி, புதினா,
மாமரம், தேக்கு, கொடி முந்திரி, ஒவ்வொன்றும் அதற்குத் தோதுவான தட்பவெப்பத்திலும் மண்ணிலும்
வளர்கின்றன. மனிதர்கள் மற்றும் அவர்களின் பல்வேறு திறன்களும் அப்படியே. பல்வகையான அறிதல்களுக்கு
இடையில் தொடர்புகள் இருப்பது தேவை. நமக்கு இலட்சியங்கள், குதிரை வணிகம், தச்சு, மீண்டும்
மீண்டும் செய்யப்படும் வீட்டுத் திட்டங்கள், விளைச்சலை எங்கே சேமித்து வைப்பது மற்றும்
அதனைச் சந்தையில் விற்கும்போது என்ன பேச வேண்டும் என்னும் அறிவு.
ஒவ்வொரு செயலும் மூலத்திலிருந்தே வருகின்றது, மண்ணுக்குள் புதைந்திருக்கும்
ரகசியங்களில் இருந்து பயிர்களின் உயிர் தாராளமாக வளர்வது போல. வசந்த காலத்தில் மரங்கள்
துளிர் விடுவதற்கு தூவும் மழையும் வீசும் காற்றும் தேவை. மக்களுக்கோ நண்பர்களும், சுகமும்,
பணியில் ஈடுபாடும், முன்னகர்த்தும் போதிய ஆர்வமும் தேவை.
சிலநேரங்களில் ஒரு மரக்கன்றை வேரோடு அகழ்ந்தெடுத்து வேறிடத்தில் நட
வேண்டியது தேவையாகிறது. சூஃபிகள் சொல்கிறார்கள், எங்கே மக்கள் உன்மீது நேசம் கொள்ளாமல் இருக்க இயலாதோ அங்கே செல்.
எனது மாணவர் ஒருவர் சொன்னார், கார் காலத் தொடக்கத்தின் குளிரில் வெற்றுடம்போடு
வெளிச் செல்வது ஆரோக்கியமானது. ஆனால் எல்லோருக்கும் அல்ல என்று நான் அவருக்கு நினைவூட்டினேன்.
மறைவான தாக்கங்கள் எண்ணற்ற வழிகளில் நம்மில் மனநிலைகள், ஆசைகள், ஆலோசனைகள் மற்றும்
முனைப்புகளை உருவாக்குகின்றன. விண்ணும் மண்ணும் அல்லது வேரும் கிளையும் என்பதினும்
சிக்கலான, வெய்யிலும் பருவமும் என்பதினும் நுட்பமான ஒரு பின்னலை மறைவுலகும் வெளியுலகும்
நெய்திருக்கின்றன.
1:408
உன் குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்
இந்த உதிப்பு: நீ செய்திருக்கக் கூடிய எவ்வொரு தவறுக்கும் யாரையும்
ஏசாதே. நீ வளர்ந்து நிற்கும் வரை உன் பிள்ளைகளை ஒழுங்குபடுத்த எண்ணாதே. எவரையும் குறை
காணாதே, இகழாதே அல்லது கேலிப்பெயர் சூட்டாதே. அந்தத் தீர்ப்புக்களை உன் உள்ளே திருப்பு.
உனது குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்.
பகுத்தறிவுத் தத்துவத்தைப் பயில்வதன் ஒரு தீங்கு அது உன்னை குர்ஆனை
விட்டும் திசை மாற்றிவிடும். பகுத்தறியும் மனம் இறையுதிப்பை ஒருபோதும் அணுக இயலாது.
இறைத் தூதுத்துவம் அரிஸ்டாட்டிலின் அறிவைக் கண்கூசச் செய்கிறது.
(தொடரும்...)
No comments:
Post a Comment