Sunday, February 24, 2019

ஒரு சூஃபியின் டைரி - 15
















#108 மலைகளின் மீது இறங்கும் வெளிப்பாடுகள்
      ஒரு மணி நேரம் கழிந்தது. என் மனதில் இறக்கம் (நுஸூல்) பற்றி நினைவு கூர்ந்தேன். தெய்வீகத்தையே ஆடையாக அணிந்த சத்தியப் பரம்பொருள் அழகும் வாஞ்சையும் துலங்க ஷீராஸில் உள்ள என் தியான மடத்தின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவன் முன் பரவமாகி நின்றேன். பிறகு நான் இணைதலின் ரகசியம், ஒருமையின் எதார்த்தங்கள் மற்றும் சக்தியின் புனிதம் ஆகியவற்றைப் பற்றி எண்ணினேன். சத்தியப் பரம்பொருள் உள்ளமையைப் பார்த்தான். மலைகள் எல்லாம் அவன் காலடி முன் வீழ்ந்து கரைந்து போகக் கண்டேன். விதானம், காற்பலகை, வானங்களும் அவற்றிலுள்ளவை அனைத்தும், பூமியும் அதிலுள்ளவை அனைத்தும், எல்லாமே சிரம் தாழ்த்தி வீழ்ந்தன. நான் அவனை கண்டேன். அவனது அந்தத் தன்மையின் வெளிப்பாடு எனக்கான கருணையும் அன்புமே ஆகும் என்று அவன் என்னை உணரச் செய்தான். போதைக்கும் தெளிவுக்கும், ஒருமைக்கும் காதலுக்கும் இடையில் நான் இருந்தேன். இந்த திரை அகற்றல்களுக்கு மத்தியில் அனைத்து மலைகளும் சத்தியப் பரம்பொருளுக்கு அருகில் வருவதைக் கண்டேன். அந்த மலைகள் ஒவ்வொன்றிலும் எனக்கான புனித பானம் ஒன்றிருந்தது. நாம் பெரிதும் மகிழ்ந்தேன். பிறகு நினைத்தேன், “இந்த ரகசியங்களின் மகத்துவ நிலையை நான் எடுத்துச் சொல்ல இவற்றைப் புரிந்துகொள்கின்ற பக்குவம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்?”














#109 பழத்தோட்டம்
      என் மனைவியருள் ஒருவர் இறந்த பின் பாசாவிற்கு அருகில் நானொரு பழத்தோட்டத்தை வாங்கும்படி ஆனது. நான் எண்ணினேன், “அவளுடைய மரணித்துக்குப் பிறகு இந்தப் பழத்தோட்டத்தை வைத்து நான் எப்படி வாழ்வேன்?” அப்போது மறைவிலிருந்து குரலொன்று கேட்டது, “அந்நாளில் சொர்க்கவாசிகள் தங்குமிடத்தால் மேலானர்களாகவும் ஓய்விடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்” (குர்ஆன்:25:24). இத்திருவசனத்தை நான் ஆழ்ந்து நோக்கியபோது மேலான இறைவன் சொன்ன அந்த வாசகத்தின் உட்பொருளை நான் உணர்ந்தேன், “வெளியேறு இந்தத் தோட்டத்தை விட்டு”. நரகத்தின் வாயிற் காப்பாளரான வானவர் அல்-மாலிக் அவர்கள் “நரக நெருப்பை விட்டுப் வெளியேறு” என்று சொன்னதைப் போல. இறைவன் அல்லாத எதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிக்கப்படுகின்றது. ஒருமையின் அழகும் முடிவின்மையின் ஆற்றலும் கொண்டிருக்கிறான் இறைவன், என்றும் திரையிடப்படாமல். அவன் சொன்னான், “அவனது முகம் அன்றி அனைத்தும் அழிகின்றன” [குர்ஆன்: 28:88]. அதுவே ஒருமை மற்றும் அழிவின் படித்தரம். நான் வியப்புற்று நின்றேன், அழிக்கப்பட்டேன், நான் எங்கிருந்தேன் என்று எனக்குத் தெரியாது.






















#110 காற்றாகின கடல்கள் எல்லாம்
       பிறகு அவன் என்னை விட்டு மறைந்தான். காற்றுப் போன்ற கடல்களுக்குள் என்னை நுழைய வைத்தான். சத்தியத்தின் வல்லமை என்னைச் சுற்றிச் சூழ்ந்தது. இந்தப் பெருங்கடல்களில் நான் என்னை ஒரு துளியாகக் கண்டேன். இடமும் வலமும் மேலும் கீழும் முன்னும் பின்னும் அதற்கு இல்லை. மகத்துவத்துக்கு மேல் மகத்துவம், சக்திக்கு மேல் சக்தி, வல்லமைக்கு மேல் வல்லமை, நித்தியத்திற்கு மேல் நித்தியம், பின்னூழிக்கு மேல் பின்னூழி என்பதல்லால் நான் கண்டது வேறில்லை. பிறகு அவன் மறைவின் கருவறைகளில் இருந்து சொன்னான், “இது முடிவற்ற நித்தியத்துவம், நித்தியமான தெய்வீகப் பிரசன்னம்”.

#111 ஆதமின் தோற்றத்தில்
      அது நிகழ்ந்த பின், நான் என்னை ஏழு வானங்களுக்கு மேலே இருப்பவன் போலக் கண்டேன். வானவர்களும் இறைத்தூதர்களும் மணப்பெண்கள் போல் அமர்ந்திருந்தனர். பேரழகும் மகத்துவம் கொண்டு சத்தியப் பரம்பொருள் தோன்றி அவர்களைக் கடந்து சென்றான். அவனது வாஞ்சைக்கும் கலப்பற்ற பேரழகிற்கும் அனைவரும் ஏங்கினார்கள். அழகின் ஆடைகள் கொண்டு ஆதமின் தோற்றத்தில் இறைவன் போர்த்தப் பட்டுள்ளான். அந்த வானவர்கள் எல்லாம் இறைவனின் வாசலில் அவனது வல்லமையின் திறப்பிற்காக ஒவ்வொரு கணமும் குறைவற்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. இதுவே அவர்களின் நித்தியப் பழக்கம். சத்தியப் பரம்பொருள் பூமிக்கு இறங்கி கிழக்கிலிருந்து மேற்கிக்குச் சுற்றிச் சென்றான், பிறகு அவன் என்னிடம் வந்து, “நான் உனக்காகவே வந்தேன், நீ தூங்கிக் கொண்டிருந்தாய்” என்று சொன்னான். பிறகு அவன் என் வீட்டில் ஒரு மணி நேரம் இருந்தான், நான் விண்டுரைக்க இயலாத உருவத்தில். அவனது பேரழகைக் காண்பதன் கருதுவதன் இனிமையில் எனது இதயமும் உடலும் அப்படியே உருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். “உன்னை நான் படைப்பதற்கு முன் உன்னைத் தேடிக்கொண்டு மறைவின் கருவறையிலிருந்து நான் எழுபது முறை வெளியே வந்தேன். உனது இடங்களை உனக்காகக் கண்டேன், எனக்கும் இந்த இடங்களான மறைவுலகம், பாலைவனங்கள் மற்றும் பெருங்கடல்கள் ஆகியவற்றுக்கு இடையே எழுபதாயிரம் ஆண்டுகள் தொலைவுப் பயணம் இருந்த போதும்.” என்னை அவன் நெருங்கி வந்து நெருங்கி வந்து மேலும் நெருங்கி வரும் வரை, நான் மறைந்து அழிந்துபோகும்வரை என்னை அனுகினான். ஒவ்வொரு கற்பனை, குறிப்பு மற்றும் வெளிப்பாட்டை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன்.

#112 கடந்த நிலை ரகசியம்
      இது ஓர் ஆன்மிக நிலை. இதன் ரகசியம் சொல்லத் தகாது. இது தெய்விகத்தின் ரகசியங்கள், பண்பின் உருவாக்கம் மற்றும் கருணைகளின் வெளிப்பாடு ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. அவனது போதுமான கருணையும் அருட் கொடைகளும் அவனது அறிவர்கள் காதலர்கள் ஆகிய அடியார்களில் நேசத்தைத் தூண்டுகிறது. அவனது உதவி இல்லை எனில், காலத்தின் ஆவர்த்தனங்களில் சிக்கியுள்ள அவர்கள் எப்படி அவனது முகத்தின் நுட்பமான ஒளிகளை தரிசிப்பார்கள்? அவன் தனது ஆற்றலுடன் முழுமையாக வெளிப்பட்டால் இருப்பவை அனைத்தும், படைப்புக்கள் அனைத்தும் அழிந்துவிடும். 
      
      கவலைப்படாதே நண்பனே! இது போன்ற திரை விலகல்கள் இறைத்தூதர்கள் மீதும் மெய்யடியார்கள் மீதும் இறங்கியுள்ளன. ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் தெய்வீகத்தினால் போர்த்தப்பட்ட வெளிப்பாடுகளின் மூலமாக மட்டுமே அறிவித்துப் பாதுகாத்துள்ளனர். தனி நபர்களின் பண்புகளில் அவனது சுயத்தையும் பண்புகளையும் பார்க்கின்ற எவரையும் விட்டு அவன் கடந்தவனாக இருக்கிறான்.

#113 தொழுகைக்கு வானவர்களை அழைத்தல்

      நடுநிசிக்குப் பின் ஒரு திரைவிலக்கத்தில் என்னை நான் ஷீராஸில் என் மடத்தில் இருப்பவனாகக் கண்டேன். தொழுகை மாடக்குழிவைக் கண்டேன். மேலான இறைவன் அதில் தன்னைத் தோற்றினான். அவனை எப்போதும் நான் கண்டதை விடவும் மிக அழகாக இருந்தான். அவனது வல்லமை மற்றும் அழகில் அவன் திருப்தியாக இருப்பதைப் போல் தெரிந்தது.  ஆனால், அவன் என்னை விட்டு ஒளிந்துகொண்டான். நான் பேருவகை மற்றும் ஆன்மிக நிலைகளில் மூழ்கியிருந்தேன். ஒரு மணி நேரம் கடந்தது. கூரையின் மீது மேலான இறைவனைக் கண்டேன். தொழுகை திசை நோக்கி அவன் தொழுகைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். “முஹம்மது இறைத்தூதர் ஆவார் என்று நான் சாட்சி சொல்கிறேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டேன். பூமி வானவர்களால் நிரம்பிற்று. மேலான சத்தியப் பரம்பொருள் தம்மைத் தொழுகைக்கு அழைப்பதைக் கேட்ட வானவர்கள் விசும்பியழுது பெருமூச்சு விட்டனர். மேலான இறைவனின் மகத்துவமும் பெருமையும் ஈர்த்தலால் அவனை நெருங்கி வராமல் இருக்க அவர்களால் இயலவில்லை. எனது பிரக்ஞையில், மேலான இறைவனின் திருவசனம் ஓதப்பட்டது, “அவர்களுக்கு மேலுள்ள அவர்களின் ரட்சகனை அவர்கள் அஞ்சுகிறார்கள்; அவர்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதனைச் செய்கிறார்கள்” [குர்ஆன்:16:50]


























 #114 அதிகாரப் பறையொலிகள்
      மேலான இறைவனை நான் அடிக்கடிக் கண்டேன், தியான விடுதியின் வாசலில் அவன் யாழிசைத்துக் கொண்டு நிற்பதைப் போல். அணு அணுவாய், எல்லாப் பொருளும் சிரிக்கும் வரை பேருவகையும் ஆனந்தமும் பரவிற்று. அதற்கு முன்பும் அடிக்கடி இறைவனை நான் கண்டிருக்கிறேன், ஒவ்வொரு மேலுக்கும் மேலாய், அவனே பறை கொட்டுபவனாக. தன் அரசாட்சியைத் தானே பிரகடனம் செய்வதாக அதன் மூலம் அவன் காட்டுகிறான். என் காலத்தில் என்னை அவன் அரசாட்சிக்குத் தேர்ந்தெடுத்துப் பிரதிநிதியாக்கி உலகை ஆளச் செய்தான். இதுவும் இது போலவனவும் தேர்வு, ஏற்பு, பதவியளிப்பு மற்றும் இணைவு ஆகியவற்றின் உதாரணங்கள். வானவர்கள் மற்றும் ஆன்மிகர்களின், சாதாரண மனிதர்களின் இதயங்கள் எண்ணுவதைக் கடந்த நிலையில் மேலான இறைவன் இருக்கிறான். இவை அவன் தனது நேசர்களான ஞானிகளுக்குச் செய்யும் உதவிகள். இறைத்தூதரின் வாக்குகளில் இது போன்ற விஷயங்கள் பல உள்ளன. இறைத் தூதர்களின், இறை வேதர்களின் மற்றும் ஞானிகளின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களின் சொற்களுடன் இவற்றுக்கு என்ன தொடர்பு? இத்தனைத் திரை விலகல்களுக்குப் பின்னும் எவனாவது என்னைச் சந்தேகப்பட உரியவன் என்று எண்ணுவானாகில், எவற்றைக் கொண்டு குறியீடான நபிமொழிகள் விளங்கப்படுகின்றனவோ அந்த ஞானியரின் பரவசங்கள் மற்றும் சூஃபிகளின் உணர்வெழுச்சிகள் ஆகியவற்றின் ஒற்றை நறுமணத்தைக் கூட இதுவரை முகர்ந்திராத முட்டாளே ஆவான். இறைத்தூதர் அருளினார்கள், ”மேலான இறைவன் தனது சுயத்தின் வடிவத்தை தான் நாடிய முறையில் காட்டியருள்வான்.”

(to be continued...)

No comments:

Post a Comment