Saturday, February 16, 2019

ஒரு சூஃபியின் டைரி - 14






















#101 “கவலைப்படாதே”
      அதற்கு முன் நான் ஏக்கமும் துடிப்புமானதொரு நிலையிலிருந்தேன். அதற்கும் முன்பு இதயத்தை ஒருமுகமாக்குவது பற்றிய சிந்தனையில் இருந்தேன். அறிவுரை பகர்வது போல் அவன் என்னிடம் சொன்னான், “நீ எதைப் பற்றி யோசிக்கிறாய்? கவலைப்படாதே”. ஒவ்வொரு பொருளிலும் அவன் இருக்கிறான் என்றாலும், அவனது படைப்புக்கள் எதனின் சிந்தனையிலும் உள்ள கருத்துருவத்துக்கு அவன் அப்பாலானவன். மாலைத் தொழுகைகளின் இடைவேளையில் நான் அவனது பிரசன்னத்தினுள் ஆனேன். அதன் ஒளியைக் கண்டேன். வானவருலகின் ஆட்சியின் விரிவைக் கண்டேன். நித்திய சௌந்தர்யத்தின் திரைவிலகல் நோக்கினேன். நான் விண்டுரைக்க இயலாத வகையில் அவன் என்னை நெருங்கியபோது பிரசன்னத்தின் மாடத்தில் அவனது வல்லமையிலும் அழகிலும் அந்த சத்தியப் பரம்பொருளை தரிசித்தேன். ஏகத்துவத்தின் கடலுள் வீழ்ந்தேன். அதன் பின் அவனை மீண்டும் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு மணியும், வல்லமையிலும் அழகிலும் மகத்துவத்திலும்.














#102 மின்னலெனத் தாக்கும் மனநிலைகள்
      இரவில் செம்பாகம் கடந்தது. மேலான இறைவன் என்னை நோக்கி வரக் கண்டேன். அவன் என்னை விதானம் மற்றும் காற்பலகையிலிருந்து மேலேற்றினான். சுவர்க்கத்தில் ஆதமுக்கும், மாபெரும் தரிசனத்தின் பின் எல்லை மரத்தின் இடத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் தன்னைக் காட்டித்தந்தது போல் எனக்குத் தோற்றமளித்தான். அந்நிலையில் அவனை நான் கண்டபோது, அவனது முகத்தின் நுட்பங்களிலிருந்து மின்னல்கள் போன்ற மனநிலைகள் என் மீது பொழிந்தன. அவனில் யான் கண்ட பரவசத்தால் அவனில் யான் மறைந்துபோகும்வரை அவன் என்னை விட்டும் மறையாதிருந்தான். பிறகு அவன் மறைந்து மீண்டும் பேரழகும் வல்லமையும் மகத்துவமும் மிகுந்ததொரு ரூபத்தில் தோன்றினான். ஒரு மணி நேரம் கடக்கும்வரை அவன் எனது நிம்மதியைப் பறித்துக்கொண்டான். அதன் பின் என்னைக் கடத்திச் சென்று மறைவுலகினுள் சுற்றவைத்தான்.
















 #103 குருமார்களின் ஏக்கம்
      அவனுக்கு மிகவும் நெருக்கமாக நானிருந்த நிலையில் அவன் என்னை அழைத்துச்சென்று மறைவின் திரைகளுக்குள் நுழைய வைத்தான், மறைவை விட்டும் நான் மறையும் வரை. நான் புறப்பட்டபோது கணமொன்று கடந்து போயிற்று. நான் ஷீராஸ் நகரில் இருப்பது போல் கண்டேன். வானத்தின் கதவுகள் திறந்துகொண்டன. நான் காற்பலகை மற்றும் விதானம் ஆகியவற்றைக் கண்டேன். குரு மகான் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஃகஃபீஃப் அவர்களைக் கண்டேன். அவர்களும் பிற குருமார்களும் பிரிந்தபடியும் குழுமியபடியும் இருந்தனர். சத்திய இறைவன் என்னை அங்கே அழைத்து வருவதை அவர்கள் எதிர்பார்த்திருப்பது போல் தோன்றியது. சத்தியப் பரம்பொருள் அவர்களுக்குக் காட்சியானபோது அவர்களனைவரும் பெருமூச்சுடன் விம்மி அழுதனர். அந்நிலை அவர்கள் எனக்காக ஏங்குவதிலிருந்தே உண்டாயிற்று!


























#104 இடையில் யாருமில்லை
      பிறகு அவன் சிறப்பானதொரு நிலையில் எனக்குத் தோன்றினான். அவனுக்கும் எனக்கும் இடையில் யாருமில்லை. அவன் சொன்னான், “முந்நூறாயிரம் ஆண்டுகள் தொலைவிலிருந்து நீ என்னைக் காண்கிறாய்!” ஒரு மணி நேரம் கடந்தது. நான் வருணித்துச் சொல்லவியலாத இசை ஒன்றைத் தன்னிலிருந்தே எனக்குக் கேட்கச் செய்பவன் போல் மறைவுலகிலிருந்து அந்த மேலான இறைவன் என்னை நோக்கியிருக்கக் கண்டேன். அவனது இனிமையில் அக்கணத்தில் நான் உருகிப் போனேன். அவனினும் தித்திப்பாக எதனையும் நான் கண்டதில்லை. பிறகு நான் மேலான இறைவனை எனது வீட்டில் கண்டேன், “மிக்க அழகான தோற்றத்தில்”. நான் கதறினேன், அழுதேன், நெருக்கத்தின் கடலினுள் மூழ்கினேன். பிறகு அவன் எமக்கிடையில் இடைவெளி ஏதுமின்றி நெருங்கினான். நான் அவனுடன் அமர்ந்திருக்கையில் அவன் என்னிடம் சொன்னான், “நான் உனக்காகப் பெரிதும் ஏங்குகிறேன்”. நான் சொன்னேன், “என் கடவுளே! என் நண்பனே! இவ்வுலகிலிருந்து கிளம்பும் நேரத்திற்கு நான் வந்துசேரும்போது நீயே என்னை எடுத்துக்கொள்வாயாக! உன்னுடன் மறைவுலகின் திரைகளுக்குள் நான் நுழையும்படிச் செய்வாயாக!”. மேலான இறைவன் சொன்னான், “அப்படியே ஆகட்டும்”. பிறகு நான் அவனைவிட்டும் மறைந்தேன். அதன்பின் வைகறைத் தொழுகைக்கு அழைப்பு ஒலிக்கும் நேரம் வந்தது. பூர்வீகத்திலேயே இந்த மகத்தான படித்தரங்களுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். அவன் அப்பாலானவன். அவனை தரிசிக்கத் தோதான இடங்களில் அவன் தன்னை வெளிப்படுத்தும் போது காலத்தின் மாற்றத்தில் அவனது சுயம் மாறுவதில்லை. அவனைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் அவனை வருணிப்போரின் அகநிலைகளுக்கு ஏற்ப அவன் உருக்கொள்கிறான். எனினும், காலத்தின் எந்தத் தன்மையிலும் வரையறுக்கப்படாமல் பூர்வீகத்தில் அவன் எப்படி இருந்தானோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறான்.

#105 இறை விதானத்துக்கும் காற்பலகைக்கும் இடையில்
      இறை விதானத்துக்கும் காற்பலகைக்கும் இடையில் அவன் தன்னை வெளிப்படுத்திய விதம் பற்றி நான் வியப்படைந்தேன், “அவன் விதானம், காற்பலகை மற்றும் முழு இடத்தையும் கடந்தவன்”. இச்சிந்தனை எனக்குத் தோன்றியபோது அவனது திருமுகத்தில் விதானத்தையும் காற்பலகையையும் கண்டேன். அவை வெறும் துகள்கள் போன்றும் அவனது வல்லமையின் வியப்பில் அழிந்தன போன்றும் தோன்றின. உனக்கு நான் சொன்ன இது, என் நண்பனே!, இறைவனை அவனது இறங்கு நிலையில் அறிவோரின் நிற்குமிடம் இதுவே. அவனது திருப்பண்புகளின் அரங்கம் காலத்தின் சாயைகளுக்கு அப்பாற்பட்டது.

#106 அனைத்துக்கும் அப்பாலான முகம்
       மேலான சத்திய இறைவனைச் சந்திக்கும் ஏக்கம் முழுமையான போது ஆழிரவில் அவனைக் கண்டேன். நதிகளோடும் சோலைகள் கண்டேன். அவன் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். அவன் என்னை நோக்கி முகத்தைத் திருப்பினான். அதன் அழகில் திருப்தியின் ஆனந்தம் இருக்கக் கண்டேன். நான் நெருக்கமும் களிப்பும் கொண்ட நிலையிலிருந்தேன். அலட்சியமும் உவகையும் தன்னை மிகைத்த நிலையில் பெருங் குடிகாரன் ஒருவன் செய்யும் செயல்களை செய்யாதிருக்க இயலாமல் ஆனேன். குடிகாரன், இருவகையான செயல்களையும் செய்வான். பிறகு அவன் என்னை விட்டும் மறைந்தான். பிறகு அவன் அழகின் அம்சங்கள் அலங்கரித்த நிலையில் பேரன்பில் தனது இதயத்திற்கு மகிழ்வூட்டியவனாக நிற்கக் கண்டேன். பின்னர், எனது இதயத்தைக் கொள்ளையிடும் வண்ணம் அவன் தனது அழகான திருப்பண்புகள் துலங்கும்படி அவனை எனக்குக் காட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன். அப்போது அவனது முகம் ஏழு வானங்கள், ஏழு பூமிகள், விதானம் மற்றும் காற்பலகை ஆகியவற்றை விடவும் விசாலமானதாக இருந்தது. அவனது திருமுகத்தில் அனைத்தும் அழிந்தபடியுள்ளன (காண்க: குர்ஆன்: 28:88). சகோதரனே!, ரட்சகமான (றப்பானிய்யூன்), நித்தியமான, மகத்துவமான, புனிதமான, வானவர்களான, வல்லமையான நபர்களேயன்றி வேறெவரும் இதனையும் இது போன்றவற்றையும் அறியார். மேலான இறைவன் சொல்கிறான், “அல்லாஹ்வும் ஞானத்தில் ஊன்றப்பட்டோரும் அன்றி வேறெவரும் அதன் உட்பொருளை அறியமாட்டார்” [குர்ஆன்: 3:7]. ஏனெனில், குறியீடான திருவசனங்கள் (ஆயாத்தே முதஷாபிஹாத்) காதிலின் இதயங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. நித்தியமான பேரழகைக் காதலிக்காத எவரும் இறைவனின் செயல்களில் உள்ள அவனது திருப்பண்புகளின் அறியவியலாத அம்சங்களை ஒருபோதும் அறியமாட்டார். இறைவனை மனிதத் தன்மைகளில் அறிகின்ற அல்லது அவனை சூக்கும நிலைக்குக் குறுக்கி விடுகின்ற அனைவரின் வருணனைகளை விட்டும் அவன் மேலானவன்!









































 #107 வானவர்களின் படித்தரம்
      மறைவுலகின் குரலிலிருந்து என் இதயம் கேட்டது, “அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக! தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக! தியானத்தை ஓதுவார் மீது சத்தியமாக!” [குர்ஆன்:37:1-3]. இந்தத் திருவசனங்களை நான் சிந்திக்கிறேன். ஆனால், இப்பேச்சில் இறைவன் என்ன நாடுகிறான் என்பது எனக்குத் தெரியவில்லை.
இறை பிரசன்னம் வானவர்களால் நிரம்பியிருக்கக் கண்டேன். அவர்கள் கழுநீர்ப் பூக்களாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டோர் போலிருந்தனர். (கருநீலமும் சிவப்புமாக ’மணி மிடைப் பவளம்’ போல் இருந்தனர்!) பேரரசனின் முன் துருக்கிகள் நிற்பது போல் வரிசையாக நின்றனர். “அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
பிறகு, மேலான சத்திய இறைவன் அவர்களுக்குத் தனது வல்லமை, பேரழகு, மகத்துவம் மற்றும் பெருமையின் ஒளிச்சுடர்களை (தஜல்லியாத்) வெளிப்படுத்துகிறான். விதானம் முதல் பூமி வரை உள்ள ஒவ்வொரு அணுவும் எனக்கொரு நாவு ஆனபோதும் மேலான இறைவனை அவனது பூரணமான சௌந்தர்ய நிலையில் என்னால் வருணிக்க இயலாது. அவன் தன்னை வெளிப்படுத்திய போது அவன் மீதான ஏக்கத்தாலும் அவனுக்கு அருகில் நெருங்க வேண்டும் என்னும் விருப்பத்தாலும் அந்த வானவர்களில், சிலர் மீது சிலர் வீழ்ந்தனர், சிலரினும் சிலர் மேலே சென்றனர், சிலரைச் சிலர் மறைத்தனர், சிலரைச் சிலர் விரட்டினர். எனவே, “தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
அவர்கள் அவனை நெருங்கியபோது அவர்களை போதையும் களிப்பும் மிகைத்தது. குடிகாரர்களின் பேச்சினைப் போல் சொற்கள் அவர்களின் நாவினின்றும் வெளிப்பட்டன. [அதாவது, குடிகாரர்கள் சுயேச்சையாகப் பேசுவதில்லை. அவர்கள் அருந்திய மதுவே அவர்களைப் பேச வைக்கிறது. எனவே, வானவர்கள் சுய இச்சையில் பேசுவதில்லை. இறைக்காதலின் உணர்வே அவர்களைப் பேச வைக்கிறது என்பதுதான் ரூஸ்பிஹான் பக்லி (ரஹ்) அவர்கள் சொல்லவரும் கருத்து – மொ.பெ.] அப்பேச்சுக்கள் பீற்றுதல் போன்றும், களிப்புரைகள் போன்றும், இறை நெருக்கத்தின் பரவசங்களில் நான் சொல்வது மாதிரியான பூடக உரைகளாகவும் இருந்தன. எனவே, “தியானத்தை ஓதுவார் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
அது, நெருக்கத்தில் வியப்பின் நிலை, காதலில் ஆனந்தத்தின் நிலை, இனிய இணைதலில் ஏக்கத்தின் நிலை!
 
(to be continued...)

No comments:

Post a Comment