1:272 சுகத்தை வெளியே தேடுதல்
எந்நிலையில் நீ இருந்தபோதும் இறைவனின் பிரசன்னத்தில் இருக்கிறாய் என்பதை
மறக்காதே. சுகத்தை வெளியே தேடாதே, குறிப்பாக – காதல் கொண்ட தொடுகையை விடவும் சிறந்த
வேறு சுகத்தை நான் கண்டதில்லை. அந்தச் சுவையே மிகவும் இனிது. அதில் நீ லயித்திருக்கும்போது
இந்த சுகமான வடிவங்களையும் உணர்ச்சிகளையும் வழங்கியது யார் என்று பார். மூளை வலிப்பை
நீ அனுபவிக்க நேர்ந்தாலும், அப்போது, நிலநடுக்கம் எப்படி மலைகளைக் கிழித்து கற்சுவர்களை
ஆட்டிவிடுகிறது என்று நினைவு கூர்வாயாக. அந்த மைய சக்தி உன் வலிப்பை உடைக்கட்டும்.
உன்னைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் அதிகாரத்தை, அதனை வைத்துள்ள யாரேனும்
ஒருவரை நீ அஞ்சும்போது, அந்தக் கவலைகளில், தொழுகையின் முழுமையான சிரப்பணிவில் இறைவனின்
இருப்பை அனுபவி.
நசுக்கப்பட்ட புதினாவைப் போல், ஓரங்களில் வரையப்பட்டுள்ள சித்திரவியல்
போல், நமது ஆசைகளின் குழப்பத்திலிருந்தே பிள்ளைகளின் கள்ளமின்மை எழுகிறது. நாம் காதலும்
காமமும் வயப்படும் முறையே வடிவங்களுடன் ஒளி கலப்பதைப் புகழ்கிறது.
1:275-276
எனக்கு என்னை நீக்கு
என் பிரக்ஞையின் மையச் சரடு தொலைந்துவிட்டது. உறுதியற்ற இக்காற்றில்
நொண்டியபடி, தான் நாடியதைச் செய்யுமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். எனது எந்த ”நான்”
இதனைக் கேட்கிறது? அலையுறுவன சில என்றும் நிலையாயின சில என்றும் உள்ளன பல. இந்தப் பிரார்த்தனை
இதுவே: தயை செய், உன் பிரசன்னத்தை யாசிக்கும் என்னை எனக்கு நீக்கு.
ஆனால், இது மீண்டும் பிழையாகிறது. அப்பால் கடந்து இருக்கும் பிளவற்ற
ஒன்றைப் பிளக்க முயல்வதாகிறது. எண்ணற்ற துகள்கள் ஒன்றிலொன்று மோதியும் ஒவ்வொன்றின்
ஊடாகவும் பாய்ந்து சிதறுகின்றன. இந்தத் துடிக்கும் உடைசலே நான்.
ஒவ்வொரு மூச்சும் என் இறுதி பிரார்த்தனை என்றுணர உதவு. என் பிள்ளைகள்
அனாதைகள் ஆகின்றனர்; என் உடல் மண்ணுள் மீள்கிறது; ஆகாயப் பதிவுகள் என் பாவங்களால் நிறைந்துள்ளன.
எனக்கு மேலும் வாழ்க்கை வாய்ப்புகள் இல்லை. இந்த என்னைக் கொண்டு நீ விரும்பியதைச் செய்.
நீயே ரோஜா வனமாகவும் தீயில் வீழ்ந்த முட்களாகவும் இருக்கிறாய். உன் தீர்ப்பின் கடுமையை
விடவும் உன் மன்னிப்பின் ரகசியம் மிகைத்தது என்று எமக்குச் சொன்னவனும் நீயே.
1:278-279
சகவாசம் விளையாட்டல்ல
தமது கல்வியை விடவும் சுவாரஸ்யமான எதையாவது செய்து பார்ப்பது என்று
அறிஞர்கள் சிலர் முடிவெடுத்தனர். திருமணம் ஆகாத சில பெண்களை இங்கே அழைத்து வந்து அவர்களுடன்
பேசுவோம்.
அவர்களில் மிகவும் அவலட்சணமாக இருந்த வயோதிகன் ஒருவனுக்கு அரசரின்
மகள் மீது மோகம் உண்டாகிவிட்டது. இளவரசி அல்லாது வேறு எதுவும் யாரும் அவனுக்கு நிம்மதி
இல்லை. உங்கள் கொண்டாட்டத்தை நீங்களே அனுபவியுங்கள்; எனக்கு வேறு வேலைகள் உள்ளன.
அவன் இளவரசியின் ஜன்னல் அருகே சென்று தனது பிரார்த்தனையைக் கிசுகிசுத்தான்.
கடைசியில் அவள் கவனித்தாள். அவன் கூறும் எதுவும் எனக்குக் கேட்கவில்லை: அவள் தனது பணிப்பெண்ணிடம்
சொன்னாள், அவனிடம் எனக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா என்று பார். அவன் எதற்கு அஞ்சுகிறான்
என்று கேள். ஒருவேளை, அவன் எனக்கு எரிச்சலூட்டினால் அவன் தனது தலையை இழப்பான். ஆம்,
அது அப்படித்தான். பணிப்பெண் சொன்னதை அந்தக் கிழவன் கேட்டான். கதறினான். செத்து வீழ்ந்தான்.
”நேர்வழியில் நடத்துவாயாக” (1:6) என்பது என்ன? ’என்னை அடையும் வழியை
உனக்கு நான் காட்டும்படி என்னைக் கேள்” என்பதுதான். நான் பதில் சொல்கிறேன், எங்கெனினும்
எனக்கு வழி காட்டு. உன்னிலிருந்து வரும் எந்தத் திசையும் எனக்குத் திருப்தியே.
ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினான். இரவில் தன்னைச் சந்திக்குமாறு அவள்
சொன்னாள். பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டு அவள் வந்தாள். ஆனால் அவன் தூங்கிவிட்டான்.
அவன் சட்டைப் பைக்குள் மூன்று பாதாம் கொட்டைகளை இட்டுவிட்டு அவள் போய்விட்டாள். எழுந்து
பார்த்தவன் அவளின் சமிக்ஞையைப் புரிந்துகொண்டான். நீ இன்னும் சிறு பிள்ளைதான், காதலன்
அல்லன். இந்தக் கொட்டைகளை வைத்து விளையாடு. அவற்றைத் தரையில் உருட்டு. காதலன் என்பவன்
எதையும் இழக்கத் தயாராக இருப்பவன், உயிர், விழிப்பு, உறக்கம், சுய உணர்வு என்று எதையும்.
காதலர்கள் இவை அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள், காதலியுடன் ஒரே ஒரு கணம்
இருப்பதற்காக.
1:293-294
சூஃபிகள் கோடித்துணி அணிவது ஏன்?
”விண்ணில் கோளுறு வழிகள் சமைத்து அவற்றிடை ஒரு விளக்கையும் ஒளிரும்
திங்களையும் அமைத்தவன் பாக்கியவான்” (25:61)
உட்புறம் பிரகாசமும் வெளிப்புறம் இருள் கூரையும் கொண்டதொரு வீட்டில்
நாம் வசிக்கிறோம். காரிருள் ஊடாய் இந்தப் பேரொளி போல் உண்மையில் சூஃபிகள் இருப்பதால்
கோடித்துணியை அணிகின்றார்கள். அவர்கள் தமது தன்முனைப்பில் இல்லை என்பதன் குறியீடு அது.
யாம் இறந்துவிட்டோம் என்று வீதியில் நம்மிடம் கூவுகின்றார்கள். இங்கே நடக்கும் எதிலும்
எமக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும், ஒவ்வொரு கவலையும் எமதே!
1:295
யூசுஃப் இல்லை எனில்
”அழகிய பொறுமையே நனி நன்று” (12:83). உள்ளே சுடரும் தழல்கள்தாம் வெளியே
மென்மையாய் ஒளிர்கின்றன. சிரிப்பு தனக்குள் எப்படிக் கவலையை அடைகாக்கிறது என்று ஞானம்
அறியும். நீ நேசித்தால் மட்டுமே பிரிவை அறிவாய்.
உனக்கொரு யூசுஃப் இல்லை எனில் நீ உயிருடன் இல்லை. தன் மகன் மீது யாகூப்
நபிக்கு எந்த அளவு பிரியம் இருந்ததெனில், கறை படிந்த மேலாடையைக் கண்டு அவர் கதறிய அழுகை
இப்போதும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் உடைக்கின்றது.
1:295-296 யாகூப்
”அழகிய பொறுமையே நனி நன்று” (12:83). புறத்தில் அமைதி; அகத்தில் தீ!
களிச்சிரிப்பும் பணிந்த முறுவலும் காட்டும் ரகசியக் காப்பாளர்களால்
நிறைந்திருக்கும் ஓர் உலகத்தை என்னுள் நோக்கிக் காணும் தெளிவுள்ள மனிதன் எங்கே? உள்ளே
அவர்கள் கண்ணீர் கசிய முனகுகின்றார்கள். தம் துயரத்தை வெளிப்படையாக அழுவோர் வெகு சிலரே.
நண்பனின் பிரிவை உணரும்போது மாபெரும் ஆழமொன்று வருகிறது. அப்போதுதான்
மனிதன் பரிதாபமாக வாழ்கிறான். யூசுஃப் இல்லை எனில் யாகூப் உண்மையில் யாகூப் அல்லர்.
உன் காதலியுடன் நீ சில கணங்களாவது பூவனத்தில் கழித்திருந்து பின்னர் பிரிவை அடைந்திருந்தாலே
ஒழிய திருமறையில் சொல்லப்படும் அந்தக் கதையைப் போன்றதொரு அன்பின் துடிப்பையும் உயிர்மையின்
ஆழத்தையும் உன் வாழ்க்கை ஒருபோதும் அடையாது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிரிடை உள்ளது. நீ ஒன்றை நேசிக்கும்போது அதன்
எதிரிடையை வெறுக்கிறாய். இன்னொரு உண்மை யாதெனில், எந்தவொரு சூழலுக்கும் அதனைவிடவும்
சிறந்த சூழலொன்று அதற்கு மேலே இருக்கிறது. இந்த அமைப்பு ஒன்றின் மேல் ஒன்றாக இப்படியே
இறைவனைத் தொடும்வரை செல்கிறது. இது உன்னைச் சுற்றிலும் இருக்கிறது, ஆனால் நீ பார்ப்பதில்லை.
உன் பார்வையை விரிவு செய், காண்பாய். யூசுஃப் – யாகூப் கதைக்குள் வாழத் தொடங்கு. அமர்ந்து
யாசி, கடவுளைக் காண. இறைத்தூதர்களைப் போல் கெஞ்சு. தெய்வீகத்தைக் காட்டப்படுவதும்,
காண்பதும் உன் பிறப்புரிமை!
1:303-304
மறைவை அறியும் வழிகள்
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் காண அனுமதிக்கப்பட வேண்டும் என்று
மஹ்மூது அப்துர் ரஜ்ஜாக் மூன்று இரவுகள் வேண்டினார். ஆனால், அவர் பஹாவுத்தீனைக் கண்டார்.
அப்துல்லாஹ் ஹிந்தியும் பஹாவுத்தீனையே கண்டார். எப்படித் தெரியுமா? பஹாவுத்தீன் ஒரு
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவரின் சேவகர்கள் தங்கப் பதாகைகளை ஏந்தி நிற்கிறார்கள்;
அங்க சுத்தியில் அவர் தன் கால்களைக் கழுவிய நீரை மக்கள் அள்ளித் தமது முகங்களில் தடவிக்
கொள்கிறார்கள், மறைவான நோய்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள.
இறைத்தூதரைத் தான் விழிப்பு நிலையில் கண்டதாகவும், இன்னும் பிற காட்சிகளையும்
துர்க்நாஜின் சகோதரி அறிவிக்கிறார். ஏட்டுக் கல்வியால் வரும் அறிவை விடவும் இத்தகைய
அனுபவங்கள் மிகவும் வலிமையானவை. இந்தப் பருவுலகை உள்ளெடுத்து கிரகிப்பதற்கான புலன்களை
உனக்குத் தந்த இறைவனே மறைவுலகை அறியும் வழிகளையும் தருகின்றான்.
1:304-305 பேரெடுக்க வேண்டாம்
பக்தர்களே, இதர பக்தர்களுடன் இருங்கள். பிறர், தமது உள்ளங்களில், உமக்கு
கேடுதான் விழைகின்றனர். நீங்கள் விளங்குவீர்கள் எனில், உமக்கு நாம் அடையாளங்களைத் தெளிவாக்கிவிட்டோம்
(குர்ஆன் 3:118-இன் கருத்துச் சுருக்கம்).
உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் சகவாசத்தில் உங்கள் உள்ளம் அவர்கள்
மீது கருணையாலும் இறைத்தூதர்கள் மற்றும் வானவர் மீது நேசத்தாலும் நிரம்புகிறது. மறுமையில்
இதற்காக நீங்கள் சன்மானம் வழங்கப்படுவீர்கள். இறைவன் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தால்,
அதில் ஒரு பகுதியை இறைப்பணி புரிவோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வழியில் இறைவன்
உங்களுக்கு வழங்கவில்லை எனில், ஓய்வு கொள்ளுங்கள். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
சண்டையிடுவதும் இடாததும் உன் முடிவு. நீ வன்முறை காட்டவில்லை எனில்
சண்டை இல்லை. ஆனால், உனக்குக் காம இச்சை இல்லை என்றால் நீ ஒரு பிணம்தான். அது அதிகமாக
இருந்தாலோ புயற்காற்றில் சிதறும் கண்ணாடியைப் போல் நீ நொருங்கிவிடுவாய். எவ்வளவு அதிகமாக
வேலை செய்கிறாயோ அவ்வளவு அதிகமாக உன்னில் சக்தி சுரக்கும். லாபம் என்பது செலவினங்களைப்
பொருத்தது. “உன்னைக் கொண்டே அல்லால் ஆற்றல் இல்லை...”
இரண்டு வேலை
முறைகள் உள்ளன. ஒன்று, உன் இதயத்திலிருந்து, அதன் சாராம்சத்திலிருந்து, இறைவனுடன் அது
கொண்டுள்ள தொடர்பிலிருந்து பிறக்கிறது. மற்றது, உடல் இச்சைகளையும் இதர திருப்திகளையும்
கவனிக்கிறது. அவசரமான உடற் தேவைகளை, கீழ்மனத்தை (நஃப்ஸ்) திருப்தி செய்வதற்கும் இதயத்தைத்
திருப்தி செய்வதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்கிறது. அவை என்ன என்ன என்று தெளிவாக
அறிவதற்கு உதவுக. யாம் செய்யும் ஆன்மிகப் பணிக்கு நற்பெயர் எதுவும் எமக்கு வேண்டாம்.
நமது நற்பண்புகளுக்கு நாம் குருடாக வேண்டும்; அவற்றை மறந்துவிட வேண்டும். தற்பெருமையை
விட்டும் இறைவன் நம்மைக் காப்பானாக.
(to be continued...)
No comments:
Post a Comment