(நக்ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகளில் மூன்றாவது கோட்பாடு பற்றிய விளக்கங்கள்.)
நக்ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் மூன்றாவது கோட்பாடு “சஃபர் தர் வதன்”
என்பதாகும். ”சொந்த ஊர் நோக்கிப் பயணித்தல்” என்பது இதன் நேரடியான அர்த்தமாகும் [சஃபர்
= பயணம்; வதன் = சொந்த ஊர் / நாடு].
எனினும், இத்தொடரை
ஸூஃபிகள் ஆன்மிகத்தின் உள்முகப் பயணம் என்றே பொருள் கொள்கின்றனர்.
வெளிப்படையில்
மனிதர்கள் அனைவரும் அவ்வப்போது தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதும் மீண்டும்
கிளம்புவதுமாகப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தப் புறப் பயணத்தைதான் இந்தத்
தொடர் குறிக்கும் என்றால் அவர்கள் எல்லோருமே ஸூஃபிகள் என்று கூற வேண்டி வரும் அல்லவா?
அது பொருந்தாது என்பது விளக்கிச் சொல்லாமலே புரியும்.
வதன் என்னும்
சொல் நேரடிப் பொருளில் ஒருவரின் சொந்த ஊரை அல்லது நாட்டைக் குறிக்கும் என்று பார்த்தோம்.
இந்தச் சொல் “ஹதீஸ்” என்று பிரபலமாகி உள்ள ஒரு வாசகத்தில் இடம் பெறுகிறது.
ஹுப்புல் வதன் மினல் ஈமான்
”தன் நாட்டின் / ஊரின் மீதான நேசம் இறை நம்பிக்கையில் உள்ளதாகும்”
இது நபிமொழி அல்ல.
நபிகள் நாயகம் சொன்னதாகப் பரப்பப்பட்டுள்ள ஒரு வாசகம் (ஹதீஸே மவ்ளூ) என்று இமாம் அல்-சகானீ
(ரஹ்), அல்லாமா முல்லா அலீ காரீ (ரஹ்) முதலிய ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். அல்லாமா
முல்லா அலீ காரீ (ரஹ்) சொல்கிறார்கள்: “ஒருவேளை இந்தச் சொற்றொடர் ஆதாரமான நபிமொழியே
என்று நிரூபிக்கப்படும் எனில் இதில் உள்ள ‘வதன்’ (தாய் நாடு / சொந்த ஊர்) என்பது ஜன்னத்
(சொர்க்கத்)தைக் குறிக்கும் அல்லது மக்கா நகரைக் குறிக்கும்.” (நூல்: அல்-அஸ்ராருல்
மர்ஃபு’ஆ).
இந்தச் சொற்றொடருக்கு மவ்லானா ரூமி (ரஹ்) மிக அற்புதமான விளக்கம் தருகிறார்கள்: “வதன் என்பது இந்தப் பூமியில் நீ வசித்துக் கொண்டிருக்கும் ஊரையோ நாட்டையோ குறிக்காது. இதெல்லாம் அழிந்து போகக்கூடிய உலகில் பகுதிகள். அதை நேசிப்பதை இறை நம்பிக்கையின் பகுதி என்று கூறுவது பொருந்தாது. வதன் என்பது நீ இந்த உலகத்தை விட்டுச் சென்ற பின்னர் நிர்ந்தரமாக எங்கே தங்கிவிடப் போகிறாயோ அந்த இடத்தைக் குறிக்கும். இறை நம்பிக்கையாளருக்கு அது சொர்க்கம் ஆகும். எனவே சொர்க்கத்தை நேசிப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே அதன் சரியான பொருத்தமான அர்த்தம்.”
தமிழில் வீடு
என்று ஒரு சொல் இருக்கிறது. இந்த மண்ணுலக வாழ்வில் நாம் எங்கே அதிக நிம்மதியுடனும்,
அதிக காலங்களும் தங்குகிறோமோ அந்த இடம் வீடு என்று சொல்லப்படுகிறது. தற்காலிகமாகத்
தங்கும் இடங்கள் அலுவலகம், விடுதி, சத்திரம் போன்றவையாகும். அவற்றை வீடு என்று நாம்
சொல்ல மாட்டோம்.
ஆனால், வீடுபேறு
என்று சொல்லும்போது அது சொர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த பூமியில் உள்ள வீட்டை அல்ல.
சொர்க்கத்துடன் ஒப்பிடும்போது இந்த உலகம் ஒரு அலுவலகமாகவும், சத்திரமாகவும், விடுதியாகவும்
இருக்கிறது. அறபியிலும் சொர்க்கத்தை தார் (வீடு) என்று அழைப்பது உண்டு. அது தாருல்
பகா (நிரந்தர வீடு) என்று சொல்லப்படுகிறது.
நாம் சொர்க்கத்திற்குச்
செல்வது எதற்காக? அங்கே கிடைக்கும் மிக உச்சமான நற்பேறு, அருள் எது? அது இறைவனின் தரிசனம்
(லிகாஉல்லாஹ்) ஆகும். இந்த உலகில் இறைவனை அகக் கண்ணாலும் மறுமையில் இறைவனை அகக் கண்ணாலும்
புறக் கண்ணாலும் தரிசிக்க வேண்டும் என்று பீரானே பீர் முஹய்யுத்தீன் அப்துல் காதிர்
ஜீலானீ (ரலி) பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
எனவே, சொர்க்கத்தை நோக்கிப் பயணித்தல் என்பது
அகமியத்தில் இறைவனை நோக்கிப் பயணித்தல் ஆகும். நாம் இறைவனிடம் மீண்டு கொண்டுள்ளோம்
என்கிறது குர்’ஆன்:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
“நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள்;
நிச்சயமாக அவனிடம் மீள்கிறோம்” (2:156)
இறைவனிடம் மீளும்
இந்தப் பயணம் ஆன்மிக ரீதியானது. ருஜூ இலல்லாஹ் (அல்லாஹ்விடம் மீளுதல்) அல்லது ருஜூ
இலல் ஆஃகிரா (மறுமைக்கு மீளுதல்) என்பது இதயத்தால் செய்யப்பட வேண்டிய அகப் பயணம் ஆகும்.
இதற்கு நபி (ஸல்) அழகிய மும்மாதிரியாக இருக்கின்றார்கள் என்பதை குர்’ஆன் சொல்கிறது:
உங்களில் எவர் அல்லாஹ்விடமும் மறுமை நாளிடமும் மீண்டவராக
அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கின்றீர்களோ அவர்களுக்கு
அல்லாஹ்வின் திருத்தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21)
நபி (ஸல்) அவர்களை
அழகிய முன்மாதிரியாக அடைவதற்கு இவை இரண்டும் இறைவனால் சுட்டப்படும் நியதிகள் ஆகும்.
எனவே இறைவனிடமும் மறுமையிடமும் இதயம் திரும்பாமலும், இறைவனை அதிகமாக திக்ரு செய்யாமலும்
(தியானிக்காமலும்) இருக்கின்ற நிலையில் அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவதாக ஒரு
முஸ்லிம் சொல்வது அர்த்தமற்ற வெற்றுப் பிதற்றல் ஆகும். இந்தத் திருவசனத்தை எதார்த்தத்தில்
செயற்படுத்துவோர் ஸூஃபிகள் மட்டுமே என்பது உறுதி.
இனி இந்தக் கோட்பாட்டுக்கு
நக்ஷ்பந்திய்யா நெறியின் பெரியோர்களும் அறிஞர்களும் தருகின்ற விளக்கங்களைக் காண்போம்.
வெளிரங்கமான அர்த்தமும் விளக்கமும்:
இந்தக் கோட்பாட்டிற்கு
வெளிரங்கமான அர்த்தம் ஒன்று உண்டு என்று அவர்கள் சொல்கின்றனர். அதாவது, தனக்கு வழிகாட்டக்
கூடிய ஒரு குருவைத் தேடி சாதகன் இம்மண்ணுலகில் தேடி அலைந்து அவரைக் கண்டடைவதாகும்.
ஞான வானில் ஒளி வீசும் சூரியன்களாக உள்ள மாபெரும் ஸூஃபிகள் பலரும் பல்வேறு ஊர்களுக்கும்,
நாடுகளுக்கும் சுற்றித் திரிந்து தம் குருநாதரை அடைந்திருக்கிறார்கள். இந்தப் புறப்பயணம்
சீடனால் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை குர்’ஆனின் பின்வரும் வசனம் சுட்டிக் காட்டுகிறது:
”இறை விசுவாசியரே! அல்லாஹ்விடம் பயபக்தி செய்யுங்கள்; அவனிடம் இணைத்து வைக்கும் வசீலாவை (இடைத்தொடர்பை)த் தேடிக்கொள்ளுங்கள்; மேலும், அவனின் பாதையில் கடுமுயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றியடையலாம்.” (5:35)
இறைவனை அடைவதற்காகக்
கடுமுயற்சி (முஜாஹதா) செய்வது பற்றி இன்னொரு திருவசனம் குறிப்பிடுவதும் கவனத்திற்கு
உரியது:
“எவர் நம்மில் கடுமுயற்சி செய்வார்களோ
அவர்களுக்கு நாம் நம் பாதைகளில் நேர்வழி காட்டுவோம்” (29:69)
இறைவனை அடைவதற்கான
நேர்வழிகாட்டல் (ஹிதாயத்) கிடைப்பதில் குருவைத் தேடி அடைவதும் அடங்கும் என்று இந்தத்
திருவசனங்கள் காட்டுகின்றன. இறைவனுடன் இணைத்து வைக்கும் வசீலா இறைநேசரான முர்ஷித்
(வழிகாட்டி)தான் என்றும் குர்’ஆன் சொல்கிறது:
“எவனை நான் வழிகேட்டில் விட்டுவிட்டேனோ
அவனுக்கு நேர்வழிகாட்டும் இறை நேசரை அடையமாட்டீர் (18:17)
இறைவனால் அருள்
செய்யப்பட்டோர் என்று வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ள இறைத்தூதர்கள் (நபிய்யீன்), மெய்யாளர்கள்
(ஸித்தீக்கீன்), உயிர் தியாகியர் (ஷுஹதா’) மற்றும் நல்லடியார்கள் (ஸாலிஹீன்) ஆகியோருள்
ஸித்தீக்கீன்களின் சகவாசத்தில் இருக்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளை இட்டுள்ளான்:
“இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை பயபக்தி செய்யுங்கள்,
மேலும், மெய்யாளர்களுடன் இணைந்திருங்கள்” (9:119)
ஸூஃபிகளே விலாயத்
என்னும் இறை நேசத்தை அடைந்த ஸித்தீக்கீன்களாக உள்ளனர். ஒரு வலியே முர்ஷிதை (வழிகாட்டும் இறைநேசரை) அடைந்து
அவருடன் இருக்கும்போது ஏற்கனவே மெய்யாளர் என்னும் நிலையை அடைந்த மூத்த சீடர்களுடன்
சகவாசம் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அது கூனூ ம’அஸ் ஸாதிக்கீன் – மெய்யாளர்களுடன்
இணைந்திருப்பதாகிறது.
இவை எல்லாம் சஃபர்
தர் வதன் என்பதன் வெளிரங்கமான அர்த்தப்படி கிடைக்கும் விளக்கங்கள் ஆகும்.
அந்தரங்கமான அர்த்தமும் விளக்கமும்:
”சஃபர் தர் வதன் என்பது ஒருவர் தன் தாய்நிலம்
திரும்புதலாகும். அதாவது சாதகன் படைப்புக்களின் உலகை விட்டும் படைத்தவனின் உலகிற்குத் திரும்புவதாகும். மேலும் சுருக்கமாக, படைப்புக்களை
விட்டும் படைத்தவனிடம் – மினல் ஃகல்க் இலல்
ஹக்கு - திரும்புவதாகும். இந்தப் பயணம்
தடுக்கப்பட்ட (ஹராமான)வற்றின் மீதான ஆசையை விட்டு விலகி இறைவனின் பிரசன்னம் மீதான ஆசைக்குப்
பயணிப்பதாகும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.
இதில் பின்வருமாறு
பல நிலைகள் இருக்கின்றன:
- தடுக்கப்பட்டவற்றை விட்டும் அனுமதிக்கப்பட்டவற்றிடம் திரும்புவது
(மினல் ஹராம் இலல் ஹலால்). இது இறைச்சட்டங்களின்
– ஷரீஅத் – நிலையில் செயற்படுத்தப்பட
வேண்டிய பயணம் ஆகும். ஆரம்ப நிலைச் சாதகர்கள் இதில் உறுதிப்பட்ட பின்னரே அடுத்த
நிலைக்கு உயர முடியும்.
- அனுமதிக்கப்பட்டவற்றிலும் தனக்குத் தேவையற்ற விடயங்களை விட்டுவிடுவதாகும்.
இந்த நிலை ஜுஹ்து (Zuhd) என்றும் இதனைக் கடைப்பிடிப்பவர் ஜாஹித் (Zahid) என்றும்
சொல்லப்படுகிறார். இது ஆன்மிக நெறியில் முன்னேறிக் கொண்டிருப்போர் இருக்கும் நிலையாகும்.
- படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் திரும்புவது (மினல் ஃகல்க் இலல் ஹக்கு). அதாவது ஆகுமான,
அவசியத் தேவையான பொருட்களிலும்கூட படைப்பைக் காணாமல் அகக்கண்ணால் படைத்தவனை ஷுஹூது
(சாட்சி தரிசனம்) செய்வது. இது இறைவனை நெருங்குவோரின் (முகர்ரபீன்) நிலையாகும்.
- இறைவனை விட்டும் இறைவனிடம் திரும்புவது (மினல்லாஹ் இலல்லாஹ்). அதாவது இந்த நிலை
சைர் ஃபில்லாஹ் (இறைவனிடம் பயணித்தல்)
என்றும் சொல்லப்படும். இது இறைத்தூதர்கள் (அன்பியா) மற்றும் ஸித்தீக்கீன் என்னும் இறை நேசர்கள் (அவ்லியா)
ஆகியோரின் நிலையாகும்.
இறைவனிடம் திரும்பிவிட்டோருக்கு
மீண்டும் திரும்பி வருதல் இல்லை – புறத்திலும் அகத்திலும், உடலாலும், இதயத்தாலும்.
இது குறித்து ஸூஃபி கவிதை ஒன்று சொல்கிறது:
”நான் எனது மூல
இடத்திற்குப் பயணிக்கின்றேன்;
ஆம், நான் ஒருவேளை திரும்பி வரவே மாட்டேன்!”
(முசாஃபிரம் ப-ஷஹ்ரே மன் / ஷாயத் கெ பாஸ் ந-கர்தம்)
”சஃபர் தர் வதன் என்பது சாதகன் தன் மனித சுபாவத்தினுள்
நிகழ்த்தும் பயணமாகும். அதாவது மனித குணங்களில் இருந்து வானவரின் குணங்களை நோக்கி உயர்வதாகும்,
இழிவான குணங்களை விட்டுப் போற்றத்தக்க குணங்களை நோக்கி உயர்வதாகும்” என்று ரஷாஹத்தே ஐனல் ஹயாத் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது.
ஷைஃகு அஹ்மத்
சிர்ஹிந்தி (ரஹ்) சொல்கிறார்கள்: “சஃபர் தர் வதன் என்னும் இந்த பாக்கியமான கோட்பாடு
சுயத்தினுள் பயணிப்பதைக் குறிக்கிறது. குர்’ஆனில் அல்லாஹ் சொல்கிறான்:
”வெளியுலகிலும் அவர்களுக்கு உள்ளேயும்
அதிவிரைவில் அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் காண்பிப்போம்,
அவன்தான் சத்தியம் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரை.”
(41:53)
இதன்படி தொடுவானங்களில் பயணித்த பிறகு மட்டுமே இந்த அகப் பயணம்
இதர ஞான நெறிகளில் (தரீக்காக்களில்) கிடைக்கின்றது. நக்ஷ்பந்திய்யா நெறி அதனை ஆரம்பத்தில்
வைக்கிறது.”
ஒரு ஸூஃபி கவிதை இப்படிச் சொல்கிறது:
”வெளியுலகில்
வசித்திரு, உன் இதயம் பயணிக்கட்டும்;
கால்கள் இல்லாமல் பயணிப்பதே சிறந்த பயணமாகும்!”
”சாதகனுக்குப்
பல்வேறு அகநிலைகளும் படித்தரங்களும் (ஹால் வ மகாம்) கிடைக்கும். எந்த ஓர் அனுபவத்தையும்
அவன் இறுதியானது உச்சமானது என்று கருதிவிடக் கூடாது. அதிலேயே அவன் சிக்கி நின்றுவிடக்
கூடாது. அவன் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு படித்தரத்தில் இருந்து
அடுத்த படித்தரத்திற்கு எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைதான் சஃபர் தர் வதன் என்று சொல்கிறோம்” என்கிறார்
உஸ்மான் நூரீ தோப்பாஷ்.
மகாகவி அல்லாமா
இக்பால் (ரஹ்) இக்கருத்தில் ஒரு கவிதை சொல்லியிருக்கிறார்:
காம் அப்னா ஹே ஸுப்ஹ் ஒ ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா
”நம் பணி காலையும் மாலையும் சென்று கொண்டு இருப்பதே;
செல்வது செல்வது, எங்கும் நில்லாமல் செல்வதே!”
”சாதகன் தன் குருவை
அடையும்வரைதான் அவனின் வெளிரங்கமான பயணங்கள் நிகழ்கின்றன. அவன் குருவை அடைந்ததும் புறத்தில்
பயணிப்பது நின்று அவனின் அகப் பயணம் ஆரம்பம் ஆகிவிடுகிறது” என்கிறார் அபூ உஸ்மான் அல்-மக்ரிபி
(ரஹ்) அவர்கள்.
சாதகன் அகப் பயணம்
மேற்கொள்ளும்போது அவனின் நிலை இறைத்தூதர் இப்றாஹிம் (அலை) அடைந்த மனநிலையை ஒத்ததாகிவிடுகிறது.
அதாவது:
“மேலும் அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என் ரட்சகனிடமே செல்கிறேன். நிச்சயமாக அவன் எனக்கு வழிகாட்டுவான்” (37:99)
அதாவது, குருநாதர்
தன்தானே சுயமாக வழிநடத்துவதில்லை. அவர் இறைவனின் கருவியாக இருக்கிறார். அவர் ‘மகாமே
றப்’பாக (இறைவனின் தங்குமிடமாக), ’மழ்ஹரே றப்’பாக (இறைவன் வெளிப்படும் ஊடகமாக) இருக்கிறார்.
அவரைக் கொண்டு இறைவனே ஒருவருக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தெளிவுடன் சாதகன் தன்
அகப் பயணத்தைத் தொடர்கிறான்.
No comments:
Post a Comment