57
மனிதகுலம்
முழுவதும்
ஷைகு சிராஜுத்தீன் அவர்களின் வீட்டில் ஒருநாள் மௌலானா அவர்கள் ஞான
விளக்கங்கள் வழங்கியபோது மானுட ஒருமை பற்றிச் சீடர்கள் அனைவருக்கும் விளக்கினார். ”படைப்புக்கள்
முழுவதும் ஒன்று மற்றவற்றின் இருத்தலில் பங்கு வகிக்கிறது. தனித்து, தொடர்பின்றி ஒரு
பொருளும் இல்லை. எனவே, “இறைவா! மக்களுக்கு வழி காட்டு. ஏனெனில் அவர்கள் அறியவில்லை”
என்று நபிகள் நாயகம் பிரார்த்தித்த போது அதில் உள்ள மக்கள் என்னும் சொல் மனித குலம்
முழுவதையும் குறித்தது. ஏனெனில் ஏதேனுமொரு தனி அலகு விடுபட்டுள்ளது எனில் முழுமை என்பது
உண்டாகாது. ஒவ்வொன்றுமே மற்றவற்றைச் சார்ந்தது.” பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப்
படித்தார்:
”யாவும் யாதும்
ஒன்றுடன் ஒன்று
தம்முள் இணைந்தன.
தர்வேஷுடனும்!
அப்படி இல்லை எனில்
எப்படி இருக்க முடியும்
ஒரு தர்வேஷ்?”
58
தனிப்பட்ட
ஆன்ம கவனம்
ஒருநாள் மௌலானாவின் சீடர்களுள்
ஒருவரான மொய்னுத்தீன் அவர்கள் மௌலானாவின் மகனிடம் வந்து அவரது அருமைத் தந்தை தன் மீது
தனிப்பட்ட ஆன்ம கவனத்தைச் செலுத்தி அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மௌலானாவிடம்
அவரின் மகன் அந்தக் கோரிக்கையைச் சொன்னார். மௌலானா விளக்கினார்: ’நாற்பது நபர்கள் நீரருந்தும்
வாலியை ஒரே நபர் குடித்துவிட முடியாது.’ அதாவது ஆன்மிக ஆற்றலை ஒரு தனி நபரால் தாங்க
முடியாது. அதன் தாக்கத்தை நாற்பது நபர்கள் தாங்கலாம். ஆன்மிகப் பேரொளி அதிக ஆற்றல்
உள்ளது. அதன் பிரகாசத்தை ஒரு தனிமனிதன் பெற்றுப் பேணுவது அரிது. இதைக் கேட்டதும் மௌலானாவின்
மகன் அவருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார். தான் அந்த சீடரின் சார்பில் இதனைக்
கேட்டிருக்காவிடில் இந்த நுட்பம் தனக்குத் தெரியாமலே போயிருக்கும் என்று கூறினார்.
59
கனி மரங்களின்
கதை
சீடர் ஒருவர் ஒருநாள் மௌலானாவின் மகனை அணுகி
கோன்யா நகரின் அறிஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மௌலானாவின் ஆன்மிக உரையைக் கேட்டுப்
பயன்பெற ஆர்வம் கொண்டுள்ளதாகச் சொல்லி அதற்கு மௌலானாவின் இசைவைக் கோரினார். அதற்கு
இசைவளித்த மௌலானா அந்த அறிஞர்கள் அனைவரும் கனிகள் பல்கி விளைந்த மரங்களைப் போன்றோர்
என்றும் அந்த மரக் கிளைகள் பழங்களின் சுமையால் தாழ்வன போன்று அவர்களின் பணிவு இருப்பதாகவும்
அத்தகையோர் தாம் கற்ற அறிவுக் கனிகளால் பயனடைவர் என்றும் சொன்னார். பணிவு அவர்களின்
மனதை நயம் செய்துள்ளது. தற்பெருமை மற்றும் சுயமோகம் ஆகியவற்றால் வானளாவி உயர்ந்தும்
தம்மில் கனி ஏதும் இல்லாத வெறுங் கிளைகளைப் போல்வார் உள்ளனர். இவர்கள் அப்படிப்பட்டோர்
அல்லர். ஏனெனில், இவர்கள் அப்படிப்பட்டோராய் இருந்திருப்பின் தன்னை அழைத்திரார் என்று
மௌலானா சொன்னார்.
60
நினைவும்
செயலும்
மௌலானாவின் மகன் இச்செய்தியை அறிவிக்கிறார்கள். ஒருநாள் மொய்னுத்தீன்
என்னும் அமீர் (ஆட்சியாளர் , அதிகாரி) ஒருவர் மௌலானாவிடம் வந்து மக்களை ஆளுமோர் அதிகாரியாகத்
தான் பயன் அடையும் வகையில் தனக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டார். சற்று நேரம் மௌனமாக
இருந்த பிறகு மௌலானா “அமீரே! நீங்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்துள்ளீர் என்று
கேள்விப் பட்டேன்” என்று சொன்னார். அமீர் அதனை ஆமோதித்தார். மேலும், ஷைகு சத்ருத்தீனிடம்
இருந்து நபிகள் நாயகத்தின் செய்திகளான ஹதீஸ்கள் அனைத்தையும் அவர் கற்றிருக்கிறாரா என்று
அமீரிடம் மௌலானா கேட்டார். அதையும் அவர் ஆமோதித்தார். அவரிடம் மௌலானா சொன்னார், “அல்லாஹ்வுடைய
குர்ஆனின் வழியாக நீங்கள் அவனது கட்டளைகளை அறிந்துள்ளீர்கள். இறைத்தூதரது பொன் மொழிகளும்
உங்களுக்குத் தெரியும். அவற்றிலிருந்து நீங்கள் ஞானத்தை அடையவில்லை. அவற்றின் வழிகாட்டுதலின்
படி நீங்கள் செயற்படவில்லை. ஆனால் இப்போது என்னிடம் வந்து அறிவுரை கோருகின்றீர். மிக
உன்னதமான இரண்டு பேரின் பேச்சையே நீங்கள் கேட்காத போது என்னுடைய பேச்சைக் கேட்கவா போகின்றீர்?”
மௌலானாவின் இந்தச் சொற்கள் அவரின் உள்ளத்தைத் தைத்ததால் அவர் கண்ணீர் வழிய இறைவனிடம்
மன்னிப்புக் கேட்டார். அதன்பின் அவர் நீதியுடன் ஆட்சி புரிந்தார் என்றும் மக்களுக்கு
வாரி வழங்கும் தன்மையோடு வாழ்ந்தார் என்றும் அறிகின்றோம். அந்த அறிவுரைக்குப் பின்
ஆன்மிகக் கவிதைகளைப் பாடுமாறு மௌலானா உத்தரவிட்டார்.
61
வெளிப்படையானதும்
அந்தரங்கமானதும்
ஒருமுறை கோன்யா நகரின் மார்க்க அறிஞர்கள் யாவரும் திரண்டு நகர காஜி-(நீதிபதி)யைப்
பார்க்க வந்தனர். ஆன்மிகப் பயிற்சிகள் ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் என்று மௌலானா நடத்தி
வருபவை இஸ்லாத்திற்கு முரணானவை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இதனைக் கேட்ட காஜி
அவர்களை எச்சரித்தார். ‘வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான (ழாஹிர் வ பாத்தின்) கல்விகளில்
மௌலானாவைப் போல் கற்றுணர்ந்தார் நம் காலத்தில் வேறு எவருமில்லை. அவரை அவரின் போக்கில்
விட்டுவிடுவது உங்களுக்கு நல்லது” என்று கூறினார். அவர்கள் அதனை ஏற்கவில்லை. ‘நீங்கள்
சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அதனை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும்” என்று
அவர்கள் பிடிவாதம் செய்தனர். எனவே மௌலானாவைச் சோதிக்க அவர்கள் வினாக்களை ஆயத்தம் செய்தனர்.
கணிதம் தத்துவம் வானியல் மீப்பொருளியல் மெய்யியல் இலக்கியம் கவிதையியல் தர்க்கம் சட்டவியல்
மற்றும் பிற அறிவுத் துறைகள் சார்ந்து அவ்வினாக்கள் அமைந்திருந்தன. அந்த வினாத்தாள்கள்
துருக்கியத் தூதர் ஒருவரைக் கொண்டு மௌலானாவுக்கு அனுப்பப்பட்டன. அவர் சென்றபோது மௌலானா
அவர்கள் சுல்தானின் வாசலருகில் அகழி மீதமர்ந்து நூலொன்றை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தார்.
மரபான முகமன்களைத் தெரிவித்தபின் மௌலானாவிடம் வினாத் தாள்களைக் கொடுத்துவிட்டு அந்தத்
தூதர் காத்திருந்தார். எழுதுகோலும் மையும் கொண்டுவருமாறு மௌலானா தனது சீடர்களைப் பணித்தார்.
பிறகு அந்த வினாக்கள் அனைத்துக்கும் மிக விரிவாக, தேவைப்படும் இடங்களில் எல்லாம் நூல்
மேற்கோள்களைக் குறிப்பிட்டு விடை எழுதி அந்தத் தூதரிடம் தந்தார். அவற்றைப் பெற்றுப்
படித்துப் பார்த்த அறிஞர்கள் மௌலானா அளித்த விடைகளின் முழுமையைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டனர்.
மௌலானா அத்தனைத் துறைகளிலும் ஆழங்காற்பட்ட அறிவு கொண்டவர் என்பதைக் கண்டு வெட்கித்
தலை கவிழ்ந்தனர்.
இசைக் கருவிகளை வாசிப்பதன் அனுமதி பற்றி மரபார்ந்த மார்க்க விளக்கங்களின்
அடிப்படையில் மௌலானா அதில் விடை எழுதியிருந்தார். குறிப்பாக, ரபாப் (யாழ் போன்றதொரு
நரம்பிசைக் கருவி) வாசிப்பதைப் பற்றி அதில் விளக்கியிருந்தார். அவரது விளக்கங்கள் ஆன்மிக
இசையை அனைவரும் ஏற்கும்படி இருந்தது. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்ட
மௌலானா அவர்கள் இசை குறித்த விளக்கங்களை எழுதிய தாளுக்குப் பின்னால் ருபாப் வாசிப்பதைப்
பற்றிய நீண்ட விளக்கங்களையும் எழுதியிருந்தார். அதன் ஓசையும் இசையும் ஆன்மிகச் சூழலுக்கு
வலிவூட்டுவன. எனவே தனது ஆன்மிகத் தோழர்களுக்க்கு (சீடர்களுக்கு) தியானத்தில் துணை செய்யும்
பொருட்டே ரபாப் இசைக்கப்படுகிறது; தனது மக்களுக்கு உதவி புரிவதற்காகவே தான் இந்த வழிகாட்டும்
பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்றும் உண்மையான பயபக்தியாளரின் (தக்வா கொண்டோர் – முத்தகீன்)
கடமை பிறருக்கு உதவுவதே என்றும் மௌலானா குறிப்பிட்டிருந்தார். அதில் ரபாப் குறித்தொரு
கவிதையும் இருந்தது:
”துடிக்கும் இதயத்துடன் வழியும் கண்ணீருடன்
ரபாப்
என்ன சொல்கிறது? அறிவாயா நீ?”
வெட்கமும் மன உறுத்தலும் பெற்ற எதிரிகள் தலைமை நீதிபதியிடம் மன்னிப்புக்
கோரினர். அவருள் ஐவர் அப்போதே மௌலானவின் அணுக்கச் சீடர்கள் ஆயினர். அனைத்து வகையிலும்
மௌலானா அவர்கள் முழுமை பெற்றதொரு குரு (ஷைகுல் காமில்) என்பதை அவர்கள் ஐயமின்றி அறிந்துகொண்டனர்.
62
புனிதப்
பயண அற்புதம்
மக்கா நகருக்குப் புனித ஹஜ் பயணம் சென்று திரும்பிய குழு ஒன்று கோன்யா
நகரின் மார்க்க அறிஞர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அவர்கள் மௌலானாவையும் பார்க்க
வந்தனர். அவர்கள் அப்போதும் புனிதப் பயண ஆடையான இஹ்ராம் என்பதையே அணிந்திருந்தனர்.
மௌலானாவின் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் வாசலில் மௌலானா அமர்ந்திருப்பதைக் கண்டவுடன்
ஒருமித்த குரலில் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே பெரியோன்) என்று முழக்கம் எழுப்பினர். மௌலானாவைக்
கண்ட வியப்பின் தாக்கத்தால் அவர்களில் சிலர் மயக்கமுற்றுச் சாய்ந்தனர். அவர்கள் விழித்தெழுந்த
போது சீடர்கள் அவர்களிடம் காரணம் வினவினர். ”இதே நபர்தான், இதே ஆடைகளை உடுத்தியபடி,
ஹஜ் வழிபாடுகளில் எங்களுக்கு வழிகாட்டினார், மதீனாவில் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்திற்கு
எம்மை அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இந்த ஊரிலிருந்து எம்முடன் பயணிக்கவும் இல்லை,
எம்முடன் சாப்பிட்டு உறங்கவும் இல்லை.” என்று அவர்கள் கூறினர். சூஃபி மரபில் இது வழக்கமான
ஒன்றுதான். மாபெரும் சூஃபி ஞானி ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது பல இடங்களில் இருக்க
முடியும்.
இதே போன்று இன்னொரு நிகழ்வும் அறிவிக்கப்படுகிறது. நகரின் பெருவணிகர்
ஒருவர் மௌலானாவின் அர்ப்பணச் சீடர்களில் ஒருவராக இருந்தார். அவர் மக்காவிற்கு ஹஜ் புனிதப்
பயணம் சென்றார். ஹஜ் பெருநாள் அன்று ஊரில் அவரது மனைவி தனது கணவனின் புனிதப் பயணம்
நல்லபடியாக நிறைவேறுவதற்கு இறைவனுக்கு நன்றி கூறி இனிப்புகள் செய்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும்
கொடுத்தார். பண்டங்களில் ஒரு பங்கு மௌலானாவுக்கும் அனுப்பப்பட்டது. மௌலானா தனது சீடர்களுக்கு
அவற்றை வழங்கி அங்கேயே அவற்றை உண்ணுமாறும் ஒரு பகுதியை மட்டும் அன்றைய பிரசாதமாக (தபர்ருக்)
வைத்துக் கொள்ளுமாறும் பணித்தார். சீடர்கள் எவ்வளவோ சாப்பிட்டும் அந்த இனிப்புக்கள்
தீரவில்லை. எனவே இனிப்புத் தட்டினை மௌலானா எடுத்துக் கொண்டு தியான மடத்தின் மொட்டை
மாடிக்குச் சென்றார். அங்கிருந்து அதனை மேலே நோக்கி நீட்டியவாறு கண்ணுக்குத் தெரியாத
யாரிடமோ அவரின் பங்கினை எடுத்துக் கொள்ளுமாறு கூவினார். அவர் கீழே இறங்கி வந்த போது
அவரின் கையில் அந்த இனிப்புத் தட்டு இல்லை. சீடர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த
மௌலானா தான் அந்த இனிப்புத் தட்டினை மக்காவில் ஹஜ் பயணத்தில் இருக்கும் வணிகருக்குக்
கொடுத்து விட்டதாகச் சொன்னார். இது சீடர்களை மிகவும் வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.
ஹஜ்ஜிலிருந்து அந்த வணிகர் வீடு திரும்பியபோது மௌலானாவிற்குத் தனது
மரியாதையைத் தெரிவிக்க வந்தார். அவரது பயணம் சிரமங்கள் ஏதுமின்றி நல்லவிதமாக நிறைவேறியது
என்றும் வீட்டினர் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்றும் அறிந்து மௌலானா மகிழ்ந்தார்.
பின்னர், வணிகரின் பெட்டிகளையும் மூட்டைகளையும் அவரது பணியாளர்கள் திறந்து பொருட்களை
எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அதில் ஓர் இனிப்புத் தட்டு இருப்பதைக் கண்டு அவரது
மனைவி அதிசயித்தவராக அவரது பெட்டியில் அந்த இனிப்புத் தட்டு எப்படி வந்தது என்று கேட்டார்.
மக்கா நகரின் புறத்தே தான் இதர பயணியருடன் தங்கியிருந்த போது ஒருநாள் தனது கூடாரத்தின்
வாசல் திரையைத் தள்ளிக்கொண்டு அந்த இனிப்புத் தட்டு நீட்டப்பட்டதாகவும் அதனை நீட்டியவரின்
கையைத் தாம் காண முடியவில்லை என்றும் வணிகர் சொன்னார். பணியாளர்கள் கூடாரத்திற்கு வெளியே
ஓடிப்போய்த் தேடியும் அதனைக் கொணர்ந்தவரைக் காணவில்லை என்றும் சொன்னார். அந்த இனிப்புத்தட்டு
தான் மௌலானாவிற்கு அனுப்பி வைத்ததுதான் என்பதை மனைவி சொல்லக் கேட்டவுடன் மௌலானாவின்
அற்புதத்தை எண்ணி வியந்தவர்களாக அவரும் அவரது மனைவியும் மௌலானாவின் வீட்டிற்குச் சென்று
மேலும் தமது பணிவையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள். தன் மீது அவர்கள் கொண்டிருக்கும்
உண்மையான விசுவாசத்தின் காரணமாகவே அப்படி ஓர் அற்புதத்தை நிகழ்த்தும் வாய்ப்பை இறைவன்
தனக்கு வழங்கினான் என்று மௌலானா விளக்கினார்.
63
இறுதிப்
பேருரை
ஒரு வெள்ளிக் கிழமை அன்று நண்பகல் தொழுகைக்குப் பின்னர் மௌலானா பேருரை
நிகழ்த்தினார். அப்போது அங்கிருந்த இளம் அறிஞர் ஒருவர் எழுந்து தனது கருத்து ஒன்றை
வெளியிட்டார். அதாவது, இரண்டு விதமான அறிஞர்கள் உள்ளனர். ஒரு சாரார் தமது உரையை முன்பே
ஒரு தலைப்பை ஒட்டி ஆயத்தப்படுத்தி அதற்குப் பொருத்தமான குர்ஆன் திருவசனங்களை எல்லாம்
மனப்பாடம் செய்துகொண்டு வந்து மக்கள் முன் பேசுகின்றனர். மற்றொரு சாரார் அப்படி அல்லாமல்
அவையில் அப்போது எவ்வொரு திருவசனம் கூறப்பட்டாலும் அதனை விளக்கி அங்கேயே பேசும் ஆற்றல்
பெற்றுள்ளனர்.
அவரின் கருத்தினைக் கேட்ட மௌலானா அவரிடமே ஏதேனுமொரு வேத வசனத்தை ஓதுமாறும்
அவ்வசனத்தை விளக்கித் தான் உரையாற்றுவதாகவும் சொன்னார். அந்த இளம் அறிஞர் அள்-ளுஹா
என்னும் அத்தியாத்தில் இருந்து பின்வரும் திருவசனங்களை:
“முற்பகல்
மீதாணை!
இரவின் மீதாணை!, அது மூடுகின்றபோது”
(93:1-2)
அனைவரும் அதிசயித்து ஆன்மிக உணர்வெழுச்சி கொள்ளும்படிக்கு மிக உன்னதமானதோர்
உரையை மௌலானா நிகழ்த்தினார். அஃது, மாலைத் தொழுகை (அஸர்) வரை நீடித்தது. குர்ஆன் விரிவுரைக்
கலையில் (ஃபன்னெ தஃப்சீர்) மௌலானா ஒரு மேதை என்பதை அவ்வுரை நிறுவிற்று. கேள்வி எழுப்பிய
இளம் அறிஞர் மௌனமானார். பேருரையைக் கேட்ட அனைவருடனும் சேர்ந்து அவரும் பரவச நிலையில்
ஆழ்ந்தார். மௌலானா அமர்ந்திருந்த மேடையின் கீழடியை முத்தமிட்டவராக, தன்னையும் சீடர்களுள்
ஒருவனாக ஏற்று தீட்சை அருளுமாறு வேண்டினார். அதுவே மௌலானாவின் இறுதிப் பேருரை என்று
சொலவார் உளர். பிறர் அதனை மறுக்கின்றனர்; மௌலானா அந்நாளுக்குப் பின்னும் சில ஆண்டுகள்
வாழ்ந்தார் என்று சொல்கின்றனர்.
64
மரணத்தை
நினைத்தல்
கோன்யாவின் முக்கிய நபர்களுள் ஒருவர் இறந்தார். அஞ்சலி செலுத்த வந்தோருள்
மௌலானாவும் இருந்தார். இறப்பு நேர்ந்த வீட்டிற்கு வெளியிலேயே மௌலானா நின்று கொண்டார்.
சவப்பெட்டி (சந்தூக்) வெளியே எடுத்துவரப் படவும், அங்கிருந்து அடக்கவிடம் (கப்ருஸ்தான்)
நோக்கி ஊர்வலமாகச் செல்லவும் காத்திருந்தார். கமாலுத்தீன் அவ்வீட்டின் வாசலில் நின்றுகொண்டு
ஊர்வலத்தில் கலந்துகொள்ள வருவோர் அனைவருக்கும் முகமன் சொல்லிக் கொண்டிருந்தார். குழிக்குள்
சடலம் இறக்கப்படும் நேரம் வந்தபோது, இரங்கல் உரையை அனைவரும் கேட்க வேண்டும் என்று மௌலானா
கூறி கமாலுத்தீனையும் அங்கே இருக்கும்படி அழைத்தார். “சத்ருத்தீனும் பத்ருத்தீனும்
எப்போதோ இறந்து போய்விட்டனர். அவர்கள் தமது சவக்குழியை விட்டு வெளியேறி வரும்போது,
முதன் முதலில் அவர்களிடம் அவர்களது செயற் பதிவேடு (அஃமால் நாமா) வாசித்துக் காட்டப்படும்போது
இறைவனின் அருள் தம் மீது இருக்கின்றதா என்று அவர்கள் ஐயுற்றுத் தடுமாறுவர். புறப்பட்டுப்
போகின்ற ஒவ்வொருவரும் தமது நல்ல அல்லது தீய செயல்களுடனே செல்கிறார். எனவே தீர்ப்பு
நாளினை நினைவு கூர்வது அவசியம். இவரும் நாளை இவரது செயல்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு
வழங்கப்படுவார்.”
அந்நிகழ்வில் மௌலானா ஆற்றிய இரங்கல் உரையின் ஞான விளக்கம் அனைவரது
உள்ளங்களையும் ஊடுறுவிற்று. இறந்து போனவரின் நெருங்கிய உறவுக்காரரான கமாலுத்தீன், மௌலானாவின்
உரையைக் கேட்டு மயங்கிச் சாய்ந்தார். மௌலானாவின் மேன்மையை அதுவரை உணராமல் இருந்தோர்
பலரும் அன்று மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.
65
வெந்நீர்
ஊற்றுக்களில்
ஒவ்வொரு பனிக்காலத்திலும் நதிக்கரை ஒன்றில் இருந்த வெந்நீர் ஊற்றுக்குச்
சென்று அவ்விடத்தில் நாற்பது அல்லது ஐம்பது நாட்கள் தங்கி வருவது மௌலானாவின் வழக்கமாக
இருந்தது. அவ்விடத்தில் தனது சீடர்களுக்கு மௌலானா ஆன்மிக உரைகளும் நிகழ்த்துவார். அப்போது
சில வேளைகளில் அந்த நதியிலிருந்த வாத்துக்கள் பெருஞ் சப்தம் எழுப்பிக்கொண்டு பேச்சுக்கு
இடையூறு செய்து வந்தன. ஒருநாள் மௌலானா அந்த வாத்துக்களை நோக்கி, “சப்தம் போடாமல் இருங்கள்.
ஒன்று நீங்கள் பேசுங்கள் அல்லது என்னைப் பேச விடுங்கள்” என்று சொன்னார். உடனே அந்தப்
பறவைகள் மௌனம் ஆயின. பின் வந்த நாட்களில் எல்லாம் எவ்வித இடையூறும் இன்றி ஆன்மிகச்
சொற்பொழிவு தொடர்ந்தது. தனது முகாம் நிறைவுற்ற நாளன்று மௌலானா நதிக்கரைக்கு வந்து அந்த
வாத்துக்களை நோக்கி, “இனி நீங்கள் உங்கள் விருப்பம் போல் சப்தமிடலாம்” என்று சொன்னார்.
முன்பு போன்றே அந்த வாத்துக்கள் சப்தமிடத் தொடங்கின.
66
அடைக்கலம்
தேடிய பசு
கோன்யா நகரின் கசாப்புக்காரர்கள் ஒருமுறை பசு ஒன்றை விலைக்கு வாங்கி
வந்து கட்டிப் போட்டு வைத்திருந்தனர். இரவெல்லாம் கயிற்றைக் கடித்து நைத்து அறுத்துக்கொண்டு அதிகாலையில் அந்தப் பசு வீதிகளில் தப்பி ஓடியது.
அதனைப் பிடிப்பதற்காகக் கசாப்புக்காரர்களும் அதன் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினர்.
ஒரு கும்பலே அதனைப் பிடிக்க வீதிக்கு வீதி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பசுவின்
வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு தெருவில் மௌலானா காலை நடை சென்று
கொண்டிருந்தார். அந்தக் கால்நடை அவர் முன் வந்து நின்றுவிட்டது!
மௌலானா அந்தப் பசுவின் தலையை வருடினார். அது அவருக்கு அடிபணிந்து,
ஓட முயலாமல் அங்கேயே நின்றது. அங்கே வந்து சேர்ந்த கசாப்புக்காரர்கள் பசு பிடிபட்டுவிட்டது
என்று கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மௌலானாவிற்கு முகமன் சொல்லி அவர் அந்தப்
பசுவைத் தம்மிடம் தரக் காத்திருந்தனர். ஆனால் மௌலானாவின் முடிவு வேறாக இருந்தது. பசுவைப்
பலியிட வேண்டாம் என்றும் தன்னிடம் அடைக்கலம் நாடி வந்த அகதியான அதனை அப்படியே விட்டுவிடுமாறும்
அவர் சொன்னார். மகானின் சொல்லுக்கு அவர்கள் கட்டுப்பட்டனர். அப்போது மௌலானா சொன்னார்,
“பேச்சில்லா விலங்குகளும்கூட இறைநேசர்களால் காப்பற்றப்படும் என்றால் அவர்களை அண்டிய
மனிதர்கள் எந்த அளவுக்குக் காப்பாற்றப்பட்டு நேரான பாதையில் செலுத்தப் படுவார்கள் என்பதை
எண்ணிப் பாருங்கள்!” மௌலானாவின் இவ்வார்த்தைகள் அங்கிருந்த அவரது சீடர்கள் மீது மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்திற்று. அதில் அவர்கள் ஓர் ஆன்மிக ஆற்றலை உணர்ந்தனர். ஆன்மிக இசை
ஆரம்பிக்கப்பட்டது. பரவசமுற்ற சீடர்கள் தமது மேலாடைகளைக் கிழித்துக் கொண்டனர். அவை
பாடகர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு கோன்யாவில் அந்தப் பசு காணப்படவே இல்லை என்று
சொல்கிறார்கள்.
67
எவ்வழியில்
உள்ளது பாதை?
மாபெரும் சீடர்களில் ஒருவரான சினானுத்தீன் நஜ்ஜார் அறிவிக்கிறார்.
ஒருமுறை மௌலானா சொன்னார்: இறைவனின் காதலர்கள் தம்மை இழந்த நிலையில் இறைக்காதலின் அனுபவத்தில்
மூழ்கி இருப்பர். ’இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும். அவனன்றி அனைத்தும் அழிந்துவிடும்’
[காண்க: குர்ஆன்: 55:26-27]. படைப்புக்கள் யாவும் அழிந்துபோகும். பருப்பொருள் யாவும்
அழியும். எல்லா மகன்மாரும் எல்லா மனைவியரும் அழிந்து போவர். எனவே, படைப்புக்களை நேசிப்பவர்
அதில் மூழ்கித் தன்னை இல்லாமல் ஆக்கி அவற்றைப் போன்றே அவரும் அழிந்து போவார். ஆனால்,
அழிவே இல்லாத இறைவனை நேசிப்பவர் அவனுள் மூழ்கி அவனைக் கொண்டு அழியாமல் இருப்பார்.”
இறைவன் அனைத்தையும் இல்லாமையில் இருந்து படைத்துளன். எனவே, அனைத்தும்
ஓர் நாள் இல்லாமைக்கே மீளல் வேண்டும். அதே சபையில் மௌலானா அவர்கள் செய்த இன்னோர் அவதானமும்
அறிவிக்கப்படுகிறது. தெருவில் சென்று கொண்டிருந்த தர்வேஷ் ஒருவரின் கூக்குரல் கேட்டது.
உடனே மௌலானா சொன்னார்: ”அது ஒரு மனிதனின் குரலா? அல்லது அழிகின்ற உலகம் ஒன்றின் எதிரொலியா?”
அதே அவையில் மௌலானாவிடம் அவரது பாதை என்ன? என்று குத்புத்தீன் கேட்டார்.
‘எல்லோரையும் போல் மரணிப்பதும், நற்கூலி அல்லது தண்டனைக்காகத் தனது செயல்களை எடுத்துக்கொண்டு
மறுமைக்குச் செல்வதுமே எனது பாதை’ என்று மௌலானா சொன்னார். மேலும், ஒருவர் ’இறந்து’,
அதாவது தனது இச்சைகளைக் கட்டுப்படுத்துகின்ற எஜமானாக ஒருவர் ஆகித் தன்னைத் தூய்மை செய்தால்
அன்றி சரியான இலக்கினை அடைய ஏலாது என்றும் சொன்னார். அதனைக் கேட்ட குத்புத்தீன் அழுது
அரற்றியவராக, தான் எவ்வழியே முன் செல்ல வேண்டும் என்று கேட்டார். அவருக்கு மௌலானா பின்வரும்
கவிதையைப் படித்துக் காட்டினார்கள்:
”பாதை யாதெனக் கேட்டேன்
’உன்னைத் தேடு’ என்றான்.
மீண்டும் கெஞ்சிக் கேட்டேன்
’எவ்வழி உள்ளது பாதை?’
’என்னைத் தொடர்ந்து தேடு’ என்றான்
பின்னர் என்னை நோக்கி,
’சீடனே! உன் தேடல் பெரிது
மீண்டும் மீண்டும் தேடு’ என்றான்.”
குத்புத்தீன் அளவற்ற தாக்கம் அடைந்தார். அதன் பின் மௌலானாவின் அணுக்கச்
சீடர்களில் ஒருவராக மாறினார்.
(to be continued...)
No comments:
Post a Comment