தமிழ் இலக்கியம் பேசும் உறுதிப்பொருள் நான்கு. அறம், பொருள், இன்பம்
மற்றும் வீடு.
இவற்றுள் வீடு என்பது சுவர்க்கத்தைக் குறிக்கும். ஆங்கிலத்தில்
Paradise என்று கூறப்படும் பரதேசம். (பர என்பது பரம்பொருள், இறைவன். பரதேசம் என்பது
இறைவனின் இடம். இறைக்காட்சி எங்கே கிட்டுமோ அவ்விடம் பரதேசம். அடியார்க்கு இறைவனின்
சந்திப்பு (லிகா) மற்றும் திருக்காட்சி (தீதார்) ஆகியன மறுமையில் சுவர்க்கத்தில்தான்
கிடைக்கும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. அந்த அர்த்தத்தைப் ’பரதேசம்’ என்னும் சொல் தருவதை
ஓர்க.)
பேச்சு வழக்கில், இம்மண்ணில் நாம் கட்டியெழுப்பி உறையும் கட்டடத்தை
“வீடு” என்னும் சொல்லால் குறிப்பிட்டு வருகிறோம். அதனை இல்லம் என்றும் மனை என்றும்
அழைத்தலே பொருத்தம். (”என் வீட்டுக்கு வருக” என்பதன் பொருள் “என் சுவர்க்கத்துக்கு
வா” என்பதுதான்.)
காரைக்கால் அம்மையார் குறித்து ”St.Peyar, the Saivite Mystic” என்னும்
ஆங்கிலக் குறுங்கட்டுரையில் முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் கூறும் சில கருத்துக்கள்
இதன் தொடர்பில் என் சிந்தையைக் கவர்ந்தன:
”The Place of Woman” என்னும் ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி பாரதியார்
ஒரு சம்ஸ்க்ருத சொலவடையை மேற்கோள் காட்டியுள்ளார்: க்ரிஹினி க்ரிஹம் உச்யதே (இல்லம்
என்பது இல்லாள் / மனை என்பது மனைவி. “Home is but a synonym for wife”).
சம்ஸ்க்ருதத்தில் இச்சொல் ஒரு பெண்பாற் சொல். இதற்கு நேரான ஆண்பாற்
சொல் அம்மொழியில் இல்லை. க்ரிஹினி என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் ”இல்லாள்” என்பதாம்.
அதற்கு நேரான ஆண்பாற் சொல் தமிழிலும் இருக்கவில்லை.
பேயாரின் புராணத்தைப் பாடும்போது, பரமதத்தன் என்னும் வணிகனை மணந்து
புனிதவதியார் ’இல்லாள்’ ஆனதைப் பாடுமிடத்தில், கணவனைக் குறிக்க இல்லாளன், மனைப்பதி
மற்றும் இல்லிறைவன் ஆகிய மூன்று சொற்களை உருவாக்கித் தமிழ்ச் சொற் களஞ்சியத்திற்குச்
சேக்கிழார் வளம் சேர்த்துள்ளார் என்று தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிடுகிறார்
(நூல்: “The Hymns of Karaikkal Ammaiyaar”, IISSR, Dharmapuram, Mayiladuthurai –
609001, 1993; ப.100).
”நும் இல்லம் நுமது பேருடல்” – “Your house is your larger body” என்கிறார் கலீல் ஜிப்ரான். இது, ஆணினும் பெண்ணுக்கே சாலப் பொருத்தம்.
இதில், house என்பது இல்லம் என்னும் கட்டடத்தையே குறிக்கும். எனவே
அதனை உடல் என்று கலீல் ஜிப்ரான் சுட்டியுள்ளார். எனில், குடும்பம் என்பதே home – என்பதைக்
குறிக்கும். ஆக, ‘நும் குடும்பம் நுமது பேருள்ளம்’ – “Your home is your larger
mind” என்று சொல்லலாம். அக விரிவு என்பது இல்லறத்தின் பயன்களுள் ஒன்று.
இல்லம் மற்றும் மனை ஆகிய இரு சொற்களின் அடியாகவே அம்மூன்று சொற்களையும்
சேக்கிழார் உருவாக்கியுள்ளமை காண்க.
”தம்-இல் இருந்து தமது பாத்து உண்டற்றால் / அம்-மா அரிவை முயக்கு”
(1107) என்கிறது திருக்குறள். (Hyphenation is mine. தம்மில் என்பதைத் தன்னில் என்பதன்
பன்மையாகவும், அம்மா என்பதைத் தாய் என்றும் மயங்குவாருண்டு. எனவே இடைக்கோடு இட்டேன்.)
இந்தத் திருக்குறளுக்கு உரை எழுதியோருள் தேவநேயப் பாவாணர் கூறும் உரை
சற்று நயமானது. “தம் இல்” என்பது தனிக்குடித்தனம் என்று அவர் குறிப்பிடுகிறார். “தமக்குரிய
தனிமனையிற் குடியிருந்து” என்று உரை சொல்கிறார். “எலிவளையுந் தனிவளை, தனிவளையுந் தன்வளை
என்னும் உரிமையுணர்ச்சி பற்றித் ’தம் இல்’” என்று தலைவன் கூறுவதாக விளக்கமும் தருகிறார்.
எனவே, திருமணம் ஆனதும் இளம் இணையர் தனிக்குடித்தனம் பேணுதல் சங்க காலத்துப் பழந்தமிழரின்
பண்பாடு என்னும் வரலாற்றுக் குறிப்பினை இக்குறள் தருகிறது எனலாம்.
“இதம் தரு மனை” என்பது மகாகவி பாரதியார் வரைந்த தொடர். அதனெதிர் உள்ளது
“இடர் மிகு சிறை”. இல்லம் என்பது இதம் தரல் வேண்டும். இடர் மிகும் இடம் இல்லமே ஆயினும்
அஃது இல்லமன்று, சிறையே!
மனையின் இதம் என்பது கட்டடத்தின் வசதிகளால் ஏற்படுவது உண்டு என்பது
உண்மை ஆயினும் அஃது முதன்மை நிலை அன்று. முதன்மை நிலை மனைவிதான். (ஏனெனில், க்ரிஹினி
க்ரிஹம் உச்யதே) ”கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே
உள” (1101) என்பது வள்ளுவனார் வாக்கு. இரண்டாம் நிலை பிள்ளைகள். ”மக்கள் மெய் தீண்டல்
உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (திருக்குறள்:65). அதிலும், தம்
மக்கள் மழலைச் சொல் குழலினும் யாழினும் இனிது.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களைச் செவ்வணே ஆற்றி
வாழ்வாங்கு வாழ்ந்து முடித்து, உயிரானது உடலையும் இவ் உலகையும் துறந்து செல்லும் இடம்
சுவர்க்கம் ஆதலால் அதனைத் துறக்கம் என்னும் சொல்லும் குறிக்கும். அதுவே வீடு என்னும்
நான்காம் உறுதிப் பொருள் என்கிறது தமிழ்.
இறப்பின் பின்னர் அன்றே வீடு வாய்ப்பது? அதனை இங்கேயே எப்படிப் பாட
முடியும்? என்னும் வினா எழ, வீட்டிற்கு உய்க்கும் துறவைப் பாடின் அதுவே வீடு பாடியது
ஆகும் என்று இலக்கணம் பிறந்தது.
இன்னனம், வீடு என்பது அறம் பொருள் இன்பம் ஆகியவற்றுக்கு அடுத்ததாய்,
அப்பாலாய் நிற்க இன்பம் என்னும் மூன்றாம்பொருள் நிகழும் இல்லத்தை வீடு என்று குறிப்பிடுவது
பொருந்துமா?
வீட்டிற்கு உய்க்கும் ஒழுகலாறுகள் யாவும் இல்லத்தில் நிகழ்த்தப் படுவதால்
இல்லம் என்பது காரண ஆகுபெயராக ”வீடு” என்று பெயர் பெற்றது.
துறவு கொள்வோர் பெருமான்மையர் அல்லர். இல்லம் துறந்து காடு சென்று
கடுந்தவம் இயற்றல் என்பது தமிழர் நெறியன்று. (’நீட்டலும் மழித்தலும் வேண்டா’ என்பார்
வள்ளுவர்.) எனில், பெரும்பான்மை மக்கள் வீடு பேறு எய்தும் நெறி இல்லறம் என்பதேயாகும்.
அஃதே தமிழரின் அறிவு கண்ட தெளிவான முடிவு. அதனைத்தான், இல்லத்தைக் குறிக்க ’வீடு’ என்னும்
சொல் புழங்கப்படுவது காட்டுகிறது.
’லா ரஹ்பானிய்யத்
ஃபில் இஸ்லாம்’ – ’இஸ்லாத்தில் துறவறம் என்பதில்லை’ என்றும், ”மன் ரஸக்கஹுல்லாஹு அம்ர-அதன்
ஸாலிஹதன் ஃபகத் அ-ஆனஹுல்லாஹு அலா ஷத்ரி தீனிஹி” – ”எவருக்கு இறைவன் நற்பண்புள்ள பெண்ணை
மனையாளாய் நல்கினானோ திண்ணமாக இறைவன் அவருக்கு அவரின் சன்மார்க்கத்தில் பாதியை அருளிவிட்டான்”
(அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி); நூல்: அல்-முஃஜமல் அவ்சத்: 992; அல்-ஜாமிஉஸ்
சகீர்: 8704) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) நவின்ற வாக்குகள் பழந்தமிழர் கண்ட நெறிக்கு
உறுதி உரைக்கின்றன.
இன்னொரு
செய்தி.
தமிழர்,
வாழ்வை அகம் புறம் என்று இருபெருந் திணைகளாய்ப் பகுத்தனர். புறம் என்பது நாட்டுப் பணி
வாழ்வியலையும் அகம் என்பது இல்லற வாழ்வியலையும் குறிப்பன. ஆதலால், இல்லம் என்பதை அகம்
என்னும் சொல் கொண்டும் சுட்டலாம்.
இந்தத்
தமிழ் மரபினைப் பார்ப்பனரே இப்போதும் தமது பேச்சு வழக்கில் பேணி வருகின்றனர். (பார்ப்பார்
என்பதும் பார்ப்பனர் என்பதும் ”ப்ரஹ்மின்” என்பதன் தமிழ மரூஉ. அச்சொல் வசையன்று என்பது
தெளிக. ஒருகால் அஃது வசையாக இருப்பின் தொல்காப்பியர் தமது அரில்தப இயற்றிய போக்கறு
பனுவலில் அச்சொல்லினைப் பதிந்திரார் அல்லவா? துருக்கி நாட்டினரைக் குறிக்க, துருக்கியர்
என்னுஞ் சொல் தோன்றி அஃது துருக்கர் என்றும் துலுக்கர் என்றும் தமிழில் மருவியதும்
இதனைப் போன்றதே என்பதும் அறிக.)
’வீட்டிற்கு’
என்பதைப் பார்ப்பனர் ’ஆத்துக்கு’ என்று கூறுகின்றனர். அகம்+கு என்பது இடையே ’அத்து’ச்
சாரியை பெற்று அகம்+அத்து+கு = அகத்துக்கு என்றாகிறது. அதனைப் பார்ப்பார் மருவித்து
ஆத்துக்கு என்று பேசுகின்றனர். அதேபோல், அகத்துக்காரர் ஆத்துக்காரர் என்றும் அகத்துக்காரி
ஆத்துக்காரி என்றும் ஆயின.
அகம்
என்பது உள்ளம். அகம் என்பது இல்லம். இல்லம் என்பது குடும்பம், கட்டடமன்று. எனவே, நுமது
இல்லமே நுமது பேருள்ளம் (Your home is your larger mind).
No comments:
Post a Comment