Sunday, December 22, 2019

”அருந்தவப் பன்றி” – ஒரு விளக்கம்



      பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய “’அருந்தவப் பன்றி’ – சுப்பிரமணிய பாரதி” என்னும் ஆய்வு நூலினை அண்மையில் வாசித்தேன். மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்த ஆய்வுகளில் இந்நூல் ஒரு மைல் கல் என்பது ’உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.’


      
 ’தன் வரலாறு’ எனத்தகும் கவிதைகள் சிலவற்றையும் ‘சின்ன சங்கரன் கதை’ என்னும் உரைநடை அங்கதக் கதை ஒன்றையும் பாரதியார் எழுதியுள்ளார். கால வரிசைப்ப்படித் தொகுக்கப்பட்ட அவரது கவிதைப் பரப்பில் வெவ்வேறு இடங்களில் பதிந்து கிடக்கும் அத்தகைய நெடிய மற்றும் குறுங் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒருங்கே நோக்கி, பாரதியாரின் வாழ்க்கை குறித்து இதுகாறும் வெளிச்சப்படாத ஓர் பகுதியின் மீது ஒளி பாய்ச்சியுள்ளார் பாரதி கிருஷ்ணகுமார். (நூலின் பின்னிணைப்பாக அககவிதைகள் மற்றும் அங்கதக் கதை ஆகியவற்றை முழுமையாகத் தந்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.)

      கவிஞன் கவிதையின் ஊடகம். தன்னினும் மேலான ஓர் மூலத்திலிருந்து அவனின் வழி வெளிப்படுவதே உயர் கவிதை. அந்த மூலம் அருள் பாலிக்காதபோது கவிதை வெளிப்படாது. இஃதுணர்ந்த மெய்க் கவிஞன் ஒருபோதும் வலிந்து கவிதை செய்ய முயலான். அந்த மேலான ஆதி-மூலத்தின் அருள் வேண்டிக் காத்திருப்பான். பாரதியார் அப்படித்தான் செய்தார். அந்த மூலமும், நலங்கெடும் முன்பே அந்த நல் வீணைக்கு மீட்சி அருளி, புழுதி துடைத்துத் தூய்மை செய்து தன் மடியில் வைத்து, நாத கீதங்கள் எழுமாறு தடவிற்று’ என்பது தமிழ் அடைந்த நல்லூழ்.



      1898-ஆம் ஆண்டு முதல் ஜூலை 1902 வரை ஆறாண்டு காலம் மகாகவி பாரதியாரால் கவிதை எழுத இயலாது போயிற்று. அவரது கவி வாழ்வில் அஃதோர் இருண்ட காலம். அதற்கான காரணம் என்ன? எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சேவகப் பணி புரிந்து வந்ததால் தனக்குக் கிடைத்த தண்டனை என்று அந்நிலையை மகாகவி பாரதியார் ஓர்ந்துளார். அவ் இருண்ட காலத்தைப் பற்றி “கவிதாதேவி – அருள் வேட்டல்” என்னும் கவிதையில் பாரதியார் பாடியுள்ளார்.

      ஒளிமிகு தவ வாழ்வு பேணி வந்த முனிவர் ஒருவர் சாபத்தால் பன்றியுருக் கொண்டு சில காலம் பன்றிகளுடன் கூடிக் களித்து வாழ்ந்து வந்ததாக புராண பாணியில் கற்பனைக் கதை ஒன்றை பாரதியார் கூறுகிறார். ”அருந்தவப் பன்றி தன் / இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது” (71-72 என்று அதில் குறிப்பிடுகிறார். “என் தருக்கெலாம் அழிந்து / வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை” (80-82) என்று பன்றியுருக் கொண்ட முனிவருடன் தன்னை ஒப்பிட்டுள்ளார். இதிலிருந்தே இந்நூலுக்கு “அருந்தவப் பன்றி – சுப்பிரமணிய பாரதி” என்னுந் தலைப்பு இடப்பட்டுள்ளது.

      ’நாய் வாழ்க்கை’ என்று பேசிய அருளாளர் உளர். எனினும், பாரதியார் மிகப் புதுமையாக, ‘பன்றி போல் வாழ்க்கை’ என்று பேசியுள்ளார் என வியக்கிறார் இந்நூலின் (மூன்றாம் பதிப்பு, டிசம்பர்-2018) பதிப்பாசிரியர் கவிஞர் புவியரசு.

      ’இப்புதுமைக்கோர் ஊற்றுக்கண் உண்டுகொல்?’ என்னும் வினா உந்த சிந்தனையைச் செலுத்தியதில் சில திறப்புக்கள் பெற்றேன். அஃதிவண் நுவலுவல்.

      எளியேன் அறிந்தவரை, புராணத் தொகுதியுள் பன்றி (வராகம்) என்பது திருமால் எடுத்த அவதாரங்களுள் ஒன்றென உயர்த்திச் சொல்லப்பட்டுள்ளதே அன்றி இழிமைப் பொருளாய் இயம்பப்படவில்லை. (அஃது, நிலம் அகழ்ந்து பயிர் செய்யும் உழவுப் பண்பாட்டின் குறியீடு என்று விளக்கப்படுவதுண்டு. மேலும், பாரதியார் தனது கதையில் பாடியிருப்பது ஊரகத்தேயும் ஊர்ப்புறத்தேயும் வாழுகின்ற பன்றி ஆகும். அஃது ஆங்கிலத்தில் pig, swine எனப்படும். வராக அவதாரம் என்பது காட்டில் வாழும் கொம்பினப் பன்றி. அஃது ஆங்கிலத்தில் boar எனப்படும்.)

      இனி, பன்றி என்பதை அருளற்ற நிலைக்கான குறியீடாகச் சுட்டுவதற்கான முகாந்திரம் பைபிளில் கிடைக்கிறது.

      லேகியோன் என்பானைப் பீடித்திருந்த பிசாசுகள் அவனை விட்டும் வெளியேறி அருகில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிக் கூட்டதிற் புகுமாறு ஏசுநாதர் கட்டளை இட்டார். பிசாசுகள் புகுந்த அப்பன்றிகள் ஓடிச் சென்று கடலுள் பாய்ந்து மாண்டன. (காண்க: மத்தேயு:8:28-32; மாற்கு:5:11-13; லூக்கா:8:31-33)

      இழிநிலைக்கான குறியீடாகப் பன்றியைக் கொள்வதற்கான இன்னொரு முகாந்திரம் குர்ஆனில் இருக்கக் காண்கிறோம்.

      இறைக் கட்டளையை மீறிய யூதர்களிற் சிலர் மீது அல்லாஹ் சினந்து அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருக்கொள்ளுமாறு முனிந்தான் என்னும் செய்தியை குர்ஆன் சொல்கிறது (காண்க: 5:60).

      மேலும், ஊழி முடிவு தொடங்குதற்குச் சற்று முன் இறை நிராகரிப்பாளர் யாவரும் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உரு மாற்றாப்படுவர் என்று நபிகள் நாயகம் நவின்றுள்ளமை நினையத்தகும். (நூல்: திர்மிதி; அறிவிப்பாளர்: இப்னு உமர் (ஹதீஸ் எண்:2152), இம்ரான் பின் ஹுசைன் (ஹதீஸ் எண்: 2212)).

      பைபிள் மற்றும் குர்ஆன் ஆகியவற்றை பாரதியார் வாசித்திருக்க வாய்ப்புண்டு. முழுமையாய் அல்லவெனினும் அவற்றின் சில பகுதிகளையாவது அவர் வாசித்திருப்பார் என்று நம்பலாம்.



      தம்மில் உள்ள தீமையைக் களைய முனையும் மேலோர் பலரும் தாமே பன்றியைப் போல் ஆகிவிடுகின்றனர் என்று சிந்தனையாளர் நீஷே சொல்கிறார். ”இவ்வொரு நீதிக்கதையும் உமக்குத் தருகிறேன்: தமது பிசாசை வெளியே துரத்த முனைந்தோர் பலர் தாமே பன்றியுள் புகுந்தார் உளர்” (“And also this parable give I unto you: Not a few who meant to cast out their devil, went thereby into the swine themselves.” (Friedrich Wilhelm Nietzsche “Thus Spake Zarathustra”, Chapter XIII: ‘Chastity’)).

      ஆனால், பாரதியார் தம்மைப் பற்றி எழுதியுள்ள ”நீதிக் கதை” (parable) தரும் சித்திரம் சற்றே வேறானது. “கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை” என்று பாரதியார் நொந்துரைக்கும் வறுமையே அவரைப் பன்றி வாழ்க்கையுள் படுத்திற்று. ”அறிஞனின் சான்றினை விட்டும் வறுமை அவனின் வாயடைக்கும்; சொந்த ஊரிலும் வறியோன் அந்நியனே!” (அல்-ஃபக்ரு யுஃக்ரிசுல் ஃபதின அன் ஹுஜ்ஜதிஹி; வல்-முகில்லு கரீபுன் ஃபீ பலததிஹி – நூல்: ’நஹ்ஹுல் பலாகா’, பொன்மொழி எண்:3) என்று ஹழ்ரத் அலீ முர்தழா நவின்ற நிலைக்கு பாரதியார் ஆளாகியிருந்தார்.

      ”சுடர் மிகும் அறிவு” தருகின்ற, “மண் மாசு நீங்கிய வான்படு சொற்கள்” கொண்டு வெளிப்படுகின்ற, “மந்திரம் போல் சொல்லின்பம்” நல்குகின்ற உயர் கவிதைகளை சுவைத்து இன்புற மாட்டாமல் அவற்றைப் புறந்தள்ளி புன்மைக் கருத்துக்களை புத்தியில் மாந்திக் களிக்கின்ற புல்லர்களை நாயென்றும் பன்றியென்றும் சொல்லலாம். “பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்” (மத்தேயு 7:6) என்கிறது பைபிள்.

      எட்டயபுரத்து நிலக்கிழாரை “திமிங்கல உடலும் சிறிய நாயறிவும்” கொண்டவர் என்று பாரதியார் சுட்டுகிறார். அவரைச் சார்ந்து, அவருக்கு ‘சிருங்கார ரஸம்’ கொண்ட கவிதைகள் இயற்றித் தரும் ஈனத் தொழிலைத் தாம் செய்ய நேர்ந்ததையே ‘பன்றி வாழ்வு” என்று பாரதியார் பாடியுள்ளமை எண்ணற்பாற்று.

      மேற்சொன்ன சிந்தனைகள் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆராய்ச்சி நூலினைப் படித்த பின் மேலாய்வு போல் எளியேன் அகத்தில் எழுந்தவை. ’அருந்தவப் பன்றி’ என்னும் குறியீடு பாரதியாரின் சிந்தனையில் புதிதாய் உதித்ததாக இருக்கலாம். அல்லது, அவரது ஆழ்ந்த பரந்த வாசிப்புக் களத்தில் ஏதோவோர் இடத்திலிருந்து அவரது ஆழ்ந்திருக்கும் கவியுளம் (அடிமனம் – sub or unconscious mind) எடுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம். மகாகவி ஒருவனுக்கு அவன் கையாளும் குறியீடு எங்கிருந்து கிடைத்தது என்று தேடிப் பார்ப்பதும் ’நம்மைக் கலி தீர்த்து ஏற்றம் புரியும்’ என்பது திண்ணம்.



No comments:

Post a Comment